Skip to content
Post Views: 2,523
EPISODE 11
நாட்கள் ரதம் போல நகர ஆரம்பித்தது.
Advertisement
அஜையிடம் இருந்த துள்ளல் படிப்படியாக குறைந்து, தேய்ந்து இப்போதெல்லாம் இல்லாமலே போய்விட்டது எனலாம்! எந்நேரமும் முகத்தில் ஒரு சோகம்…
அவனை புதியதாய் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாவிடினும், அவனை பார்த்து பழகியவர்களுக்கு ஒரே பார்வையில் அவன் வித்தியாசம் தெரியும்படி இருந்தது.
Advertisement
Advertisement
இரண்டு மூன்று வயது கூடியதை போல் கூட இருந்தான்.
மனம் விட்டு பேசுவதும் இல்லை! வாய்விட்டு அழுவதும் இல்லை! எல்லாம் உள்ளுக்குள்ளே மட்டுமே!
Advertisement
மாதங்கவதனாவும் அஜய்யும் பேசிக்கொள்வதில்லை என்பதை தவிர, அவன் நண்பர்களுக்கு கூட உண்மையான நிலவரம் தெரியாது! அவன் சொல்லவுமில்லை.
அவர்களாக அவளுக்கு அழைத்து பார்த்தபோதும் அவள் எடுக்கவில்லை. நேரில் சென்றதற்கு பதில் இல்லை.
‘எப்படியோ போங்க’ என்று விடவும் முடியாது, இவர்களால் நண்பர்களும் சேர்ந்தே தான் மனக்கவலைக்கு ஆளாகியிருந்தனர்.
அன்று சிரித்து பேசி ‘பை’ சொல்லி சென்ற பின் அவள் ஏன் தன் அழைப்பை எடுக்கவில்லை என்பது அவனுக்கு தெரியவேயில்லை.
‘உண்மையில் சார்ஜ் இல்லையோ?’ என்றெண்ணி விடியும் வரை காத்திருந்து அவளுக்கு அழைத்தான். முழு அழைப்பும் சென்று நின்றுவிட, மறுபடி முயன்றபோது ‘சுவிட்ச் ஆஃப்!’
அதற்குமேல் அவனால் பொறுக்கமுடியவில்லை. கிளம்பிவிட்டான்.
அவள் அப்பார்ட்மெண்டின் கீழே நின்று அவளுக்கு அழைக்க இன்னமும் ‘சுவிட்ச் ஆஃப்’பில் தான் இருந்தது. காரின் ‘ஹாரனை’ ஒலிக்க விட்டான்.
கட்டிலில் சுருண்டுப்படுத்திருந்த மாதங்கவதனாவின் செவிகளில் விழுந்தது. வாரிச்சுருட்டி எழுந்தவள், ஜன்னல் திரையை விலக்கிவிட்டு கீழே பார்க்க, அவன் நிற்பது தெளிவாய் தெரிந்தது.
கண்களில் கண்ணீர் பொலபொலவென கொட்ட, அவள் காலை கட்டிக்கொண்ட பிரசன்னா, “ம்மா… அஜ்ஜி… அஜ்ஜி!” என்றாள். அவளுக்கு கூட அவன் வருகை புரிந்தது.
அவளை தூக்கி அணைத்துக்கொண்ட மாதங்கவதனா, மௌனமாய் கண்ணீர் வடிக்க, “ம்மா… அஜ்ஜி… போலாம்!” என்றது குழந்தை!
அவளுக்கும் அவனிடம் ஓடி செல்ல வேண்டும் என்றுதான் இருந்தது.
‘கூடாது’ என கட்டுப்படுத்திக்கொண்டாள்.
விட்டுவிட்டு ‘ஹாரனை’ ஒலிக்க விட்டு பார்த்தவன், அவளுக்கு சப்தம் நன்றாய் கேட்டும், வராதது தெரிந்தது.
நேரே வீட்டு வாசலில் சென்று நிற்க சில நொடிகள் ஆகாது. ஆனால், ‘முறையில்லாத போது உன் வீட்டிற்கு நான் வருவது சரியிருக்காது!’ என்று அவன் தான் அவளிடம் சொல்லியிருந்தான்.
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தாக, வாய்க்கு அவலாக அவனுக்கு எப்போதும் விருப்பம் கிடையாது.
