Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 12

“உனக்கு எதுவும் ஆகாது… பயப்படாத ஆதி…” என்று அனன்யா ஆதியிடம் சொன்னாள்.

 

அவன் பயப்படவில்லை…. ஆனால் சிறு கலக்கம் இருந்தது மனதில்…. அனன்யா இவ்வாறு பேசியதும் அவன் முகத்தில் இருந்த கலக்கம் மாறி சற்று புன்னகைத்தான்.

 



Advertisement

அவர்கள் இருவருக்கும் இந்த தனிமை மிக அவசியமாய் இருந்தது. இருவரும் ஒன்றாகவே இருந்தாலும் பலருக்கு நடுவில் இருந்ததால் தயக்கமும் பதட்டமும் மற்றும் பல குழப்பங்களும் என கடந்த இரு நாட்கள் மிகவும் சோர்வடைய வைத்ததாக உணர்ந்தார்கள்.

 

“அனு என்கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லு… உனக்கு மறுபடி அங்க போகணும்னு தோணுது தானே…” என்று ஆதி மெதுவாக கேட்டான்.

Advertisement

 

Advertisement

“எங்க ஆதி…” என ஒன்றும் தெரியாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் அனன்யா.

 

‘கேடி நடிக்காத… எனக்கு தெரியும் நீ மறுபடியும் பழைய காலத்துக்கு போய் மணிமேகலைய பாக்க ஆசைப்படறன்னு…” என்றான் சிரித்தபடி.

Advertisement

 

“எப்படி கண்டுபிடிச்சீங்க…?? அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது…??” என்றாள் அனன்யா சிறுபிள்ளைபோல்…

 

“முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கு… நீ எப்போதும்போல சந்தோஷமா இல்லன்னு உன் கண்ணு சொல்லுது…” என்றான் அவள் கண்களில் உரசியபடி தொங்கிய கூந்தல் கற்றையை காதோரம் சேர்ப்பித்து…..

 

“எனக்கு அது நடக்கும்ன்னு தோணால ஆதி…” என்றாள் சற்று வருத்தம் கலந்த குரலில்.

 

“ஆனா எனக்கு நாம மறுபடி அங்க போவோம்ன்னு தோணுது…” என்றான் அவள் முகத்துக்கு நேரே கண்சிமிட்டி.

 

“ உண்மையா சொல்றியா… இல்ல என சிரிக்க வைக்க சொல்றியா…” என்று அனு கேட்க….

 

“ சத்தியமா சொல்றேன்… என்னோட செல்லகுட்டிக்காக கடல்ல குதிக்க சொன்னாகூட குதிப்பேன்…” என்றான் அவள் தலையில் செல்லமாக முட்டி….

 

“ அப்படி எல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம்… நீ என்கூட இருந்தால் மட்டும் போதும் … லவ் யூ ஆதி.. ” அவன் கண்களை ஊடுருவி பார்த்து சொன்னாள்.

 

“லவ் யூ ட்டூ டி” ஆதி அனுவின் கைகள் கோர்த்ததும் இதற்கென்றே காத்திருந்தவள் போல தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

அந்த டி இப்போது அவளுக்கு சுகமாய் தோன்றியது.

 

சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியில் என்ன நடக்கிறது என்று பார்க்கப் புறப்பட்டனர்.

 

◆◆◆

 

அங்கே தென்பட்டது ஒரு அரை வட்டம் போன்ற அல்லது குதிரை குளம்படி வடிவ சுவர்.

 

இது ஒரு கோட்டையின் சுற்றுமதிலாக இருக்க வாய்ப்புள்ளது.

 

இப்போது அது ஒரு சுவர் போல தோன்றவில்லை. முதலில் ஏதோ பவளப்பாறை போலவே தென்பட்டது. ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய அந்த வடிவம் இயற்கையோடு ஒன்றிணைந்து, பவளப்பாறைகள் தன்மீது வளர வழிவிட்டு, பார்ப்பதற்கு மனிதனால் செய்யப்பட்ட கட்டிடம் போல் தோன்றவில்லை. ஆனால் உற்றுநோக்கும்போது அது செங்கல் கட்டிடம் தான் என்பது உறுதியாகிறது.

