Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 16

மொட்டு அவிழும் மலர்போல் மெல்லமாய் நகர மனமின்றி இருவரும் பிரிய, காலடி சத்தங்கள் கேட்கவும் சட்டென விலகிக் கொண்டனர்.

 

சுற்றும் முற்றும் பார்த்தபோது எவரும் தென்படவில்லை.

 



Advertisement

“பூவினுள்ளே கனிபோல் நம் அன்பும் நெருக்கமும் நேரம் வரும்வரை மறைந்திருக்கட்டும்…” என்றார் முதல் அணைப்பின் மயக்கம் தெளிவதற்குள் வந்த பிரிவை நொந்துகொண்ட இளவரசர்.

 

வெட்கச்சிவப்போடு காற்றிலாடும் விளகுச்சுடர் போல இமைகள் படபடக்க “மொட்டாக இருப்பின் குற்றமில்லை… மலரின் நறுமணமும் எழிலும் புதிதாய் தோன்றிய காதல் போல் கவனமீர்க்கவே செய்யும்… என்னால் முடிந்தவரை மறைக்க முயல்கிறேன்…” எப்போதும் பொறுமையாக இருக்கும் அவள் நடை இப்போது வேகம்பெற்று ஒட்டமாய் ஆனது. கணநேரத்தில் சிட்டுபோல் காற்றில் பறந்துவிட்டாள்.

Advertisement

 

Advertisement

இளவரசரும் தன் வெண்புரவியேறி அவ்விடம் விட்டு மறைந்தார்.

 

சற்று தொலைவில் இவர்கள் காதல் மழையில் திளைத்து எழுந்து தலையசைத்த நெடுமரம் ஒன்றின் மறைவிலிருந்து ஒரு நிழலுருவமும் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றது.

Advertisement

 

……

 

ஆறு மணிக்கு அவர்கள் அங்கே வந்தடைந்தனர். அப்போதே தூக்கமும் வரவில்லை. ஆதி உறங்க மனமின்றி குறுக்கும் நெடுக்குமாய் நடக்க, பேட்ரீசியோ அங்கே வந்தார்.

 

“எனக்கு இங்கே வந்ததிலிருந்து ஆர்வம் அலைகடல் மாதிரி பொங்கிட்டு இருக்கு… பண்டைய ரோமானிய பயணிகள் வியந்து எழுதின இந்த பூம்புகார்ல என்ன தான் இருக்குன்னு பாக்கணும்… என்னை கூட்டிட்டு போவீங்களா..” என்று சிறு பிள்ளைபோல் ஆர்வமாக கேட்கவும், ஆதி மித்ரன் இருவரும் அவரோடு மருவூர்ப்பாகம் செல்ல முடிவெடுத்தனர்.

 

“முன்னாடியே ரத்தின வணிகர்கள் கிட்ட இந்திரநீலம் பத்தி கேட்கணும்னு நினைச்சேன்.. அது முடியல.. இவரு கூட போய் அந்த இடத்தை அலசிட வேண்டியது தான்..” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் ஆதி.

 

ஏதோ போர் நடப்பது போல அங்கே பெரும் இரைச்சல் கேட்டது. அவை வேறொன்றுமில்லை மருவூர்ப்பாக்கம் சந்தையில் நடக்கும் பேச்சுகளின் எதிரொலிதான்.

 

“ரொம்ப காலத்துக்கு முன்னாடி எல்லாம் மக்கள் தொகை குறைவுன்னு நெனச்சேன்.. ஆனா இந்த இடத்தை பாத்தா அப்படி எதுவும் தோணல… எள்ளு போட்டா எள்ளு எடுக்க முடியாதுன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. கிட்டத்தட்ட அது மாதிரி தான் இருக்கு…” கண்கள் அகல விரித்து வியப்பில் நின்றிருந்த பேட்ரீசியோ மற்றும் நண்பன் ஆதியிடம் மித்ரன் சொல்லிக்கொண்டிருக்க, அவர்கள் இருவர் கண்ணும் அங்கேயிருந்த கடையின் ரத்தின குவியல் மேல் ஒட்டியிருப்பதை கவனித்து நிறுத்தினான்.

 

“ஆதி அந்த கடையை பாக்க காரணமிருக்கு. நீங்க ஏன் இப்படி ஆகிட்டீங்க” என்று அவன் கேட்பதை காதில் வாங்காமல் மந்திரத்தில் கட்டியதுபோல் அவ்விடம் நோக்கிச் சென்றார் பேட்ரீசியோ.

