Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 32 1

புது வெள்ளை மழை



அத்தியாயம் – 32 


நந்தாவும் கயல்விழியும் பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தனர். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிய, பார்த்த பத்மாவுக்கும் சந்தோஷமாக இருந்தது. 


“முதல்ல உங்க மாமியாருக்கு போன் பண்ணி சொல்லு கயல்.” என்றவர், இன்னொரு அறைக்குள் சென்றுவிட்டார். 



Advertisement


குழலி இந்நேரம் கல்லூரியில் இருப்பார். ஆனால் உணவு இடைவேளைதான் என்பதால்… நந்தா அவரது கல்லூரி எண்ணுக்கு அழைத்தான். 


பேராசிரியர்களின் ஒய்வு அறையிலேயே ஒரு தொலைபேசி இருக்கும். குழலி உடன் பணிபுரிபவர் போன்னை எடுத்து பேசிவிட்டு, “மேடம், உங்களுக்குத்தான் போன்.” என்றதும், இந்நேரம் யாராக இருக்கும் என யோசித்தபடி குழலி போன்னை வாங்கினர். 


“அம்மா, நல்லா இருக்கீங்களா?” தொலைபேசியில் நந்தாவின் குரலை கேட்டதும், ஆச்சர்யமாக இருந்தது. 

Advertisement


“நந்தா, என்ன இந்த நேரத்தில போன் பண்ணி இருக்க?” 

Advertisement


“சாரி மா, தொந்தரவு பண்ணிட்டேனா?” 


“அதைவிடு எதுக்குப் போன் பண்ண? அதை முதல்ல சொல்லு. கயல் நல்லா இருக்கா இல்ல.” 


“அவளுக்குத்தான் முடியலை.” 

Advertisement


“என்ன ஆச்சு?” குழலி பதட்டமாக, 


“சந்தோஷமான விஷயம் தான்.” என்றதும், குழலிக்கு புரிந்து விட்டது. 


“ஓ, நம்ம வீட்டுக்குச் சின்னக் குட்டி வரப் போகுதா?” என ஆர்வமானவர், “ரொம்பச் சந்தோஷம் நந்தா, கயல்கிட்ட கொடு பேசுறேன்.” என்றார். 


நந்தா கயலிடம் போன்னை கொடுக்க, “வாழ்த்துக்கள் கயல். உன் குட்டி உன்னை ரொம்பப் படுத்திவைக்குதா? இல்லை சமத்தா இருக்கா?” 


“ரொம்பத் தூக்கமா வருது அத்தை.” கயல் சொல்ல, குழலி சிரித்து விட்டார். 


“தூக்கம் தானே பரவாயில்லை. வாந்தி ஒன்னும் இல்லையே மா?” 


“இப்பவரை இல்லை.” 


“டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டீங்களா?” 

“இல்லை அத்தை. இன்னைக்குத்தான் ரொம்பத் தூக்கமா வந்தது. அம்மா வந்துதான் நாள் தள்ளி போய் இருக்கிறதை வச்சு சொன்னாங்க.” 


“ஓ டாக்டர்கிட்ட போகும்போது அம்மாவையும் கூடிட்டு போங்க. நான் சீக்கிரம் அங்க வரப் பார்க்கிறேன்.” 


“வாங்க அத்தை. வரும்போது தாரணி அண்ணியையும் கூடிட்டு வாங்க.” 


“சரி உடம்பை பார்த்துக்கோ, நான் நைட் வீட்டுக்கு வந்திட்டு போன் பண்றேன்.” 


“சரிங்க அத்தை.” 


கயல் புன்னகையுடன் தொலைபேசியை வைக்க, நந்தா அவளிடம் உணவு எடுத்து வைக்கச் சொன்னான். கயல் உணவுப் பரிமாறும் வேளையில் மீண்டும் தொலைப்பேசி அழைத்தது. நந்தா சென்று எடுத்தான். 


“ஹலோ.” 


“நான் பத்மாகிட்ட பேசணும்.” என்ற குரலை வைத்தே அது அன்பரசு என அவனுக்குப் புரிந்துவிட்டது. 


