Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 19

ஆற்றின் அக்கரையில் யாரோ தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டு பின் மெல்ல அடங்கியது.

 

அனு ஆஆஆஆவென்று அலறியபடி மயங்க ஆதிக்கு யாரை கவனிப்பதென்று புரியாமல் மனம் அலைபாய்ந்தது… ஆற்றிலிருந்து கொஞ்சம் நீரெடுத்து அனு முகத்தில் தெளித்து அவளை அங்கேயே விட்டுவிட்டு இளவரசரை தோளில் ஏந்தினான்.

 



Advertisement

ஆதிக்கு, முன்பு அவன் கனவில் தோன்றியது போல் அவர் கழுத்தில் அது பாயவில்லை. சற்று தள்ளி அந்த அம்பு தோளில் தைத்திருக்க, அவர் வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்தார். அவர் உடல் உதறலெடுத்தது.

 

ஆதி இளவரசரை தன் தோளில் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு அருகில் மரங்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்றான். அவ்விடம் தான் அனன்யா முன்தினம் வந்து உலவிய நந்தவனம்.

Advertisement

 

Advertisement

ஏரியும் அதற்கு அருகில் பல வண்ண மலர்கள் சூழ்ந்த அந்த வனத்தில் இன்னும் உள்ளே சென்றபோது பெரிய மரம்ஒன்றைச் சுற்றி மேடையிட்டதுபோல் கற்கள் போடப்பட்டிருந்தது.. அந்தக் கல் மேடையில் இளவரசரை கிடத்திவிட்டு அனன்யாவை தூக்கச் சென்றான் ஆதி.

 

அனுவை தூக்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது அவன் கிடத்திய இடத்தில் இளவரசரைக் காணவில்லை.

Advertisement

 

அனுவை தனியாக விட்டுச் செல்லவும் மனமில்லை. இது என்ன புது குழப்பம் என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

 

அப்போது அந்த மரத்தின் அடர்ந்த நெரிசலின் உள்ளே, ஏதோ முனகல் சத்தம் கேட்க, வியப்பில் உற்று பார்த்தபோது தரையில் படுத்திருப்பது போன்று சாய்ந்திருந்த அந்த மரத்தின் கிளைகளுக்கு நடுவில் மரத்தின் பெரிய பொந்து ஒன்றிற்குள் ஒரு குடில் தென்பட்டது.

 

எவராலும் இதை ஊகிக்கவே முடியாது…

 

நான்கு அடி எடுத்து வைத்து அந்த இடத்தை நெருங்கிய ஆதி…

 

கதவை மெதுவாகத் தள்ளி உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தான்.

 

சில வினாடிகளில் கண்விழித்த அனு “இங்கிருந்து இப்போ தானே வெளியில போனேன்… ஆதி நானெப்படி இங்க வந்தேன்…நேத்திலிருந்து உங்ககிட்ட இந்த இடத்தை பத்தி சொல்லணும்னு நெனச்சுட்டே இருந்தேன். இங்க ஒரு சித்தர் இருக்கார்…” என்று அரை மயக்கத்தில் பேசிக்கொண்டேபோக ஆதி அவளை இடைநிறுத்தி அமைதி என்று வாயில் விரல்வைத்து சைகை செய்தான்.

 

கதவு வழியே தெரிந்த சிறு விரிசலில் அவர்களுக்கு இளவரசர் நெஞ்சில் ஒருவர் கை வைத்து அமுக்குவது தெரிந்தது.

 

அனன்யா “அவர்தான் அந்த சித்தர்” என்று கூறவும் ஆதி சற்று ஆசுவாசமடைந்தான்.

 

சித்தர் இளவரசர் தோளில் தைத்திருந்த அம்பை மெல்ல மெல்ல அசைக்காமல் எடுத்தார். சில மூலிகைகளைப் பூசி கட்டுபோட்டதால் வலி குறைந்தது.

 

அவரை உறங்கச் செய்தபின் சித்தர் வெளியில் வந்தார். உடனே ஆதியும் அனுவும் எழுந்து கைகூப்பி அவரை வணங்கி நின்றார்கள். ஆதிக்கு சித்தரை யாரென்றே தெரியாவிட்டாலும், அவர் முகத்தில் தோன்றிய ஒளி அவரை வணங்கச்செய்தது.

 

அவர் வெளியில் வரவும் அங்கே நந்தவனத்தில் பொழுது போகாமல் உலவிக்கொண்டிருந்த மித்ரன் வரவும் சரியாக இருந்தது. மித்ரன் இவர்களை வியப்பாகப் பார்த்து “நீங்க எங்க இங்க..?” என்றான் புருவம் உயர்த்தி.