 

அந்த இடத்தில் தற்பொழுது சகதியாக இருக்கக்கூடும் என்பதால் இறங்க முடியாது. எனவே அதனை புகைப்படம் மற்றும் காணொலியாக பதிவு எடுத்துக்கொள்ள முடிவு செய்தனர்.

 

◆◆◆

 

அனன்யா தன்னுடைய புகைப்படக் கருவியுடன் ஆதர்ஷயும் அழைத்துக் கொண்டு அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தாள்.

 

அதில் மிகவும் துல்லியமாக தொலைவிலிருக்கும் பொருட்களையும் படம் எடுக்கக்கூடிய வசதிகள் இருந்தன. அங்கே தன் கண்ணுக்குத் தென்பட்ட அனைத்தையும் கேமரா கண்களுக்குள் சிறை பிடித்து வைத்தாள்.

 

அந்த கட்டிடப் பகுதிகள் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் என்று தோன்றியது. ஆனால் கடலில் நீண்ட நாட்கள் அமிழ்ந்திருந்ததால் அங்கே கால் வைத்து நடப்பது என்பது முடியாத காரியம்.

 

கப்பலும் ஜாக் எனப்படும் கருவிகளால் விழாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

கப்பல்கள் எப்பொழுதுமே கரையில் வைத்து கட்டப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகின்றன.

 

முழுதாக கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கப்பலை கடலில் இறக்குவதும் அதனை மறுபடி மேல் ஏற்றுவதும், ஒரு மாலுமியின் பதவி ஏற்பு விழா மற்றும் பிரிவு உபசார விழா போன்று நடக்கும்.

 

இந்த ஆராய்ச்சிக் கப்பலில் மட்டும் சில பிரத்தியேகமான ஊன்றுகோல் வசதிகள் வைக்கப்பட்டு இருந்தன.

 

“இதை காண்பது என்பது மிகவும் சாதாரணமான காரியமில்ல…. நமக்கு இது ஒரு பெரிய வரம்ன்னு சொல்லலாம்…” என்று மைக்கேல் சொல்வதைக் கேட்டுக்கொண்டே சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அனன்யாவின் புகைப்பட கருவியில் தெரிந்த காட்சி, அவள் ரோமங்களை குத்திட்டு நிற்கச் செய்தது.

 

அனன்யா கனவில் கண்டது போலவே மலை மலையாக அலைகள் எழுந்து வந்து கொண்டிருந்தன. அது தூரத்தில்…… .. தொலைதூரத்தில் தெரிந்த காட்சி.

 

புகைப்படக் கருவியின் தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடிந்தது. தான் பார்த்தவற்றை அடுத்தவர்களுக்கு காண்பிக்க நேரமில்லை. ஆகவே அனன்யா நேரடியாக கப்பல் மாலுமியிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள்.

 

அவர் அந்த புகைப்படத்தைப் பார்த்து கலவரமானாலும்… “பதறவேண்டாம்… அதனால ஒரு நன்மையும் இல்ல” என்று அனன்யாவை அமைதிப்படுத்திவிட்டு… ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்….

 

“ கப்பல் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அவரவர் இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்…” என்று.

 

அனன்யா படபடப்போடு அதை பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் ஏன் மறைக்கிறார் என்று புரியாமல் குழம்பினாள்.

 

◆◆◆

 

உள்வாங்கிய கடல் மீண்டும் கரை நோக்கி வந்து கொண்டிருந்தது….

 

அது மெதுவாகத் தவழ்ந்து வரும் ஒரு குழந்தையைப் போல, அலைகளை முன்னே அனுப்பி… பின் கோபத்தில் கொந்தளிக்கும் மனம்போல, நீர் மலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது.

