Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 11

கும்மிருட்டு….. நிலவு இன்றி நட்சத்திரங்கள் மட்டும் கண்சிமிட்டும் வானம்…..

ஊர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வீடுகள் யாவும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு தென்னை ஓலையில் மேல்கூரை போடப்பட்டு இருந்தன.

கடல் நீர் மலை மலையாய் எழுந்து ஊருக்குள் விழுந்து கொண்டிருந்தது…..

அங்கிருந்த செல்வம் அனைத்தையும் அலைகள் அலைக்கழித்து கடலுக்குள் இழுத்துச் சென்றன. பல்லாயிரம் மக்கள் மாண்டனர். ஒரு பெரும் நகரம் வெறும் மண் மேடாக மாறியது.



Advertisement

அது நமக்கு முன்பே பரிச்சயமான இடம் போல் இருக்கிறது….

ஆம் அது புகார் நகரமே தான்…..!!!!

பலமுறை கடலால் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்ட ஒரு நகரம்… இன்று மண்ணோடு மண்ணாக கேட்பாரற்று கிடக்கிறது.

Advertisement

குற்றுயிராய் தப்பிப் பிழைத்த மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது மணிமேகலை அங்கே வந்து அந்த மக்களுக்கு உணவளித்து உயிர் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

◆◆◆

அனன்யா அவளை நோக்கி கை நீட்டினாள். ஆனால் நீருக்குள் இழுக்கப்படுவது போல் உணர்ந்தாள். மூச்சு திணறியது… கண்கள் மூடி கிடப்பது போலவும்… விழித்துக்கொள் என்று யாரோ உலுக்குவது போலவும் உணர்ந்தாள்.

Advertisement

அனன்யா மெல்ல மெல்ல கண் விழிக்கிறாள்.

அவளுக்கு அதிர்ச்சி ஆச்சரியம் இரண்டும் காத்திருந்தது.

ஆம்….!!!!

அவள் மணிமேகலையை விட்டு எங்கும் செல்ல நினைக்கவில்லை.

தன்னுடைய காலத்திற்குச் செல்வதற்கு அவளுக்கு மனமில்லை….

நடந்தது அதற்கு நேர் எதிர்…

அவர்கள் முன்பு இருந்த கப்பல் அறையில் அனன்யா கண்விழித்தாள்.

“தேங் காட்…!! நல்ல வேளை…!! நீங்க கண்ணு முழிச்சிட்டீங்க…!! ஒரு பத்து நிமிஷத்துல எங்களுக்கு உயிர் பயத்தை கண்ணுல காமிச்சிட்டீங்களே…!!!” என்று சொன்ன கோதை அனன்யா அருகில் அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் வலியின் அறிகுறி தெரிந்தாலும் அனன்யா கண்விழித்ததால் வந்த மகிழ்ச்சியை கண்கள் காட்டின.

(கோதையும் இனியாவும் மித்ரனுடன் வந்த ஆராய்ச்சி மாணவிகள்ன்னு 11ஆம் அத்தியாயத்தில் பாத்தோம்.)

“என்னது…?? பத்து நிமிஷமா…!!!! ரெண்டு நாள் இல்லையா…!!! நாங்க அங்க கிட்டத்தட்ட ரெண்டு நாள் இருந்தோமே…!!! அப்படி தான் எனக்கு தோணுச்சு!!!” என்றாள் அனன்யா.

“என்ன சொல்றீங்க அனன்யா இப்பதான் புயல் வர மாதிரி இருந்துச்சு… ஒரு பெரிய அலை வந்துச்சு… விளிம்புக்கு ரொம்ப கிட்ட நீங்க மூணு பேரும் நின்னதால அலை உங்கமேல அடிச்சிச்சு… மூணுபேரும் கடலுக்குள்ள விழுந்துட்டீங்க…!!!” என்று இனியா சொன்னாள்.

“பத்து நிமிஷம் தேடி… உங்க மூனு பேரையும் இப்போதான் கண்டுபிடிச்சோம்… நீங்க மட்டும் தான் முழிச்சிருக்கீங்க…!!! இவங்க இன்னும் எழுந்துக்கல…!!!” என்றாள் தொடர்ந்து…

அப்போது தான் அனன்யா ஆதர்ஷ் மற்றும் மித்ரனைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் மயங்கிய நிலையிலிருந்து எழவில்லை…

அனன்யா தன் கையில் இருந்த இந்திரநீலகல்லை மிரட்சியுடன் நோக்கினாள்…. ஏதோ நிழல்போல் காட்சிகள் கண்முன்னே தோன்றின….

