Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Mister Rascal

Mister Rascal 5 1

காலிங் பெல் சத்தம் கொடுக்க அடுப்பில் கொதித்துகொண்டிருந்த சாம்பாரை ஒருமுறை பார்த்துவிட்டு இடுப்பில் சொருகியிருந்த முந்தானையில் தன் கரத்தை துடைத்துக்கொண்டு வாசலுக்கு ஓடினாள் துர்கா.

செயின் லாக் போட்டுவிட்டு கதவை திறக்க, அந்த சிறு இடைவெளியில் நின்றிருந்த வாட்டசாட்டமான மனிதனைக்கண்டு சடுதியில் மிரண்டவள், யாரு? என்றாள் காற்றுக்கும் கேட்காமல்.



Advertisement

அவனோ, தன் கூலர்சை கழட்டி, ஹாய்! என்று சிரிக்க, அவள் மிரட்சி கூடியது.

Advertisement

நீ…ங்க யாரு? மீண்டும் கேட்டாள்.

Advertisement

ஷைலுவை பாக்கணும்! என்றான் அவன்.

Advertisement

அவளுக்கு ஒருசில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. ஷைலஜாவை தான் அவன் கேட்கிறான் என்று அவள் உணர்ந்துக்கொள்ளும் முன்னரே,

ஷைலு…! என உள்நோக்கி அவன் கத்த, வேகவேகமாய் கதவை திறந்துவிட்டாள் துர்கா.

அவள் கதவை திறந்ததுமே விருட்டென உள்நுழைந்தவன் கதவை வேகமாய் தாழிட, ஏய் என்ன பண்ற? என்று குரல் கொடுக்க ஆரம்பித்தாள் துர்கா.

சட்டென தன் பின்புற இடுப்பில் எப்போதும் சொருகி வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து அவளை குறிவைத்தவனோ, டோன்ட் மூவ்! என்றான் கண்களில் சிரிப்புடன்.

துர்காவுக்கு மூச்சே நின்றுப்போனது.

யார்! என்னன்னு தெரியாம கதவை திறக்காத! ஷைலஜா அவளிடம் அடிக்கடி சொல்வது தான்! இன்று அவள் பெயரை சொன்னதும் யாரென தெரியாதவனுக்கு கதவை திறந்துவிட்டது எப்பேர்ப்பட்ட முட்டாள்த்தனம்! என்று எண்ணிக்கொண்டு தப்பிக்கும் வழிகளை அவள் விழிகளால் ஆராய,

ஷைலஜாவோட லேப்டாப், முக்கியமான ஹார்ட் டிஸ்க் எல்லாம் எங்க இருக்கோ, தேடி எடுத்துட்டு வா! போ! என்றான் அவன்.

அவள் அப்படியே நிற்க, போகல… சுட்டுடுவேன்! என்றான் நெருங்கி வந்து.

வேகமாய் நகர்ந்தவள்,பின்னோக்கி நடந்தபடியே போக, அவனும் அவளை நோக்கி முன்னேறியபடி நடந்தான்.

என்ன செய்யலாம்? எப்படி தப்பிக்கலாம்! என்று அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கால்கள் பழக்கதோஷத்தில் அடுக்களை பக்கம் போக, அதை கவனித்தவன்,

உங்க மேடம், கிட்சன்ல தான் முக்கியமானதெல்லாம் வச்சுருப்பாங்களா? என்றான் நக்கலாய்.

அவளோ சட்டென யோசித்து, ஆம்! என்றாள்.

சீக்கிரம் எடு, போ!

இப்போது திரும்பி உள்ளே சென்றவள், கடைக்கண்ணில் அவனை பார்த்துக்கொண்டே மேம்போக்காய் அங்கும் இங்குமாய் தேடினாள்.

ஏய், நடிக்காத! சீக்கிரமா எடுக்குரியா இல்லனா சுடவா? பிஸ்டல் இன்னும் அவளை நெருங்கியது.

இதோ இதோ! என்றவள், அவன் கவனம் வேறுப்பக்கமாய் பிசகிய நொடியில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பார் நிறைந்த பாத்திரத்தை அப்படியே வெறுங்கைகளால் தூக்கி அவன் மீது வீச,

இறுதி கணத்தில் அதை கண்டவன், மின்னலென விலகுவதற்குள் அவன் ஷூ அணிந்த கால்களை தழுவியிருந்தது அந்த சாம்பார்.

ஷிட்! அவன் வேகவேகமாய் ஷூவை கழட்ட, அக்கா…. சீக்கிரம் வாங்க…. வாங்கக்கா! என்று கத்திய துர்கா கைகளில் இப்போது மிளகாய் தூள் டப்பா போன்ற ஒன்று இருக்க, அதை கண்டவன்,

ஐயையோ, ஷைலு… சீக்கிரம் வா!! என்றான் அவளை விட வேகமாய்.

துர்காவுக்கு இவன் நடிக்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. கூடவே அருவாள்மனையயும் தூக்கிக்கொண்டாள்.

