Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 29

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 29 


“நான் வரேன்.” என மகளைப் பார்த்துக் கொண்டே சொன்ன அன்பரசு, உடனே அங்கிருந்து கிளம்ப, நந்தா சென்று கதவை சாற்றிவிட்டு வந்தான். 


கயல் எதுவும் பேசாமல் சமையல் அறைக்குச் செல்ல, அவனும் அவள் பின்னே உள்ளே சென்றான். அவள் சப்பாத்தி சுட, அவன் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். 



Advertisement


கயல் மனதிற்குள் ஒரு போராட்டமே நடக்க... அது அப்படியே அவள் முகத்தில்  தெரிந்தது. அவளே கேட்கட்டும் என நந்தா அமைதியாக இருந்தான். 


ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் பொறுக்க முடியவில்லை, “இப்ப என்ன அவர் மிரட்டிட்டு போறாரா?” எனக் கோபமாகக் கேட்டாள். 


நந்தா பதில் சொல்லாமல், கேலியாகச் சிரித்து விட்டு தோளை குலுக்கினான். கயலுக்கு இன்னும் கோபம் அதிகமாகியது. 

Advertisement


“உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? என்னை நிம்மதியாவே இருக்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க இல்ல.” 

Advertisement


“இப்ப நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிற?” 


“ஓ… நான் டென்ஷன் ஆகிறதுதான் தப்பா? அப்ப நான் என்ன பண்ணனும்? அவர் உங்களை என்ன பண்ணாலும் பார்த்திட்டு இருக்கனுமா?” 


இதைச் சொல்லும் போதே கயலின் கண்கள் கண்ணீரை சிந்த, அடுப்பை அனைத்து விட்டு அவளைத் தன் பக்கம் திருப்பிய நந்தா, “அவர் எதோ கோபத்தில் பேசுறார். கண்டிப்பா என்னை எதுவும் பண்ண மாட்டார்.” என்றான்.

Advertisement


“உங்களுக்கு எப்படித் தெரியும்.” 


“அப்படி எதாவது செய்றதா இருந்தா சொல்லிட்டு இருக்க மாட்டார். எதுவும் செய்ய முடியாத கோபத்தில்தான் வந்து கத்திட்டு போறார்.” 


“நிஜமா எதுவும் பண்ண மாட்டார் இல்ல.” எனக் கயல் அவனை தவிப்பாக பார்க்க, அவள் கண்களைத் துடைத்து விட்டவன், “இந்தத் தடவை அவர் கோபப்படுவதில் தப்பு இல்லை.” என்றான். 


கயல் புரியாமல் பார்க்க, “உனக்கு நான் விளக்கமா சொல்றேன். முதல்ல சாப்பிடுவோம். பசிக்குது.” என்றதும், கயல் அவனுக்குச் சப்பாத்தி எடுத்து வைத்து விட்டு வந்து, மீதம் இருந்த மாவையும் சுட்டு முடித்தாள். 


“நீயும் சாப்பிடு.” 


“எனக்குப் பசிக்கலை.” 


“ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு. இல்லைனா நான் சொல்ல மாட்டேன்.” என்றவன் சாப்பிட, கயலும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டாள். 

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டுப் படுக்கை அறைக்குள் சென்றனர். நந்தா கட்டிலில் தலையணை வைத்து அதில் சாய்ந்துகொள்ள, கயல் அவன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தாள். 


நந்தா அன்று காலையில் இருந்து நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான். 


அவன் காலையில் கமிஷனர் அலுவலகம் சென்றுவிட்டு, அவன் கட்டுபாட்டிற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்றான். அங்கே வெளியே கூட்டமாக இருந்தது. உள்ளே சென்றவன் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தான். 


“நேத்து ராத்திரி கூட்டம் முடிஞ்சு கார்ல வந்திட்டு இருந்த ஐயாவை, இவனுங்க கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க.” என்றார். 


“அவங்களை உள்ளே வர சொல்லுங்க.” 


உள்ளே வந்தவர்களை நந்தா பார்வையால் ஆராய்ந்தான். அவர்கள் எல்லோருமே இளைஞயர்கள்.  

“அன்பரசுவை கொலை பண்ண பார்த்தீங்களா?” நந்தா அவர்களிடம் கேட்க, 


அவரை எல்லோரும் ஐயா என்றுதான் அழைத்துப் பார்த்து இருக்கிறார்கள், நந்தா பெயரை சொன்னதும், அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். 


“என்ன பார்வை? கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க.” 


“அவரைக் கொலை பண்ண நினைக்கலைங்க சார். அவருக்கு நாங்க யாருன்னு காட்டத்தான் நினைச்சோம்.” 


“அவர் மேல அப்படி என்ன கோபம்.” 