 

கடல்நீர் திரும்புவது கண்டு பயணிகள் கப்பலில் தளத்திலேயே நின்று அதனை ரசிக்க தொடங்க, மீண்டும் மாலுமி அந்த அறிவிப்பை வெளியிட்டார்….. “கப்பல் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தத்தம் இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்… மிக மிக அவசரம்….!!!” என்று கூறினார்.

 

“அவசரம்” என்கிற வார்த்தை அவர்கள் காதில் விழுந்ததும், அதி தீவிரமான சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்கள் மற்றவர்களை உள்ளே போகும்படி செய்தனர்.

 

அனைவரும் அவரவர் இடங்களுக்குச் செல்ல, ஆதர்ஷ் அனன்யாவை தேடிக்கொண்டு மாலுமியின் இடத்திற்கு வந்தான்.

 

அனன்யா கப்பல்தளம் விட்டு நகரும் பொழுதே, ஆதர்ஷ் அதை கவனித்திருந்தான். அவள் முகத்தில் இருந்த கலவரத்தின் அறிகுறிகள் ஏதோ விபரீதம் என்பதைக் காட்டின. அனு செல்லும் திசையை பார்த்துக்கொண்டே நின்றவன் , என்னவென்று அறியும் ஆவலில் அவளைப் பின்தொடர்ந்து இங்கே வந்து சேர்ந்தான்.

 

அது கப்பலின் மூன்றாம் தளம்… அங்கிருந்து பார்க்கையில், அலைகள் இவர்கள் அருகில் வந்து விட்டது தெரிந்தது.

 

அனன்யா எதற்காக தனியே வந்திருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

 

இவர்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த அந்தக் காட்சி இது…

 

ஆதர்ஷ் மற்றும் அனன்யா நிச்சயமாக இதில் இருந்து தப்பி பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர். ஏனெனில் வந்த அலைகளின் வேகமும் உயரமும் அத்தகையது…

 

ஆம் உங்கள் எண்ணம் சரிதான்… வந்தது ஆழிப்பேரலை…

 

இது கண்டத் தட்டுகள் நகர்வின் காரணமாக உருவான ஆழிப்பேரலை…..

 

பூமியின் மேற்பரப்பு ஒரு முட்டை ஓடு போன்றது. அது ஒரே கூடாக இல்லாமல், பற்பல பாகங்களாகச் சிதறி இருக்கிறது. அவ்வாறு சிதறிய பகுதிகளை நாம் கண்டத் தட்டுகள் என்கிறோம்.

 

இவை கால காலமாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. நகர்ந்துகொண்டே இருக்கும்….

 

இதுபோன்ற கண்டத்தட்டுகள் மீதான அழுத்தங்களை நிலம் சரிசெய்து கொள்வது தான் நிலஅதிர்வு, நிலநடுக்கம், ஆழிப்பேரலை மற்றும் சிலநேரம் எரிமலை வெடிப்புகளுக்கு கூட காரணமாகிறது.

 

இரண்டு கண்டத் தட்டுகள் நகர்ந்து அதற்கு இடையில் வெற்றிடம் உருவானதால் கடல்நீர் அந்த வெற்றிடத்தை நிரப்ப உள்வாங்கியது.

 

கடற்கரையிலிருந்து 8 கி.மீ. தூரம் உள்வாங்கியதாக முன்பே கூறியிருந்தோம். மீண்டும் அந்த தட்டுகள் ஒன்று சேரும் பொழுது, அழுத்தத்தால் நீர் மேலே தள்ளப்பட்டு ஆழிப் பேரலைகள் உருவாகும்..

 

இதோ அந்த அலை நெருங்கிவிட்டது…

 

கண்மூடித்திறக்கும் நேரத்திற்குள் இந்த ஆழ்கடலின் மடியிலே நம்மை நித்திரையில் ஆழ்த்த தான் போகிறது….

 

அனன்யாவுக்கு “மறுபடி அம்மா அப்பாவை பார்க்கப்போவது இல்லையோ… இவனோடு இன்னும் நிறைய நாள் வாழவேண்டும் என்று நினைத்து இருந்தோமே… அது நடக்காது போல…” என்று எல்லாம் நினைத்து… நகர தோன்றாமல் சிலைபோல ஆனாள்.

