Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

vvt final first part

அன்றைய பொழுது பரபரப்பில் தான் விடிந்தது.

ஒரே நாளில் மூன்று வீட்டிற்கும் புதுமனை புகுவிழா. ஒருவர் மற்றொருவர் விழாவில் பங்கேற்க வேண்டுமே என்று அதிகாலையில் இருந்தே விழா ஆரம்பித்து விட்டது.



Advertisement

முதலில் சுவாதியின் வீட்டுக்கும், பிறகு விவேக்கின் வீட்டுக்கும் இறுதியாய் குரு, ரீனாவின் வீட்டுக்கும் கிரகப்ரவேசம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

சொன்னது போல அஜய் மூன்று வீட்டுக்கும் மாறி மாறி ஓடி வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான்.

Advertisement

Advertisement

ஒரே ப்ரோஹிதர் தான் மூவருக்கும்! முதலில் பிரம்ம முகூர்த்ததில் சுவாதி, பிரபுவின் வீட்டு விழா ஆரம்பமானது.

அதிகாலை என்பதால் அவர்களின் சொந்தங்கள் மட்டுமே இருந்தனர். ஹோம குண்ட புகை வீடு முழுக்க பரவியது. சுவாதிக்கும் பிரபுவுக்கும் நடுவே அவர்கள் மகன் அமர்ந்துக்கொண்டு மந்திரங்களை தத்துப்பித்து என உச்சரிக்க, தன்னை மீறி ஏக்கத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தான் அஜய்!

Advertisement

அங்கே முடிந்ததும் விவேக்கின் வீட்டிற்கு போக, அதற்குள் மணி ஆறை தாண்டியதால், இப்போது அக்கம் பக்கம் சிலரும், நண்பர்களும், தொழில்துறை ஆட்களும் வருகையை ஆரம்பித்திருக்க, வருபவர்களை வரவேற்கவே அஜய்க்கு நேரம் சரியாய் இருந்தது.

விவேக்கின் மனைவி நிறைமாத வயிறுடன் சிரமப்பட்டு அமர்ந்திருக்க, விவேக்கின் மடியில் இருந்தாள் அவனது மூத்த பெண்!

பார்க்கவே நிறைவாய் இருந்தது அஜய்’க்கு!

வருபவர்கள் அத்தனை பேரையும் வரவேற்றாலும், கண்கள் சில அடிகள் தொலைவில் இருக்கும் அவள் வீட்டு வாசலை தான் அடிக்கடி நோட்டமிட்டுக்கொண்டிருந்தது.

‘ஏன் இவ வரவே இல்ல? யாரும் கூப்பிடலையா? இல்ல… அவளுக்கு வர இஷ்டம் இல்லையா?’ இப்படியே பார்த்துக்கொண்டு அவன் நிற்க,

“டேய், எங்க வீட்டுக்கு அடுத்து பண்ணணும்டா! நேரமாச்சு வா!” என்றாள் ரீனா.

மாதுவின் வீட்டிற்க்கு எதிர் வீடு தான் குருவினுடையது.

ரீனா கையை பிடித்து இழுத்தவன், மெல்லிய குரலில், “மாதுக்கு சொல்லலையா?” என்றான்.

முறைத்தவள், “சொல்லாம இருப்போமா? குழந்தை தூங்கிட்டு இருக்கப்போ தனியா விட்டுட்டு வர முடியாது’ல! அதான் அவ முழிச்சதும் கூட்டிட்டு வந்தா போதும்ன்னு சொல்லிருந்தோம்!” என்றவள்,

“வாடா அங்க… எல்லாரும் போயாச்சு!” என்றுவிட்டு சென்றாள்.

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பார்க்க காத்திருப்பவர்கள், திரை எப்போது திறக்கும், கடவுளின் அலங்கார தோற்றம் எப்போது கண்ணுக்கு தெரியும் என அந்த ஒரு நொடிக்காக கையெடுத்து கும்பிட காத்திருக்கும்போது ஒரு உணர்வு எழுமே… கிட்டத்தட்ட அவள் வீட்டின் கதவை பாத்துக்கொண்டு நின்றவன் அப்படியாப்பட்ட மனநிலையில் தான் இருந்தான்.

