Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 13

அவங்க கடந்த காலத்திற்கு போயிட்டதா நாம் நினைத்திருப்போம்….

 

அவங்க முன்ன இருந்த அதே கப்பலில் தான் இருக்காங்க. வேற எங்கேயும் போகல…. ஆனால் கப்பல் எப்படி முழுந்தாம இருக்கு ?

 



Advertisement

அது கடல்சார் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் கப்பல்.

 

அதன் சிறப்பே, நீருக்கு மேலே உல்லாசக் கப்பல் போலவும்… தேவைப்படும்போது நீர்மூழ்கி கப்பலாகவும் மாறுவது தான்…

Advertisement

 

Advertisement

ஆக…. இப்போ அவங்க இருப்பது நீர்மூழ்கிக் கப்பல்…

 

அதனால்தான், அனன்யா பேரலைகள் பற்றி சொன்னபோது மாலுமி பதறாமல் சூழ்நிலையை எதிர்கொண்டார்.

Advertisement

 

ஆனால் ஆழிப்பேரலையில் இருந்து அது எப்படி தப்பும்…???

 

நீர்மூழ்கி கப்பல் நீர்ப்பரப்பில் இல்லாமல் குறிப்பிட்ட ஆழத்தில் இருந்தால் புயல் மற்றும் பெரும் அலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

 

அலைகள் நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தை ஓரிரு வினாடிகளில் கடந்து விடும் என்பதால் அவை பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படுத்துவதில்லை.

 

நீர்மூழ்கி கப்பல் ஆர்க்கிமிடிசின் மிதவை விதிகளின்படி செயல்படுகிறது. அதாவது நீரில் எவ்வளவு தூரம் மூழ்க வேண்டுமோ அவ்வளவு நீரைத் தனக்குள் சேமித்து வைக்கும்.

 

ஆனால் இங்குள்ள சூழ்நிலையோ வேறு… சுற்றி நீரே இல்லை… உள்வாங்கிய கடல் மீண்டும் பொங்கி வருகிறது.

 

இங்கு அலைகள் மொத்தமாக கப்பலை நொறுக்கி போடாவிட்டாலும் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும்.

 

ஆனால் இப்போது அலைகள் மட்டும் வராமல் கடலின் நீர்மட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. அவ்வாறு கடலின் நீர்மட்டம் உயர உயர, நீர்மூழ்கி கப்பல் தனக்குத் தேவையான நீரை உறிஞ்சி கடலின் ஆழத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார் மாலுமி.

 

இந்த அலைகள் நிச்சயமாக பெரிய விளைவை ஏற்படுத்தும்.

 

எத்தனை உயிர்கள், எவ்வளவு பொருள் என்று கணக்கிட முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்.

 

முதலில் வந்த அலைகளைக் காட்டிலும் இன்னும் பெரிய அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வரத்தொடங்கின.

 

◆◆◆

 

கப்பலின் உள்ளே….

 

மாலுமி இவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி “நல்லவேளை நீங்க வந்து சொன்னீங்க…!!!! ஏற்கனவே கடல் உள்வாங்கியதால், சிறு முன்னெச்சரிக்கையோடு சில நடவடிக்கைகள் எடுத்து இருந்தோம்…!!! உங்களோட துரிதமான இந்த செயல் பாராட்டப்பட வேண்டியது…!! கடல்நீர் மறுபடி வர்றத கவனிச்ச நானும், அப்போ தான் கப்பலை நீருக்குள் மூழ்க வைக்க தயாரானேன்….!!! இதை பாத்து இன்னும் வேகமா செஞ்சேன்…!!!” என்றார்.

 

“ஒரு நொடியில நாம கடல்லயே மூழ்கிடப்போறோம்னு நினைச்சுட்டேன்…!!கப்பல் பத்தின முழு விவரம் தெரியாது எங்களுக்கு..!!!” என்றான் ஆதி.

 

அனன்யா கண்ணில் ஏதோ ஏமாற்றம் தென்படவும்… “இப்போ கூட என்ன யோசனையில இருக்கான்னு தெரிலயே..” என்று நினைத்துக்கொண்டு…

 

“வா அனு போகலாம்… எல்லாரும் எப்படி இருக்கான்னு போய் பாப்போம்…” என அழைத்துச்சென்றான்.

 

“நான் ஒரு நிமிஷம், பழங்கால பூம்புகாருக்கு போயிட்டோமோன்னு நெனச்சேன்… இந்த கப்பல்ல தான் இருக்கோம்…ச்ச…” என்றாள் சலித்த தொனியில்…

 

“சரி வா போகலாம்…”என்று அவள் கையைப்பிடித்து அழைத்துச்சென்றான்.