◆◆◆

சட்டென ஏதோ தோன்ற ஆதர்ஷயும் மித்ரனையும் அனன்யா உலுக்கி எழுப்ப தொடங்கினாள்.

“ எந்திரிங்க ஆதி… மித்ரன் எந்திரிங்க… பாருங்க நம்ம பழையபடி கப்பலுக்கு வந்துட்டோம்… எந்திரிங்க… எந்திரிங்க…” என்றவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

மித்ரன் கண்விழித்தான் என கொஞ்சம் ஆசுவாசப்பட்டாலும் ஆதர்ஷ் இன்னும் எழவில்லை. அவனை தன் பலம்கொண்ட மட்டும் உலுக்கினாள். அவன் எழுவதாகத் தோன்றவில்லை….

“ப்ளீஸ் ஆதி… எந்திரி… என்னாச்சு உனக்கு… ஆதி…. ஆதி….!!!!!!” என்று அதிகமாக அழத்தொடங்கினாள்.

ஆதியின் கைவிரல்கள் அசைந்தன. ஆனால் கண்விழிக்கவில்லை. கடலில் இருந்து தூக்கி ஐந்து நிமிடத்திற்குள் அத்தனையும் நடந்தது.

கப்பலில் இருந்த இரு மருத்துவர்கள், சுற்றி நின்றவர்களை விலக்கி நண்பர்கள் மூவரையும் முதலுதவிகள் செய்து பரிசோதித்தனர்.

ஆதி உடலளவில் நலமாக இருப்பதாகவும் பயம் கொள்ள தேவையில்லை என்றும் அவர்கள் அனன்யாவைத் தேற்றினர்.

அதன் பின்பே அனன்யா சற்று பதட்டம் தணிந்து காணப்பட்டாள். இருந்தும் ஆதி ஏன் எழவில்லை என்று குழம்பித் தவித்துப்போனாள்.

“மித்ரன்…!! உங்களுக்கும் பழைய காலத்துக்கு போன மாதிரி தோனுச்சா…??? இல்ல அது எனக்கு வந்த கனவா…???” என்றும் மித்ரனிடம் அனன்யா கேட்க….

“நிச்சயமாக கனவு இல்லை… ஆனால் அது எப்படி நடந்தது… நாம எப்படி இங்க மறுபடி வந்தோம்…ன்னு எதுவுமே எனக்கு இன்னும் புரியல……” என்றான்.

“இப்போ கடைசியா கடல் அலை ஊருக்குள்ள வந்து அழிச்சதெல்லாம் பாத்தா கொலநடுங்கிடுச்சு…” என்றாள் அனன்யா…

முகத்தில் திகிலும் குழப்பமும் குடிக்கொள்ள மித்ரன் “என்ன சொல்ற அனன்யா…. எனக்கு அப்படி எதுவும் தெரியலையே….!!! நான் பாத்த கடைசி விஷயம் மணிமேகலை ஏதோ அரசவை நடுல நிக்குறது போல….!!!”….என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கப்பல் தடுமாறி ஆடுவது போல் தோன்றியது.

கடலில் நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது…..

கப்பல் தரையில் ஜாக்கிகள் உதவியுடன் விழாமல் நின்றது….

◆◆◆

பார்ப்பதற்கு ரம்மியமானதொரு ஆற்றங்கரை…. அங்கே தூரத்தில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் அருவி…. குழந்தைகள் போல் குதூகலமாய் ஆர்ப்பரித்து ஓடிவரும் நீரலைகள்….

இத்தனை எழிலும் தனக்குள் எந்த மாற்றமும் தரவில்லை என்னும் தோற்றத்தில், குதிரையில் மிடுக்காய் அமர்ந்து வந்தான் ஆடவன் ஒருவன். அரச குலத்து ஆள்போல் காணப்பட்டான்…

ஒரு பெண்ணைக் கண்டதும் புரவி மீதிருந்து தாவி இறங்கி… அவளைத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தான். அவள் இவனைக் கண்டுகொள்ளாமல் முன்னேசெல்ல, ஒரு ஆயுதம் அவன் கழுத்தில் பாய்கிறது… அவன் சுருண்டு விழுகிறான்….

ஆதி கனவுபோல் தோன்றிய சூழலில் இருந்தான். அந்த கோரக்காட்சி அவனை உலுக்கியது…

மனதை மிகவும் முயன்று திடப்படுத்திக்கொண்டு சற்று நெருங்கி வலியில் துடிக்கும் அவ்வாலிபனின் முகம் பார்த்தான்…..

அது அவன் முகம் தான்…. !!!