“அத்தை உங்களுக்குத்தான் போன்.” நந்தா குரல் கொடுக்க, கயல் யார் எனப் பார்வையால் கேட்க, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தான். 

“ஹலோ…” 

“நான்தான்.” 


“சொல்லுங்க, எதுக்குப் போன் பண்ணீங்க?” 


“நீதான் சொல்லணும். எதுக்கு உன்னை வர சொன்னார்?” 


“அது வந்து.” 


“சீக்கிரம் சொல்லித் தொலை… எனக்கு வேலை கிடக்கு.” 


“வேலை இருந்தா அதைப் போய்ப் பார்க்க வேண்டியது தான. எதுக்குப் போன் பண்ணீங்க?” 


“வர வர உனக்குத் திமிரு அதிகம் ஆகிடுச்சு.” 


“போலீஸ் மாப்பிள்ளை வந்ததும்ன்னு சொல்வீங்களே…. அதை மட்டும் ஏன் விட்டீங்க?” 


பத்மா தன் கணவருடன் வழக்காடுவது கேட்டு, நந்தாவும் கயல்விழியும் சிரித்துக் கொண்டனர். 


“இப்ப நீ சொல்லப்போறியா இல்லையா?” அன்பரசு பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டார். 


“நீங்க தாத்தா ஆகப்போறீங்க. போதுமா?” பத்மா சொன்னதும், அன்பரசுவின் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. முகத்திலும் ஒரு மென்மை வந்தது. 

“ஓ… சரி, நீ இங்க எப்ப வர?” 

“அவ இப்படி இருக்கும் போது, நான் எப்படி விட்டுட்டு வர்றது?” 


“அவளை வேணா இங்க நம்ம வீட்டுக்கு கூடிட்டு வா. நாம இங்க வச்சு பார்த்துக்கலாம்.” 


அன்பரசு சொன்னதைக் கேட்டு, நம் கணவர்தானா இப்படிப் பேசுவது எனப் பத்மாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 


“நான் சொல்லி பார்க்கிறேன்.” 

“வர மாட்டேன்னு சொல்லிடுவாளா அவ.” 


“எனக்குத் தெரியலை, மாப்பிள்ளை என்ன சொல்வாரோ?” 


“சரி கேட்டுட்டு போன் பண்ணு.” 

“ம்ம்…” எனப் பத்மா போன்னை வைத்தார். நந்தா அலுவலகம் சென்றதும், கயலுடன் பேசியபடி சாப்பிட்டார். 


“உங்க அப்பா உன்னை நம்ம வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்றார்.” 


“என்ன திடிர்ன்னு என் மேல அக்கறை?” 


“உன் மேல அக்கறை இல்லைன்னு உனக்குத் தெரியுமா?” 


“ஓ அதனாலதான் என்னைக் கொல்ல நினைச்சாரா?” 

“பழசை நினைக்காத கயல். நீ பண்ணதும் தப்பு தான?” 

“நான் பண்ணது தப்புதான். அவர் என்னைக் கொன்னிருந்தா கூடப் பரவாயில்லை. ஆனா எதுக்கு மா இன்னொரு வீட்டுப் பையனை கொல்ல சொன்னார்?” 


“இப்ப நீ அதெல்லாம் நினைக்காத. வயித்துல குழந்தையை வச்சிக்கிட்டு எதுக்கு அந்தப் பேச்சு?” 


கயல் அமைதியாகச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். மாலை பத்மா கிளம்பியபோது, வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம், கயலுக்குத் தேவையான உதவிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்றார். 


மாலை நந்தா சீக்கிரமே வந்துவிட்டான். கயல் சோர்ந்து போய்ப் படுத்து இருந்தாள். மசக்கையினால் அப்படி இருக்கிறாள் என நினைத்தான். அவள் அருகில் சென்று கட்டிலில் படுத்தவன், அவள் தலையைக் கோதி விட்டான்.
கயல் அவன் பக்கம் திரும்பி படுத்தாள். 


“என்னடா ரொம்பக் கஷ்ட்டமா இருக்கா?” 


