Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 15

வெளியில் சென்ற ஆதி சாதாரணமாக சுவரில் சாய்ந்து கைகள் கட்டிக்கொண்டு நின்றதை பார்த்து குழம்பினாலும், “என்னாச்சு ஆதி… நேத்து நீ மயக்கம் தெளியாததில் இருந்தே எனக்கு பயமா இருக்கு..”என்றபடி அனு அவன் தலையில் கைவைத்து காய்ச்சல் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதித்தாள்.

 

“எனக்கு ஒன்னுமில்ல அனு… மித்ரன் தான் கொஞ்சம் அசௌகரியமா இருந்தான். அதான் வெளில வந்தேன் ” என ஆதி தீவிரமாக சிந்தித்துக்கொண்டே சொல்ல,

 



Advertisement

“அப்படின்னா உடம்புக்கு என்னன்னு கேக்கவேண்டியது தானே…” என்று அந்த அறைக்குள் நுழைய முற்பட்ட அனு கையை பிடித்து நிறுத்தினான் ஆதி.

 

“நீ லூசா… இல்ல நடிக்கிறியா… மித்ரனுக்கு இனியாவ பிடிச்சிருக்கு போல… கொஞ்சம் தனியா பேசட்டுமேன்னு வெளில வந்தேன்” என்று ஆதி சொன்னவுடன் தான் அனன்யாவுக்கு “இப்படியெல்லாம் ஒருத்தர் யோசிப்பாரா..” என்று தோன்றியது.

Advertisement

 

Advertisement

“நீங்க பெரிய ஆள் தான்… எப்படி பாத்ததும் கண்டுபிடிக்கிறீங்க…”முகத்தை மிகவும் ஆர்வமாக வைத்துக்கொண்டு கேட்டவளைப் பார்க்கவும் ஆதிக்கு கொள்ளை அழகாய்த் தோன்றியது.

 

“இப்படில்லாம் முகத்தை வச்சுக்கிட்டு கேட்டா எனக்கு எப்படி பேச முடியும்… உனக்கு எடுக்கவேண்டிய பாடம் நிறைய இருக்கு…” என்று சொல்லிக்கொண்டே சுவரில் சாய்ந்து இருந்தவன் நிமிர்ந்து அவளை நெருங்கினான்.

Advertisement

 

அனன்யாவுக்கு இதயத்தோடு கண்களும் சேர்ந்து படபடவென அடித்துக்கொண்டது…

 

“நில்லுங்க…..

 

எதுக்கு இப்போ கிட்ட வர்றீங்க…

 

என்ன வேணும்னாலும் ரெண்டடி தள்ளியே நின்னு பேசுங்க..” பின்னால் நகர்ந்தபடி சொன்னாள்.

 

“ நமக்கு கல்யாணம் ஆகப்போறத மறந்துட்டியா…” என்று கேட்டபடி ஆதி கிட்டே வரவும் அனு சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். கூச்சம் அவளின் நரம்பு நுனிகளெங்கும் பரவி சிலிர்க்க வைத்திருந்தது.

 

◆◆◆

 

இரண்டு நிமிடம் நகர்ந்தது…

 

“அவ்ளோ அவசரம்….ம்ம்ம்ம்….. நீ நினைக்கிற மாதிரி ஒன்னுமில்ல… கண்ண திற…” அவன் கேலியாக சொன்னதும் அனு கண்திறந்தபோது ஆதி முன்புபோலவே அதே இடத்தில் இருந்தான்.

 

“நம்ம மனசுல நினைச்சத கண்டுபிடிச்சுருப்பானோ…” தன் மோதிரத்தை சுற்றிக்கொண்டே சீரற்ற மூச்சுகளை வெளிவிட்டபடி அவனைப் பார்க்காமல் வேறுதிசையில் பார்வையை செலுத்தினாள்.

 

அவள் கைகால்கள் சில்லிப்பிலிருந்து மீள, அதுவரை முயல் வேகத்தில் துடித்த அனுவின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசமடைந்து, ஆமைபோல் ஒடுங்கி நின்றுவிட்ட ஐம்புலன்கள் தன்னிலைக்கு வந்தன.

