Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 17

பேட்ரிக் எனும் அந்த தளபதி, வளமிகுந்த வஞ்சிமாநகர் சென்றான். நாட்டின் வளம் அதன் சான்றோர்களிடத்து மக்கள் கொண்ட பற்றால் நிலைத்திருக்கும் என்னும் தமிழர் மரபினை உணர்ந்தவன், அவ்வூரில் புகழ்பெற்ற ஆசீவகத் துறவியான யோகீசர் என்றழைக்கப்படும் கோரக்கர் தம் குடிலை அடைந்தான். தன்னை உலக ஞானமும் மன அமைதியும் பெற இந்தியா வந்த துறவி என்றுகூறி அவரிடம் சீடனாய்ச் சேர்ந்தான்.

 

பேட்ரிக் தன் பொறுமையான அணுகுமுறை, கனிவான பேச்சு மற்றும் திறமையால் குறுகிய காலத்திலேயே சித்தரின் நன்மதிப்பைப் பெற்று அவரின் முதன்மைச் சீடனானான்.

 



Advertisement

ஆனால் அவனிடம் ஏதோ மர்மம் ஒளிந்திருப்பதாய் சித்தர் மனதில் உறுத்தல் இருந்துவந்தது. அது நாளுக்குநாள் வலுப்படவும் செய்தது. ஆனால் அது இன்னதென்று அறிந்துகொள்ள இயலவில்லை.

 

யோகீசர் தன் ஆற்றல்கள் யாவையும் தவவலிமையின் மூலம் இரண்டு ரத்தினங்களில் தேக்கிவைத்து பூசித்து, அவற்றைக்கொண்டு பல நன்மைகளும் அற்புதங்களும் அவர் நிகழ்த்திவந்தார்.

Advertisement

 

Advertisement

ஒருமுறை மூலிகைகள் சேகரிக்க வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றார் சித்தர்.

 

இதுபோன்ற வாய்ப்பையே எதிர்நோக்கியிருந்த சீடன் அக்கற்களை யோகீசர் அறியாமல் களவாடிக்கொண்டு தன் நாடான ரோமாபுரி செல்ல மரக்கலமேறி புறப்பட்டான். அவன் தன்னுடைய தலைவன் கட்டளையின் பேரிலே தான் இந்தியாவில் தங்கி இந்திரநீலத்தைக் களவாடினான்.

Advertisement

 

ஆம் அது இந்திரநீலம் தான்…

 

விதியை மாற்ற யாரால் இயலும் ?

 

◆◆◆

 

அமைதியான நடுக்கடலில் சென்றுகொண்டிருத்தது அந்த பெருமரக்கலம். எங்கிருந்தோ சுழன்றுவந்த பெரும்புயல் மேற்குநோக்கிச் செல்லவேண்டிய அக்கப்பலை பாரத நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பூம்புகார் பட்டினத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. மரக்கலம் தரைதட்டி நின்றதால் வர்த்தகர்களுடன் வந்த வஞ்சக சீடன் கரையிரங்கி பூம்புகார் நுழைந்தான்.

 

கடற்பயணமும் புயலும் ஏற்படுத்திய களைப்பில் அவன் கடற்கரையில் இருந்த குடிலின் அருகில் சென்று அங்குள்ள திண்ணையில் அமர்ந்தான்.

 

“அய்யா… குடிக்க நீர் கிடைக்குமா..” வெளியில் வராத குரலை முயன்று பெரிதாக்கி அவன் கேட்டான். அப்போது நீர்க்குவளையுடன் வந்த முதியவரைக் கண்டு அவன் கைகால்கள் நடுங்கிப் போயின.

 

தளர்ந்திருந்தாலும் ஒளிபொருந்திய அவர் முகம் அவனைப்பார்த்து புன்னகைத்து. அவன் அச்சமும் குற்றவுணர்வும் மேலோங்க குரு யோகீசரை பாதம் தொட்டு வணங்கினான். அவர் பாதத்தை அவன் கண்ணீர் தொட்டது.

 

தன்னுடைய பொக்கிஷம் காணாமல் போனதும் வஞ்சிமாநகரை விட்டு வெகுதூரம் சென்று இறுதி நாட்களைக் கழிக்க எண்ணிய சித்தர் வந்து சேர்ந்தது பூம்புகாரில்…

 

இயற்கை, சித்தரின் ஆற்றலை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது.

 

தான் செய்த பெருந்தவறை உணர்ந்து மனம் திருந்திய சீடன் இந்திரநீலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தாய் நாடு சேர்ந்தான்.