“இதெல்லாம் ஒரு கஷ்ட்டமே இல்லை எனக்கு.” 


“ஆனா உன்னைப் பார்த்தா அப்படி இல்லையே. எனக்கு ரொம்பக் குற்ற உணர்வா இருக்கு கயல். என்னோட சந்தோஷத்துக்காக உன்னைக் கஷ்ட்டபடுத்திடேனா?”
கொஞ்சம் அவள் முகம் வாடினாலும், அவனால் தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்தவள், நந்தாவை தன் பக்கம் இழுத்து அனைத்துக் கொண்டாள். 

கயல்விழி பத்மாவோடு வரவில்லை என்றதும், அன்பரசுவுக்கு அப்படி ஒரு கோபம். 

“என்ன உன் மாப்பிள்ளை அவளை அனுப்பலையா?” 


“அவர்கிட்ட நான் கேட்கலை. ஆனா உங்க பொண்ணுக்கே வர இஷ்ட்டம் இல்லை. அவ வீட்டுக்காரரோட இருக்கனும்னு நினைக்கிறா. இந்த நேரத்தில பொண்ணுங்க புருஷனோட இருக்கத்தான் ஆசைப்படுவாங்க.” 


“நீயேன் வந்த, அங்கயே இருந்திருக்க வேண்டியது தான?” 


“மாத்த புடவை கூட எடுத்திட்டு போகலை. நான் எப்படி அங்க இருக்கிறது.” 


“ஓ…” 


“நாளைக்குக் காலையில் உங்களுக்குச் சமைச்சு வச்சிட்டு போறேன். ஒரு நாலு நாள் அவளோட இருந்திட்டு வரேன். அப்புறம் அவளே சமாளிச்சுப்பா.” 


“சரி போயிட்டு வா.” 


கயல் மறுநாளில் இருந்து சற்றுத் தெளிவாகத்தான் இருந்தாள். முதலில் தனக்கு எதோ என்று நினைத்து பயந்தவள், குழந்தை தான் காரணம் என்று தெரிந்ததும், சந்தோஷத்தில் உடல் சோர்வு கூடப் பெரிதாகத் தெரியவில்லை. 


காலை தாமதமாக எழுந்து நந்தாவுக்கு டிபன் செய்து கொடுத்தவள், தானும் சாப்பிட்டு விட்டு, திரும்பப் போய்ப் படுத்து உறங்கி விட்டாள். 

வேலை செய்யும் பெண் வந்ததும் தான் எழுந்து வந்தாள். கயல் மதியத்திற்குச் சமைக்க ஆரம்பிக்கும் போதே பத்மா வந்துவிட்டார். 


“தள்ளு நான் சமைக்கிறேன்.” பத்மா சமைக்க, கயல் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள். 


மதியம் நந்தா வந்து சாப்பிட்டுச் சென்றதும், மீண்டும் படுத்து உறங்கிவிட்டாள். மாலை அவள் எழுந்தபோது, அவளுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்த பத்மா, “எழுந்து தலைவாரி, முகம் கழுவிட்டு விளக்கு ஏத்தி வை. எப்ப பாரு படுத்தே கிடக்கக் கூடாது. கொஞ்சம் சுறுசுறுப்பா இரு.” என்றதும், கயல் அவர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தாள். 


பத்மா வீட்டுக்குக் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து, “நீங்க வீட்டுக்கு போகலையா மா.” அவள் கேட்க, 


“இல்லை…. கொஞ்ச நாள் உனக்கு உதவியா இருப்போம்னு நினைச்சேன்.” 


“நான் சமாளிச்சுப்பேன் மா. காலையிலதான் கொஞ்சம் தூக்கமா வருது. இவர் மதியம் லேட்டாதான சாப்பிட வரார். அதனால நானே மெதுவா பண்ணிடுவேன்.” 


“நான் இங்க இருந்தா, நீ நல்லா தூங்கி எந்திரிப்ப, இன்னும் கொஞ்சம் சாப்பிடுவ, அதனால கொஞ்ச நாள் இருக்கேன்.” 