……

 

 

(உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே இருந்தாலும், தமிழில் பேசுவதுபோலவே இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.)

கப்பல் தரைதட்டியதும் அக்குழுவினர் பதறிவிட்டார்கள்…

மேல் தளத்தில் இருந்த வெளிநாட்டு அறிஞரும் அந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான மைக்கேல் “நாம நிலப்பரப்பில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கோம்… பொதுவாக புயல் அல்லது வேறு ஏதும் காரணத்துக்காக கடல் உள்வாங்குறது இரண்டு முதல் ஐந்து கி.மீ தூரம் வரை தான் இருக்கும்.

ஆனா எட்டு கி.மீ தாண்டி, ரொம்ப தூரம் உள்ள போகுதுன்னா… அது மிகவும் பயப்படவேண்டிய விஷயம்…!” முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைத்தபடி சொன்னார்.

அங்கே நல்ல குளிர் நிலவியது… இருந்தும் அவர் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது, ஆழ்மனதின் அச்சத்தை வெளியில் கண்ணாடிபோல் காட்டியது.

நடக்கப்போவது என்னவென்று உணர்ந்தவர்போல் காணப்பட்டார்.

சென்று தனியே ஓரிடத்தில் அமர்ந்தார்.

◆◆◆

கீழே மித்ரன் இருந்த அறையில் இவற்றைக்காட்டிலும் அதிக குழப்பமும் கூச்சலும் தென்பட, அவர் அங்கே விரைந்தார்.

உள்ளே நுழையும்போதே இந்திரநீலகல்லை பார்த்துவிட்ட அவர் “ அற்புதம்…!!!! இது எப்படி உங்களுக்கு கிடைச்சது???” என்று ஆர்வமானார். அவரின் சோகம் மறைந்தது.

புது விளையாட்டுப்பொருளைக் கண்ட சிறுபிள்ளை போல் அதனை சுற்றிச்சுற்றி ஆராய்ந்துவிட்டுச் சொன்னார் இது “ஒரு விலை மதிக்க முடியாத கல்…. இந்திரநீலம்….!!!!!!! அக்வா மரைன்…!!!!!!!”.

அவர் கண்கள் தான் காண்பதை நம்பாமல் படபடத்தன…

“இது பழைய கால இந்தியாவில், இன்னும் சொல்லப் போனா உங்க தென்தமிழகத்தின் சேரநாட்டில்… வஞ்சி நகரத்தில் வெட்டி எடுக்கப்படும் ஒருவகையான ரத்தினக்கல்… நான் சொல்றதுக்கு முன்னாடி நீங்க சொல்லுங்க உங்களுக்கு இதைப் பற்றி எவ்வளவு தெரியும்?” என்று கேட்டார் மைக்கேல்.

அந்தக்கல் கிடைத்தது முதல் நடந்த நிகழ்வுகளை தனக்கு தெரிந்த வரையில் மித்ரன் விளங்கினான்.

அதைக்கேட்டு மைக்கேல் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் “காலப்பயணம் என்பது இதுவரை கதைகளில் மட்டுமே கேள்விப்பட்ட ஒன்று… இப்போ நீங்க உண்மையாகவே பயணம் செஞ்சு இருக்கீங்கன்னு சொல்லும்போது எனக்கு புல்லரிப்பு வருது… இந்த கல்லை பத்தி இன்னும் நிறைய இருக்கு சொல்றதுக்கு….

உங்களுடைய தமிழ்நாட்டில இதற்கு மதிப்பு ரொம்ப அதிகம் இல்லனாலும் வெளிநாடுகளுக்கு இது இந்திய ரத்தினமா பல நேரம் பயணப்பட்டது.

இந்த கல்லுடைய நிறம் ஆழ்கடல் நிறம் மாதிரி இருக்கதனால இதை கடல் பயணங்கள் கூட தொடர்பு படுத்தினார்கள். இதற்கு கிரேக்க நாட்டில் நிறைய மதிப்பு உண்டு.

பண்டைய கிரேக்கர்கள், கடல் பயணம் செய்யறப்போ இந்தக்கல்ல கூட வச்சுக்கிட்டா கட்டாயம் தன் நாட்டுக்கு வெற்றியோட திரும்பி வந்துருவாங்கன்னு நம்பினாங்க…

இது கடல் கன்னிகளோட பொக்கிஷத்தில் இருந்து நிலத்துக்கு வந்ததா கிரேக்கர்கள் நினைச்சாங்க.

