Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 18

பேட்ரீசியோ ரத்தினங்கள் பற்றி சொன்னதை மனதில் குறித்துக்கொண்டாள் அனன்யா.

 

“அந்த கடையில் இருந்த ஆள் லத்தின் மொழியில் பேசினார். என்ன தெரிஞ்சது போல இந்த காசை என் கையில் கொடுத்தார். இது வாங்கிக்கிட்டதுலேர்ந்து நடக்குறது ஏதும் எனக்கு சரியா படல. தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது நெருப்புக்குள் மூழ்கிப் போற மாதிரி…. நெருப்பு என்ன சுத்தி… எரிமலை வெடிச்ச மாதிரி இருந்துச்சு …” என்று பேட்ரீசியோ சொல்லிக்கொண்டு இருக்க…

 



Advertisement

எரிமலை என்ற வார்த்தையை கேட்டவுடன் ஆதியும் மித்ரனும் ஆச்சரியத்தில் கண்கள் பிதுங்கி வெளியில் வந்து விடும் அளவுக்கு விழித்தனர்.

 

இதுவரை ஏதோ பேய் பிசாசு கதை போல சொல்றாரே என்று கடுப்பாகி அமர்ந்திருந்த அனன்யாவுக்கு அவர் அந்த காசைப் பற்றி சொன்னவுடன் சிறுபொறி தட்டியது. வேகவேகமாக அவரிடம் சென்று அதை ஆராய்ந்தாள்.

Advertisement

 

Advertisement

 

 

 

Advertisement

 

“இது என்னன்னு இங்கே இருக்க சித்த வைத்தியர்கள் கிட்ட கேட்போம். எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு… வித்தியாசமா இருக்கு..” என்றபடி அதை தொடாமல் வாங்கி துணியில் முடிந்து வைத்தாள்.

 

“என்ன ரெண்டு பேரும் பேய் முழி முழிக்கிறீங்க..?” என்று அனு கேட்டதற்கு…

 

அவர்கள் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையாட்டிவிட்டு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அந்த மிரட்சி அவர்களை விட்டு நீங்கவே இல்லை.

 

“பேட்ரீசியோ நீங்க எதும் எரிமலை வெடிச்சது பத்தி கதை கேட்டீங்களா…ஏன் திடீர்னு இப்படி எல்லாம் சொல்றீங்க ? என்ன ஆச்சு ?” என்று ஆதி அவரிடமிருந்து செய்திகளை அறிந்து கொள்ள கொக்கி போட்டான்.

 

“ நானும் இத உங்க கிட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன். எங்க ஊர்ல ஒரு கட்டுக் கதை உண்டு. அது என்னன்னா ரோம் நாட்டுப் பயணிகள் சிலர் இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை அடையணும்னு நெனச்சு புறப்படும்போது எரிமலை வெடிச்சதாகவும்…. அதுல இறந்துபோன ஒரு ஆள் எப்படியா இருந்தாலும் அந்த பொருளை அடைந்தே தீருவேன் என்று சபதம் போட்டதால அவருக்கு ஒரு இடத்தில் கோவில் இருக்குன்னு கூட சொல்லுவாங்க…அதனாலதான் எனக்கு இந்த பூம்புகாருக்கு வந்ததிலிருந்து அந்த கதைகேட்ட நினைவுகள் வந்துகிட்டே இருக்கு போல… ” என்று சொன்னார்.

 

இதைக் கேட்டதும் ஆதி சற்று நிம்மதி அடைந்தாலும் இளவரசர் இது பற்றி யாருக்குமே தெரியாது என்று சொன்னார்.

 

ஆனால் இரண்டாயிரத்தி நூறு வருடங்கள் கழித்து பிறந்த பேட்ரீசியோவிற்கு இந்த விவரம் தெரிந்திருக்கிறது. அது எப்படி என்று யோசிக்க யோசிக்க இன்னும் தலை பாரம் ஆவது போல் உணர்ந்தான்.