 

“இப்போ நீ என்ன மனநிலையில இருக்கியோ….மித்ரனுக்கும் இனியா வந்தா, அதேமாதிரி படபடப்பாகுது… கண்ணு பிரகாசமாகிடுது… சுத்தி இருக்க விஷயத்துல கவனம் செலுத்தறது இல்ல… அவ பேசும்போது குறுக்க பேசாம கேக்கறான்… அப்பப்போ தன் தலைய சரிசெய்யறான்… இதெல்லாம் ஒருத்தர பிடிச்சுருந்தா, தன்னை அறியாம செய்யற விஷயங்கள்…” என்றான் இடுப்பில் கைவைத்துக்கொண்டே ஒற்றைக்காலை மடித்து வைத்து சுவரில் சாய்ந்து நின்ற ஆதி.

 

அனன்யா “எவ்ளோ நுணுக்கமா பாத்துருக்கான் எல்லாத்தையும்” என்று எண்ணி அவன் பேச்சை கேட்டாலும், இவளை சீண்டியதை அவ்வப்போது நினைத்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

“என்ன விடாம பாக்குறீங்க… மகாராணி மனசுல என்ன ஓடிட்டு இருக்கு….” என ஆதி கேட்டதும் ஒன்றுமில்லை என்பதுபோல் உதடு பிதுக்கி தோளைக் குலுக்கினாள்.

 

அவளின் இந்த இருவேறு தலைகீழ் மாற்றங்களே ஆதி அவளை விரும்புவதற்கு காரணம். ஒருநேரம் சிறுகுழந்தை போல் முகம் வைத்துக்கொள்வது,சண்டைபோடுவது… ஒருநேரம் பெரும் வயசாளிபோல் உலக அனுபவம் பேசுவது.

 

அவளை இரண்டாம் முறை பார்த்தபோது நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது.

 

◆◆◆

 

காகித ராக்கெட் இவள்மேல் விழுந்த அன்று மாலை….

 

அது அனு படித்த கல்லூரியின் கூடைப்பந்து மைதானம்….

 

சுற்றிலும் தடுப்புகளில்லாத திடலாக இருந்ததால் அங்கே சிலர் விளையாட்டாக அவர்களுக்குள் வீசிக்கொள்ளும் பந்து வெளியில் வருவதும் எடுத்துப்போவதுமாக இருந்தார்கள்.

 

ஆதி அந்த மைதானத்தின் ஓரத்தில் தன் மாணவர்களோடு போட்டிகளுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“ ஏய்…ஏய்…பிடி ”

 

“போடா…”

 

“பாத்து தூக்கிப்போட மாட்டியா…”

 

என பல குரல்கள் குழப்பமாய் ஒலிக்க…

 

தடால்…. என்ற சத்தத்தோடு வழியில் சைக்கிளில் சென்ற ஒரு பெண் மீது பந்து விழ, அவள் நிலைதடுமாறி கீழே விழ, கைமுட்டியில் அடிப்பட்டிருந்தது. பந்து வீசியவர்கள் மன்னிப்பு கேட்டனர்.

 

அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஆதியும் என்னவென்று சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த பெண் காலையில் தன்னிடம் பேப்பர் ராக்கெட் மேலே போட்டதாய் சண்டைபோட்டவள்…

 

கையில் ரத்தம் வேறு… எப்படியும் கத்தி ரணகளம் செய்யப்போகிறாள் என நினைத்து அவன் நின்றிருக்கையில்…

 

“பரவாயில்ல…தெரியாம தானே விழுந்தது… நானும் கொஞ்சம் கவனமில்லாம வந்துட்டேன்… பாத்துக்கலாம்…” என்று சொல்லிவிட்டு தன் கைகுட்டையால் அதை துடைத்துக்கொண்டு நகர்ந்துவிட்டாள். ஆனால் ரத்தம் நிற்கவில்லை தான்.

 

அவனுக்கு ஒரே வியப்பு… அப்போது அங்கே பந்து விளையாண்டவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது…

 

“மதுரக்கார பொண்ணு டா… ரகள பண்ணுவான்னு நெனச்சேன்… ஏதோ நம்ம நல்லநேரம் தப்பிச்சோம்..”

 

அட… மதுரையா…நம்ம ஊரு பொண்ணா… திடீரென ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது இவனிடத்தில்.

 

◆◆◆

 

இன்று..

 

இவளை மறுபடி பார்ப்பேனா என்று ஏங்கிய காலம்போக, இப்போது தொட்டுவிடும் தூரத்தில் அவள்.

 

அதே போன்றதொரு புன்னகையில் இப்போதும் நின்றான்…

 

அவன் பார்வையை தாக்குப்பிடிக்க முடியாமல் அவள் கன்னங்கள் சூடேறவும் அவள் திரும்பி அந்த அறையை நோக்கி நடந்தாள்.