 

அவனிடம் இதைக்கேட்டறிந்த அவன் தலைவன் “அடேய் முட்டாள்.. உன்னை அங்கே எவ்வாறேனும் அந்த ரத்தினத்தை கவர்ந்து வரச்சொல்லி தானே தங்கவைத்தேன்… என் திட்டத்தை பாழாக்கிய இவனை அரங்கில் சிங்கத்துடன் மோத வைத்து பலியிடுங்கள்..” என்று சொல்லி தன் அறைக்கதவைப் படாரென்று சாற்றிவிட்டான்.

 

அவன் ரோமிலிருந்து போம்பெய் எனும் நகர்சென்று சிறுபடையோடு இந்தியா புறப்படும் நேரத்தில் வெசூவியஸ் எனும் எரிமலை வெடித்து சிதறி நகரமே நெருப்புக்குழம்புக்கு இரையானது.

 

தன் மரணத்தருவாயிலும் அவன் “இந்திரநீலத்தை ஆயிரம் பிறவி எடுத்தாவது அடைந்திடுவேன்…இண்டிகா நான் உன்னைத்தேடி வருவேன்…” என்று கத்த எரிமலைகுழம்பு கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை விழுங்கி சாம்பலாக்கியது.

 

அதை எல்லாம் மனதால் உணர்ந்த சித்தர், காலங்காலமாக தேடப்படும் பொருளாய் இந்திரநீலம் மாறுமென்று சொன்னதால் இன்றும் அதைக் காக்க நாங்கள் உயிர் துறக்கவும் சித்தமாய் இருக்கிறோம்.

 

அந்த உண்மை தெரிந்த பலர் இறந்தாலும், செவிவழிக் கதைகள் மூலம் இந்திரநீலம் பற்றி அறிந்த யவனர்கள் அதை இன்றும் தேடி வருகின்றனர்.

 

◆◆◆

 

இப்போதாவது நீர் செய்த தவறின் ஆழம் புரிகிறதா…?

 

கதையை முடித்துவிட்டு ஆதியைக் கேட்டார் இளவரசர் அங்கிருந்த மேசையில் ஓங்கியறைந்தபடி.

 

ஆதிக்கு திடுக்கென்று தூக்கிப்போட்டது.

 

நான் எதையும் தெரிஞ்சு செய்யல… பின்ன எதுக்கு இவ்ளோ முரட்டுத்தனமா பன்றார் என கொஞ்சம் பல் கடிக்க…. உள்ளுக்குள் மனசாட்சி விழித்தெழுந்து, இது நம்ம காலம் போல மக்களாட்சி இல்ல. இங்க இளவரசர் பெரிய ஆளு. கடுப்பாகாத ஆதி… வெட்டிடுவாங்க போல… என்று உபதேசம் செய்தது.

 

ஏதோ எண்ணமிட்டபடி “மணிமேகலைக்கு கொடுத்த வாக்கால் உம்மை சிறையில் அடைக்காமல் விடுகிறேன். ஆனால் மறுமுறை இதுபோல் நேராமலிருக்கவேண்டும்” சற்றே கோபம் தணிந்து பேசினார் இளவரசர்.

 

அப்போது தான் ஆதியின் மனம் சீரானது. மரணமோ ஆயுள் தண்டனையோ என்று கூட நினைக்கத் தோன்றியது முதலில் அழைத்துவரப்பட்டபோது.

 

“மனசறிஞ்சு இனி இந்த ரகசியத்த வெளில சொல்ல மாட்டேன். நான் செஞ்ச தப்புக்கு மன்னிச்சுக்கங்க…” ஆதி சொன்னதும் அவனை விடுவித்து தன் காவலாளிகள் உதவியுடன் புத்த விகாரத்திற்கு அனுப்பினார்.

 

“எங்க போன ஆதி இவ்ளோ நேரம்…” அனன்யாவுடன் காத்திருந்த மித்ரன் படியிலிருந்து ஓடிவந்து ஆதியின் கைபிடித்து அவனை இழுத்துவரும்போது கேட்டான்.

 

அனன்யா பேசவேயில்லை.

 

அவள் வெகுநேரம் ஆதி வருவானென்று வாசலைப்பார்த்து பார்த்து, அவன் வராததால் சற்று அச்சம் கொண்டிருந்தாள். ஆதி அவன் கழுத்தில் அம்பு பாய்வதுபோல் கண்டதாக சொன்ன கனவுகள் அவளுக்கு காட்சிகளாய் கண்முன் நிழலாடின.