அவளை தேடி ஓட துடிக்கும் கால்களை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கேயே நின்றான். கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அந்த ‘ஆன்ட்டி’ அவன் அண்ணாந்து பார்த்தபடி நிற்பதை கண்டு,
“அஜய் தம்பி?” என்றார்.
கசங்கிய முகத்தை சட்டென சரிசெய்தவன், “இன்னைக்கு மாது சீக்கிரமே ஆபிஸ் போயிட்டாங்களா ஆன்ட்டி? பாப்பூக்குட்டி எங்க?” என்றான் இயல்பு போல.
அந்த வயது மூத்தவருக்கு இவர்களின் பூசல் புரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “இல்லயே, ரெண்டு பாப்பா’வும் வீட்டுல தான் இருக்காங்க!” என்றார்.
‘ஓ!’ என்றவன், பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பெரிய கடலைமிட்டாய் பாரை எடுத்து, “இதை பாப்பூக்கிட்ட குடுத்துடுங்க ஆன்ட்டி! நான் கிளம்பனும், நேரமாச்சு!” என்றுவிட்டு காரில் ஏறி கிளம்பினான்.
அவன் போவதை பார்த்துக்கொண்டே கண்ணீர் வடிய நின்றவளின் கன்னத்தை பிடித்து, “அஜ்ஜி ஏன் பாப்பா பாக்கல?” என்று கேட்கும் குழந்தையிடம் என்ன சொல்வதென தெரியாமல் அழுதே ஓய்ந்தாள் அவள்.
அடுத்து வந்த நாட்களும் இப்படியாக தான் சென்றது.
அவள் வேலைக்கே போவதில்லை. முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே தான் இருந்தாள். முக்கியமான வேலைகள் இருந்தால், அதையும் வீட்டிலிருந்தே பார்க்கும்படி பார்த்துக்கொண்டாள்.
எப்படியும் அவன் வீட்டிற்குள் வர மாட்டான் என்ற நம்பிக்கை!
எத்தனை நாட்களை இப்படியே ஓட்ட முடியும் என்று தெரியவில்லை அவளுக்கு.
தான் தவிர்ப்பது புரிந்தால் சில நாட்களில் அவனே விட்டுவிடுவான் என்று எண்ணினாள் போலும்.
அதை ‘பொய்’யென நிரூபிக்க அவள் முன்னே வந்து நின்றான் அவன்.
தன் அறைக்குள் முடங்கிக்கிடந்தவள், கட்டிலுக்கு அருகே கால்களை பார்க்கவும் பதறி எழ, “நான் தான்!!!” என்றான் அஜய்.
அவன் தான்’ என்றதும் வந்த ஆசுவாசம், அவன் இப்படி வீட்டிற்குள் நிற்ப்பதை கண்டதும் ஆவேசமாய் மாறியது.
“பிரசன்னா?” அழைத்துக்கொண்டே அவள் ஹாலுக்கு போக, “ஆன்ட்டிக்கிட்ட இருக்கா!” என்று பின்னாடியே வந்தான் அஜய்.
வாசல் கதவு உள்பக்கமாய் தாழிடப்பட்டிருந்தது.
“ஓ, எல்லாம் ப்ளான் பண்ணிதான் வந்தீங்களோ?” என்று இகழ்ச்சியாய் கேட்டவள்,
“ரொம்ப நல்லவன் மாதிரி நான் வீட்டுக்குள்ள கூப்பிட்டா கூட ‘அது தப்பு’ வரமாட்டேன்னு சொல்லுவீங்க? இப்போ எங்க போச்சு உங்க சரி தப்பு எல்லாம்?” என்றாள்.
“சரி, தப்பு எல்லாத்தையும் தாண்ட வச்சுட்ட நீ!” கண்ணை நேராய் பார்த்து குற்றம் சுமத்த, அவன் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் முகம் திரும்பியவள்,
“நான் தான் புடிக்கலன்னு அவாய்ட் பண்றேன்’ல? அப்பறம் ஏன் இப்படி விடாம டார்ச்சர் பண்றீங்க?” என்றாள், கண்கள் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது.
“புடிக்கலையா? எப்போ இருந்து புடிக்கல?”
“நான் எப்போ உங்களை பிடிச்சுருக்குன்னு சொல்லிருக்கேன்?”
பதில் கேள்வி கேட்டவளிடம் பேச்சற்று நின்றான் அஜய்.