இத்தனை நாளில் தூரத்தில் ஆங்காங்கே நின்று, மறைந்து, ஒளிந்து தெரியாமல் பார்த்திருந்தாலும், நேருக்கு நேராய் முகம் பார்த்து பேசி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது!?

நேரம் எட்டை நெருங்க, இப்போது வரும் கூட்டம் சற்று அதிகமாக தான் இருந்தது.

ப்ரோக்ராம் செய்த பொம்மை போல கண்களை அவள் வீட்டின் வாசலில் வைத்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டு, ‘வாங்க… வாங்க!’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

“அஜய், எப்படி இருக்கீங்க!”

“உள்ளே போங்க, அப்புறம் பேசலாம்” ஒரே தள்ளில் உள்ளே அனுப்பி விட்டான்.

“ஹலோ அஜய்!”

“ஹலோ, குரு கூப்பிடுறான் போங்க!” குலுக்கிய கையை கொண்டு உள்ளே தள்ளிவிட்டான்.

“வணக்கம்!”

“ஹான், வணக்கம்… உள்ள சாத்துக்குடி பை குடுக்குறாங்க, போங்க!”

பார்வை இம்மிக்கூட அந்த வீட்டு வாசலை விட்டு நகரவில்லை.

“தம்பி?” மீண்டும் அதே குரல்!

“அட, என் பேரை சொல்லி ரெண்டு பை வாங்கிக்கோங்க, உள்ள போங்க!”

“டேய்…!” இப்போது மரியாதையின்றி அழைக்க,

“டேய்’யா?” உர்ரென திரும்பி யாரென பார்த்தவன், அங்கே நிற்பவரை கண்டதுமே போலீசிடம் மாட்டிக்கொண்ட திருடன் போல திருதிருவென முழித்தான்.

உள்ளே எட்டிபார்த்தால், குருவும் ரீனாவும் அதிமும்மரமாய் மந்திர உட்சாடனத்தில் மூழ்கியிருந்தனர்.

மற்ற கல்ப்ரிட்டு’களை கண்ணிலேயே காணவில்லை.

“இங்க நான் கூப்பிட்டுட்டு இருக்கேன், அங்க என்னடா பார்வை வேண்டிக்கடக்கு?” வந்தவர் எகிற, படக்கென அவரிடம் திரும்பியவன்,

“வாங்கம்மா!” என்றான்.

“வாங்கம்மா’ன்னு வாய்தான் சொல்லுது… ஆனா, இந்தம்மா எதுக்கு வந்துச்சு!’ன்னு உன் மனசு கேட்குது… சரியா?” என்றார் மகனை பற்றி புரிந்தவராய்.

அப்படியே முழித்துக்கொண்டு நின்றவன், “சொல்லிருந்தா ஸ்டேஷன்’க்கு வந்துருப்பேனே!” என்றான். இப்போதும் கண்கள் திருட்டுத்தனமாய் அந்தப்பக்கம் நகரத்தான் செய்தது.

“யாரு நீயா வந்துருப்ப? உன்னை பத்தி தெரியாது பாரு எனக்கு!”  என்றவர்,

“என்னைவிட ஓரடி வளர்ந்துட்டா, தலையில ரெண்டு வெள்ளை முடி எட்டிப்பார்த்துட்டா, மனசுல பெரிய இவன்னு நினைப்பு வந்துடுமாடா உனக்கு?” என்று கேட்க,

“வெள்ளை முடியா? எனக்கெங்க இருக்கு?” என்று பதறிக்கொண்டு வந்தான் அஜய்.

“ஆங், இதெல்லாம் வக்கனையா நொட்டு! போன் போட்டா பெரிய பருப்பு மாறி நீயே பேசிட்டு நீயே கட் பண்ற! அந்த அளவுக்கு திமிரெடுத்து போச்சு!