 

அவன் வந்ததும் அவள் பேசுவதற்கு முன்னே இடது கண்ணிலிருந்து கன்னத்தில் வழிந்த ஒரு துளியைத் துடைத்துக்கொண்டே…

 

“உனக்கு என் பயம் ஏன் புரிய மாட்டேங்குது ஆதி…” என்று சொல்லி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

 

அவள் தாடையை பிடித்து மெல்லமாய் அவன் பக்கம் திருப்பி “அனு… புரியாம எல்லாம் இல்ல டா… ஒரு சின்ன வேலை… அவ்ளோதான்…” என்றான் அனுவின் விரல் பற்றிக்கொண்ட ஆதர்ஷ்.

 

“விளையாட்டா நீ இருக்கமாட்டன்னு எனக்கு தெரியும்… இருந்தாலும் சூழ்நிலை சரியில்ல… தனியா போயிருக்கதால சின்ன பயம்..” தன் கண்ணீரை விழுங்கிக்கொண்டு புன்னகைக்க முயன்றாள் அனு.

 

“சரி வாங்க.. உள்ள போகலாம்.. ரொம்ப இருட்டிடுச்சு..” மித்ரன் இருவரையும் அழைக்க, இருவரும் பிரிய மனமில்லாமல் உள்ளே சென்றனர்.

 

ஆதிக்கு அனுவிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதுபோலவே அவளும் இவனிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய செய்திகள் சிலவற்றை மனதில் வைத்திருந்தாள்.

 

இவர்கள் இருவரும் ஒரு நபரைப்பற்றியே மற்றவரிடம் சொல்ல எண்ணியிருந்தனர். ஆனால் உணர்ச்சிகள் வெவ்வேறானவை….

 

அந்த நபர்…

 

இளவரசர் உதயகுமாரன்.

 

உள்ளே மணிமேகலையும் அவரைப்பற்றி எண்ணியே தேகம் பூரித்து காணப்பட்டாள். உடலெல்லாம் பூக்கள் பூப்பது போன்றதோறு உணர்வு அன்று மாலைமுதலே…

 

அனன்யா அறையினுள்ளே நுழைந்ததும் மணிமேகலை காதல் மயக்கத்தில் இருப்பதைக் கண்டுகொண்டாள். படுக்கை விரிக்கும்போது, நாம எப்படி இருந்தோம் முதல் முறையாக பேசும்போது என்று நினைக்க அவள் போட்ட சண்டை நினைவுக்கு வந்தது. அந்த தருணங்கள் தந்த இனிமை கொஞ்சநேரம் தூக்கம் கெடுத்தது.

 

பின் மிகுந்த களைப்பும் அசதியும் சேர்ந்து புன்னகைத்துக்கொண்டே படுத்திருந்தவளை உறங்கவைத்தன.

 

◆◆◆

 

 

அனன்யா பதறுவாள் என்பதால் அவளிடம் நடந்ததை மறைத்த ஆதி, மித்ரனிடம் அனைத்தையும் கூறினான்.

 

மித்ரனுக்கு இதைகேட்டதும் தன்னால் ஏதோ தவறு நடந்துவிட்டது போன்ற குழப்பமான முடிச்சு மனத்தில் தோன்றியது. பலமுறை வெவ்வேறு கோணத்தில் சிந்தித்தாலும் அந்த முடிச்சு அவிழ்ந்தபாடில்லை.

 

சுத்தமாக கண்கள் மூட மறுத்தன மித்ரனுக்கும் ஆதிக்கும். “ இனி வரப்போற காலங்கள் நமக்கு ரொம்ப பிரச்சனை இருக்கும்ன்னு எனக்கு தோணுது டா… அதுமட்டுமில்லாம இதிலிருந்து தப்புவதற்கு வழி என்னன்னு சுத்தமா எனக்கு பிடிபடல.. நீ என்ன நினைக்கிற..? அனன்யா கிட்ட சொல்லிட்டியா…?” கடற்கரை நோக்கி நடந்துகொண்டிருக்கையில் மித்ரன் ஆதியிடம் கேட்டான்.

 

சற்று தூரத்தில் தெரிந்தது பட்டினப்பாக்கம். அதனை ஆள் நடமாட்டம் இல்லாத இடமென்று ஒருபோதும் சொல்ல முடியாது. இரவு பகல் பாராமல் மக்கள் நகர்ந்துகொண்டே இருந்தனர். அவ்விடத்தில் ஒரு மாளிகை அறையில்தான் ஆதியை இளவரசர் சந்தித்தது.