 

இதை கவனித்த ஆதி “மச்சா… எனக்கு ஏதோ நெருடலா இருக்கு டா…” என தாடையை உள்ளங்கையால் தேய்தபடி மித்ரனிடம் சொன்னான்.

 

“எனக்கு அப்படி ஏதும் தோணல… வீணா குழப்பிக்காம வாடா…” என்று சொல்லி மித்ரன் ஆதியை தன்பக்கம் இழுத்தான் அங்கே கடந்து சென்றவர்கள் மேல் இடித்துவிடாமல்.

 

பேட்ரீசியோ அந்த ரத்தின குவியல் முன் சென்று நின்றார். அக்கடையில் இருந்த வணிகர் ஒரு யவனர். அவர் பேட்ரீசியோ கைகளில் ஒரு பொன் நாணயத்தை திணித்தார். அதைத்தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டதும் ஏதோ மாற்றம் வந்தது போல் தோன்றினார் பேட்ரீசியோ.

 

ஆதி அந்த கடைக்காரரிடம் சென்று “இந்திர நீலம் எனும் கல் வேண்டும். அதன் விலை என்ன” கேட்டதும் அவர் முகம் ஒரு நொடியில் புதிரானதொரு உணர்ச்சியை வெளிக்காட்டியபின் “அது இப்பொழுது கிடைப்பதில்லை” என்று வேறு பல நீல நிற கற்களை காண்பித்தார்.

 

“அதுக்கு ஏதும் சக்திகள் இருக்கான்னு தெரியுமா?” எனும் ஆதியின் கேள்விக்கு, “அது மட்டுமே ஆழ்கடல் நீலத்தில் இருக்கும், வேறு கல் ஏதும் அத்தகைய நிறம் கொண்டிருக்காது..”என்று கொஞ்சமும் தொடர்பில்லாமல் விடையளித்தார். அவர் வேண்டுமென்றே பேச்சை தவிர்ப்பது போல் ஆதிக்கு தோன்றியது.

 

“எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… நான் ஓய்வெடுக்கனும் போல் தோணுது…” என பேட்ரீசியோ தலை வலிக்காக நெற்றியை நீவியபடி சொன்னார்.

 

“மித்ரன்… நீ இவரை அழைச்சுட்டு புத்த விகாரத்திற்கு போ. எனக்கு இங்கே சில வேலைகள் இருக்கு.. நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்னு அனன்யா கிட்ட சொல்லிடு” என்றபடி ஆதி கூட்டத்திற்குள் நுழைந்து மறைந்தான்.

 

அவன் செல்லும் பாதையை அந்த யவனர் கண்கள் நோட்டமிட்டபடி இருந்தன.

 

ஆதி அங்கே வேறு ஏதும் அணிகலன் மற்றும் விலை உயர்ந்த கற்கள் விற்கும் கடைகள் இருக்கிறதா என்று சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டு வந்தான்.

 

மருவூர்ப் பாக்கத்தில் துறைமுகம், ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள், கலைஞர்கள் தொழிலாளர்கள் முதலியவர்கள் வீடுகள் ஆகியவை இருந்தன.

 

கொல்லர் உலைகள், சாயமேற்றும் தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில் செய்யுமிடம், சரிகை நெய்பவர்கள்,பொற்கொல்லர்கள், மணியிழைப்போர் பட்டறைகள் அனைத்தும் இங்கிருந்தன.

 

முதலில் தான் பார்த்த இடத்தை தவிர வேறு இரத்தின அங்காடி ஏதும் அவனுக்கு தென்படாததால், திரும்பி விடலாம் என்று எண்ணியபோது அவனை பின் தொடர்ந்து சிலர் வருவதும் அவன் முதுகில் ஏதோ ஆயுதம் தட்டுப்படுவது போலவும் தெரிந்தது.

 

எதிரில் சற்று தூரத்தில் பஞ்சவாசப் புகை போட்டபடி வந்த ஒருவன் ஆதியின் அருகில் வந்ததும் அதில் ஏதோ தூவ, புகை குப்பென்று முகத்தில் அடித்தது…. ஆதி உணர்வற்று மயங்கிச் சரிந்தான்.

 

…..

 

மித்ரனுக்கு ஏனோ ஆதியுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று உள்ளே அடித்துக்கொண்டது. ஆனால் நம்மை நம்பி வந்த ஒருவரை எப்படி தனியே விடுவதென்று நினைத்து பேட்ரீசியோவுடன் புத்த விகாரத்திற்கு வந்துவிட்டான்.