 

ஆதி சித்தரை ஓரக்கண்ணால் பார்த்தவுடன் மித்ரனுக்கு என்ன நடந்ததென்று ஒன்றும் புரியவில்லை. இருந்தும் சூழல் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து அமைதி காத்தான்.

 

மிகவும் வயதான அந்த சித்தர் முகத்தின் சுருக்கங்கள் மின்ன இவர்களைப்பார்த்து புன்னகைத்து, “வாருங்கள் குழந்தைகளே.. இந்த எளியவனின் குடிலில் இந்நாட்டு இளவரசனை தக்க நேரத்தில் சேர்த்தீர்கள்… நீங்கள் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அவர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை…” என்று ஏதோ யோசித்துக்கொண்டே சொன்னார்.

 

ஆதி கண்ணில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் வந்துபோக, “அம்பு எங்கேயிருந்து வந்துச்சுன்னே தெரில அய்யா… சட்டுன்னு இளவரசர் துடிதுடிச்சு மயங்கிட்டார்… இப்போ அவருக்கு ஏதும் ஆபத்து இல்லையே..?” என்று மிரட்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

அனன்யா ஏதும் புரியாமல் விழிக்க…

 

சித்தர் “இது நடந்தே தீரவேண்டும் என்று விதிக்கப்பட்டது… ஆனால் காலம் உங்களால் இன்று மாற்றியெழுதப்படுகிறது..” என்று மேலே பார்த்து புன்னகைத்தார்.

 

அவர் சொன்னது இரண்டு வரிகள் என்றாலும் மனதில் நிறைய மறைந்துள்ளன என்பது அவர் சிந்தனையில் ஆழ்ந்தவாறே பேசுவத்திலிருந்து புரிந்தது.

 

“நீண்ட நாள் களைப்பில் இருக்கும் எதிர்கால மனிதர்களே, இந்நந்தவனத்தில் சற்று இளைப்பாருங்கள்…” என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து குடிலுக்குள் சென்றார் அவர்.

 

அவர் சொன்ன செய்திகளால், வியப்பில் தலை சுழன்றது. அவர் திரும்பி வந்ததும் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டுமென்று மூவருக்கும் தோன்றினாலும் தங்களுக்குள் பேச யாரும் முன்வரவில்லை. துரிதமாக நடக்கும் துயரங்களை ஏற்றுக்கொள்ள அமைதி தேவைப்பட்டது அவர்களுக்கு..

 

சிறிதுநேரம் சென்றதும் மித்ரன் தான் முதலில் அமைதியைக் கலைத்தான்….

 

“உங்கள நான் எதிர்பார்க்கவே இல்ல… காலையில போன ஆளுங்களை இன்னும் காணோம்ன்னு நானும் காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போய்ட்டேன். இந்த இடம் பார்க்க அழகா இருக்கேன்னு காலார அப்படியே நடந்து இங்க வந்து சேந்துட்டேன்… நீங்க எப்படி இங்க ? என்ன நடந்துச்சு ?” என்று கேட்டான்.

 

ஆதி அனைத்தையும் சொல்லி விளக்கிக்கொண்டிருக்க…

 

நீண்ட நேரம் சிந்தித்துக்கொண்டிருந்த அனன்யாவோ இதைக் கேட்டு இன்னும் குழம்பியது போல “ஆதி… இளவரசரை பாத்தோமா நாம… எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லையே…” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டு இரண்டு கைகளால் நெற்றியைத் தாங்கிப்பிடித்தபடி அங்கே அமர்ந்தாள்.

 

தலை பாரமாய் அழுத்த நெற்றியை பிடித்துக் கொண்டு அமர்ந்த அனன்யாவுக்கு அப்போதுதான் சித்தர் சொன்னதை மறந்து தன் கைகளை முகத்தில் தேய்த்தது நினைவுக்கு வந்தது.

 

எவ்வளவு யோசித்தும் அவளால் இடையில் நடந்தவற்றை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

 

அப்போது உள்ளிருந்து மூவருக்கும் குடிக்க நீர் எடுத்துக்கொண்டு வந்தார் சித்தர்.

