Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 10 3

ஈஸ்வரனே “இது உனக்கு தேவையா டா?”, என்று கூட ஒரு முறை கேட்டு விட்டார். ஆனால் அவனால் யுக்தாவை தனியே விட்டு வர முடியவில்லை. 

தந்தையே அப்படி கேட்டு விட்டதால் தபால் முறையில் உயர் படிப்பை படிக்க ஆரம்பித்தான். செல்வம் வேறு எந்த குடைச்சலும் கொடுக்காமல் இருந்தார்.  யுக்தா நடித்துக் கொடுக்க அதில் இருந்து வரும் பணம், அவளுடைய அலுவலகத்தில் இருந்து வரும் பணம் அனைத்தும் செல்வம் எடுத்துக் கொண்டு அம்மா மகள் இருவரையும் ஆட்டி வைத்தார். பணம் போனாலும் பரவாயில்லை, அவர் எந்த தொல்லையும் செய்யாமல் இருந்தால் போதும் என்று எண்ணினார்கள் தாயும் மகளும். 



Advertisement

ஆனால் மகளை எண்ணி அடிக்கடி தாமரை நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தாள். யுக்தாவை அழைத்துக் கொண்டு எங்கயாவது செல்லலாம் என்று கூட ஒரு நாள் முடிவு எடுத்தாள். 

“யுவன் இருக்குற இடத்துல நாம இருக்கலாம் மா. இங்க இருந்தா தான் அவனைப் பாக்க முடியும். அது மட்டும் இல்லை நாம வேற எங்கயாவது போனா அப்பா அவர் ஆட்கள் வச்சு நம்மளை கண்டு பிடிச்சிருவார்”, என்றாள் யுக்தா. 

Advertisement

Advertisement

“எத்தனை நாள் தான் டி யுவனை பாத்துட்டே இருக்க போற? அவன் எவ்வளவு நாள் இப்படி உனக்கு பாடிகார்ட் வேலை பாக்க முடியும்? அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு யுக்தா”

“அதனால தான் மா நான் இப்ப எல்லாம் அவன் கிட்ட அதிகம் ஹெல்ப் கேக்குறது இல்லை. அவன் கிட்ட அதிகம் பேசுறதும் இல்லை. அவனை ரெண்டு பொண்ணுங்க லவ் பண்ணுறாங்க தெரியுமா? என் கிட்டயே சொன்னாங்க. நான் அவன் கிட்ட சொன்னா அவன் அதை பெரிய விசயமாவே எடுத்துக்கலை. எப்ப பாத்தாலும் நீ சந்தோஷமா இருக்கியா யுக்தான்னு தான் கேட்டுட்டே இருக்கான்?”

Advertisement

“ஏன் பாப்பா, அந்த பொண்ணுங்க யுவனை லவ் பண்ணுறதை உன் கிட்ட சொல்லுறப்ப உனக்கு ஒண்ணுமே தோணலையா?”

“என்ன தோணனும்? ஒண்ணும் தோணலையே?”

“அவன் அந்த பொண்ணுங்கல்ல இருந்து ஒரு பொண்ணை விரும்பினா அதுக்கப்புறம் உன் கிட்ட பேச மாட்டான் பாப்பா”

“நிஜமாவா மா?”

“கடவுளே நீ ஏன் டி இப்படி இருக்க? எனக்கு உனக்கு என்ன சொல்லிக் கொடுக்கணும்? என்ன சொல்லிக் கொடுக்க கூடாதுன்னே புரியலையே? யுவன் உனக்கு வேணுமா யுக்தா?”

“வேணும் மா. அவன் கடைசி வரை என் கூட இருக்கணும்… ஆனா அப்பா ஏதாவது செஞ்சிருவார் மா. அவனை அப்ப அப்ப பாக்குறதே எனக்கு போதும்”, என்று சொன்ன யுக்தா அதன் பிறகு வெகு நேரம் யோசித்தாள். 

மகளைக் குழப்புகிறோமோ என்று தாமரைக்கும் வருத்தமாக இருந்தது. யுவனிடம் நேரடியாக என்னோட மகளை கல்யாணம் செய்து கொள் என்று கேட்கலாமா என்று கூட தாமரைக்கு தோன்றியது. ஆனால் அதற்கான வாய்ப்பு வரவில்லை. கேட்க வாயும் வரவில்லை. 

அளவுக்கு அதிகமாக பணம் கிடைத்ததால் செல்வத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றதால் தாமரையும் வேறு எதுவும் யோசிக்க வில்லை. கிட்டதட்ட நான்கு வருடங்கள் கடந்தது. யுக்தா பல விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தாள். முக்கியமாக பொறாமை என்ற உணர்வு கூட அவளுக்கு புரிந்திருந்தது. 

யுவன் எந்த பெண்ணுடனாவது பேசிக் கொண்டிருந்தால் அங்கே வந்து அவனிடம் வேறு உதவி கேட்டு அவன் கவனத்தை திசை திருப்பும் அளவுக்கு முன்னேறியிருந்தாள். 

கூடவே அவனைப் பற்றியும் அவன் இல்லாத வாழ்க்கையைப் பற்றியும், திருமணம் பற்றி, கணவன் என்ற உறவு பற்றி எல்லாம் அவளுக்கு புரிதல் வந்திருந்தது. யுவன் தனக்கு கணவனாக வந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் அளவுக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவு வந்திருந்தது. 

படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது கதாநாயகனாக யுவன் முகத்தை நிறுத்தி நடிக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்றெல்லாம் யோசிக்க வில்லை. 