தோளுக்கொசந்துட்டா கைநீட்ட மாட்டேன்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்றவர்,

“ரத்த சொந்தம் எல்லாம் வேண்டாம்’ன்னு சொல்ற அளவுக்கு அவ்ளோ ஏத்தமா போச்சுல? கை கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்குவோம்ன்னு புத்தி வரல… உன் கல்யானத்துக்கு நீயே பெத்தவளுக்கு சொல்லி அனுப்புவியாம், நான் வந்து பாயாசத்தை நக்கிட்டு போவேனாம்! இந்த பூங்கோதையை என்னான்னு நினைச்ச நீ!?”

வார்த்தைக்கு வார்த்தை அவர் குரல் வெண்கல கடையில் யானை புகுந்ததை போல அதிர, இவர்கள் பேச ஆரம்பித்தால் நடுவே புக முடியாது என்றுதான் ஃபோனில் பேசுவதையே தவிர்த்தான்.

ஆனால், இப்படி நேரில் வந்து நிற்ப்பார் என அவன் கிஞ்சித்தும் எண்ணவில்லை. அவரை அழைத்திருக்கிறோம் என்றுக்கூட அந்த நால்வர் படையில் ஒரு நாதாரி கூட சொல்லவில்லையே என்ற கடுப்பு வேறு அவனுக்கு!

இன்னும் சென்சார் போடுமளவு அவர் உக்கிரமாகவில்லை. அதற்குள் அவரை உள்ளே நகர்த்துவோம் என்று, “அம்மா, நீங்க சொல்றது தான்ம்மா என் முடிவு!” என்று அந்தர்பல்ட்டி அடித்து சரண்டர் ஆனவன், “எவ்ளோ டயர்டா இருக்கீங்க பாருங்க! போய் உட்காருங்க முதல்ல… நான் போய் ஜில்லுன்னு ரோஸ் மில்க் கொண்டு வரேன்!” என்றான்.

“என்னை இங்கிருந்து நவுத்த தானே இந்த ஐஸு? தெரியும் டா மவனே! நான் உன்னையே பெத்தவ!” என்றவர்,

“பங்ஷன் முடியட்டும், இருக்குது கச்சேரி!” என்றுவிட்டு உள்ளே போனார்.

அதிபயங்கர சுழலில் இருந்து தப்பித்ததை போல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றான் அஜய்.

மீண்டும் கண்கள் அங்கேயே தான் போனது.

சற்று நேரத்தில் அந்த ‘பக்கத்து வீட்டு ஆன்ட்டி’ வந்தார்.

“வாங்க ஆன்ட்டி!” இன்முகமாய் வரவேற்றான்.

“எப்படி இருக்கப்பா?”

மசப்பலாய் சிரித்தவன், “நல்லா இருக்கேன்னு நான் சொல்றது அவ ஓகே’ன்னு சொல்ற ஒரு வார்த்தைல தான் இருக்கு ஆன்ட்டி!” என்றான்.

அன்று பிரபுவின் அக்காவை பார்த்து பேசி தெளிவு பெற்றவுடன் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முடிவெடுத்து இவரிடம் உதவுக்கு வந்து நின்றான் அவன்.

இவர்களின் பிரச்சனையை சுருக்கமாய் சொன்னவன், ‘அவளை எப்ப்டியாவது பேசி, கன்வின்ஸ் செஞ்சு இந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க! இப்படியே விட்டா டிப்ரஷன்’ல பைத்தியமே பிடிச்சுடும்! இந்த டாக்டர் எனக்கு தெரிஞ்சவங்க! ஷி வில் டேக் கேர் ஆஃப் ஹர்!’ என்றதும், அவன் மீதிருந்த நல்லெண்ணத்தில் அவன் கேட்டுக்கொண்டதை செய்தார் அவர்.

“எனக்காக, நான் கேட்டேன்னு அவளை கவுன்செலிங் கூட்டிட்டு போறீங்களே ஆன்ட்டி! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றான் அஜய்.