 

◆◆◆

 

இருவரும் அங்கே சென்று பார்த்தபோது, அங்குள்ள எல்லோரும் இவர்களைப் போலவே பதட்டத்துடன் இருந்தனர். என்னவானது என்று எல்லோருக்கும் விளக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் மித்ரன் முகத்தில் இருந்த தெளிவில், அவன் முன்பே இவற்றை உணர்ந்திருந்தான் என நன்றாகத் தெரிந்தது. பின்னர் அனுவும் ஆதியும் மித்ரனை தனியறைக்கு அழைத்துச் சென்று தாங்கள் கண்ட காட்சிகளையும் விளக்கினர்.

 

“மறுபடியும் நாம பழைய காலத்துக்குப் போகணும். அங்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கணும்… நம்ம மூணு பேருக்கும் தனித்தனியா வந்த கனவெல்லாம் உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கணும்….” என்றான் ஆதி.

 

“இவ்ளோ களேபரத்துக்கு நடுல உனக்கு எப்படி அங்க போகணும்னு தோணுது ஆதி…?” என்று மித்ரன் வியப்பாய் கேட்டான்.

 

“அனு கனவுல வந்ததுபோல, இங்கே சுனாமி வந்திருக்கு… நம்ம ரெண்டு பேருக்கும் வந்த கனவுகள் பத்தி தெரியனும்ன்னா நாம போய் தான் ஆகனும்…” என்ற ஆதியின் முகத்தில், அவன் மனத்தின் உறுதி வெளிப்பட்டது.

 

“கண்டிப்பா போகலாம் ஆதி… ஆனா இது அதுக்கான நேரம் இல்ல… நாம ஒழுங்கா வீட்டுக்கு போனா போதும்னு எனக்கு இப்போ தோன ஆரமிச்சுடுச்சு….” ஒரு பெருமூச்சுடன் மித்ரன் பதிலளித்தான்.

 

“ஆதி… அவருக்கு விருப்பமிருந்தா வருவார்… வற்புறுத்தாதீங்க…” என்று அனு சொல்ல….

 

“சரி டா…உண்ண வற்புறுத்தி கூப்புடல… ஆனா நிச்சயம் நாங்க போறோம்…” என்றான் ஆதி.

 

“வீண்வாதம் செய்யாதீங்க… நமக்குத் தேவையில்லாத எதுலயோ போய் விழுற மாதிரி எனக்குத்தோணுது…. இதுல நீ கனவுல பாத்ததா சொல்ற விஷயங்கள், எனக்கு இன்னும் பீதியை கொடுக்குது ஆதி….தயவுசெய்து மீண்டும் போகவேண்டாம்…” என்று கெஞ்சாத குறையாய் மித்ரன் பேசினான்.

 

அனன்யாவுக்கு மித்ரன் சொன்னதும் தான் ஆதி சொன்னது நினைவு வந்தது…அதை வெளிறிப்போன முகமும், நடுங்கும் அவள் உடலும் கண்ணாடிபோல் காட்டின.

 

ஆதி அவள் மாற்றத்தை கவனித்தவாறு “நீ பயப்படற அளவு எதுவும் நடக்காது மச்சா… எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றான். வெளியில் இப்படி சொன்னாலும், ஏனோ கனவில் அவன் கழுத்தில் பாய்ந்த அம்பின் நினைவு வயிற்றை பிசைந்தது.

 

“அனன்யா கண்ட கனவு பலிச்சுது… அதுபோல்… இதுவும்….” என்று மித்ரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.., “வேணாம்… நாம வீட்டுக்கு போயிடுவோம் ஆதி… உங்கள தவிர வேறேதும் எனக்கு முக்கியமில்லை…” என்று அனன்யா ஆதியின் தோள்மீது பக்கவாட்டில் சாய்ந்து அவன் கையை இருகப் பற்றிக்கொண்டாள்.அவள் நடுக்கம் குரலில் வெளிப்பட்டது. அவள் கண்ணீரின் ஈரம் ஆதியின் தோள்களில் சில்லிட்டது.

 

…….

 

அவ்வப்போது அவள் உடல் தேம்புவது தெரிந்தது.

 

“எனக்கு உன்னை தாண்டி தான் வேறெதும் ஆதி… நீ போதும்… எனக்காக இவ்வளவு தூரம் நீ செஞ்சதே போதும்….என் பேருக்கு முன்னாடி டாக்டர் ன்னு போடணும்னு தானே இவ்ளோவும்…? இதுவரை உள்ளத வச்சு என் ஆய்வுக் கட்டுரையை முடிச்சுடுவேன்… போதும் பட்டது எல்லாம்…” என்று கண்ணில் நீர் வழிய பேசினாள்.

 

அங்கே இருப்பது உசிதமில்லை என்று உணர்ந்து, மித்ரன் ஆதியிடம் கண்ணால் விடைபெற்று வெளியேறினான்.