கூடவே செல்வத்தின் மீதிருந்த அவளது பயம் அவளை விட்டு போகவே இல்லை. அவனை திருமணம் செய்தால் செல்வம் தாமரை மற்றும் யுவனை ஏதாவது செய்து விடுவார் என்று அவள் மனது முழுமையாக நம்பியதால் யுவனை தள்ளி இருந்து பார்த்து சந்தோஷப் பட்டுக் கொண்டாள். அவள் மனதில் பூத்த காதல் என்ற பூ அவளுக்குள்ளே மணம் வீசாமல் மயங்கிக் கிடந்தது.  

இந்த இடைப்பட்ட நாட்களில் தபால் முறையில் இரண்டு டிகிரியை முடித்திருந்தான். அவனது தங்கை சுஜி தந்தையை போல அரசாங்க வேலையில் சேர்ந்து விட்டாள். அவளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

யுவனின் அண்ணனுக்கு புரமோஷன் கிடைத்து சம்பள உயர்வும் வந்தது. அவனுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றம் வந்தாலும் யுவன் யுக்தா வாழ்க்கை மட்டும் அப்படியே தான் சென்றது. 

யுக்தாவை வைத்து எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் அவரை தனியே சந்தித்து நட்பாக்கிக் கொள்ளும் வழக்கத்தை வைத்திருந்தான் யுவன். என்ன முயன்றாலும் செல்வத்தால் அவனை யுக்தா வாழ்க்கையில் இருந்து அடியோடு அகற்ற முடியாமல் போனது. ஒரு வேளை அவர் அதற்கு தீவிர முயற்சி செய்ய வில்லையோ என்னவோ? 

யுவனின் தங்கை சுஜிக்கு திருமணம் பேசினார்கள். திருமணத்தின் போது யுக்தாவுக்கு அங்கே வர ஆசை தான். செல்வத்துக்கு பயந்து அவள் அங்கே போக கூடாது என்று தான் இருந்தாள். ஆனால் யுவன் அவளை அழைக்கவே இல்லை என்பது தான் அவளை பாதித்த பெரிய விஷயம். இவர்களுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். ஆனால் இவளை அழைக்கவில்லை. 

சுஜி திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து யுக்தாவை சந்தித்தான் யுவன். அவளோ அவனைக் கண்டு முறைத்தாள்.  

“ஏய் அம்மு முறைப்பெல்லாம் புதுசா இருக்கு? நீ இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்ட?”, என்று புன்னகையுடன் கேட்டான் யுவன். 

அவள் கண்கள் சுற்றி செல்வம் இருக்கிறாரா என்று அலசியது. “உன் அப்பா அப்பவே போயாச்சு. அதைப் பாத்துட்டு தான் வந்து பேசுறேன்”, என்று சொல்லி சிரித்தான் யுவன். 

“சிரிக்காத, நான் கோவமா இருக்கேன்”

“எதுக்கு டி கோவம்?”

“கடைசி வரை என்னை கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்லையே? உனக்கும் வர வர என்னை பிடிக்கலைல்ல?”

“உன்னை எனக்கு பிடிக்காம போகுமா? எவ்வளவு பெரிய ஹீரோயின் நீங்க?”

“கிண்டல் பண்ணாத. காரணம் சொல்லு”

“அங்க வந்தா எல்லாரும் உன்னைத் தான் பாப்பாங்க அம்மு. அது மட்டும் இல்லாம யாராவது ஏதாவது சொல்லி ஹர்ட் பண்ணவும் வாய்ப்பிருக்கு. அதனால தான் கூப்பிடலை. அன்னைக்கே சொல்ல நினைச்சேன். ஆனா உன் அப்பா உன் கூடவே இருந்தாரா? அதான் பேசலை”

“அப்படின்னா யாராவது ஏதாவது சொன்னா நீ என் வாழ்க்கையை விட்டே போயிருவியா?”

“என்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கி போறது நீ தான் அம்மு. உன்னோட பயம் தான் காரணம்”

“அதை விடு. கல்யாண போட்டோ இருக்கா?”

“இதோ இருக்கு காட்டுறேன்”, என்று சொன்னவன் அவள் அருகே சேரை ஒட்டிப் போட்டு அமர்ந்தான். அவன் கால்கள் அவளது கால்களை உரச புது வித உணர்வை உணர்ந்தாள் யுக்தா. அவள் கண்கள் அவனையே இமைக்காமல் தழுவியது. அவனோ மும்முரமாக போட்டோவைக் காட்டிக் கொண்டிருந்தான். 

சிறிது நேரத்தில் அவள் கவனமும் புகைப்படத்துக்கு திரும்பியது. “இது யார் யுவன்?”, என்று கேட்டாள் யுக்தா. 

“இது சுஜியோட ஃபிரண்ட். அடிக்கடி வீட்டுக்கு வருவா. எல்லார்க் கிட்டயும் நல்லா பேசுவா. டாக்டரா இருக்கா. பேர் வர்ஷு.. வர்ஷினி”

“இவ எதுக்கு இந்த போட்டோல உன்னை இடிச்சிட்டு நிக்குறா? இந்த போட்டோ நல்லாவே இல்லை”, என்றவள் அவன் போனை பிடுங்கி அந்த போட்டோவை அழித்து விட்டு போனை அவனிடம் கொடுத்து விட்டு அடுத்த சீன் நடிக்கச் சென்றாள். போகும் அவளையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் யுவன். 

புயல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!