“அப்பா சாப்பாடுக்கு என்ன மா பண்ணுவார்? அவர் தண்ணி கூடத் தானா எடுத்து குடிக்க மாட்டார். அவருக்கு எல்லாத்துக்கும் நீங்க வேணும்.” என்றதும், மகளை அப்படியா என்பது போல் பார்த்த பத்மா, “நீ மட்டும் உங்க அப்பா மேல அக்கறை படலாமா?” எனக் கேட்டார். 


அவ்வளவுதான் கயலுக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் ஒன்னும் அவருக்காகச் சொல்லலை, உங்களுக்காகத் தான் சொன்னேன். நீங்கதான் அவர் எப்படி இருப்பாறோன்னு நினைச்சு கவலைப்படுவீங்க.” 


“அவர் எப்படி இருந்தா எனக்கு என்ன?” என்றவள், உள்ளே அறைக்குள் சென்றுவிட்டாள். பத்மா தனக்குள் சிரித்துக் கொண்டார். 


அந்த வாரம் வெள்ளிக்கிழமை குழலி, தாரணி மற்றும் வருண் கயல்விழியைப் பார்க்க வந்தனர். 


அவர்கள் வருவதால். பத்மா காலையிலேயே எழுந்து பொங்கல், கேசரி என டிபன் செய்து வைத்தார். நந்தா அவர்களை அழைத்து வர ரயில் நிலையம் சென்று இருந்தான். அன்று கயல்விழியும் சீக்கிரமே எழுந்து குளித்து விட்டாள். 


பத்மா அவளுக்காக லேவண்டர் நிறத்தில் புதுப் புடவை ஒன்றை தயாராக எடுத்து வைத்திருந்தார். கயல் அதைக் கட்டிக்கொண்டு வர, பத்மா அவள் தலையை உலர வைத்து, தளர பின்னலிட்டார். 


அப்போதுதான் அனவைரும் வீட்டிற்குள் நுழைந்தனர். கயல் வேகமாக எழுந்து எல்லோரையும் வரவேற்றாள். 


கயலின் முகத்தில் அவள் சோர்வையும் தாண்டி தாய்மையின் பூரிப்பு நன்றாகவே தெரிந்தது. இன்னும் அழகாகத் தெரிந்தாள். பத்மா காபி போட, கயல் அதை எல்லோருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். 


“எப்படி இருக்கக் கயல்?” வருண் வாஞ்சையாகக் கேட்க, 


“நல்லா இருக்கேன் அண்ணா. வீட்ல பெரியம்மா பெரியப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?” எனக் கயலும் பதிலுக்கு அவனிடம் விசாரித்தாள். 


“நல்லா இருக்காங்க. உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னாங்க.” 


“நானும் அவங்களைக் கேட்டதா சொல்லுங்க.” 


“இங்க ரொம்பச் செட் ஆகிட்ட போல, உனக்கு இங்க பிடிச்சிருக்கா? இல்ல மெட்ராஸ் பிடிச்சிருக்கா?” 


“எனக்கு அங்கதான் பிடிக்கும். காலேஜ் வேற திருந்திருக்கும்.” 


“அங்க வந்தா கூட நீங்க தனிக்குடித்தனம் போகப்போறதா நந்தா சொன்னான்.” வருண் கச்சிதமாக நந்தாவை போட்டுக் கொடுக்க, அவன் வருணை முறைத்தான். 


“இங்கயே நான் ஒத்தையில வெடுக்கு வெடுக்குன்னு உட்கார்ந்து இருக்கேன். அங்க வந்தும் என்னால தனியா இருக்க முடியாது. தனியா போகணும்னா அவர் மட்டும் போகட்டும். நான் நம்ம வீட்லதான் இருப்பேன்.” 


அடிப்பாவி நான் கஷ்ட்டப்பட்டுப் பில்டப் பண்ணி வச்சா, ஒரே பால்ல கிளீன் போல்ட் ஆக்கிட்டாளே என நந்தா மனதிற்குள் நொந்துகொள்ள, மற்றவர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!