 

◆◆◆

 

ஆதி அங்கிருந்த படுக்கையில் அனன்யாவை அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தான். கண்களில் வழியும் கண்ணீரை கைகுட்டையால் துடைத்துவிட்டு ஆதரவாய் அவளை அணைத்துக்கொண்டான். அவள் கைகள் சில்லிட்டு இருந்ததால், போர்வை எடுத்து போர்த்திவிட்டு தன் கைகளுக்கு நடுவில் அவள் கைகளைப் புதைத்துக்கொண்டான்.

 

அனு இருந்த மனநிலையில் அந்த அணைப்பு மிகவும் தேவையாய் இருந்தது. வார்த்தைகள் ஏதும் பரிமாறப்படவில்லை. இருவருக்கும் சொல்லாமலே புரிந்தது…. அங்கே நிலவியது காதலும், காமமும் இல்லாத பேரன்பு என…

 

அனு அந்த நிமிடத்தில் காற்றோடு கலந்துவிட நினைத்தாள். அந்த வெப்பமும், இதமும்… “சொர்க்கம் பூமியில் தான் இருக்கு…, அதுவும் இவன் கண்ணுல தான்…” என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

 

அவன் கண்களை உற்றுநோக்க, அவனும் முன்பிருந்தே அவளைப் பார்ப்பதை உணர்ந்ததும் வெட்கம்,கூச்சம் இரண்டும் கூட்டணி சேர்ந்தன.

 

கொஞ்சம் நகர்ந்து, எழ முயன்றாள். ஆனால் ஆதி இவளை எழ அனுமதிகவில்லை. தோளில் அழுத்தி அவளை அங்கேயே அமரவைத்துவிட்டு புன்னகைத்தான்.

 

“நீ எதுவும் நினைச்சு குழம்பாத டா… எனக்கு ஒன்னும் ஆகாது… இந்த கனவுகள் நம்ம ஆழ்மன எண்ணங்களோட வெளிப்பாடு தான்… நீ மணிமேகலை கதை படிச்சிருக்க தானே… நானும் படிச்சுருக்கேன்… அதுல வந்த சம்பவங்கள் நமக்கு தோனிருக்கு… அவ்ளோ தான்…” என்று ஆதி அவளை தெளிவிக்க முயன்றான்.

 

“கனவுகள் ஆழ்மன எண்ணங்கள் தான்… என் மூளைக்கு புரியுது… ஆனா… மனசுக்கு அது புரியல…” தெளிவான முகத்துடன் அனு சொன்னாள்.

 

“இப்போ புரிஞ்சுதுல்ல… இந்த அழுமூஞ்சி அனன்யா நல்லாவே இல்ல… எனக்கு நீ உன் பழைய குறும்போட இருக்கனும் எப்போதும்…” என்று ஆதி சொல்லவும்… அனு சரியென்று கன்னம் மின்ன அவனைப் பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தாள்.

 

சிறிதுநேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும்போது இரவு தூங்காத அசதியினால், அனு உறங்கிப்போனாள். போர்வையை அவள் மீது போர்த்திவிட்டு, தான் எழுந்துகொண்டான். பற்றியிருந்த அவன் கையை அனன்யா விடவேயில்லை… தன் கையை அவளிடமிருந்து மெதுவாக விலக்கியெடுத்துக்கொண்டு, அவன் மித்ரன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

 

 

 

அங்கே பலரும் திரையில் தோன்றிய நீருக்குள் மூழ்கியிருக்கும் சிதிலமடைந்த பல செங்கல் கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கப்பலின் மேற்புற ஒளிப்படக்கருவி மூலம் எடுக்கப்படும் காட்சிகள் அவை. அலைகள் அரைமணிநேர இடைவெளிக்குள் ஓய்ந்துவிட்டன. கப்பல் 100 அடிக்கு கீழே இருந்துவிட்டதால், சிறுசிறு அசைவுகள் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்தன.

 

அவர்கள் அனைவரும் அந்த கப்பலில் ஏறி இன்னும் 24 மணி நேரம் முழுமையடையவில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதற்குமான அனுபவங்கள் அந்த அரை நாளுக்குள் அவர்களுக்கு கிடைத்து விட்டது.

 

“ மச்சா…. கடந்த காலத்துல எனக்கு ஏதும் ஆகப்போறதில்ல… நமக்கு வந்த அந்த கனவு போல விஷயங்கள் எல்லாம் ஏதோ வீண் கவனச்சிதறல் மாதிரி இருக்கு…. வா போகலாம்… தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேதோ நடக்குது….” என்றான்.

 

மித்ரனுக்கும் அது சரியாகப்பட்டது. அனன்யா கனவில் தோன்றிய ஆழிப்பேரலை வந்ததென்றால், அடுத்த நிகழ்வுகள் இங்கே நடந்து விடாமல் தடுக்க நிச்சயம் கடந்த காலத்திற்குச் சென்றாகவேண்டும்.