பின் தன்னை தேற்றிக்கொண்டு, “மாது’ம்மா என்னடா ஆச்சு? என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லு… நீ உனக்குள்ளையே வச்சு கஷ்டப்படாத! பேசிட்டா எல்லாமே சரியாபோய்டும்” ஓரடி அவளை நெருங்க, வேகமாய் பின்னே நகர்ந்தவள், “கிட்ட வராதே!” என்றாள் சீறலாய்.
அவள் குரலில் அப்படியே நின்றான் அவன்.
“புருஷனும் இல்ல… பெத்தவங்க சப்போர்ட்டும் இல்ல… கேட்க யாரும் இல்லாததால அட்வான்டேஜ் எடுத்துப்போம்ன்னு நினைக்குறியா?”
“ப்ச்… நீ ஏதோ டிப்ரஷன்’ல இருக்க மாதும்மா!”
“நான் தெளிவா தான் இருக்கேன்… தெளிவா தான் பேசுறேன்… எனக்கு யாரும் வேண்டாம்… முதல்ல போ இங்கிருந்து!” என்றாள்.
“இப்போ போக சொல்றியா? இல்ல எப்பவுமே வா!?”
நொடியும் தாமதிக்காது, “எப்பவுமே தான்!” என்றாள்.
“ஏன் மாது? யூ க்நொவ் ஹவ் மச் ஐ லவ் யூ?” இறைஞ்சலாய் வந்தன அவன் வார்த்தைகள். அவனறிந்து முதல்முறையாய் அவளிடம் ‘காதல்’ என்ற வார்த்தையை உபயோகிக்கிறான்.
“எனக்கு தெரிய வேண்டாம்… எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்! முதல்ல போ… நீ போ… நீ வேண்டாம் எனக்கு போ!”
அவனுக்கு மிக தெளிவாய் புரிந்தது. மாதங்கவதனா அதீத மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று!
“சரி நான் போறேன்… நீ கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு!” என்றான்.
“போறவன் திரும்பி வரவேகூடாது… அப்படியே போய்டணும்!”
“ப்ச்! மாது? சும்மா உளறிட்டு இருக்காத டிப்ரஷன்’ல! நம்ம கல்யாணம் முடிஞ்சா தான் எல்லாம் சரி ஆகும்… இல்லனா இப்படி தான் லூசுமாதிரி கண்டதும் யோசிச்சு குழம்பிட்டு இருப்ப!”
“கல்யாணமா? போதும்டா சாமி!” கையெடுத்து கும்பிட்டவள்,
“எனக்கு இந்த வாழ்க்கைல இனி கல்யாணமே வேண்டாம்… என் வழியை நான் பாத்துக்குறேன்!” என்று விட,
“குழந்தை மாதிரி பிகேவ் பண்ணாதம்மா! லைஃப் இதோட நிக்குறது இல்லை! பர்ஸ்ட் சாய்ஸ் தப்பாகிட்டா, அடுத்த ஆப்ஷனுக்கு போகவே கூடாதா?” என்றவன்,
“அதோட எவ்ளோ நாள் தனியா இருக்க முடியும் சொல்லு? ஒரு துணை வேனும்மா வாழ்க்கைல!” என்றதுமே வெகுண்டாள் அவள்.
“ஏன்? எதுக்கு துணை? ஒரு பொண்ணால தனியா வாழவே முடியாதா? என்னவோ அவனும் தனியா இருக்க முடியாதுங்குறான்… நீயும் அதே சொல்ற?” என்றவள்,
“எனக்கென்ன குறைச்சல்? நான் யாரை டிபென்ட் செஞ்சு இருக்கணும்? எனக்குன்னு வேலை, சம்பளம் இருக்கு… என்னால என் பொண்ணை தனியா பாத்துக்க முடியும்! கேட்டுச்சா? ‘தனியா’… தனியா பாத்துக்க முடியும்…
எனக்கு வேற எவனும் தேவையில்லை…” என்றாள் மூச்சுவாங்க ஆவேசமாய்…
“மாதும்மா, துணை’ன்னா அதுக்கு மட்டும் சொல்லலடா!” என அவன் ஆரம்பிக்கும்போதே,
“வேற எதுக்கு? டு யூ மீன் எனி பிசிக்கல் ரிலேஷன்ஷிப்?” என கத்தியவள்,
“என்னை பார்த்தா ஆம்பளைக்கு அழையுற ஆளா தெரியுதா?” என்று அலற, அந்த வார்த்தைகளை கூட கேட்க பிடிக்காதவனாய் காதை பொத்திக்கொண்டான் அஜய்.
