Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 4

 

 

இரண்டு குடும்பத்திற்கும் மனமகிழ்வாய் சென்றது அந்த நாள்…

வீட்டிற்கு வந்தவுடனேயே அனன்யா அம்மா, கணவரிடம் “எங்கங்க யாரோ ஒருத்தி பொண்ணு பாக்கன்னு யாரு வந்தாலும் கல்ல வச்சு அடிப்பேன்னு சொன்னா…. அவள பாத்தீங்களா…!!”என்று கேட்டார்.



Advertisement

அனன்யாவுக்கு அப்போதுதான் அது உறைத்தது… தான் விளையாட்டுக்கு அப்படி சொன்னாலும் தன்னிடம் கல்லால் அடிவாங்கியவர் தான் மாப்பிள்ளை என்று…. முகம் சுருங்கியது…

இதை கவனித்த அனன்யா அப்பா அவள் போக்கிலேயே விடு என்று மனைவிக்கு கண்ணால் சைகைசெய்துவிட்டு அனன்யாவைப் பார்த்து கொஞ்சம் முறுவலித்தார்.

“அப்பா… பாருங்கப்பா…” என்று சிணுங்கிக்கொண்டே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை போட்டாள்…

Advertisement

சன் ம்யூசிக்கில் “வேறெதுவும் தேவையில்லை… நீ மட்டும் போதும்..” பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

Advertisement

“இவனுங்க வேற ரொம்ப டிஸ்டர்ப் பன்றானுங்கடா என்னய…” என்று நினைத்துக்கொண்டே தன் அறைக்கு செல்ல படியேறினாள்.

“தாரமே… தாரமே… வா….” என்று சித் ஸ்ரீராம் உருக்கிக்கொண்டிருந்தார்…

அவள் கைபேசி பளிச்சென்று ஒளியுமிழ்ந்தது… புது அறிமுகமில்லா எண்…

Advertisement

அழைப்புமணிச் சத்தம் வெளியில் வருவதற்கு முன்பே அதை அமைதிப்படுத்தி அறைக்குள் புகுந்துகொண்டாள்…

“ஹலோ…” (டப்… டப்… டப்..டப்… என்று அடித்துக்கொண்டது இதயம்)

எதிர்முனையில்… “அனு நான் தான்…”

“ம்ம்ம்ம்”…அனு என்று அவளை அழைத்தது அவன்மட்டும் தான்… அவன் குரலே தான்…

“பாத்தியா… நீயும் நானும் கைபேசி எண் வாங்கலன்னாலும் நம்ம அப்பா அம்மா ரொம்ப முன்யோசனையோட இருக்காங்க….எங்க அம்மா கொடுத்தாங்க இப்போதான்….” படபடவென்று பேசிமுடித்தான்.

“இவங்கள்லாம் நல்ல ஆளுங்கப்பா… சத்தமே இல்லாம எல்லாம் செஞ்சுடறாங்க…” அனன்யா புன்னகைத்தாள்.

அப்புறம் பேச்சு ஏதுமில்லை…

நீண்ட மௌனத்திற்குப்பிறகு…

“எனக்கு பேசனும் போல தான் இருக்கு… ஆனா என்ன பேசுறதுன்னு தெரில…” தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தாள் அனன்யா.

“ நான் பேசலன்னா கூட அர்த்தம் இருக்கு… நீ … பேசாம இருக்க வாய்ப்பே இல்ல…” மெதுவாக கிசுகிசுத்தான்.

“என்ன சொன்னீங்க…” அவள் கேட்க..

“நீ எவ்ளோ அமைதியான பொண்ணுன்னு நெனச்சு பாத்தேன்…” சொல்லிவிட்டு சிரித்தான்.

“நான் கோவமா போறேன்…” அனன்யா பொய்கோபம் காட்டினாள்.

ஆதர்ஷ் – ஹேய் வச்சுடாத… நான் சும்மா தான்… விளையாட்டுக்கு சொன்னேன்…

அனன்யா – நானும் தான்….

இன்னும் கொஞ்சம் நேரம் மௌனம்…

இருவரும் புன்னகைத்துக்கொண்டே இருந்தனர்…

“வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்…. கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்…”

இது அவன் வீட்டில் பாடியது… தன் ப்ளூடூத் ஸ்பீக்கரில் போட்டுவிட்டான்….

அவளுக்கு இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு ஏற்பட்டது.

அனன்யா – போங்கப்பா… போய் தூங்குங்க… எனக்கு நாளைக்கு சைட் விசிட் இருக்கு…. டேக் கேர்…

ஆதர்ஷ் – சரிடா…. டேக் ரெஸ்ட்… ஸீயூ… லவ் யூ…

அவள் அழைப்பை துண்டித்தாள்….