 

அவன் சொன்ன உடல்மொழிகள் பற்றி எண்ணினாள். முதன்முதலில் பார்த்தபோது மற்றும் கோவிலில் பார்த்தபோது என அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதங்கள் மனதில் திரைப்படம் போல் நிழலாடின. முடியை கலைத்தல் அவன் அடிக்கடி செய்யும் செயல். இவளைக் காணும்போதெல்லாம் கண்கள் வேறெங்கும் பார்ப்பதில்லை.

 

அவளுக்காக மட்டுமே அவன் புன்னகைப்பது போல் தோன்றும். நெருங்கி நிற்கவேண்டுமென்று இவளுக்கு தோன்றினாலும் செய்ததில்லை. ஆனால் அவன் அதுபோன்றதோறு வாய்பைத் தவரவிடவே மாட்டான்.

 

அவர்கள் உள்ளே நுழைந்தபோது மித்ரன் எல்லாவற்றையும் இனியாவிற்கு சொல்லி முடித்திருப்பான் என்று நினைத்துக்கொண்டு வர, அங்கே இனியாவைக் காணவில்லை.

 

“ஏன்டா சட்டுன்னு எழுந்து போன… உனக்கு நான் இந்த விஷயத்தை அவகிட்ட சொல்றது பிடிக்கல போல ன்னு நெனச்சுட்டு அவளும் போய்ட்டா…”என்று மித்ரன் சொன்னதும் அனுவும் ஆதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

 

“என்ன ரெண்டுபேரும் ஏதோ திருட்டுமுழி முழிக்கிறீங்க… அவ கண்டுபிடிச்ச அந்த பாட்டோட அர்த்தத்தை மட்டும் சொல்லிட்டு போய்ட்டா… அவளுக்கு தெரியாததும் நல்லதுதான்…” என்று சொல்லிவிட்டு கைகளைச்சேர்த்து தேய்த்துவிட்டு இனியா கொடுத்த குறிப்பை ஆதியிடம் தந்தான்.

 

அவன் முகத்தில் சிறு வருத்தம் கூட இல்லை. காதல்ன்னா உடனே கைகூடனும்ன்னு அவசியமில்லைங்கிறத அவன் ஆதி விஷயத்துல நல்லாவே புரிஞ்சுகிட்டதன் விளைவு அது…. மெதுவாவே நடக்கட்டும் என்று நினைத்திருப்பான் போல….

 

அதிலிருந்த செய்திகளும் வரைபடங்களும் சித்தர் பாடல்களும் என அனைத்தும் ஆதிக்கு தலைசுற்றல் ஏற்படுத்தின.

 

“எப்படி இவளுக்கு இவ்வளவு தெரியும்..?” என்று ஆதி அகன்று விரித்த கண்களோடு கேட்டான்.

 

“அவளோட அப்பா சித்தர்கள் பத்தின நூல்கள் நிறைய படிச்சுருக்கார் போல. ஏதோ தமிழ் நூல்களை ஆய்வு செய்றதா சொன்னா…அவர் இந்த செய்யுள் ஒரு சித்தர் எழுதியதாகவும், இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க கல்பத்தி சொல்லுதுன்னும் சொன்னாராம். ஒரு ஜோடி கல்… நிறைய ஆற்றல் அதுக்கு இருக்கு… பழைய பூம்புகார் அழிஞ்சப்போ அந்த கல்லு ரெண்டும் கோட்டைக்குள்ளேயே புதைஞ்சுடுச்சு… அந்த கல்ல தேடி நூற்றாண்டுகளா மக்கள் இந்த நகரத்தில் அலையறாங்களாம்.” இவ்வாறு மித்ரன் சொல்வதை கேட்க கேட்க அனன்யாவுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது…

 

“ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன்ன நம்ம நாட்டுக்கு வந்த யவனர் இதை ரோம் நாட்டுக்கு கொண்டுபோக நெனச்சாதாகவும், அதுக்காக சோழ மன்னர்கள் கிட்ட இதை பாதுகாகும்படி குடுத்துட்டு ஒரு சித்தர் முக்தியடைஞ்சதாவும் சொன்னா. யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் நம்ம கையில் கிடைச்சிருக்கு… எதுவும் ஏதேச்சையா நடக்கல… முன்னமே தீர்மானிக்கப்பட்டது போலவே தோனுது…” என்று முடித்தான் மித்ரன்.