அந்தக் கடல் கன்னிகள இவங்க பயணத்தில் உதவும் தெய்வமாகவும் காதலை சேர்த்து வைக்கிற சக்தியாகவும் நினைச்சாங்க.

இன்னும் இத காதலுக்கும் அன்புக்கும் சின்னமாக நினைக்கிறாங்க…. பிரிந்த காதல்கள் இதன் மூலம் சேரும் எனும் நம்பிக்கை இப்போகூட நிலவுகிறது.

பூம்புகார் நகரோட வணிகம் செஞ்ச யவனர்கள் வஞ்சி நாட்டிலிருந்து இந்திரநீலம் வாங்கி அத இந்த வழியா தான், கடல் பயணம் மேற்கொண்டு தங்கள் நாட்டுக்கு கொண்டு போவாங்க.

அப்புறம் கி.பி.பத்தாம் நூற்றாண்டுகளில் இத காலக்கணிப்பு செய்றதுக்கு பயன்படுத்தினார்கள். முக்காலத்திலும் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க, பழைய தேவதை கதைகள்ல சூனியக்காரிகள் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட அந்த மந்திர உருண்டை இதுலதான் செய்வாங்க….

இந்த பழங்கதையையும் நீங்க சொல்றதையும் வச்சு பாக்கும்போது…. இந்த கல்லுக்கு காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி இருக்கும்னு எனக்குத் தோணுது….

அறிவியல் பூர்வமாக பார்த்தால் இதற்கு எந்த விளக்கமும் எனக்கு கிடைக்கல.

ஆனால் புராணங்கள் மற்றும் செவிவழி செய்தி இதற்கான சிறிய நம்பிக்கை எனக்கு கொடுத்தது” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆதி மிகுந்த சிரமத்தோடு எழுந்து அமர்ந்தான்.

அனன்யா ஓடிச்சென்று அவன் அருகில் கைகளைப் பற்றிக்கொண்டு கண்களில் நீர் பளபளக்க அவனையே காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஆதி… என்ன ஆச்சு உனக்கு நீ கடைசியா என்ன பார்த்த…?” என்று அனன்யா கேட்க…. அவன் தனக்குத் தோன்றிய காட்சிகளை விவரித்தான்… மற்ற மூவரும் உறைந்து போயினர்.

மணிமேகலையின் புத்த விகாரத்தில் இருந்தது வரை மூவருக்கும் நினைவிருந்தது. அதன்பின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காட்சி தோன்றியுள்ளது என்று உணர்ந்தனர்.

எனவே இது கனவில்லை என்பது புரிந்தது. இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது அந்த இரவு விடிந்தது….

“விடிகின்ற பொழுது தெரிந்திடுமா… கடலலை கரையை கடந்திடுமா…” என்று சூழ்நிலைக்கு ஏற்ப பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கோதை.

“இந்த ரணகளத்திலும் உனக்கு பாட்டு கேக்குது…” என்று கூறி அவளை தலையில் செல்லமாகத் தட்டினாள் இனியா. எல்லோரும் அமைதியாக இருப்பதையும் மைக்கேல் அங்கிருப்பதையும் இருவரும் அப்பொழுது தான் பார்த்தனர்.

பின் தயங்கியபடியே உள்ளே வந்து… கடல் பரப்பில் ஏதோ தெரிவதாகவும், அது என்னவென்று தெரிந்துகொள்ள மித்ரனை அழைத்துச் செல்ல வந்ததாகவும் இருவரும் சொன்னார்கள்.

மைக்கேல் மற்றும் மித்ரன் அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் முன்னே செல்ல, இனியாவும் கோதையும் அவர்களோடு சென்றார்கள்.

ஆதிக்கு ஓய்வு தேவைப்பட்டது… அனன்யா அவனருகில் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கும் மனம் முழுதும் குழப்பம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் அனன்யா இவ்வாறு பேசினாள், அவன் கைகள் கோர்த்தபடி…. “எனக்கு புரியுது நீ பயந்து இருப்பேன்னு… இருந்தாலும் எல்லாத்தையும் நாம சமாளிச்சு தான் ஆகணும்… இது ஒரு சாகச பயணம் மாதிரி நினைச்சு செய்யலாம்… பூம்புகார்ல அதை நீ எனக்கு சொன்ன… நான் உனக்கு இப்போ சொல்றேன்… பயப்படாத ஆதி… உனக்கு எதுவும் ஆகாது…”

 

வெளியில் சென்றவர்கள், அந்த அதிகாலைப்பொழுதில் கண்டவை அவர்களை சிலிர்ப்புக்குள்ளாக்கியது…

◆◆◆

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!