 

“அனன்யா கிட்ட நான் வேணும்னு மறைக்கலடா….அவளுக்கு நான் எச்சரிக்கப்பட்டதெல்லாம் தெரிஞ்சா இங்க இருக்கவே விரும்பமாட்டா… இந்த பயணம் அவளை பொறுத்த வரைக்கும் அழகானதா.., இனிமையானதாக இருக்கட்டும்… அத நாம மாத்த வேண்டாம்..” என்று சொன்ன ஆதி ஒரு சின்ன புன்னகையோடு தொடர்ந்து நடந்தான்.

 

மணிமேகலை வசிக்குமிடம் நகர நெரிசல் இல்லாத அமைதியான இடம். காற்று மிகவும் ரம்மியமாய் வீசியது. தேய்பிறை நிலவு கடல் மேல் ஓடம்போல் மிதந்துகொண்டிருந்தது.

 

இவர்கள் கிழக்குநோக்கி நடந்து கடற்கரை வந்துசேர்ந்தனர். “ஆதி அங்க பாரேன்… நாம முதல்ல பூம்புகார் வந்தப்போ இந்த கதவு வழியா தான் உள்ளே வந்தோம்…” சற்று தொலைவில் இருந்த செங்கல் மதிலின் நடுவே இருந்த பெரிய மரக் கதவை சுட்டிக்காட்டி மித்ரன் கேட்டான்.

 

“ அட… ஆமான்டா… இந்த ஊர்ல நமக்கு திக்கு திசையே புரியமாட்டேங்குது. அதான் கோட்டை மதில்ன்னு நினைக்கிறேன். அங்க பாரேன் ஏதோ ஆளுங்க கூட்டமா உள்ள வர மாதிரி தெரியுது… அதுவும் நடுல இருக்கது யாரோ பெரிய ஆளு மாதிரி தெரியுது…” என்று ஆதி சொல்ல மித்ரன் அந்த திசையை நோக்கினான்.

 

கோட்டை மதில் பத்தடி உயரம் இருக்கும் பட்டையான சுட்ட செங்கற்களால் அது கட்டப்பட்டிருந்தது கிட்டத்தட்ட ஒரு அடி அகலம் கொண்ட செங்கற்கள். இக்கால தட்டு ஓடு போல் மெலிதாகவும், வடிவம் மட்டும் சதுரம் இல்லாமல் செவ்வகமாக இருந்தன.

 

நடுநாயகமாக அரசன் போல வரவேற்கப்பட்ட ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் வந்தவர்கள் நடந்து வர அவர் மட்டும் குதிரையில் வந்தார்.

 

அவர்கள் மெல்ல மெல்ல கோட்டைக் கதவிலிருந்து அரச வீதி வழியாக பட்டினப்பாக்கத்திலிருக்கும் அரண்மனைக்குச் சென்றனர்.

 

அந்த சலசலப்பு நின்றபிறகு அங்கே நிலவிய அமைதி மிகவும் அச்சுறுத்துவதாய் இருந்தது. வேறு ஓசையின்றி நீண்ட தூரம் தள்ளி கடலலைகள் மெலிதாக ஹோவென்ற சத்தத்துடன் தளும்பிக்கொண்டிருந்தன.

 

அந்த நிசப்தத்தைக் குலைக்கும் வண்ணம் அசாதாரணமான அலறல் ஒன்று கேட்டது. அது புத்த விகாரம் இருந்த திக்கிலிருந்து வந்ததும் பதட்டம் மேலோங்க இருவரும் அவ்விடம் சேர விரைந்து மூச்சிரைக்க ஓடினார்கள்.

 

◆◆◆

 

தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து எழுந்து அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

 

சத்தம் வந்தது எங்கே என்று நிதானிப்பதற்குள் மேலும் அதிக சத்தத்துடன் அலறல் கேட்டது…

 

அந்த அலறல் ஆதியும் மித்ரனும் தங்கும் அறையிலிருந்து வந்தது….

 

என்ன செய்வதென்று புரியாமல் மற்றவர்கள் நின்றிருக்க…அங்கே பேட்ரீசியோ தன்னை நெருப்பு சுடுவதுபோல் உணர்வதாகச் சொல்லி கத்திக்கொண்டிருந்தார்..

 

இந்த கூச்சல் அனுவின் காதுகளை எட்டவும்.., தூக்கம் அழுத்த, தலைக்குள் பாரமாக உணர்ந்தவள் அந்த உணர்வை தள்ளிவைத்துவிட்டு எழுந்தாள். இவர் வந்திருக்கவே வேண்டாம்… தேவையில்லாமல் ஒரு வினையை இழுத்துக்கொண்டோம் என்று தனக்குள்ளே நொந்துகொண்டாள்.