 

“கடந்தகாலத்தை மாற்றியெழுத இயலாது என்பது உண்மையாயினும், நீங்கள் வரலாற்றில் சிலவற்றை அறிந்தோ அறியாமலோ மாற்றி விட்டீர்கள். ஆனால் நடந்தவையனைத்தும் நன்மைக்கே…. குழப்பம் ஏதுமின்றி சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு…

 

மரக்கிளையில் அமர்ந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பச்சைக்கிளியொன்றை வாஞ்சையுடன் அவர் கையில் ஏந்தினார்.

 

அதன் காலில் சிறிய ஓலை நறுக்கினை எடுத்து கட்டி, அதை பறக்கவிட்டார். அக்கிளி புத்த விகாரம் இருந்த திசையை நோக்கிப்பறந்தது.

 

 

 

உன்னவன் உயிர் நிலைத்து விட்டான்…

 

காலத்தில் கரம்பிடிக்க காற்றாய் வந்திடுவான்…

 

மனம் அரற்றாது அறப்பணி செய்…

 

மாசடைந்தாலும் மதியொளி மங்கிடாது..

 

இந்த ஓலையை மணிமேகலை படித்து முடித்த அந்தக் கணமே புத்த விகாரத்தின் வாசலில் போர்க்களம் போல் பேரிரைச்சல் கேட்டது.

 

எண்ணற்ற மக்கள் கூடியிருப்பது போன்றதொரு உணர்வு அவளுக்குத் தோன்ற, வெளியில் சென்று பார்த்தாள்.

 

ஈட்டிகளும் வேல்களும் கையில் ஏந்திய படைவீரர்கள் புத்த விகாரத்தை சூழ்ந்திருந்தனர்.

 

அதில் தலைவன்போல் தோன்றிய ஒருவன் உள்ளே நுழைந்து, மணிமேகலை கையைப் பிணைத்து ஊர் தெருக்கள்வழியே அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். மக்கள் அனைவரும் மணிமேகலையை திட்டியும் சபித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விழாக்கோலம் பூண்டிருந்த அந்த ஊர் களையிழந்து எங்கும் ஓலமாய்க் கேட்டது.

 

****

 

மணிமேகலைக்கு ஓலையைப் படித்த உடனேயே மனதில் சுறுக்கென்ற ஒரு அச்சம் தோன்றியது. ஆனாலும் உன்னவன் உயிர் நிலைத்துவிட்டான் எனும் அவ்வரிகள் அவளை மனம் கலங்காமல் காப்பாற்றின.

 

அவள் அரசவைக்கு இழுத்துவரப்பட்டாள். அவை நிறைந்து காணப்பட்டது. அனைவர் முகங்களிலும் சோகமும் கோபமும் மாறி மாறி கொப்பளித்துக்கொண்டிருந்தது. மணிமேகலைக்கு எதுவும் தெரியாது என்று அவையில் இருந்தவர்களுக்குத் தெரியாது.

 

அவள் மீது சாட்டப்பட்ட குற்றம், “அவள் காந்தர்வ பெண்போல் மாறுவேடம் பூண்டு வந்தபோது இளவரசர் அவளைப் பின் தொடர்ந்ததால் காந்தர்வ பெண்ணின் கணவன் இளவரசரைக் கொன்றுவிட்டான். இவள் அதனை தடுக்கவோ நிறுத்தவோ இல்லை. இளவரசரின் உடலையும் வெள்ளம் அடித்துச்சென்றுவிட்டது. அவர் மரணிக்க இவளே காரணம்.”

 

அரசியாரே சபையில் வழக்கு தொடுத்திருந்தார். படையெடுத்து வடநாடு சென்றிருந்த மன்னர், தாய்நாடு திரும்பிய அன்றே தன் மகனை இழந்த சோகத்தில் இருந்தாலும்… “விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து சென்று துன்புறுத்திய அவன் செயல் தவறு…எனவே இத்தண்டனை அவனுக்கு உரித்தானது தான்” என்று அரசர் தீர்ப்பளித்தார்.

 

இளவரசர் தவறு செய்தார் என்று சொன்னதைக் கேட்டவுடன் மணிமேகலை மனம் கண்ணாடிபோல் நொறுங்கியது. எனினும் தனக்கே முழுமையாகத் தெரியாத உண்மையை இங்கே தெளிவுபடுத்தத் தேவையில்லை. தன்னை யாரும் நம்பவும் போவதில்லை என்று நினைத்ததால் அமைதிகாத்தாள்.

 

அரசியும் நாட்டு மக்களும் பொங்கி எழுந்து கூச்சல் குழப்பமானது அந்த இடம்.

 

அரசர் கண்ணால் தந்த குறிப்பின் பெயரில் அங்கே பெரும் சத்தத்துடன் எக்காளம் முழங்கியது. அதுவொரு மதயானையின் பிளிறல் ஒலியை ஒத்திருந்தது.