 

அனன்யாவுக்கு இருந்த பயங்கள் கொஞ்சம் மாறி இருந்ததால் அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

 

◆◆◆

 

மணிமேகலை அவளிடமிருக்கும் இந்திரநீலத்தை எடுத்துப் பார்க்கிறாள்.

 

அது ஒரு பட்டுத்துணி போர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த பட்டுத்துணியில் எழுதி இருந்த எழுத்துக்கள் அழிந்து விட்டாலும் அதன் அச்சு கலையாமல் இருந்தது. ஆனால் அதிலிருக்கும் வார்த்தைகள் என்ன என்பது எவ்வளவு முயன்றாலும் மணிமேகலைக்குப் புரியவில்லை.

 

சட்டென மேகங்களுக்குள் மணிமேகலை மறைந்து கரைந்துபோனாள்.

 

அனு தன்னை மேகங்கள் சூழ்ந்தது போல உணர்ந்தாள். அப்போது உருவமில்லாதொரு ஆழமான ஆண் குரல் அங்கே ஒலிக்கிறது.

 

அவ்விடம் மொத்தமும் அதிர்வதுபோல் தோன்ற அனன்யா கண்விழித்து எழுந்தாள். தன் அருகிலுள்ள காகிதத்தை எடுத்து அனிச்சையாக அவள் கை ஏதோ எழுதியது.

 

கடந்தகாலத்தில் இருந்து கனவு மூலம் தனக்கு ஏதோ குறிப்பு தரப்பட்டதை உணர்ந்த அனன்யா, வியப்பில் பேச்சற்ற நிலைக்கு சென்றுவிட்டாள்.

 

சரியாக அந்த நேரத்தில் ஆதி அங்கு வந்து சேர, அனன்யாவின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி சத்தமாகப் படித்தான்.

 

 

 

இருள் விசும்பின் பெருவிழிகாண்

 

இசையாழி விழுங்கவெண்ணும் பேரொளிமுன்

 

இந்திரநீலம் இருநீலம் இணைந்திருப்பின்

 

காலம்விட்டு மண்கடத்தும்

 

காலம்கடந்த மண்ணது

 

கலகம்தீர்க்காமல் தன்னகம் சேர்ந்தால்

 

கலம்கலமாய் சேரும் வினையே…

 

“என்ன இது…. எதும் நீ முன்னாடி படிச்ச செய்யுளா…? இப்போ எதுக்கு எழுதிட்டு இருக்க…? தூங்கிட்டு இருக்கன்னு நினைச்சேன்….!”என்று ஆதி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அனன்யா அந்த காகிதத்தை வாங்கிப் படித்தாள்.

 

“ஆதி இதுக்கு முன்னாடி எனக்கு இந்த பாட்டு தெரியவே தெரியாது…!” என்று மெதுவாக பயந்தபடி சொன்னாள்.

 

மற்றவர்கள் அதிர்ந்தனர்.

 

“இப்போ தூக்கத்துல எனக்கு ஒரு கனவு…… யாரோ மந்திரம் போல இந்த செய்யுள எனக்கு சொன்னாங்க… இது எனக்கு என்னன்னே புரியல…. யாரு அத சொன்னாங்கன்னும் தெரியல….!” என்ற அனன்யா வியர்த்து விருவிருத்து கனவு முழுவதையும் சொன்னாள்.

 

“நானும் மித்ரனும் நாம மறுபடி கடந்த காலத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணிதான், உன்னை எழுப்ப வந்தோம்… இந்த செய்யுள் நமக்கு ஏதோ குறிப்பு தருது… முதல்ல கடந்த காலத்துக்கு போவோம்… இந்த புதிருக்கான பதில அங்க போய் தெரிஞ்சுப்போம்….” என்று சொல்லி வாசலை பார்க்கவும் அங்கே நின்ற மித்ரன் உள்ளே வந்தான்.

 

“நமக்கு தெரியாமலே நம்மள வச்சு ஏதோ விளையாட்டு நடக்குது… காலம் தான் எல்லாத்துக்கும் விடைசொல்லனும்….சரி பயணத்தை தொடங்குவோமா…?” என்று மித்ரன் கூறவும், இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து, ஆதி அனுவின் கைகளுக்கு நடுவே அந்த கல்லை வைத்து தயாராகினர்.

 

கண்கள் மூடி மூவரும் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். கண்விழித்தபோது அங்கே எதுவுமே மாறவில்லை. அவர்கள் அதே கப்பலில் இருந்தனர்.

 

இந்திரநீலம் ஒளிராமல் அமைதியாக இருந்தது.

 

◆◆◆

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!