 

சொந்த செலவில் சூனியம் வச்ச மாதிரி இந்த ஆள பாத்துகிறேன்ன்னு சொல்லி என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டேன். முன்னாடி இருந்தே ஏதோ நம்மளால பிரச்சனை வரப்போகுதுன்னு தோணுனது இதுக்குத்தான் போல என்றும் மித்ரன் முணுமுணுத்தான்..

 

இவை அனைத்தையும் அருகிலிருந்ததால் கேட்டுக்கொண்டிருந்த அனன்யா “சரி காலைல பேசிக்கலாம்… கொஞ்சம் தூங்கி எழுந்துக்கோங்க… நான் போறேன்.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது…” என்று சொல்லி வேகமாக நடந்து அவ்விடம் விட்டு வெளியேறினாள்.

 

◆◆◆

 

எல்லோரும் தூங்கிவிட்டாலும் மணிமேகலைக்கு தூக்கம் பிடிக்காமல் அவள் அறையில் சாளரம் வழியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அனன்யா அவளிடம் சென்று “மணிமேகலை… உங்களுக்கு தூக்கம் வரலையா ? எங்களால் நடந்த தொந்தரவுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்… தூங்குங்க..” என்றாள் சற்று வருத்தமாக முகம் வைத்தபடி.

 

“அப்படி ஏதும் இல்லை … இன்று நிகழ்ந்த சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனை சுதமதியிடம் சொல்லக்கூட எனக்கு மனம் வரவில்லை…” என்று ஆரம்பிக்கும் போதே அனன்யா அது இளவரசன் பற்றிய செய்தியாக தான் இருக்கும் என்று உணர்ந்துகொண்டாள்.

 

தன் உயிர் தோழியிடம் கூட சொல்லாததை மணிமேகலை தன்னிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்பதை நினைத்த அனன்யாவுக்கு மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

 

தன் மனதில் இருந்த குழப்பங்களை ஓரங்கட்டி வைத்தாள். அனன்யா எப்பொழுதுமே இப்படித்தான் . அந்த நொடியை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதே அவள் கொள்கை.

 

“ சொல்லுங்க மணிமேகலை…” என்று ஓடிப்போய் அவள் பக்கத்தில் குத்துக்கால் போட்டு முட்டியில் முகம் வைத்து ஆர்வமாக கதை கேட்க தயாரானாள்.

 

“நான்…

 

நான்…

 

முதன் முறையாக இன்று இளவரசரை சந்தித்தேன்” என்று தயங்கிதயங்கி மணிமேகலை சொல்லவும்…

 

“என்னது முதல்முறையாகவா” வாய் பிளந்தாள் அனு.

 

“ஆம் அவர் என்னை தொடர்வது பிடிக்காத காரணத்தால், இதுவரை முகம் பார்த்ததில்லை. இன்று அவரின் முகம் பார்த்து பேசவும் மனதில் இருப்பதை அவரோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிட்டியது…” மணிமேகலைக்கும் நாணம் வந்தது.

 

இளவரசனுக்கும் ஆதிக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பகிர்ந்துகொள்ள எண்ணினாள் மணிமேகலை. ஆனால் அவளுக்கு நேரில் பார்க்கும்போது இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

 

“என்ன சொன்னீங்க… உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்களா…” என்று ஆர்வக்கோளாரில் கேள்வி கேட்கத் தொடங்கினாள் அனு.

 

தன் எதிரில் இருப்பது மணிமேகலை என்பதையும் தான் இருப்பது கடந்தகாலம் என்பதையும் மறந்து ஏதோ நட்பு வட்டங்களுக்குள் கதை பேசுவது போல் அவள் கேட்டது அவளுக்கே வெட்கமாய் போனது.

 

ஆனால் மணிமேகலை சற்றும் தயக்கமின்றி “ஆம்” என்றாள்.

 

இவ்வளவு சீக்கிரமா இப்படி சொல்லுவா ன்னு நினைக்கவே இல்ல… சட்டுன்னு சொல்லிட்டாளே என்று நினைத்தபடி அனன்யா பார்க்க மணிமேகலை மேலும் தொடர்ந்தாள்.