லவ் யூ…. அவன் சொன்னது காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. குரலில் கட்டுண்டதுபோல் மனம் அவன் பற்றி மட்டும் சிந்தித்தது.

இரவு முழுதும் தூக்கம்பிடிக்கவில்லை அவளுக்கு…. வெகுநேரம் விழித்திருந்து புன்னகைத்துக்கொண்டே நடு இரவுக்குமேல் தூங்கிப்போனாள்….

◆◆◆

மாலை மங்கும் நேரம்…. அதுவொரு கல்லூரி முகப்பு… அழகழகாய் கோலங்கள் போடப்பட்டு அவ்விடமே எழிலுடன் இருந்தது…

நான்கைந்து பெண்கள் தங்களுள் ஒருத்தியை துரத்திக்கொண்டு வந்தனர். அந்த ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் மொத்தமாக வண்ண சாயங்களில் மூழ்கியெழுந்தது போல இருந்தனர்.

வரும் வேகத்தைப் பார்க்கும்போது அவள்தான் அவர்களின் அந்த கோலத்திற்கு காரணம் என்று புரிந்தது…

அவளையும் வண்ணச்சாயங்களில் நனைக்கவே அவர்கள் ஓடிவருகிறார்கள். இதோ அவள் சிக்காமல் ஒரு வளைவில் திரும்பிவிட எதிரில் வந்த ஆதர்ஷ் மேல் வண்ண நீர் கலவைகள் ஊற்றப்பட்டன….

திரும்பிய அவளுக்கு இவன் முகம் தெரியவில்லை… “ஹேய் சாரி டூட்…” கண்கள் கெஞ்சின உண்மையாக வருந்தி…

அந்தப்பெண் ஓடிவிட்டாள்… ஆனால் அவள் விழியும்… அந்த பார்வையும் அவனிடமிருந்து எளிதில் விலகிவிடவில்லை.

அவளை துரத்தி வந்த பெண்களும் மன்னிப்புகேட்டுவிட்டு நகர்ந்தார்கள். கல்லூரி வாழ்வில் இவையெல்லாம் சாதாரணம் என்று அவனறிவான்.

அது விழாவிற்கு முதல் நாள்… நாளை அந்த பெரிய நிகழ்வுக்காக கல்லூரியே களைகட்டியிருந்தது… தான் அவர்களை ஏதேனும் சொல்லி அந்த உற்சாகத்தை அவன் குலைக்க விரும்பவில்லை.

மறுநாளும் அவளைப்பார்த்தான்… குறும்பும் புன்னகையும் தளும்பும் அவள் கண்கள் மிக வசீகரமானவையென்று தோன்றியது அவனுக்கு….

அவன் தேடிச்செல்லாமலே அவளைப் பார்க்க நேர்ந்தது…

பின்தொடர்ந்து செல்வதெல்லாம் அவனுக்கு விருப்பமில்லை… நதியோட்டத்தில் நீந்திக்குளிப்பதுபோல் காலத்தின் பாதையில் பயணிக்கவே நாட்டமுள்ளவன்….

இரவு தூக்கமில்லை… கண்ணுக்குள் அவள் கண்கள் சிமிட்டி மன்னிப்பு கேட்டதும், முகத்தில் ஆயிரம் பாவனைகொண்டு பேசுவதும் மாறிமாறி வந்தன.

அடுத்தநாளும் அவள் இதோ எதிரில் கடந்துபோகிறாள்… குழந்தைத்தனத்தின் மொத்தவுருவம்…

அடடே ஒருநிமிடம்…

அவள் இவனைப்பார்த்தே… இவன் இருக்கும் திசைநோக்கியே வருகிறாள்…

தலையில் கைவைத்துக்கொண்டே முகத்தை சுழித்துக்கொண்டு வந்து அவனிடம் வாக்குவாதம் செய்கிறாள்…

அவன் செய்யாத தவறுக்கு அப்போது திட்டிக்கொண்டிருக்கிறாள். உண்மையை விளக்கியபோது ஓடி மறைந்துவிட்டாள் குற்ற உணர்வு கொண்டு.

அடுத்த நாள் அதே பழைய மன்னிப்பு வேண்டும் பார்வையுடன் இவன் இருக்கும் இடங்களில் வளையவருகிறாள்.

பேசுவதற்கு துணிவு இல்லை என்பதால் அவனும் அதைக் காணாததுபோலவே இருந்துவிட்டான்…

அவள் நினைவுகள் அவனை நீங்கவேயில்லை… நாளுக்கு நாள் விலைவாசிபோல் ஏறின…

இவன் தவிப்போ எரிபொருள் விலைபோல் உயர்ந்தது…

அவளுக்காக அதே விழாவிற்கு அடுத்த மூன்று வருடங்கள் சென்று வந்தான்.