 

“எனக்கு ஏதாவது வேண்டும்… கையில் பிடித்துக்கொள்ள..” பெருங்குரலில் பேட்ரீசியோ அலறினார்.

 

அனு பதறியடித்து ஓடிவந்து மூச்சு வாங்கி நிமிர்ந்தபோது ஆதி இல்லாதது கண்டு இதயமே நின்றுவிடும் போலிருந்தது.

 

◆◆◆

 

அவர் அருகில் நெருங்கவே அனைவரும் நடுங்கி நின்றிருந்தனர். அனன்யா மூச்சை நன்கு உள்வாங்கி மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் “என்னாச்சு..” என்று கேட்டபடி…

 

சட்டென்று அவர் உடலின் நடுக்கம் குறைந்தது.

 

“என்னை நெருப்பு உள்ளே இழுப்பது மாதிரி ஒரு கனவு… அது கனவு தான்னு சொல்ல முடியல…ஏதோ நேரா நடக்குறது மாதிரியே இருந்துச்சு… உன்னைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தேன்…” நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு சொன்னார் பேட்ரீசியோ.

 

“எங்க போனாங்க ஆதியும் மித்ரனும்..?” அனு அச்சத்துடன் கேட்க, அவர் அப்போதுதான் அதை உணர்ந்ததுபோல சுற்றும் முற்றும் பார்த்து தனக்கு தெரியவில்லை என்று தலையாட்டினார்.

 

அனன்யாவைத் தவிர அனைவரும் அவ்விடம்விட்டு கலைந்து சென்றனர். யவனர்கள் பூம்புகாருக்குப் புதிதல்ல… ஆனால் தொடக்கத்திலிருந்தே இவரின் செய்கைகள் மனத்தைக் குழப்புகின்ற வகையிலேயே இருக்கின்றன என்று தோன்றியது. எதுவாயினும் சமாளிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வியப்போ அச்சமோ ஏதுமற்ற தெளிந்த மனநிலையில் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மணிமேகலையும் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

பேட்ரீசியோ பிரமை பிடித்தவர்போல் அமர்ந்திருந்தார். சட்டைப் பையில் இருந்த தங்கக்காசை கையில் எடுத்தார்.

 

வெளியில் காலடி சத்தம் கேட்டது… அனைவரும் உறங்கத் தொடங்கியிருக்க அவர்கள் இருந்த அறையில் தூங்காவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. பேட்ரீசியோ அந்த நாணயத்தை கையில் வைத்து ஆராய்வதுபோல் உற்று நோக்கிக்கொண்டிருந்தார். அனன்யா அவர் செய்வதைப்பார்த்தபடி சற்று தூரம் தள்ளி சுவரில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அந்த குளிரிலும் அவளுக்கு வியர்வை துளிர்த்தது.

 

வந்தது ஆதியும் மித்ரனும் தான். இவர்கள் ஓடி வருவதற்குள் அங்கிருந்த பதட்டம் ஒருவாறு தணிந்திருந்தது.

 

அவர்களால் அங்கே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.

 

அவர்களைப் பார்த்ததும் பேட்ரிசியோ.. “ எங்க போயிட்டீங்க இவ்வளவு இருட்டினதுக்கப்புறம்… நீங்க இல்லாம அனன்யா ரொம்ப பயந்துட்டாங்க…. உள்ள வாங்க நிறைய சொல்ல வேண்டியிருக்கு” என்றார் அதுவரை நடந்ததை முகத்தில் துளியும் காட்டிக்கொள்ளாமல்.

 

அனன்யாவால் பேசவே முடியவில்லை… படபடப்பு ஒருபுறம் இருக்க, எப்படி இதுவரை வேறு மாதிரி இருந்தவர் தற்போது மிகவும் சகஜமாகப் பேசுகிறார் என்று கண்களை சுருக்கி சந்தேகத்தோடு அவரைப் பார்த்தாள் .

 

“அந்த கடைத்தெருவுக்குப் போனோம் இல்லையா… நான் கூட ஒரு ஆளுகிட்ட இருந்து தங்கக்காசு வாங்கினேன் ஞாபகம் இருக்கா…? சின்ன வயசுல இருந்து விலை உயர்ந்த கற்கள் சேமிக்கிறது தான் என்னோட பொழுதுபோக்கு. இங்கே இவ்வளோ ரத்தினங்களை நேரா பார்த்ததும் என் கால் தன்னை அறியாமல் அந்த இடத்துக்கு கூட்டிட்டு போயிடுச்சு….” என்றார் பேட்ரீசியோ.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!