 

“ஒருவர் இல்லறத்தை ஆழ்ந்து அனுபவித்த பிறகே துறவறம் கொள்ளமுடியும் என்பது இயற்கையின் நியதி. உயிர்கள் படைக்கப்பட்டது அன்புக்காகவே.. நான் படைக்கப்பட்டதன் நோக்கம் அவர் அன்பை பெறவே என்று தோன்றுகிறது. எனவே நாங்கள் தூரதேசம் சென்று அறம் செய்து இல்லறம் வளர்க்க தீர்மானித்து விட்டோம்..” என்று முடித்தாள்.

 

அனன்யாவுக்கு ஒரே மகிழ்ச்சி பிரவாகம் உள்ளுக்குள்ள ஓட ஆரமிச்சுடுச்சு…. தன்னால தான் இவ்ளோ தூரம் இவ பேசறான்னு…

 

ஆனால் சொல்லி முடித்த பிறகு மணிமேகலையின் மனதில் ஏதோ ஒரு குழப்பம் வந்து போனது. பனிக்கட்டி போன்ற அவள் முகம் நொறுங்கி… உருகி…. மீண்டும் இருகுவதில் இருந்து அனன்யாவுக்கு தெரிந்தது.

 

……

 

அவளின் இந்த நொடிநேர முகமாற்றத்துக்கு காரணம்….

 

தன் குரு சொன்னது மணிமேகலைக்கு நினைவு வந்தது… இளவரசன் முற்பிறவி வினைக்கான பலனை அனுபவித்தே ஆகவண்டும் என்பது அவர் விதி என்று.

 

மனதில் தோன்றியதை அவள் சொல்லி வருந்தவும், அனன்யா “நீங்க சொல்ற எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்ல மணிமேகலை.. கவலைப்படாதீங்க இந்த பாவம் புண்ணியம் எதுவும் உங்களை ஒன்னும் செய்யாது..”

 

அதுவரை ஊழ்வினை இல்லை என்று எவரேனும் சொல்லியிருந்தால் மணிமேகலை நம்பி இருக்கமாட்டாள். ஆனால் அனன்யாவின் வார்த்தைகள் அவள் மனதிற்கு இதம் தரவும், தன் கவலைகளை மறந்து உறங்கச் சென்றாள்.

 

முதல் நாள் இரவு பேட்ரீசியோ வைத்திருந்த நாணயத்தை வாங்கியவள், காலை எழுந்தவுடன் மணிமேகலையிடம் இதைபற்றிச் சொல்லி, சித்த வைத்தியர் யாரையாவது தெரியுமா என்று கேட்டாள்.

 

மணிமேகலை தீவிர சிந்தனைக்குப்பின் “இங்கே அருகில் இருக்கும் ஏரிக்கரை நந்தவனத்தில் ஒரு சித்தர் தனிமையில் வசிக்கிறார். அவர் இருப்பிடம் எவருக்கும் தெரியாது. அவரிடம் சென்று கேட்டால் ஒருவேளை இதற்கு ஏதேனும் வழி தெரியும்…” என்று தெரிவித்தாள்.

 

“சரி நான் போய் அவரை பார்த்துட்டு வர்றேன்” என்று அனன்யா உடனடியாக விடுவிடுவென்று கிளம்பவும், மணிமேகலை மறுபடி அவளை அழைத்து “அவர் இருப்பிடம் பரம ரகசியம்… அங்கே சென்று மூன்று முறை ‘யோகம் சித்தம் புத்தம்’ என்று சொல்.. வேறு எவருக்கும் தெரிந்து விடாமல் இருக்க வேண்டும்.. விழிப்புடன் சென்றுவா…” என்று உறுதியான குரலில் எச்சரித்தாள்.

 

எப்போதும் போல விளையாட்டாக அல்லாமல் இந்த காரியத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வோடு அணுகினாள் அனு.