 

அப்பொழுதுதான் ஆபத்து காலங்களில் தப்புவது எப்படி என்று தான் பார்த்த டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகள் எல்லாம் ஆதிக்கு ஒவ்வொன்றாகத் தோன்றியது.

 

மூச்சை பிடிக்கவேண்டும்…. ஏதாவது தென்னைமரம் கிடைத்தால் தொற்றிக் கொள்ள வேண்டும்.., என்று ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தான்.

 

சுனாமி வந்தால் எப்படி தப்பிக்கலாம் என்று அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது பார்த்த நிகழ்ச்சிகள் கூட அந்த நேரத்தில் கண்முன் தோன்றியது.

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேற்றுமையே இதுதான்…

 

பெண் மனது எப்பொழுதுமே தன்னைச் சுற்றி உள்ளவர்களை மட்டுமே நினைக்கும். லட்சமும் கோடியும் ஆன செல்வம் தரும் நிம்மதியைக் காட்டிலும், அன்புக்குரியவரின் ஒரு இனிமையான சொல்லோ…. புன்னகையோ… அவளுக்கு அதிகமான மகிழ்ச்சியைத் தந்துவிடும்.

 

ஆனால் ஆண்கள் மனம் எந்த ஒரு சூழ்நிலையிலும் சாகசம் புரிய வேண்டும் என்று நினைக்கும். நிகழ்காலத்திலிருந்து, அது தரும் அழுத்தங்களில் இருந்து எப்படியாவது தப்பி விட எண்ணும்…

 

அதுதான் இங்கும் நிகழ்கிறது…..

 

இருவர் கைகளும் அனிச்சையாக கோர்த்துக்கொள்ள இருவரும் கண்களை மூடினர்…..

 

இறுதியான மூச்சினை இருவரும் ஒன்றாக உள்ளிழுத்தனர்….

 

நீர் வந்து குளிர்ந்துபோவோம் என்று எண்ணியவர்களுக்கு புழுக்கமாய் தோன்றவும் கண்விழித்தனர்…

 

இருட்டு சூழ்ந்திருந்தது மேலே ஒன்றும் நனைந்தது போல் தெரியவில்லை…. சட்டென்று கண்கள் கூசச் செய்வது போல மின்விளக்குகள் பளிச்சிட்டன… என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு புரியவே சற்று நேரம் ஆனது…

 

அவர்கள் தற்பொழுது பத்திரமாக ஒரு இடத்தில் இருப்பதாக உணர்ந்தனர்…

 

அனன்யா அவர்கள் கடந்த காலத்திற்கு சென்று விட்டதாக நினைத்தாள் ஏனெனில் ஆதி தன்னுடைய கையில் இந்திரநீலக்கல் கொண்டுவந்திருந்தான்.

 

ஆனால் சிறு உறுத்தல் என்னவென்றால் அவர்களுடன் மித்ரன் தற்போது இல்லை….

 

அவன் இருந்தால் அது நிச்சயமாக உதவியாக இருக்கும். ஆதி அப்பொழுதுதான் மித்ரனைக் கையோடு கூட்டி வந்து இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

 

இது என்ன….!!!!

 

இவர் எப்படி இங்க வந்தார்…????

 

அதோ….!!!!

 

மாலுமியும் அவர்களுடன் இருக்கிறார்….

 

இவர்களைப் பார்த்து புன்னகைக்கிறார்…

 

◆◆◆

 

 

இப்போ உங்களோட சில தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்புறேன்…

 

இது கதையில் வரும் பாத்திரம் யாருமில்லை…

 

கதையை எழுதின ஆத்தர் பேசுறேன்…

 

புலவர்கள் சொன்னது எல்லாமே பொய்யென்று தான் நாம் பல காலமாக நம் முன்னோர் பற்றிய வரலாறுகளைப் புறந்தள்ளி வைத்திருந்தோம்.