“நேத்து அவரு கட்சி கூட்டம். கூட்டதுக்கு வந்தா ஒழுங்கா பேசிட்டு போக வேண்டியதுதான. அதை விட்டு, அவங்க சாதிக்காரங்களுக்கு எங்க சாதிக்காரங்க எல்லாம் அடிமையாம். நாங்கெல்லாம் என்னைக்கும் அவங்க காலுக்குக் கீழதானாம். எங்களை மேல வரவே விடமாட்டாராம்.” 


“கூட்டத்துல வச்சு இப்படி அவர் பேசினாரா?” 

“ஆமாம். இன்னும் அசிங்கமா பேசினார். நேத்து மட்டும் இல்லை, நிறையத் தடவை அப்படிப் பேசி இருக்கார்.” 


“ஏன் சார் அவருக்கு இவ்வளவு வக்கிரம் பிடிச்ச எண்ணம்? நாங்களும்  மனுஷங்க தானே? அவரும் அவர் சாதிக்காரங்களும் மட்டும் அப்படி என்ன உசத்தி?” 


“நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?” 


“நாங்க காலேஜ் படிச்சிட்டு இருக்கோம்.” 


அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போதே, அவர்களுடைய பெற்றோரும் வந்துவிட்டனர். வந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைதான் திட்டினர். 


“படிச்சு முன்னுக்கு வர சொன்னா, இப்படிப் பெரிய இடத்தைப் பகைச்சிட்டுப் போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கீங்களே. அவங்க மேல கைவைக்கப் பார்த்தா சும்மா விடுவாங்களா.” 


“சின்னப் பசங்க ஆத்திரத்துல அறிவில்லாம பண்ணிட்டாங்க, மன்னிச்சு விட்ருங்க ஐயா.” என நந்தாவை பார்த்து கும்பிட்டனர். 


அவர்களைப் பார்த்ததுமே தெரிந்தது, உழைக்கும் வர்க்கம் என்று. பிள்ளைகளை நம்பித்தான் இருக்கின்றனர். பிள்ளைகள் முன்னேற்றத்தில்தான் அவர்கள் குடும்ப முன்னேற்றமும் இருக்கிறது. 


அந்த நேரம் சிலர் தடாலடியாக உள்ளே நுழைந்தனர். “டேய் பசங்களா,  நாங்க பார்த்துக்கிறோம்.” என்றவர்கள், பிள்ளைகளின் பெற்றோரையும் பார்த்து, “நாங்க வந்துட்டோம் கவலைப்படாதீங்க.” என்றனர். 


அவர்கள் இவர்கள் ஆட்கள் என நந்தாவுக்குப் புரிந்தது. “சார், நாங்க வக்கிலோடு வந்திருக்கோம், பசங்களை நாங்க ஜாமீன் எடுக்கிறோம்.” என்றனர். 

“நான் இப்பத்தான் விசாரிச்சிட்டு இருக்கேன். இன்னும் கேஸ் போடலை. உங்க உதவி இப்பத் தேவை இல்லை. நீங்க போகலாம்.” என்றான் நந்தா. 


அவனின் கண்டிப்பான பேச்சை கேட்டு வந்தவர்கள் திகைக்க, நந்தா ஏட்டுக்குக் கண்ணைக் காட்ட, அவர் அவர்களை வெளியே விரட்டினார். 


இவர்கள் தாங்களாக வந்து உதவி செய்வது போல் செய்துவிட்டு, அந்த மாணவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள். இனி அவர்களைத் தூண்டி விட்டே, இவர்கள் காரியம் சாதித்துக் கொள்வார்கள். படிப்பு வேலை என எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியதுதான். 


நந்தா அவர்களின் நோக்கத்தை அவர்களிடமும் அவர்கள் பெற்றோரிடமும் விளக்கினான். 


“நீ படிச்சு முன்னேறினாத்தான் உன் குடும்பமும் முன்னேறும். நீ ஆத்திரத்துல அறிவை இழந்தா, உன் தலையில நீயே மண்ணை வாரி போட்டுக்கிறேன்னு அர்த்தம்.” என்றான். 

“ஐயா, நீங்க சொல்றதுதான் சரி. நீங்களே எங்களுக்கு ஒரு வழி காட்டுங்க.” என்றனர். 


“அன்பரசு மேல பசங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும். அவர் பேச்சு வன்முறையைத் தூண்டி விடுற மாதிரி இருந்துச்சுன்னு.” 


“அப்புறம் உங்க எதிர்காலத்துக்காகக் கேஸ் போடாம, இப்ப உங்களை விடுறேன். இனியாவது உங்க பொறுப்பை உணர்ந்து நடந்துக்கோங்க.” 