அதைக்கண்டு இன்னமும் பீதியானவன், அடியே, ஷைலஜா… என்ன செஞ்சுட்டு இருக்க நீ? ஒரு கொலை விழுந்தோன தான் வருவியா? என்றான் காட்டுக்கத்தலாய்.

அப்போது தான் குளித்துமுடித்து வெளியே வந்தவளுக்கு இந்த சத்தம் கேட்டு தூக்கிவாரிப்போட, அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தவள் கண்டதோ, காலை பிடித்துக்கொண்டு தரையில் கிடக்கும் ரகுனந்தபூபதியும், ஓங்கிய அருவாள்மனையுடன் அவனை குறிவைத்து நிற்கும் துர்காவையும் தான்!

இவன் எதுக்கு இங்க வந்தான்? என்ற கேள்வி தான் பார்த்ததுமே தோன்றியது அவளுக்கு.

ஹே, துர்கா! என்ன பண்ற நீ? கீழ போடு அதை! என்றாள் ஷைலஜா.

இல்ல க்கா, இந்தாள் உங்க பேரை சொல்லி உள்ள நுழைஞ்சுட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி என்னை என்னவோ எடுத்து தர சொல்றான் அக்கா! என்றாள் அவள்.

ஷைலும்மா! ஐ வாஸ் ப்ளேயிங்! என்றான் அவன் பாவம் போல.

கிட்சன் முழுக்க சாம்பார் மயம்!!! என்ன நடந்திருக்கும் என்பது அவளுக்கு காட்சி தோன்றலாகவே புரிந்துப்போனது.

ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சா? என்றாள் அவனிடம்.

ஷூ, ஷாக்ஸ் எல்லாம் தாண்டியும் கொதிகுழம்பு சற்றே உள்ளிறங்கி தான் இருந்தது. ஆனாலும், பெரிதாய் வலி இல்லை என்பதால் எழுந்துக்கொண்டவன், என் ரெண்டாயிரத்தி எட்டுநூறுவா ஷூ வீணா போச்சு! உன் மெய்ட் தான் வாங்கித்தரனும் சொல்லிட்டேன்! என்றவன், சோபாவில் சென்று பொத்தென் விழுந்தான்.

துர்காவிடம் திரும்பியவள், ஒன் ஸ்ட்ராங் காஃபி! என்றதும் அவள் தலை மறைந்தது.

கண்ணை மூடி சாய்ந்திருந்தவனிடம், எதுக்கு இதெல்லாம்? என்றாள் ஷைலஜா.

என்னை பார்த்து அந்த பொண்ணு பயந்த மாதிரி தோணுச்சு! ஒரு பெண் சிங்கத்தோட வீட்டுல இருக்க பொண்ணு இப்படி பயந்தாரியா இருக்கலாமான்னு நினைச்சு ஒரு சின்ன ஸீன் போட்டேன்… அது இப்படி ஆகும்ன்னு தெரியலை……யே! என்று சிவாஜிகணேசன் போல இழுத்தவன்,

பரவால்ல! புலி குகைல எலின்னு நினைச்சேன்! ஷி இஸ் குட்! என்றான்.

கிச்சனில் இருந்து காதை தீட்டி வைத்துக்கொண்டு அவன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த துர்காவுக்கு தன்னை நினைத்தே பெருமையாய் இருந்தது.

ஷைலஜா அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

என்ன விஷயம் சார்? வீட்டுக்கெல்லாம்? என்று கொக்கிப்போட,

ஏன் வரக்கூடாதா? என்றான் அவன்.

நான் இன்வைட் பண்ணவே இல்லையே? அவள் சொல்ல,

ஓ! கூப்பிட்டாம ஏன்டா வந்தன்னு கேட்குற? என்றான் அவன்.

நோ சார்! நான் டா! போடமாட்டேன்! என்றாள் சிரியாமல்.

அவன் புருவங்கள் உயர்ந்தது.

அதோடு மணமணக்கும் காஃபியும் வர, மேல கொட்டிட மாட்ட தானே? என்று கேட்டுக்கொண்டே வாங்கினான் அவன்.

எங்க அக்காக்கு தெரிஞ்சவங்கன்னு சொன்ன பின்னாடி நான் அப்படி எல்லாம் செய்வேனா? என துர்கா சொல்ல,

ஓ, நான் தெரிஞ்சவனா? என்றான் அவன்.

ஷைலஜா, என்னோட ஹையர் அஃபீஷியல்! கமிஷ்னர்! என்றதும், துர்காவின் இலகுவான உடல்மொழியே மாறிப்போனது.

மன்னிச்சுக்கோங்க சார்! நீங்க பெரிய ஆஃபீசர்னு தெரியாம தப்பு பண்ணிட்டேன்! கால்ல ரொம்ப அடிங்களா? நான் வேணுனா மருந்து கொண்டு வரவா? கடகடவென அவள் பேசிக்கொண்டே போக, அவளது இந்த மாற்றம் கண்டு பல்வரிசை தெரிய சிரித்தான் அவன்.