 

ஆனால் கீழடியென்று ஒரு இடம்… அங்கே தோண்டத் தோண்ட புதையல்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்கள் பல கிடைத்ததும் தான், தங்கத்தில் தாயக்கட்டை, தந்தத்தில் சீப்பு என்று சங்கப்பாடல்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று உணர்ந்தோம்.

 

அதுபோல் நம் சங்க இலக்கியங்கள் சொல்லும் உண்மைகளையும் கொஞ்சம் நாம் தேடத்தொடங்குவோம்.

 

பூம்புகார் பற்றி அவ்வப்போது பல கடலாய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் வெளிவருவது இல்லை.

 

முதல் சங்கம் நடந்தது தென் மதுரை, அடுத்தது கபாடபுரம், அப்புறம் மூன்றாம் சங்கம் தான் இப்போது உள்ள மதுரை. மீதம் இடங்கள் கடற்கோளில் அழிந்தன….

 

இது எல்லாமே உண்மை தான்….!!!

 

கடந்த இருபதாயிரம் ஆண்டுகளில் பூம்புகாரின் எல்லையில் முப்பது கிலோமீட்டர் தொலைவு கடல் சூழ்ந்திருக்கு…!!!

 

சங்கப்பாடல்கள் சொன்ன பூம்புகார் கடலுக்குள் இருக்கு….!!!!

 

இன்னும் என்னவெல்லாம் இருக்கு….????

 

அது ஒரு அழகான கடற்கரை நகரம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதன் சிறப்பு உலகம் முழுவதும் பேசப்பட்டது.

 

அலைகடலை ஆடையாகவும், மழை பொழிவால் உண்டான காவிரியாற்றை கூந்தலாகவும் கொண்டு அமர்ந்திருக்கும் நிலமகள் போன்றதுவும்…

 

கதிரவன் விடியும் வரை ஒளிரும் கலங்கரை விளக்கு கொண்டதுவும்…

 

கூறை வேயா நிலாமுற்றம், சிறு மான் கண் போன்ற ஜன்னல்கள் கொண்டதுவும்,

 

அறியாமல் எவரும் உள்ளே புகமுடியாத யவனர் காவலால் காக்கப்படுவதும்,

 

பன்னாட்டு மக்கள் புலம்பெயர்ந்து கலந்து வாழும் நீர்சூழ் நகராகிய…

 

பூம்புகார்…

 

அந்நகர் பற்றி நாமளும் சிலது தெரிஞ்சுப்போம்….!!!

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த லண்டன் மாநகரைக் காட்டிலும் ஆயிரம் மடங்குபெரியது காவிரிப்பூம்பட்டினம் என்று சில அறிஞர்கள் அந்நகரைப் பற்றி புகழ்ந்திருந்தனர்.

 

காவிரி புகும் பட்டினம் – அதாவது காவிரி நதி கடலுடன் சங்கமிக்கும் இடமே காவிரிப்பூம்பட்டினம்.

 

அந்த ஊர் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்று இரண்டு தனித்தனியான பிரிவுகளைக் கொண்டது. அவ்விரண்டு பிரிவுகளுக்கும் இடையில் அமைந்திருந்தது நாளங்காடி.

 

மருவூர்ப்பாக்கம் கடலோரத்தில் அமைந்திருந்த இடமாகும். அங்கே யவனர் இருப்பு எனும் இடம் இருந்தது. யவனர் என்பது ஐரோப்பியர்கள் அதாவது கிரேக்கர், ரோமானியர் மற்றும் அரேபியர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

 

மருவூர்ப் பாக்கத்தில் துறைமுகம், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள், கலைஞர்கள் தொழிலாளர்கள் முதலியவர்கள் வீடுகள் ஆகியவை இருந்தன.

 

கொல்லர் உலைகள், சாயமேற்றும் தொழிற்கூடங்கள், நெசவு தொழில் செய்யுமிடம், சரிகை நெய்பவர்கள்,பொற்கொல்லர்கள், மணியிழைப்போர் பட்டறைகள் அனைத்தும் இங்கிருந்தன.