அவளைக் காணவில்லை… பல இரவுகள் தூக்கம் தொலைத்தான்….

சில மாதங்களுக்கு பிறகு வந்த ஒரு நாள்… அந்த ஒரு நாள்….❤️

◆◆◆

 

 

 

 

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்

மான்கட் காலதர் மாளிகை இடங்களும்

கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்

பயனற வறியா யவனர் இருக்கையும்

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்

– இளங்கோவடிகள்(சிலப்பதிகாரம்)

 

என்ன… பாட்ட முழுசா படிக்காமயே இங்க வந்துட்டீங்க தானே… போய் படிச்சுட்டு வாங்க… அப்போதான் மீதி கதை சொல்லுவேன்….

பெரிய பெரிய கட்டிடங்கள் சூழ்ந்திருந்த… ஐரோப்பியர் மற்றும் பல நாட்டினர் தங்கியிருந்து வாணிகம் பெருமளவில் நடந்த இடம்னு சொன்னா யாருமே இப்போ நம்பமுடியாத பூம்புகார் நகரம் பற்றிய சிலப்பதிகாரத்தில் வரும் பாடல் இது…..

படிச்சாச்சா…!!!!!!

இது ஏன் இங்கன்னு பாத்தீங்களா… !!!!!!

தெரிஞ்சுக்கணும்னா ரெண்டு வருடம் பின்னோக்கி போகணும்………

மேல சொன்ன அந்த பாட்ட அவ சத்தமா ரேஷ்மாகிட்ட சொல்லி அதோட அர்த்தமும் சொல்லிட்ருந்தா….

கடல் அலைகள் தூரமா ஒரு அழகான ஆர்கெஸ்ட்ரா நடத்த… இவ பாடம் நடத்த… இவர்களைக் கடந்து சென்ற ஆதர்ஷ் விழிவிரித்து திரும்பினான்….

மனசும் உடம்பும் ஒருசேர பறக்கிற மாதிரி தோணுச்சு அவனுக்கு…

அவன் பாத்தது அதே கண்கள்…

அவளே தான்…

எத்தன நாள்…

ரெண்டு வருஷம்…

சரி மறந்துடலாம்னு நெனச்சு நண்பர்களோட ஊரசுத்த வந்தா…

இங்க வந்து நிக்கிறா….

நண்பர்கள் கடற்கரைக்கு விளையாட கூப்ட்டாலும் போக மனசில்லாம ஒன்னுமில்லாத அந்த கண்ணகி மணிமண்டபத்த சுத்திவந்தான்….

அந்த பொண்ணுங்க கடற்கரை பக்கம் போனதும், “இப்போ வாங்கடா போலாம்…” என்று காண்டாகி ஒரு மூலையில் உக்கார்ந்திருந்த அவனோட பட்டாளத்தை கூட்டிட்டுப்போனான்.

அங்க போனாலும் அவன் கவனம் அவ மேலேயே தான் இருந்துச்சு… அப்பப்போ சிரிச்சுட்டே நின்னான்…

மித்ரன் மட்டும் இதை பாத்தும் பாக்காம மனதில் குறித்துக்கொண்டு “மச்சான் ஏதோ வசமா சிக்கியிருக்கான்” என்று புன்னகைத்துக்கொண்டான்.

அப்போது தான் அந்த கல் வந்தது…

ஆதர்ஷ் அதையும் பார்க்காமல் நல்லா நெத்தில ரத்தம் வரவரை கல்லாட்டம் நிக்க…

மற்ற நண்பர்கள் அந்தப் பெண்களை துரத்த…

மித்ரனும் அவர்களோடு இணைந்துகொண்டான்.

சுயநினைவுக்கு அப்போ தான் வந்த ஆதர்ஷ், எல்லாம் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவ போய்ட்டா…. கண்ட கனவு எல்லாம் க்ளோஸ்… ரொம்ப சோகமாயிடுச்சு சாருக்கு…

அதுக்கப்புறம் அவள பாக்கவேயில்ல…

இப்போ அடுத்ததடவ மறந்துடலாம்னு முடிவுபண்ணி பொண்ணுப்பாக்க போனா… அங்கேயும் வந்து நிக்குறா….

அவள் அன்று அவன்மேல் வீசின அந்தகல்ல தன் டேபிள் மேல ஒரு அழகிய மெட்டல் ஸ்டாண்டில் வைத்து தினமும் அதனுடன் பேசிக்கொண்டிருப்பான்…

அதுவும் அவனோடு சேர்ந்து இன்று மிகவும் சந்தோஷப்பட்டது….