 

அனன்யா மலர்ந்த முகத்துடன் அங்கே இருந்தாள்.

 

“ரொம்ப நேரமா காத்திருந்தேன்… ஆதி எங்க..? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று சொல்லியபடி மித்ரனை கண்டதும் வாசலில் அமர்ந்திருந்தவள் எழுந்து இவர்களை நெருங்கினாள்.

 

“இவர் உடம்புக்கு சரிப்படலன்னு சொல்லி திரும்பிட்டார். ஆதி வர்ரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் . அங்க ஏதோ வேலை இருக்கிறதா சொன்னான். உனக்கு என்னன்னு தெரியுமா ?” என்று மித்ரன் கேட்டான்.

 

அவளுக்கு அந்த வெளிநாட்டவர் இவர்களுடன் வந்தது முதலில் இருந்தே பிடிக்கவில்லை.

 

அவர் வந்தது யதேச்சையாக நடந்ததில்லை என்பதுபோல் அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது.

 

ஆதி வரவில்லை என்றதும் முகத்தில் இருந்த புத்துணர்வு மாறி அவள் மனம் தவிப்பில் ஆழ்ந்தது.

 

இந்திர நீலக் கல் பற்றிய உண்மையை இனியாவிடம் கூட சொல்லாததால் பேட்ரிசியோ இருக்கும்போது சொல்ல அனன்யாவுக்கு மனம் வரவில்லை.

 

“எனக்கு ஏதும் தெரியாது மித்ரன்… நீங்க உள்ள போங்க… நான் அவர் வந்ததும் உள்ள வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளம் பரிதவிக்க அங்கேயே அமர்ந்து அவள் காத்திருந்தாள்..

 

◆◆◆

 

 

ஆதி நண்பர்களுடன் சந்தைக்குச் சென்றபிறகு அனன்யா சாளரம் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நகரை எப்படியும் இம்முறை முழுமையாக சுற்றிப்பார்த்து அதனை புகைப்படம் எடுத்து அதன் கட்டிடக்கலை நுணுக்கங்களை பற்றி தன் ஆய்வுக்கட்டுரையில் எழுதிட எண்ணினாள்.

 

கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் கடற்கரையில் காற்றில் அலைபாய்ந்தபடி நின்ற தனி மரம் அனுவின் கவனத்தை ஈர்த்தது. “ஒரு பெரிய மரம்… சுத்தி நிறைய செடிகள்… இந்த சாயங்கால நேரத்தில் ஆதியும் கூட இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்” துள்ளியபடி கைகளை காற்றில் வீசி அந்த சோலையைச் சுற்றி ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

காவிரியாறு இப்போது இருப்பது போல் இல்லாமல் அக்காலத்தில் மிகப் பெரியதாக இருந்திருக்கிறது.

 

அது கடலில் கலக்கும் இடமான காவிரிப்பூம்பட்டினத்தில் எண்ணிலடங்காத ஏரிகள் இருந்திருக்கின்றன..அவற்றை தடாகங்கள் என்றனர். அவற்றில் ஒரு ஏரியில் தான் அவள் உலா வந்தாள். காவிரி ஒவ்வொரு ஏரியாய் நிரப்பிக்கொண்டு வந்து, இறுதியாக கடலில் கலக்கும்.

 

 

 

“பூம்புகார்ல நிறைய பூங்காக்களும் ஏரிகளும் இருக்கும்னு படிச்சது உண்மை தான் போல…ஆனா இந்த இடத்துல ஒரு ஏரி இருக்கது வெளிலேர்ந்து பாத்தா சுத்தமா தெரியாது ” என்று நினைத்துக்கொண்டு நடந்தபோது, அந்த இடத்தின் நீர்ப்பாசன அமைப்புகள் கண்டு வியந்தாள். தானே நீர் நிரம்பி தானே நீரை வெளியேற்றவும் அக்காலத்திலேயே பெரும் வழிமுறைகளை கையாண்டிருந்தனர். பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின.

 

சற்று தொலைவில் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்த கல் மேடையில் ஒரு ஆணும் பெண்ணும் காதல் மயக்கத்தில் நிற்பதையும் அவர்கள் தயங்கித் தயங்கி பிரிவதையும் கண்டாள்.