சில நொடிகளில் அவன் பேச எத்தனிக்க, “ஒன்னும் பேசாத! எல்லாரும் ஒரே குட்டைல ஊருன மட்டைங்க தான்! நீயும் ஆம்பள தானே? வேறெப்படி பேசுவ?” என்றவள் அறைக்குள் சென்று கதவை அடித்து சாற்றினாள்.
செயலற்று சில பல நிமிடங்கள் அப்படியே நின்றவன், பின் தானாக அங்கிருந்து விலகி காரில் ஏறினான்.
அவன் மனம் ரணமாய் இருந்தது.
கதவை அடித்து சாற்றிவிட்டு உள்ளே சென்றவளின் மனமும் அவனுக்கு குறையாமல் ரணத்தை சுமந்திருந்தது.
அவனது அவள் உண்டாக்கியதென்றால், அவளது அவளே தேடிக்கொண்டது.
‘ராஜரத்தினம்!’
அவள் ரணத்திற்கான முழு காரணம்!
அவன் அவள் வாழ்வில் வந்ததில் இருந்தே, ரணத்தை மட்டும் தானே சுமக்கிறாள்!
கடவுளுக்கு என்மீது எதற்கு இந்த கோபம்? எனக்காக உருகும் ஒருவனை விடுத்து, என்னை உருக்குலைக்கும் ஒருவனுக்கு என்னை தாரைவார்த்தது ஏன்!?
எண்ணி எண்ணி விழிநீர் உகுத்தாள்.
மனம் அன்று விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் அஜய்யை பார்க்க வந்துக்கொண்டிருந்த தருணத்தில் போய் நின்றது.
பத்திரபதிவு முடித்து அஜய் வர நேரமாகும் என்பதால் ரயில்நிலையத்துக்கு கோர்ட்டில் இருந்து நடந்தே போனாள் மாதங்கவதனா.
மனம் முழுக்க அஜய்… அஜய்… அஜய் மட்டுமே!!!
இன்று இரவே தன் சம்மதத்தை சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டே விண்ணில் மிதப்பவள் போல நடந்தாள்.
குறுக்கே சட்டென ஒரு கார் வந்து ‘ப்ரேக்’ அடித்து நின்றதில் திடுக்கிட, ஓட்டுனர் இருக்கை கண்ணாடி இறங்க, ராஜரத்தினம் தான் இருந்தான்.
முகத்தை சுளித்தவள், நடையை தொடர, கார் மிக மெதுவாய் அவளை தொடர்ந்தது.
“என்னம்மா கலியுக கண்ணகி? விவாகரத்து குடுக்க இப்போதான் மனசு வந்துச்சா?” என்றான் நக்கலாய்.
முடிந்தவரை அவனிடம் பேசக்கூடாது என்று நினைத்திருந்தாள்.
“இதை மொதோ ஹியரிங்’லையே குடுத்துருந்தா இந்நேரம் நான் ஜாலியா ‘ஹனிமூன்’ போயிருப்பேன்! உன்னால மூணு, நாலு மாசம் தண்டமா போச்சு!”
நடையை எட்டிப்போட்டாள்.
“அட, சும்மா ஸீன் போடாத! நின்னு தான் பேசு ரெண்டு வார்த்தை!”
“ஓ! பெரிய இடமா புடிச்ச மிதப்பு! மேடம் இனிமே எங்கக்கிட்ட எல்லாம் பேசுவீங்களா என்ன?” அவன் இப்படி சொன்னபோது அவள் கால்களின் வேகம் அவளறியாமல் குறைந்தது.
“சும்மா சொல்லக்கூடாதுடி… இந்த பொம்பளைங்க எல்லாம் செம்ம விவரம்! ‘பேக்கப்’ இல்லாம எந்த ஆம்பளையயும் கழட்டிவிட மாட்டீங்க!” என்றவன்,
“ஆனாலும், நீ புடிச்ச பாரு நல்லா புளியங்கொம்பா! விசாரிச்சேன்! ஆளு, செம்ம வெயிட்டு பார்ட்டி தான்!” என்றதும்,
“ஏய், என்ன பேசிட்டு இருக்க நீ?” என்றாள் மாதங்கவதனா.