நந்தா சொன்னதை அவர்களுக்கு நம்பவே முடியவில்லை. “ரொம்ப நன்றிங்க ஐயா.” என எல்லோரும் கும்பிட்டனர். 


“வேற எதாவது பிரச்சனைன்னா என்னை வந்து பாருங்க.” 

“சரிங்க சார்.” 

அவர்கள் சென்றதும் நந்தாவிடம் வந்த இன்ஸ்பெக்டர், “சார், இப்ப ஐயா கேட்டா என்ன சொல்றது?” எனக் கேட்டார். 


“சாதி கலவரத்தை தூண்டி விடுற மாதிரி பேசினதுக்கு உங்களைதான் குண்டர் சட்டத்தில கைது பண்ணனும். உங்க மேலையும் கம்பளைன்ட் இருக்குன்னு சொல்லுங்க.” 


“சார், கண்டிப்பா பிரச்சனை ஆகும்.” 


“இதே உங்க ஐயா மேல கம்ப்ளைன்ட் வந்தா, அவர் மேல கேஸ் போடுவீங்களா? சட்டம் எல்லோருக்கும் பொதுதான். அந்தப் பசங்க படிக்கட்டும்.” என்றான் நந்தா. 


நந்தா சொன்னதைக் கவனமாகக் கேட்ட கயல்விழி அமைதியாக இருந்தாள். 


“எதோ நினைக்கிற, என்னன்னு சொல்லு.” 


“எங்க அப்பாவை பத்தி எனக்குத் தெரியும். அவர் இதை அப்படியே விடமாட்டார்.” என்றாள். 

நந்தாவுக்கும் அது தெரியும். அவன் யோசிக்க, அவன் அருகில் படுத்த கயல்விழிக்கும் உறக்கம் இல்லை. ஏதேதோ கற்பனை செய்த இருவரும், கடைசியில் அந்த நினைப்பு கூட இல்லாமல் உறங்கினர். 


மறுநாள் மதிய உணவுக்கு வந்த நந்தா, மிகவும் இறுக்கமாக இருந்தான். 


அவனுக்கு உணவு பரிமாறிய கயல், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள். 


“என்னங்க ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” 


“நீ சொன்ன மாதிரிதான். பசங்க இன்னைக்குக் காலேஜ் போயிருக்காங்க. அவங்க எல்லோரையும் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாம்.” 

“நீங்க எதுவும் பண்ண முடியாதா?” 

“பேசிட்டேன், எல்லோரும் கடைசி வருஷச்துல இருக்காங்க. பரீட்சை மட்டும் எழுத அனுமதிக்கிறோம்னு சொன்னாங்க. அதுவும் உன் அப்பாவுக்குத் தெரியாம.” 


“அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?” 


“தூத்துக்குடியில எங்களோட சீனியர் ஆபீசர், சிவில் சர்வீஸ் பரீட்சை எழுத கிளாஸ் எடுக்கிறார். அங்க பசங்களை அனுப்பலாம்னு பார்க்கிறேன்.” 


“உங்களைப் பார்த்துக் கேவலமா பேசினார் இல்லையா, அவரே மரியாதை கொடுக்கிற இடத்துக்கு வாங்கன்னு பசங்ககிட்ட சொல்லி இருக்கேன்.” 


“நல்ல விஷயம்தானே.” 


“அவங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை. ஒருத்தர் ரெண்டு பேருக்குன்னா என்னால உதவ முடியும். ஆனா பத்து பேருக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.” 

கயல் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்றவள், திரும்பி வரும்போது, தன் நகைகளை ஒரு துணியில் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள். 


“இது எங்க அப்பா போட்ட நகை. அவர் செஞ்ச பாவத்தைக் கொஞ்சமாவது குறைக்க உதவட்டும். இதை வித்து அந்தப் பசங்களுக்குப் பணம் கொடுத்திடுங்க.”

“தேங்க்ஸ் கயல்.” என நந்தா வாங்கிக்கொண்டான். அதன் பிறகுதான் அவன் முகம் இயல்புக்கு திரும்பியது. 


அன்று இரவு வீடு வந்தபோது, நந்தா மிகவும் உற்சாகமாக இருந்தான். கயல் அன்று புதுப் புடவை அணிந்து, கூந்தளின் இருபக்கமும் வழியும் படி நிறைய மல்லிகை பூ வைத்திருந்தாள். 

குளித்து விட்டு வந்தவன், அவளைப் பின்னால் இருந்து அனைத்து “என்ன இன்னைக்கு ரொம்ப அசத்துற?” என்றான். 

“ஷில்பா அக்காவோட கடை வீதிக்கு போய் இருந்தேன். அங்கதான் பூ வாங்கினேன். பார்த்தீங்களா எங்க ஊர் பூ எப்படி இருக்கு?” 