   

“தேங்க்ஸ் எதுக்கு தம்பி? என்னால முடிஞ்ச சின்ன நல்லதை செஞ்சேன் அவ்ளோதான்! ஆனா அதுக்கு நல்ல பலன் இருக்கு அஜய் தம்பி! பித்து பிடிச்ச மாறி இருந்த புள்ள இப்போ கொஞ்சம் தெளிஞ்சு இருக்கு…

இந்த தெளிச்சியோடவே சூட்டோட சூடா தாலியை கட்டிடுங்க! கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியா போய்டும்!” என்றார்.

வாய்மொழியாய் ஒன்றும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே அவரை உள்ளே அனுப்பி வைத்தான் அஜய்.

அவனுக்கும் மனதுக்குள் தோன்றத்தான் செய்தது, இந்த தெலுங்கு சினிமாவில் வருவது போல அவள் குனிந்த நேரமாய் பார்த்து படக்கென தாலி கட்டிவிட்டால் என்ன என்று!?

‘கட்ட ரெண்டு நிமிஷம்… ஆனா, கட்டிக்கிட்டவளை சமாளிக்க ஒரு யுகமே தேவைப்படும்!’

நிதர்சனம் உரைக்க, ‘நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்!’ மனதோடு பேசியபடி அவனே உண்மையை ஒப்புக்கொண்டு நிற்க,

“அஜ்…ஜி…” என்று குரல் ஒலித்தது.

“பப்பும்மா!?” நின்ற இடத்தில இருந்தே அவன் கரம் விரிக்க, தாவி வந்து கட்டிக்கொண்டது அந்த சிட்டு.

“ஏன் அஜ்ஜி வல்ல?” எடுத்ததுமே இந்த கேள்வி தான்!

“அது… அஜ்ஜி ஊருக்கு போயிட்டேன்டா அதான்!”

“நோ… பிரசா பாத்தா!” அன்று வெளியே நின்றுவிட்டு அப்படியே அவன் திரும்பி சென்றதை அவள் சொல்ல,

“இல்ல மா, அஜ்ஜி ஊருக்கு போயிட்டேன்! அதான் வீடியோ கால்ல பேசுனேன்ல?”

இன்னும் சில சமாதானங்கள் அதுபோக்கில் ஓட, சற்று எட்டி நின்று அவனை திகட்ட திகட்ட விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா.

    

“அம்மா புது ட்ரெஸ்! பாப்பா புது ட்ரெஸ்! சேம் சேம்!” குழந்தை சொன்னபிறகே அவளை திரும்பி பார்த்தான் அஜய்.

தாயும் மகளும் ஒன்றுபோல உடுத்தியிருந்தனர்.

“சூப்பர் பாப்பூ!  நீங்க ரெண்டு பேரும் ஒன்னு… அஜ்ஜூ மட்டும் தனி… அப்படி தானே?” கேள்வி மகளிடமாக இருந்தாலும், அது தாய்க்கானது என்பது புரியாதா என்ன?

தலைகுனிந்து நின்றுக்கொண்டிருந்தவளை அப்படியே விட்டுட்டு மகளுடன் உள்ளே சென்றான் அஜய்.

மாதுவுக்கு நிற்பதா? போவதா? என்ற தயக்கம்…!

உள்ளே சென்றவன், “ம்மா… என் பொண்ணு!” என்றான் பூங்கோதையிடம் சென்று.

‘ஆனாலும் இவனுக்கு லொள்ளு டி!’ சுவாதி காதில் முனகினாள் ரீனா.

அவனையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்த பூங்கோதை, “எங்க இவ ஆத்தாக்காரி?” என்று கேட்க, “வெளில இருக்கா!” என்று அஜய் சொன்னதும், வேகமாய் எழுந்து அவர் வெளியே செல்ல,

“ம்மா… ம்மா!” என கத்திக்கொண்டே பின்னால் சென்றான் அஜய்.