பல மாதங்களுக்குப் பிறகு, அவன் அதிகநேரம் அன்று தூங்கினான்…..

 

……

 

 

அன்று அனன்யா எழுந்து குளித்து கிளம்பி தன் அறையிலிருந்து ஏழு மணிக்கு வெளியில் வந்தபோது வீட்டில் ஏதோ பேச்சுக்குரல்கள் கேட்டன.

“என்னடா இது… இவ்ளோ காலையிலேயே விசிட்டர்ஸா… யாராயிருக்கும்…” யோசித்துக்கொண்டே படியிரங்கினாள்.

அங்கே ஆதர்ஷ்…. கையில் காபி கப்புடன்… எதிரில் அவள் அப்பா…. இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்….

தடதடவென்று ஓடி சமையல் அறைக்குள் நுழைந்து “மா… என்னம்மா இது… இவர் எப்படி இங்க !!!!” என்றாள்.

“வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட்டியா !!!” என்றார் அம்மா.

“அச்சச்சோ… அத மறந்துட்டேனே” என்றுவிட்டு மறுபடி வரவேற்பறைக்குப் போய் அவனை வாங்க என்று அழைத்துவிட்டு வந்தாள்.

“ சாதாரணமா இரு… அவங்க அப்பா அம்மா எப்போ நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்… அதுக்கு புடவை எல்லாம் எப்போ எடுக்கலாம்னு கேட்டுவிட்ருக்கங்க…!!!” என்று சொல்லி தொடர்ந்தார்…..

“இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு வர ஞாயிறு எல்லாருக்கும் சரின்னு படுதாம்… இந்த புதன் நல்ல நாள்… அன்னைக்கு புடவை எடுக்க போலாம்…” என்றார்.

“எதுக்கு அவ்ளோ அவசரம்… என் ஆராய்ச்சி வேலையெல்லாம் முடியட்டுமே…” அம்மா காதோடு சொன்னாள்.

“வீட்ல அவங்கள வச்சுக்கிட்டு பேசாத… அப்புறம் பேசிக்கலாம்… உன் படிப்புக்கு எந்த கெடுதலும் வராதுன்னு சொல்லிருக்காங்க….” என்றார் அம்மா அவளுக்கு ஆதரவாய் புன்னகைத்து…

“ப்ளீஸ் மா…எனக்கு டாக்டர் அனன்யான்னு தான் பத்திரிக்கைல வரணும்…” கொஞ்சம் மெதுவாகச் சொன்னாள்.

“பாத்துக்கலாம்… போ… போய் பேசிட்டு இரு கொஞ்ச நேரம்…” என்று சமையலில் இறங்கினார்.

வெளியில் அனன்யா அப்பா ஏதோ தொலைபேசி அழைப்பு வந்ததனால் உள்ளே சென்றிருக்க, இவையனைத்தையும் அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

அனன்யா அப்பா உள்ளே நுழையவும் அந்த பேச்சு முடியவும் சரியாக இருந்தது. அவன் தன் கைபேசியை பார்ப்பதாய் பாவனை செய்திருக்க.. அனன்யாவும் உள்ளே வந்து அவள் அப்பாவோடு சோபாவில் அமர்ந்தாள்.

இருவருக்கும் வெவ்வேறு மனநிலை… அதனால் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நிமிர்ந்து சிறு புன்னகையை படரவிட்டதோடு அவள் குனிந்துகொண்டாள். அவனும் அவள் அப்பாவும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

பின் அவன் “சரி அங்கிள் நான் கெளம்பறேன்… அப்பாவ உங்ககிட்ட கலந்துக்க சொல்றேன்… அப்புறமா பாக்கலாம்… வரேன் ” என்றான்.

“முதமுறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க… சாப்பிடாம போகக்கூடாது தம்பி… இந்த முறையெல்லாம் பாக்க வேணாம்… இதும் உங்க வீடு தான்… சாப்பாடு செஞ்சுட்டேன்… சாப்பிட்டு கிளம்பலாம்…” அமுதாம்மா சமயலறையில் இருந்து அவசரமாக ஓடிவந்து பேசினார்.

அவர் கணவரும் அதை ஆமோதிக்க, ஆதர்ஷ் அதிகம் மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு வந்தான்… அவ்வளவு குறைந்த நேரத்தில் நிறைய உணவுகள் செய்திருந்தார் அவன் அம்மாவைப்போலவே…

பின் சிறிது நேரத்தில் அவன் கிளம்பிவிட்டான். அனன்யா தானும் அன்று வெளியில் செல்லவேண்டியிருந்ததால் வீட்டில் சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள்.

◆◆◆

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!