 

அங்கேயிருந்த கடிகாரம் ஆறுமுறை சத்தமிட்டது. மூவரையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

 

“நமக்கு நேரம் குறைவா தான் இருக்கு… நிலவு கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரமிச்சுடுச்சு…” அனு பதட்டத்தில் பேசினாள். அவளுக்கு ஆர்வமும் நிரம்பி வழிந்தது.

 

“இதுவரை புரிஞ்சுகிட்டது சரின்னா… நிலா வந்ததும், நாம பழங்காலத்துக்குப் போகமுடியும். அனு தேவையான பொருட்களை எடுத்து வச்சுக்கோ…” என்று ஆதி சொல்ல, அவள் தன் புகைப்பட கருவியை மட்டும் தோளில் மாட்டியிருந்தாள்.

 

இந்திரநீலம் ஒளிர்ந்தது… நிலவு வந்துவிட்டது…. மூவரும் வட்டமாய் அமர்ந்திருக்க, அவர்கள் கைகளுக்குள் பத்திரமாக கண்சிமிட்டியது அந்த கடல்நீலமும் வான்நீலமும் கலந்த இந்திரநீலம்.

 

◆◆◆

 

 

காந்தச்சுழல் போல ஏதோ ஒன்று இவர்களை இழுக்க சுற்றுப்புறம் அசையாமல் நிற்பது போல தோன்றியது. காற்றின் வேகம் கடுமையாயிருந்தது.

 

அந்த வேகம் சற்றே மட்டுப்பட்டு தென்றல் போல் காற்றுவீச, இப்போது அவர்கள் மணிமேகலையின் புத்த விகாரத்தில் இருந்தனர்.

 

அனன்யாவுக்கு தன்னால் ஆகக்கூடிய நன்மை ஏதோ இங்கு உண்டென்று மனம் சொன்னது.

 

அவள் மணிமேகலையிடம் சென்று இவர்கள் மூவர் கனவுகளையும் மேலும் அங்கே நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் விளக்கிச்சொல்லவும் மணிமேகலைக்கு அனன்யாவின் அந்த குழந்தைத்தனமும் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மிகவும் பிடித்தது.

 

இவளால்தான் தன் மனம் இளவரசர் மீது சென்றது என்று நினைவு வரவும் அவள் முகம் மேலும் பரவசமடைந்து விரிந்தது.

 

கண்கள் விலக்கி ஆதியை பார்த்தபோது அவள் திடுக்கிட்டு விழித்தாள். இப்படியும் இருக்கமுடியுமா என்னும் வியப்பு உண்டானது. அதைத்தாண்டி வேறொரு பெரும் குழப்பமும் அங்கே நிகழ்ந்துவிட்டது.

 

அனன்யா அந்த செய்யுள் பற்றியும் அதன் விளக்கம் பற்றியும் சொல்லத்தொடங்க, இதனைக் கேளாமல் வினோதமான ஏதோ ஒன்றைக் கண்டதுபோல மணிமேகலையின் முகம் தென்பட்டது. அவள் கண்கள் இப்போது மித்ரன் ஆதி இருவருக்கும் பின்னால் நிலைகுத்தி இருந்தது.

 

“இந்த யவனர் எப்படி இங்கே வந்தார்…???” என்று அவள் கேட்ட போதுதான் அவர்களுக்குப் பின் நின்றிருந்த பேட்ரீசியோவை கவனித்தார்கள் நண்பர்கள் மூவரும்.

 

பேட்ரீசியோ, மைக்கேலுடன் வந்த இத்தாலியைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய வரலாற்று ஆய்வாளர். அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மித்ரனிடம் தரப்பட்டதால் அவனுடன் நட்பாக இருந்தார்.

 

மித்ரனிடம் “உங்களிடம் உதவி கேட்க வந்தபோது, இந்த சுழலுக்குள் இழுக்கப்பட்டேன்… நாம எங்க இருக்கோம்..??” என்றார் சிறிது மிரட்சியுடன்.

 

அச்சத்தில் வெளிறிப்போயிருந்த அவரிடம் அனைத்தையும் மித்ரன் விளக்கியவுடன் சற்று ஆசுவாசமானார்.

 

“மன்னிச்சுக்கங்க… சிலது அவசரமா செய்யணும்…!! நீங்க உடனே போக முடியாது… உங்களுக்கு அதில் சிரமம் இல்லைனு நினைக்கிறேன்..!!” என்று மித்ரன் சொல்ல…

 

“ எனக்கும் சாகச பயணங்கள் பிடிக்கும்… ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இது சிரமம் இல்லை…வரம்.. என்ன உங்கள்ல ஒருத்தனா நெனச்சுக்கோங்க…!!” என்று புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தார்.