 

அனன்யா நந்தவனத்தின் உள்ளே நெருங்கியதும் ‘யோகம் சித்தம் புத்தம்’ என்று மூன்றுமுறை சொன்னாள். ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்த சித்தரைப் பார்த்ததும் அவளுக்கு மனம் மகிழ்ச்சியால் நிறைந்த உணர்வு ஏற்பட்டது. முகத்தில் தெரிந்த அபரிமிதமான ஒளி அவளை கைகள் கூப்பி வணங்கச்செய்தது.

 

சித்தரிடம் வந்து அந்த நாணயத்தைக் காட்டியபோது அவர், அதில் சில வசிய மருந்துகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்.

 

அதுமட்டுமில்லாமல் இதனை தொட்டுவிட்டு முகத்தில் கை வைக்க வேண்டாம் என்றும் கைகளை ஆற்று நீரில் நனைத்தபின் வெளியில் செல்லுமாறும் அனன்யாவை எச்சரித்து அனுப்பினார்.

 

அனன்யா சித்தரின் குடிலை விட்டு வெளியில் வந்ததும் ஆற்றை நெருங்குவதற்கு முன் வெயில் கண்களில் பட்டுக் கூசியதால் கைகளை முகத்தில் வைத்து ஒளியை மறைத்தாள். அதிலிருந்து அவளுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

 

……

 

ஆதிக்கு மறுநாள் பொழுது மிகவும் தாமதமாகவே விடிந்தது. எழுந்து சென்று அனன்யாவை தேடியபொழுது அவள் ஏதோ சித்தரை சந்திக்கச் சென்றிருப்பதாக சுதமதி சொன்னாள். மணிமேகலை அந்த புத்த விகாரத்தின் மையத்தில் இருந்த பெரும் புத்தர் பாதங்களின் அருகிலமர்ந்து தவம் செய்துகொண்டிருந்தாள். ஆனால் இப்போதெல்லாம் அவளால் முன்புபோல் தவத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

 

புதிதாய் துளிர்த்த அன்பு, அந்த அன்பின் உரிமைக்காரர் ஆகியவற்றை மட்டுமே நினைத்து அவள் தவமிருந்தாள். இது தவறு என்ற எண்ணம் முதலில் வந்து வந்து போனது. இளவரசரை சந்தித்த பின்பு அவரை நினைப்பதை மூச்சு விடுதல் போல் இன்றியமையாத கடமையாகச் செய்துவருகிறாள்.

 

( புத்தருக்கு அவர் காலத்தில் இருந்து 400 ஆண்டுகள் கழித்துதான் முழு உருவச்சிலை வடிவமைக்கப்பட்டது. அதுவும் கி.மு முதலாம் நூற்றாண்டில் காந்தார நாட்டில் செய்யப்பட்டது. தென்னிந்தியாவில் புத்தரின் பாதங்களை வழிபடும் வழக்கம் தான் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை இருந்துவந்தது. மணிமேகலை காப்பியத்தில் கூட புத்தர் பாதத்தின் உருவம் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருப்பார்கள்.)

 

அன்று நகரம் முழுதும் விழாக்கோலம் கொண்டு, மக்கள் கூட்டத்தால் விழிபிதுங்கியது. வடக்கே படையெடுத்துச் சென்ற அரசர் இன்று வெற்றியோடு நாடுதிரும்பியிருக்கிறார் என்பதும் படைகளும் பரிவாரங்களும் நகரின் வெளியே படைவீடுகளில் தங்கியிருக்கின்றனர் என்பதும் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைவைத்து தெரிந்தது.

 

மறுநாள் வெற்றிவிழா கொண்டாடப்படவிருப்பதாய் முரசறைந்து அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி பரவியிருந்தது ஒருவரைத் தவிர…. அவர் அந்த யவனர்.

 

……

 

புன்னகை தவழும் முகத்துடன் கண்களை மூடியிருந்த மணிமேகலையின் தவத்தைக் கலைக்க விரும்பாத ஆதி அனன்யாவைத் தேடி நகரம் நோக்கிப் புறப்பட்டான். நேரம் நண்பகலை எட்டியிருந்தது.