அவள் கூந்தளில் முகம் புதைத்து, “ம்ம்… மயக்குற டி.” என்றவன், அவள் கன்னத்தில் முத்தம் மிட, “நான் தோசை ஊத்தணும் நீங்க போங்க.” எனக் கயல் அவனை விலக்கி விட்டாள். 


“பரவாயில்லை இப்படியே ஊத்து.” என அவன் விலக மறுக்க, அவனைத் திரும்பி பார்த்துச் செல்லமாக முறைத்தவள், அவன் கைகளுக்குள் நின்றே தோசை ஊற்ற ஆரம்பித்தாள். 


தோசையைத் தட்டில் வைத்து, அவள் சட்னியும் சாம்பாரும் ஊற்றிக் கொடுக்க, அவன் அங்கேயே நின்று சாப்பிட்டான். 


“வேற என்ன எல்லாம் வாங்கின?” 


“தேவையான மளிகை சாமான், பூஜை சாமான், அப்புறம் கொஞ்சம் பழங்கள் எல்லாம் வாங்கினேன்.” 

“பரவாயில்லை என்னை நம்பிட்டு இருக்காம, நீயே போய் வாங்கிட்டு வந்திட்ட.” 

“உங்களை நம்பினா, நாளைக்கு நாம பட்டினிதான் இருக்கணும். வீட்ல அரிசி கூட இல்லை.” 


கயல் சொன்ன அழகில், நந்தாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 


“உங்களுக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கா? உங்களை நம்பி வந்தா, நீங்க வீட்டுக்கு வர்ற நேரமா இது?” கயல் இடுப்பில் கைவைத்துக் கொண்டு கேட்க, 


“போலீஸ் வேலையில ஆறு மணி அடிச்சதும், வீட்ல இருப்போம்ன்னு எல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது. ஏன் சில நேரம் நைட் வீட்டுக்கு வரவே மாட்டேன்.” நந்தா சொல்ல, கயல் அவனை முறைத்தாள். 


“நிஜமாதான் டி எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ.” 


அதன்பிறகு கயல் அவனோடு பேசவே இல்லை. அவள் பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். 


கதவு எல்லாம் பூட்டி இருக்கிறதா எனச் சரி பார்த்து விட்டு உள்ளே வந்த நந்தா, கட்டிலில் மனைவியின் பக்கத்தில் சென்று அமர்ந்தவன், குனிந்து அவளின் இருபக்கமும் கையூன்றி, “கயல், நமக்குக் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகிடுச்சு நியாபகம் இருக்கா?” எனக் குழைவாகக் கேட்க, 

அதை இவ்வளவு பக்கத்தில் வந்துதான் சொல்ல வேண்டுமா என நினைத்த கயல், “அதுக்கு இப்ப என்ன?” என்றாள். 


“நான் சீக்கிரம் வர்றது, உன் கையில்தான் இருக்கு.” அவன் சொல்ல, கயல் அவனைப் புரியாமல் பார்த்தாள். 


“இப்படி நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு எல்லாம் இனிமே என்னால படுக்க முடியாது. இப்படி அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சிக்கிட்டு, நான் எப்படி விலகி இருக்கிறது சொல்லு.” 

அவன் சொல்ல வருவது புரிந்ததும், கயலின் முகம் சிவக்க, அவள் வார்த்தையால் பதில் சொல்லாமல், தன் கைகளை அவனின் கழுத்தில் மாலையாகக் கோர்த்து, அவனை இன்னும் தன் அருகில் இழுக்க, நந்தா அவள் மேல் படுத்து, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். 


அதன்பிறகு அவர்கள் இருவருமே இந்த உலகில் இல்லை. வெகு நாட்கள் காத்திருந்து, காதல் உலகில் சங்கமித்தவர்களின் கூடல் சீக்கிரத்தில் முடியுமா என்ன? முடிக்க நினைத்தாலும் முடியவில்லை என்பதுதான் உண்மை. 

நந்தாவுக்குக் கயலிடம் தேடல் நீண்டு கொண்டே இருக்க, தன் கணவன் விரும்பும் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கும் இருக்க, அந்த இன்பமான இரவு, நீண்டு கொண்டே சென்றது. 


மனைவியின் அருகே களைத்துப்போய்ப் படுத்த நந்தா, அவள் காதில், “இந்த உலகத்திலேயே நான்தான் டி இப்ப ரொம்பச் சந்தோஷமானவன்.” என்றபோது, தன் கணவனின் சந்தோஷத்தை பூர்த்திச் செய்த நிறைவில், கயல் அவனை அனைத்துக் கொண்டாள். 


இருவருமே நிறைவான தாம்பத்தியம் தந்த சந்தோஷத்தில் அயர்ந்து  உறங்கினர். 








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!