அங்கே வாசலில்தயங்கிக்கொண்டே நின்றவளிடம் போனவர்,

“நீதான் அந்த மாதா?” என்றார்.

திடுமென ஒரு பெண்மணி இப்படி வந்து கேட்டதும் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

பின்னால், “அம்மா?” என அஜய் வருவதை கண்டதும் தான் இவர் யாரென அவளுக்கு புரிய, அவளறியாமல் தேகம் மெலிதாய் நடுக்கம் கொண்டது.

“என்ன முழிக்குற? நீ தானே அந்த மாதங்கி?” வாயில் நுழையும் அளவுக்கு பெயரை சுருக்கி கேட்டார் அவர்.

“அம்மா, சும்மா இருங்க ம்மா!”

“நீ சும்மா இருடா!” என்றவர்,

“என் புள்ளைக்கு என்னடி குறைச்சல்? என்னத்துக்கு அவனை வேணாங்குரியாம்?” என்று கேட்க,

“ஐயோ யம்மா, இது எங்க விஷயம்… நாங்க பேசிக்குறோம்… விடுங்க!” என்றான் அஜய்.

“பிரச்சனை உங்களோட நிக்குற வரை தான் அது உங்க பிரச்சனை… அடுத்தவங்க காதுப்பட வந்தாச்சுன்னா அது பொது பிரச்சனை தான்!” என்று நியாயம் பேசியவர்,

“சொல்லுடி யம்மா!  என் புள்ளைக்கு என்ன கொறச்சல்ன்னு அவனை வேணாங்குற?” என்றவர்,

“எவனாது அயோக்கியன் வந்து இனிச்சு இனிச்சு பேசுவான், சுளூவா ஏமாந்து போவீங்க! இதே ஒரு யோக்கியன் வந்து நேர்மையா முறையா நடந்துக்கிட்டா, ஏய்ச்சு ஏலம் போடுவீங்க… அப்படிதானே?” என்றார் பட்டென.

  

வழமை போல அவள் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டதை கண்டதும், ‘போச்சுடா! இது இனி எப்போ நிக்குமோ தெரியலையே!’ என்றானது அவனுக்கு.

“ஒழுங்கு மரியாதையா என் புள்ளையை கட்டிக்கிட்டு அவனை சந்தோஷமா வச்சுக்கப்பாரு! அவ்ளோதான் சொல்லிட்டேன்! அதையும் மீறி வேணான், நோனான்ன… இந்த பூங்கோதைக்கு இன்னொரு முகம் இருக்கு! அதை பார்க்குற நிலைக்கு ஆளாகிடாத!” என்றவர்,

“அவ சம்மதிச்சுட்டா! அடுத்த வாரம் நம்ம ஊர் கோவில்ல கல்யாணம்! இழுத்துட்டு வந்துடு!” என்றுவிட்டு,

“வாடி ராஜாத்தி!” என பிரசன்னாவை வாங்கிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

தகர கொட்டகையில் மழை கொட்டி ஓய்ந்ததை போல இருந்தது.

அஜய்க்கு அவன் அன்னையை பற்றி நன்கு தெரியும். கொஞ்சி பேச துளியும் வராது. பாசம் கூட அதட்டலாய் தான் வரும்!

இப்போது அவர் பேசியது கூட அப்படிதான்! இதமாய் பதமாய் சொல்ல வேண்டியதை ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என பேசிவிட்டு போயிருக்க, கண்டிப்பாக அவளுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும் என்று நினைத்து அஜய் அவளிடம் திரும்புவதற்குள் தன் வீட்டினுள்ளே விசும்பிக்கொண்டே ஓடிவிட்டாள் மாதங்கவதனா.

‘கடவுளே… இந்த அழுகையை எந்த பரதேசிடா கண்டுப்பிடிச்சது!?’

அப்படியே விட்டு போகவும் முடியாது, அவள் பின்னாடியே ஓடவும் முடியாது இருதலைகொள்ளி எறும்பை போல அல்லாடியவன், இறுதியாய், அவள் வீட்டிற்குள்ளே நுழைந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!