துர்…கா!!! பல்லைக்கடித்துக்கொண்டு அழைத்த ஷைலஜாவின் கண்கள் காட்டிய குறிப்பில் கப்சிப்பென உள்ளே ஓடிப்போனாள் துர்கா.

அவள் போனதும், சார்? என்றாள் ஷைலஜா.

சார்க்கு இன்னும் சல்யூட் கூட வைக்கலையே நீ!?

இது ஆபீஸ் இல்ல! நான் டியூட்டிலயும் இல்லை!

கரெக்ட்! அப்பறம் எதுக்கு சார்? பேர் சொல்லியே பேசலாமே?

மாட்டேன் என்று பிகு எல்லாம் செய்யவில்லை அவள்.

ஓகே ரகுனந்தபூபதி சார்! என்ன விஷயமா வீடு வரைக்கும் வந்தீங்க? அவள் கேட்ட விதத்தில் சிரிப்பு வர,

மேடம் இன்னைக்கு எதுக்கு லீவ்ன்னு கேட்க்கலாம்ன்னு வந்தேன்! என்றான் அவன்.

கடந்த பத்து நாளா தொடர் தலைவலி! ஒருநாளாவது அதுக்கிட்ட இருந்து தப்பிப்போம்ன்னு நினைச்சேன்! முடியல!

ஓ! நீ சொல்ற தலைவலி நான் இல்ல தானே?

அவன் கேட்டதற்கு ஒன்றுமே சொல்லாமல் நக்கல் சிரிப்பை முகத்தில் ஏந்தி அவள் அமர்ந்திருக்க, புரிஞ்சுப்போச்சு!!! என்றான் அவன்.

அவளுக்கு மேலும் சிரிப்பு வரும்போல ஆனது. முயன்று அடக்கிக்கொண்டாள்.

ஷைலஜா, ஹாஸ்பிடல்க்குள்ள வந்துப்போனவங்க லிஸ்ட் ஃபுல்லா செக் பண்ணிட்டியா? கணநேரத்தில் போலிஸ்க்காரனாய் மாறியிருந்தான்.

பண்ணிட்டேன் சார்! டவுட்ஃபுல்லா யாருமே தெரியல! ரூம் கிளீனிங்க்கு வந்த ஆளுங்களை மட்டும் விக்கி விசாரிக்குறாங்க!! என்றதும், ம்கும்! என சலித்துக்கொண்டான் அவன்.

சரி! அந்த பேங்க்ல புட்டேஜ் கேட்க சொன்னேனே என்னாச்சு?

மருத்துவனை பின்பக்கத்தில் கேமரா பொருத்தாததால் அங்குள்ள பேங்க் வாசலில் இருக்கும் கேமரா புட்டேஜ்களை ஆராய சொல்லியிருந்தான்.

இன்னைக்கு ஈவனிங் கிடைச்சுடும் சார்! என்றாள் அவள்.

நோ, மேக் இட் நவ்! என்றான் உத்தரவாய்.

சார், லீவ்ல இருக்கேன்!

போலிஸ்க்காரனுக்கு லீவ், பெர்மிஷன், வெகேஷன் எதுவும் கிடையாது… தெரியும்ல? என்றான் அவன்.

இது எப்போதுமே அவளது வசனமாக தான் இருக்கும்!

காரணம் சொல்லும் காவலர்களிடம் இப்படி தான் சொல்லுவாள். இன்று அதே வார்த்தைகளை ஒருவன் அவளிடம் பிரயோகிக்க, சற்றே கடுப்புடன் தன் அறைக்குள் சென்றாள் அவள்.

அவள் போனதும் சட்டமாய் சாய்ந்து அமர்ந்தவன் வீட்டை கண்களால் ஆராய ஆரம்பித்தான்.

ஒவ்வொரு இடமாய் பார்த்தவன் கண்கள் கிட்சன் பக்கம் போக ஒரு தலை விருட்டென மறைந்தது.

லேசான நகைப்புடன், வீராங்கனையே… இங்க கொஞ்சம் வாங்க! என்றான்.

எட்டிப்பார்த்தாள் துர்கா. அவன் அவளை பார்க்க, தயங்கிக்கொண்டே வந்தவள், சாரி சார்! என்று மீண்டும் சொல்ல,

அத விடு! இப்படி வந்து உட்காரு! என்றான் எதிர் சோபாவை காட்டி.

பரவால்ல சார்! நான் நிக்குறேன்!

நீ நிப்ப! என்னால ரொம்ப நேரம் அண்ணாந்து பேச முடியாது! போன மாசம் பக்கவாதம் வந்ததுல கழுத்து இழுத்துக்கிச்சு… அதனால, வா இப்படி! என்று சொல்ல, அவன் பேச்சில் ஆஆவென வாயை பிளந்தவள், தயங்கிக்கொண்டே எதிரே அமர்ந்தாள்.

உங்க மேடம் சம்பளம் எல்லாம் சரியா குடுக்குறாங்களா? இல்லன்னா சொல்லு, தூக்கி ஜெயில்ல போட்டுடுவோம்! என்றான் சிரித்துக்கொண்டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!