அவள் நின்றதும் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், “சும்மா நடிக்காதடி! இப்போ ஒருத்தன் கூட சுத்திட்டு இருக்கியே! அவனை தானே அடுத்து கட்டிக்கப்போற!? எல்லாம் தெரியும்!” என்றவன், கார் டேஷ்போர்டில் இருந்து சிலவற்றை எடுத்து அவள் கரத்தில் திணித்தான்.
“அவங்கூட கொஞ்சி குலாவிட்டு இருந்தப்போ எடுத்தது! நானே என் ரெண்டு கண்ணால பார்த்து, இந்த மூணாவது கண்ணால எடுத்தேன்!” என்று மொபைலை காட்டினான்.
“இப்போ நான் ஒருத்தி கூட இருந்தப்போ உன்னை கட்டிக்க சொன்னாங்க, கட்டிக்கிட்டேன்! அதுக்கு பிறகு ஒருத்தியை பிடிச்சது வச்சுக்கிட்டேன்! இப்போ நீ வேண்டாம்ன்னு வேற ஒருத்தியை கட்டிக்க தோணுது கட்டிக்கப்போறேன்!
இதை தப்பு’ன்னு சொல்லிதானே என்னை ‘பொறுக்கி’ன்னு பேசுன!
நீ மட்டும் என்னடி ஒழுங்கு? என்னை கட்டுன… எனக்கு பொண்டாட்டியா இருக்கும்போதே இன்னொருத்தனோட உரசிகிட்டு பழகுற! இப்ப அவனை கட்டணும்ன்னு என்னை வெட்டி விடுற!
அப்படி பார்த்தா உனக்கும் எனக்கும் என்னடி பெரிய வித்தியாசம்?” என்றான் அவன்.
அப்போதே அவள் மனதளவில் உடைய ஆரம்பித்தாள்.
“விவாகரத்து கேஸ் நடக்குறதுக்கு முன்னாடியே என்கூட ஒண்ணா இருந்த சமயத்துலயே நீ அவனை பார்த்துருந்தாலும், இப்படி தானே அவன் மேல ஆசைப்பட்டுருப்ப!?
அப்போ நீ பண்றதுக்கு பேரு என்ன? நீ பண்ணா காதல், புனிதம்… அதே நான் செஞ்சா, அசிங்கம், கள்ளக்காதல்!
என்னாங்கடி உங்க நியாயம்?”
விக்கித்து நின்றாள்.
“இப்போ விவாகரத்து ஆனதும் நான் என் டார்லியை மேரேஜ் பண்ணப்போறேன்! அதேமாறி நீ உன் புது ஆளை கல்யாணம் பண்ணப்போற! ரெண்டும் ஒன்னு தானே! உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல… புரிதா?” என்றவன்,
“இந்த அழகும், நெளிவு சுளிவும் இருக்கும்போதே ஒரு இடமா செட்டில் ஆகிடு! காலம் முழுக்க தனியாவா இருக்க முடியும்? அதுலயும் பொம்பளைங்க எல்லாம்…” நக்கலாய் சிரித்து,
“நீ கெட்டிக்காரி தான்! உனக்கு போய் நான் சொல்லித்தரேன் பாரு!” என்றான்.
காரில் ஏறி அமர்ந்தவன், “எதுக்கும் மேரேஜ் கொஞ்சம் தள்ளி வை… அதுக்குள்ள வேற எதாவது பெட்டர் ஆப்ஷன் கிடைச்சா ‘ஸ்வாப்’ செஞ்சுக்கலாம் பாரு!” முடிந்தமட்டும் சாக்கடையை அள்ளி கொட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஏற்கனவே மணமுறிவு, இரண்டாம் திருமணம் என மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராது மேலோட்டமாய் ஒரு முடிவு எடுத்திருந்தவளை அவனது இந்த பேச்சு அலட்டிவிட்டது.
‘நானும் அவனும் ஒன்னா?’
‘அவனுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?’ கண்டதையும் கண்டபடி யோசித்த மனது, முடிவில் ‘ஆமாம்’ என குழம்பிப்போய் தலையாட்டிவிட்டது.
அதன் பிறகு, ‘யாரும் வேண்டாம்! புது உறவும் வேண்டாம்! தன் மீது விழும் அவச்சொல்லும் வேண்டாம்!’ என்று அவள் எண்ண ஆரம்பித்ததன் விளைவு தான் இப்போது நடப்பதெல்லாம்…!
error: Content is protected !!