 

ஆதி தனக்குத் தெரிந்த வரை விசாரித்துக்கொண்டு அவள் எங்கு சென்றிருப்பாள் என்று நகரம் முழுவதும் தேடியலைந்தான். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

 

அன்று சூரிய வெப்பம் நரகம் போல் தகித்ததால் ஆதிக்கு நாக்கு வரண்டு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது. இதற்குமேல் ஒரு அடி எடுத்துவைக்க முடியாது என்று தோன்றினாலும் தன் சக்தியனைத்தும் திரட்டி நடந்தான். அந்திவேளையை நெருங்க நெருங்க அனன்யா எங்கே சென்றிருப்பாள் என்னும் அச்சம் மனமெங்கும் பரவி தலை வெடிப்பதுபோலானது.

 

முதலில் தாகம் தீர்க்க எங்கேயாவது நீர் கிடைக்குமா என்று தேடிய பொழுது தூரத்தில் மரங்கள் அடர்ந்த அந்த நீரோடை அவன் கண்களுக்குப் புலப்பட்டது. வெயிலில் அலைந்துவிட்டு அங்கே சென்றதும் அந்த இடம் அவனுக்கு சொர்க்கமாய் தோன்றியது.

 

தன் இரண்டு கைகளையும் குவித்து அதுநிறைய நீரை அள்ளியெடுத்து தாகம்தீரக் குடித்தான். சில்லென்ற நீரைக் கொஞ்சம் முகத்தில் அடித்துக்கொண்டான் .

 

அப்போது அக்கரையிலிருந்த மரங்களுக்குப் பின்னால் ஏதோ சலசலப்பு கேட்டது. ஆனால் ஆதி பார்த்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாய் ஏதுமில்லை. ஆதி இருந்த கரையில் சற்று தூரம் தள்ளி ஒரு பெண் ஆற்றங்கரையில் நடந்துசெல்ல, அவளைப் பின்தொடர்ந்தபடி சென்றது இளவரசர்….

 

“மணிமேகலை… மணிமேகலை நில்… தனிமையில் சந்திப்பதாகச் சொன்னது நினைவில்லையா..” என்று சொல்லிக்கொண்டே அவர் அவள் பின்னே ஓடினார்.

 

ஆதி சற்றுமுன்பு தான் மணிமேகலையை புத்த விகாரத்தின் மண்டபத்தில் பார்த்தான். எனவே அது மணிமேகலையாக இருக்க வாய்ப்பில்லை…

 

அப்படியென்றால்….

 

அனன்யா…. !!!

 

இல்லை…

 

இது அனன்யாவாக இருக்கக் கூடாது என்று மனம் வேண்டிக்கொண்டது….

 

ஆனால் அது அனன்யாவே தான்…

 

மணிமேகலை நிதானமாக நடப்பவள்…அவள் வேகநடையே சொன்னது அது அனு தானென்று…

 

இவ எதையுமே சொல்லிட்டு செய்ய மாட்டா… எங்கேயாவது போயி அவசரப்பட்டு ஏதாவது செஞ்சு வம்ப விலைக்கு வாங்குறதே வேலையா போச்சு… கடவுளே இவளுக்கு கொஞ்சம் பொறுமைய கொடு… என்று மனதுக்குள் அனுவை திட்டிக்கொண்டே.. சரி நாமாவது போய் இளவரசருக்கு விளக்கலாம் என்று எண்ணி ஆதி நெருங்கும் நேரம்…

 

எங்கோ தூரத்திலிருந்து வந்த அம்பு இளவரசர் கழுத்தில் பாய அவர் நிலைதடுமாறி சுருண்டு விழுந்தார்.

 

ஆதியின் கனவு கண்முன்னே நிகழ்ந்தேறியது… ஆனால் அடிபட்டது அவனுக்கல்ல… இந்த மாபெரும் பூம்புகார் நகரை ஆளப்போகும் சோழ இளவரசர் உதயகுமாரனுக்கு…..

 

◆◆◆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!