 

கூச்சல் அதனால் அடங்கியது. ஆயிரம் தலைகள் கூடியிருந்த அந்த அவை ஒலியின்றி வெறுமையடைந்தது.

 

அரசர் தொண்டையை செருமிக்கொண்டு முழக்கம்போல் “மாறுவேடம் பூண்டு குழப்பம் விளைவித்ததால் மணிமேகலை சிறையில் அடைக்கப்படுகிறாள்” என்று ஆணையிட்டார். இது மக்களின் மனவருத்தத்தை சற்று கட்டுப்படுத்துவதற்காக அவர் செய்த செயலாகும்.

 

ஒருவேளை மணிமேகலை சிறையில் இல்லாவிடில் அவளின் உயிருக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசரின் உள்மனமும் சொன்னது.

 

மணிமேகலை சிறையில் அடைக்கப்பட்டாலும் மனம் தளரவில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உள்ளுணர்வு உரைத்தது.

 

அறம் செய்து அவள் மனம் கொண்ட இளவரசனின் கரம்பிடிக்கக் காத்திருந்தாள்.

 

【 காந்தர்வர் என்பது காந்தார நாட்டை சேர்ந்த மக்கள். இம்மக்கள் இசை மற்றும் கலைகளில் வல்லவரவர்களாக இருப்பர்.சகுனி, காந்தாரின்னு வர மகாபாரத கதாபாத்திரங்களின் நாடு. Gandhara school of artஎன்று வரலாற்று பாடத்தில் படித்திருப்போம். தற்போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பெஷாவர் (அக்காலத்தில் புருஷபுரம்) அவர்கள் தலைநகர்.

 

பழைய படங்களில் காந்தர்வ கன்னிகள் அழகானவர்கள் ன்னு லாம் வரும்.. இதை அது கூட தொடர்புபடுத்தி பாத்தோம்னா புரியும். ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன்ன தமிழ் மக்களுக்குள் இனக்கலப்பு பெருசா இல்லை. அரசகுலம் தவிர தென் இந்தியாவுக்கு சொந்தமான கருப்பு நிறத்தில் தான் பெரும்பாலான மக்கள் இருந்திருக்காங்க.

 

அதனால் கொஞ்சம் கோதுமை நிறத்தில் இருந்ததால் அனுவையும் ஆதியையும், அவர்கள் காந்தர்வ நாட்டினர் என்று எண்ணிக்கொண்டனர் 】

 

◆◆◆

 

 

 

கிளியை புத்த விகாரத்தை நோக்கிப் பறக்க விட்ட பின், எதுவும் பேசாமல் சித்தர் தவம் செய்வது போல் கண்களை மூடி அமர்ந்து கொண்டார்.

 

பின்னர் சற்று நேரம் கழித்து கண்களைத் திறந்த அவர்…

 

“உங்களுக்கு நான் சில உண்மைகளை உரைக்க வேண்டியுள்ளது. அதனை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் மனதைப் பொறுத்தது” என்றார்.

 

உடனே ஆதி “சொல்லுங்க அய்யா… நீங்க எது சொன்னாலும் அது சரியாக இருக்கும்ன்னு நாங்க நம்புறோம்…” பணிவுடன் சொன்னான்.

 

“நீங்கள் இருவரும் முன்னாளில் புத்த தர்மத்தை பின்பற்றிய குலங்களில் இருந்து வந்தவர்கள்.

 

பூம்புகார் நகரம் ஆழிப்பேரலையில் மூழ்கியபோது வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர் உங்கள் மூதாதையர்.

 

மத்திய காலங்களில் தமிழகத்தின் பல இடங்களில் சமணர்களையும் பௌத்தர்களையும் யானை காலில் இட்டு இடறவைத்ததும் கழுவிலேற்றியதும் என பல கொடுமைகள் நடந்தன. அதனால் காலப்போக்கில் சமூக நிர்ப்பந்தத்தால் சைவர்களானார்கள்.” என்று சித்தர் சொல்லிக்கொண்டிருக்கும்போது…

 

“ ஐயா குறுக்க பேசுறதுக்கு மன்னிக்கணும்… இன்னும் தமிழ்நாட்டில் புத்தமதத்தை சேர்ந்தவங்க அதை கடைபிடிச்சுட்டு தான இருக்காங்க…. எப்படி இவங்க மாறுனவங்கன்னு நீங்க சொல்றீங்க…? நம்ம அண்டை நாடுகள்ல கூட பாருங்க… பௌத்தர்கள் தானே மதத்தை தீவிரமா பிடிச்சு வச்சுப்பாங்க…… இந்துக்கள் தங்கள் மதத்து மேல அவ்வளவு பிடிப்பு வச்சில்லையே..?” என்று மித்ரன் சித்தரின் பேச்சை இடைநிறுத்தினான்.