 

காவிரியாறு இப்போது இருப்பது போல் இல்லாமல் அக்காலத்தில் மிகப் பெரியதாக இருந்திருக்கிறது.

 

அது கடலில் கலக்கும் இடமான காவிரிப்பூம்பட்டினத்தில் எண்ணிலடங்காத ஏரிகள் இருந்திருக்கின்றன. அவற்றை தடாகங்கள் என்றனர்.

 

இச்சிறப்புகள் கொண்ட புகார் நகரத்தில் ஐந்து மன்றங்கள் இருந்தன. அவை தற்போதைய நீதிமன்றங்கள் போல் செயல்பட்டன.

 

அரசர் தவறு செய்தாலும் தண்டனை வழங்கக்கூடிய வல்லமை பெற்றிருந்த மன்றங்களவை. எனவே தவறு செய்தவர் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் எனும் நம்பிக்கை மக்களின் மனதில் வேரூன்றி இருந்தது.

 

ஆதலால் அங்கே தவறுகள் குறைவாகவே நடந்தன. குற்றங்கள் யாவும் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்ட பின் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

 

புகார் நகரின் நீர் மேலாண்மை மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது. காவிரியில் இருந்து வரும் நீரை தானாகவே நிரப்பவும் வெளியேற்றவும் தேவையான தொழில்நுட்பங்கள் கொண்ட ஏரிகள் அங்கே இருந்தன.

 

அங்கே பல கோவில்களும் இருந்தன. அவை அனைத்தும் முன்னோர் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன.

 

புத்த சைத்தியத்து இந்திரன் எடுப்பித்த விகாரங்கள் என்று சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளதனை அசோகர் காலத்தில் எழுப்பப்பட்ட ஏழு புத்த விகாரங்கள் என்று நான் பொருள் கொள்கிறேன்.

 

வடதிசை நாடுகளிலிருந்து கங்கைச் சமவெளி விளைபொருட்கள், இமயமலை ரத்தினங்களும், பாண்டி நாட்டு முத்து முதலியவை, கிழக்கு கடல் பவளமும், வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் விளைந்த வாசனைப் பொருட்களும், காவிரி பிறக்கும் இடத்திலிருந்து வந்த சந்தன மரங்களும் அகில் கட்டைகளும், காழகம் எனப்படும் பர்மாவிலிருந்து உலோக பாத்திரங்களும் என பலவாறான பொருட்கள் துறைமுகத்தில் வந்து இறங்கும்.

 

பட்டினப்பாக்கத்தில் தேரோடும் வீதிகளும் அரசர்கள், அமைச்சர்கள், கலைஞர்கள், அரசு பணி செய்பவர்கள், யானைப் பாகர்கள், குதிரைப் பாகர்கள், ஆநிரை மேய்ப்பவர்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட அனைவரின் வீடுகளும் இருந்தன.

 

செங்கற்களால் வீடுகள் கட்டப்பட்டு சுடுமண் ஓடுகள் மற்றும் கூரைகள் வேயப்பட்டு இருந்தன. நான்கு மாடிகள் கூட இருக்கும்.

 

குடிநீருக்கு வீடுகளில் 7 அடி ஆழம்வரை உரைகினறுகள் குடிநீர் ஊற்றுகளாக இருந்தன.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்நகரில் 60,000 குடும்பங்கள் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எனில் சற்றேறக்குறைய 3 லட்சம் மக்கள் அங்கே இருந்து இருக்க வாய்ப்புள்ளது.

 

புகார் நகரம் முழுவதும் நான்கு காவதம், அதாவது முப்பது மைல் பரப்பளவு கொண்டது. அதில் இருபதில் ஒரு பாகம் மக்கள் வாழிடமும் மீதம் மற்ற இடங்களும் அமைந்ததாகும்.

 

பன்னிரண்டாயிரம் வருடமாக மக்கள் புழங்கி இருப்பதாய் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்….

 

ஆனால் இப்போது அந்த சிறப்புகள் ஏதுமில்லாமல் ஒரு சிற்றூராய்… நிர்கதியாய் நிற்கிறது….

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!