 

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மணிமேகலைக்கு இவர்களின் கனவுகள் மற்றும் அங்கே நிகழ்ந்த பேரலைகள் என அனைத்தையும் விளக்கினர். இவற்றைக் கேட்டவுடன் அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் தெளிவு இல்லை.

 

“மொத்த நகரமும் இரவு உறங்காவிட்டாலும், துறவிகள் வழக்கங்களை மாற்றுவதில்லை. எதையும் காலையில் எழுந்து முடிவுசெய்வோம்..” என்று சொல்லிவிட்டு மணிமேகலை அவ்விடம் விட்டுச்சென்றாள். மற்றவர்கள் அவரவர் இடங்களுக்குச்சென்று ஓய்வெடுத்துக்கொண்டனர்.

 

ஆனால் மணிமேகலை உண்மையிலேயே ஓய்வெடுக்கச் சென்றாளா ?

 

இதுபோல் அவள் எவரும் அறியாமல் வந்து உதயகுமாரன் வருகைக்காகக் காத்திருப்பதை அவளால் நம்பமுடியவில்லை.

 

அவள் தன்னிடமிருந்த பேழையையும் கையோடு எடுத்துவந்திருந்தாள். அதற்குள் இருக்கும் ரத்தினம் எவ்வளவோ ஆற்றல் கொண்டதென்று சொன்னாலும், அவளுக்கு அதன்மீது ஈர்ப்பு உண்டாகவில்லை. அதை, தன்மீது தீராக்காதல் கொண்டுள்ள இளவசரனாய் நினைத்து பார்த்துக்ககொண்டிருந்தாள்.

 

சத்தம் செய்யாமல் அவள் பின்னே வந்து நின்றார் உதயகுமாரன். அந்த கடற்கரையோர கல்மேடை மேல் அவள் அமர்ந்திருக்க, காற்றில் அவள் காவி உடைகள் படபத்துக்கொண்டிருந்தன.

 

தன் முன்னோர்கள் நூறாண்டாய் காத்த இந்திரநீல ரகசியம் பற்றி இவளிடம் சொல்வதுகுறித்து குழம்பியிருந்தார்.ஆனால் “சொல்வது காலத்தின் கட்டாயம். இதனை அந்த சித்தரின் ஆசியோடு அவளிடம் பகிர்கிறேன்” என நினைத்து வானை நோக்கி வணக்கம் சொல்லிவிட்டு தன் குரலை சரிசெய்வது போல் கனைத்தார்.

 

அதில் நினைவுக்கு வந்த மணிமேகலை சட்டென்று எழுந்து கைகூப்பினாள். அவளுக்கு மறுவணக்கம் சொல்லிவிட்டு “மணிமேகலை உன்னிடம் கூறவேண்டிய உண்மை ஒன்று உண்டு.” தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் நடந்துகொண்டே அவளிடம் பேசத்துவங்கினார்.

 

“நூறு ஆண்டுகளுக்கு முன் வஞ்சி நாட்டின் அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கோரக்க சித்தர் எனும் முனிவர் நம் பூம்புகார் நகர் வந்தடைந்தார். காங்கேயம் எனும் ஊரில் இருந்து எடுக்கப்படும் புகழ்மிக்க இந்திரநீலக் கல்லில் இருவட்டம் போல் செய்து தன் தவத்தின் மூலம் எண்பெரும் ஆற்றல் (அஷ்டமாசித்திகள்) தேக்கிவைத்திருந்தார். ஆனால் சிலரால் அது கவரப்படும் என்று தோன்றியதால் அவர் பூம்புகாரில் ஜீவசமாதியானபோது,

 

தனக்குப்பின் இந்திரநீலம் மக்களை நல்வழியில் ஆளும் சோழ அரசனைச் சேரவேண்டும் என்று வாக்களித்துச் சென்றார் கோரக்கர் எனும் யோகீசர்.

 

அது முதல் அவற்றை சோழ பரம்பரையினர் தங்கள் கண்ணாகக் காத்து வருகின்றனர். இது அரசகுலமன்றி வேறெவரும் அறியா செய்தி.

 

அதன் ஆற்றல் பற்றி வெளியில் தெரிந்தால் களவுபோகும் என்பதால் மற்றவர் அறியாவண்ணம் கட்டிக்காத்து வருகிறோம்.