 

“எல்லா காலத்துலயும் கடற்கரை காதல வளத்துருக்கு போல…இதே மெரினாவா இருந்திருந்தா இந்நேரம் காவல்துறை தன் கடமைய செஞ்சுருக்கும்…” என்று தோன்றவும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

 

ஆனால் அவள் சிரிப்பு சட்டென நின்று வியப்புக்கான அறிகுறியாய் கண்கள் விரிந்து புருவங்கள் மேலேறின.

 

“அடிப்பாவி… கள்ளி… நீ வா பாத்துக்குறேன்.” என்று நினைத்தாள்.

 

அவள் அதிர்ச்சிக்கு காரணம் அங்கிருந்த வந்த பெண் மணிமேகலை !

 

நமக்கு முன்னமே தெரியும்… அனுவுக்கு இப்போ தானே தெரியும்… அதான் இவ்ளோ அதிர்ச்சி..

 

இதனை ஆதியிடம் சொல்லவேண்டுமென்று மணிமேகலை அவ்விடத்தைக் கடந்து செல்லும்வரை காத்திருந்துவிட்டு பின் மெல்லமாய் வந்து புத்த விகாரத்தின் வாசலில் அமர்ந்தாள்.

 

சிறிது நேரத்தில் மித்ரன் ஆதி வரவில்லையென்று சொல்லவும் தவித்துப்போனாள்.

 

….

 

கண்விழித்தபோது அவனுக்கு எதிரே தன்னைப்போலவே உருவில் இருந்த ஒருவனைக் கண்டான். வியப்பில் தலைசுற்றுவது போல் தோன்ற, ஆடை அணிகலன்களுடன் இருந்த இளவரசர் உதயகுமாரனைப் பார்த்த ஆதி அதிர்வும் வியப்பும் அடைந்தான்.

 

ஆனால் அவர் பார்வையில் தெரிந்த கோபவெறி உடலைச் சில்லிட வைத்தது.

 

“மணிமேகலையின் எச்சரிக்கையை மீறி இந்நகருக்குள் இந்திரநீலம் பற்றி கேள்வி எழுப்பியதன் நோக்கம் என்ன.. ? உன்னிடமிருக்கும் இந்திரநீலமும் இந்நேரம் பறிபோயிருக்கக்கூடும்… ஆதன் எனும் பெயர் கொண்டவர் நீர் தானே ?” என்று கேட்டபோது, அந்த கம்பீர குரலில் தொனித்த வேகம் அவனை அசைத்துப் பார்த்தது.

 

“நீங்க… நீங்க தான் இளவரசரா …” என்று பதட்டத்துடன் அவன் கேட்க, “ஆம் நானே சோழ நாட்டின் இளவரசன்.. உங்கள் மூவரையும் பற்றி என் ஒற்றர் படை செய்தி தந்தமையால் நீ தப்பித்தாய். இல்லையேல் விளையாட்டாய் நீ செய்த செயல் உன்னைக் காவு வாங்கியிருக்கும்.” உறுதியாக இறுகிய முகத்துடன் இளவரசர் சொல்லவும், நம்மள பத்தி கூட தெரிஞ்சுருக்குன்னா ஒற்றர்கள் மிகவும் அதிகம் போல என நினைத்த ஆதிக்கு கைகால்கள் வெலவெலத்துப் போயின.

 

“நான் விசாரிச்சது உங்க சட்டத்திட்டதுக்கு எதிரா இருந்தா மன்னிச்சுக்கோங்க….” என்றுவிட்டு பின் சற்றே தயங்கியபடி தொடர்ந்தான் “இந்திரநீலம் எங்கள் வாழ்க்கையில் வந்தபிறகு நடந்த எல்லாமே வியப்பும் குழப்பமும் தான். அதனால அதப்பத்தி தெரிஞ்சுக்க ஆர்வ மிகுதியில் அல்லங்காடியில கேட்டேன்..” தன் கைகள் கட்டப்பட்டிருப்பதை அப்போது தான் உணர்ந்து, அச்சம்கொண்ட ஆதிக்கு சீரற்ற மூச்சுகளுடன் திக்கிதிக்கி வார்த்தைகள் வந்தன. (படத்துல வர்றதுமாதிரி கட்ட பிரிச்சு சண்டை போட அவன் என்ன உளவாளியா..? சாதாரண ஆளு… பயம் வரத்தானே செய்யும்..)

 

“இதைக்காட்டிலும் பெருந்தவறொன்று செய்துள்ளீர்கள்… அது இந்நகருக்கே தீங்கு விளைவிக்கும் செயல்…”என்று சொல்லி நிறுத்திய இளவரசர் ஆதியை நெருங்கி அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தார்.