 

அதற்கு அவனைப்பார்த்து புன்னகைத்த சித்தர், நேரடியாக பதிலளிக்காமல்…

 

“சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு படையல் போடுவதாய் உங்கள் இருவர் வீடுகளிலும் நடக்கும்… உண்மைதானே…?” என்று அனு மற்றும் ஆதியிடம் கேட்டார்.

 

இருவருக்கும் வியப்பு…. இதுவரை ஒருவருக்கொருவர் இந்த செய்திகளை பகிர்ந்துகொண்டதில்லை. இவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இந்த வழக்கத்தை கடைபிடிப்பதில்லை. வெகுசிலர் மட்டுமே இதைச் செய்து வருகின்றனர். ஆதியும் அனுவும் ஆம் என்பது போல் ஒருசேர தலையசைத்தார்கள்.

 

“சித்திரை புத்திரன் நோன்பு அல்லது நயினார் நோன்பு என்பவையெல்லாம் சித்திரை பௌர்ணமி அன்று பிறந்த புத்தனுக்கு செய்யும் நோன்பு. நயினார் நோன்பு என்பது நழுவினார் நோன்பு என்பதன் திரிபு. பௌத்த மதத்திலிருந்து நழுவியவர்கள் கடைபிடிப்பது. உங்களுக்கு தெரிந்தபடி சொன்னால்… புத்த பூர்ணிமாவைதான் நீங்கள் அவ்வாறு வேறொரு உருவில் கொண்டாடுகிறீர்கள்.

 

இங்கே முற்பிறவி தொடர்பு என்று ஏதும் இல்லை நடப்பது அனைத்தும் அறிவியல். அறிவின் மூலம் நிகழ்ந்தவை… ரசவாதம் மூலம் நிகழ்ந்தவை…

 

மதியின் விளையாட்டே அன்றி விதியின் விளையாட்டு இங்கே ஏதுமில்லை…

 

ஆதி இளவரசர் குலத்தின் கிளையில் தோன்றியவன். கோவலனின் வணிகர் குலத்தில் தோன்றியவள் நீ…” அனு முகத்திற்கு நேராக விரல் நீட்டினார் சித்தர்.

 

“அதுக்கு வாய்ப்பே இல்ல அய்யா… நாங்க மதுரைக்காரங்க…. என்னை சோழ நாட்டின் வாரிசுன்னு சொன்னா நம்ப கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு…”ஆதி மரியாதை குறையாமல், அதே நேரம் தன் மறுப்பையும் உறுதியாக வெளிக்காட்டும்படி மறுமொழி கூறினான்.

 

அனன்யாவுக்கு அப்போது தான் அடி மனதில் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவளின் குடும்பம் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நாகைப்பட்டினத்திலிருந்து இங்கே வந்து குடியேறியதாக அவள் பாட்டி அடிக்கடி சொல்வார்.

 

சித்தர் தொடர்ந்து “உங்கள் காலத்து மனிதர்கள், நீங்கள்தான் அறிவியலில் சிறந்து விளங்குபவர்கள் எனும் கர்வம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வரலாறு விசித்திரமானது. ஒவ்வொரு ஆயிரம் ஆண்டும் உலகம் தலைகீழாக மாறுகிறது. உலகின் நடைமுறைகள், கடைபிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் காற்றில் பறந்து காணாமல் போகின்றன… இங்கு இடம், பொருள், செல்வம் என எதுவுமே நிரந்தரமல்ல…” என்றார் அந்த முக்காலமும் உணர்ந்த முதியவர்.

 

“இன்று செழித்து நிமிர்ந்திருக்கும் இந்நிலம் பின்னாளில் கடலுக்கடியில் செல்லுமென்று சொன்னால் இங்குள்ள எவரும் ஏற்க மாட்டார்… ஆனால் அதுவே உண்மை. வெறும் பேச்சு உங்களுக்கு குழப்பத்தை கொடுக்கும்… வாருங்கள்…” என்று சொல்லி கண்கள் மூடி வானத்தை நோக்கி வணக்கம் சொன்னார்.

 

◆◆◆

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!