 

அக்கற்கள் இருக்கும் இடம் செல்வமும் வளமும், அன்பும் காதலும் நிறைந்து காணப்படும். அந்த சமூகம் வளம் பெறும் என்றும் அதன்மூலம் தன் அஷ்டமா சித்திகள் உலகுடன் ஜீவித்திருக்கும், வாழ்வாங்கு வாழும் என்றும் சித்தர் தன் பாடல்களில் விளக்கி பல செய்யுள்கள் இயற்றி வைத்திருந்தார். அத்தோடு அதனை தவறாகப் பயன்படுத்த முடியாதபடி சில விதிகளும் இயற்றி வைத்தார். அதுவே நான் உன்னிடம் தந்தது.”

 

என்ற சுருக்கமாக முன்கதைய சொல்லி முடித்தார். ஏனெனில் முழுமையாக சொல்லவேண்டுமெனில் அது இந்த தருணத்தின் இனிமையைக் குலைத்துவிடுமென்று அவருக்குத் தோன்றியது.

 

தன் காதல் அவள் துறவைக் குலைக்குமோ என்றெண்ணி.. முற்றிலும் விலகவும் மனம் வராமல் நெருங்கவும் வாய்ப்பு வராமல் இத்தனை காலம் மறுகியிருந்தார்.

 

இப்போது தடைகளனைத்தும் தகர்ந்துபோயின. அவள் வாய்விட்டு சொல்லாவிட்டாலும் அவள் மனதில் தன் நினைவு மெல்ல மெல்ல ஆலமரம் போல் விழுதுகள் பரப்பி வளர்வது கண்கூடாகத் தெரிந்தது. இத்தனை காலம் தவமிருந்து பெற்ற அந்த அழகிய நிமிடங்களை தவறவிட யாருக்குத் தான் மனம்வரும்..?

 

இங்கு நிகழ்வது காதல்…

 

உயிர்கள் படைக்கப்பட்டதற்கான அச்சாணி…

 

காதல்… அது தெய்வீகமோ புனிதமோ அல்ல.

 

உணவும் உறக்கமும் இச்சையுமே உயிர்களின் முதல் தேவை.

 

அவற்றை இத்தனை சிக்கலாக்கியது மனிதயினம் மட்டுமே செய்த மகத்தான சாதனை. அதுவே பெரும் வேதனை என்றும் சொல்லலாம்…

 

கட்டுப்பாடுகள் தாண்டி இரு உயிர்கள் இணைவது பெரும்பாடாகிப்போனது மனித வாழ்வில். இத்தனையும் தாண்டி என்காதல் வெல்லுமோ… வேறு எதுவும் ஒன்று இதுபோல் மனிதனை உயிரோடு கொல்லுமோ…?

 

இவற்றை எண்ணிக்கொண்டே நின்றிருந்த இளவரசரிடம் மணிமேகலை எழுந்து “சென்று வருகிறேன் இளவரசே..” என்று கைகூப்பினாள்.

 

முன்பு குறிப்பிட்ட எண்ணங்களாலும் அந்தி மாலையின் மயக்கத்தாலும் இளவரசர் தன்னைத் தொலைத்திருந்தார்.

 

இளமையும் சூழலின் இனிமையும் சேர்ந்து மணிமேகலையின் கூப்பிய கரங்களை பற்றிட வைத்தன…..

 

இருவரும் கண்களோடு கலந்து இந்த உலகு, வானம் எல்லாம் மறந்து விண்மீன்களோடு கலந்திட்டனர். இவ்வுடல் என்னும் சிறையினைக் கடந்து மனப்பறவைகள் வெளிவந்தன.

 

“காதலே ஒருவகை துறவு தான் மணிமேகலை… அது உலகிலிருந்து நம்மை விடுவித்திடும்… என்னோடு துறவறம் கொள்வாயா…?” என்று சொல்லி அவள் கைகளை தன் கன்னத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு கேட்டார் இளவரசர்.

 

“இக்கணமே எனை கைக்கொள்வீரா..? என் மனம் உம்முடன் வர சித்தமாய் உள்ளது…” மறைத்து வைத்த காதலோடு கண்ணீரும் வார்த்தைகளும் கலந்து வெளிவந்தன.

 

உடலெங்கும் பற்றியெரியும் சில்லிட்ட நெருப்பு தனை அணைக்கும் முயற்சியில் தோன்றிய முதல் அணைப்பில் வான்வரை வளர்ந்தது காதல் தீ….

 

◆◆◆

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!