 

அப்பார்வை முதுகுத்தண்டில் ஊசி இறங்குவது போல் உணர்வைத்தந்தது. தலையிலிருந்து வியர்வை அவன் கழுத்தின் வழி கீழ் வழிந்தது.

 

“யாரிடமிருந்து நாங்கள் இந்திரநீலத்தைக் காக்க பாடுபடுகிறோமோ, அவர்களிடம் சென்று அதைப்பற்றி விசாரித்தல்…” என்றதும் கண்கள் சுருக்கியபடி புரியாமல் பார்த்த ஆதியிடம் “ஆம்…இந்திரநீலம் யவனர்களால் கைக்கொள்ளப்படக்கூடாது என்பதே அதை இவ்வளவு பாதுகாப்பாக வைப்பதன் நோக்கம்” என்று அழுத்தமாக அவன் காதருகே சொன்னார்.

 

ஆதிக்கு, தான் செய்த தவறு புரிந்தது.முன்பிருந்த அச்சத்தைக்காட்டிலும் இதற்கு தண்டனை விதித்துவிடுவார்களோ என்னும் எண்ணம் அவன் நரம்புகளெல்லாம் புடைத்து வெடிக்க செய்யுமளவு அழுத்தத்தை தந்தது.

 

உதயகுமாரன் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானமாகி ஆதிக்கு முழு வரலாறும் சொல்லதொடங்கினார்…

 

இப்போது இருந்து சரியாக 100 ஆண்டுகள் முன்பாக…

 

ஒரு அதிகாலையில், காண்போர் வியக்கும் எழில்கொண்ட முசிறி(கேரளா) துறைமுகத்தில் வந்திரங்கியது அந்த ரோமானிய கப்பல்.

 

அங்கே இருந்த நெடிதுயர்ந்த தென்னை மரங்களும் இயற்கை வளமும் கண்டு விழிகள் மூடாமல் நின்றனர் புதிதாய் வந்த யவனர்கள். தங்கள் பயணத்தின் போதே இந்த நிலத்தின் சிறப்புகள் பற்றி பழைய பயணிகள் புதிதாய் வந்தவர்களுக்கு ஓயாமல் சொல்லியிருந்தார்கள்.

 

இந்தியாவிற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது வந்துவிடவேண்டும் என்பதே ஐரோப்பியர்களின் பெரும் கனவு அக்காலங்களில்.

 

துறைமுகத்தில் இறங்கும் போதே மிளகும் ஏலமும் சுக்கும் என வீசிய வாசனைப்பொருட்களின் நறுமணம் நாசியை நிரப்பியது.

 

“ இண்டிகாவின் பொருட்கள் வாங்குவதற்காகவே ரோமானியர்கள் பாதி செல்வத்தை செலவளிக்கின்றனர். உலகிலுள்ள தங்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இங்கல்லவா உள்ளது…” இந்திய மண்ணில் கால்வைத்ததும் வாய்பிளந்து அதிசயித்தார் கப்பலில் இருந்து இறங்கிய ரோம் அரசின் அமைச்சரான அந்த யவனர்.

 

(*பண்டைய கிரேக்கரும் ரோமானியரும் இந்தியாவை இண்டிகா என்றே குறிப்பிட்டனர்*)

 

சில நாட்கள் இங்கே தங்கியிருந்த பின் தன் மெய்காவலர் தலைவனை அழைத்தார்.

 

“யாரங்கே…

 

பேட்ரிக் இண்டிகாவின் அசைவுகள் அனைத்தையும் எனக்கு அறிவிக்கும் ஒற்றர் படை ஒன்றோடு இங்கே நீ தங்கி எனக்கு அவ்வப்போது செய்தியனுப்பு..

 

அத்தோடு நான் உனக்கு இட்ட தலையாய பணியை மறந்துவிடாதே” என்று கூறி மர்மப்பார்வை ஒன்றை செலுத்தினார்.

 

“தங்கள் விருப்படியே செய்கிறேன் மந்திரியாரே..” என்றபடி பணிவுடன் மண்டியிட்டு வணங்கினான் பேட்ரிக்.

 

இந்த மண்ணையும் அதன் வளத்தையும் சொந்தமாக்கி அதைக்கொண்டு ரோமாபுரியை சொர்கபுரியாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே கண்களால் விழுங்குவது போல் இந்நிலத்தை சுற்றி அலைந்துவிட்டு தன் நாடு புறப்பட்டான் அந்த யவன மந்திரி.

 

◆◆◆

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!