Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 4 1

அத்தியாயம் 4 

நான் கண்ட சூரியனின்

மற்றொரு பிம்பம்

தான் உன் முகம்!!!



Advertisement

வனமங்கை குச்சிக்கு உணவை ஊட்டிய படியே அன்னமாவிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியைப் பார்த்த படியே வந்தான் மாதவன். அவனைக் கண்டு அவள் அமைதியாகி விட்டாள்.  “வந்துட்டீங்களா தம்பி?”, என்று கேட்ட படி அன்னம்மாவும் எழுந்து நின்றாள்.

“ஆமா அன்னம்மா, வெற்றி பொருள் எடுத்து வச்சிட்டு இருக்காங்க. நீங்க போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க”, என்று மாதவன் சொன்னதும் “சரிங்க தம்பி, உங்களுக்கும் சாப்பாடு இருக்கு. சூடு ஆருறதுக்குள்ள சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் அன்னம்மா. அவள் சென்றதும் அக்காவும் தம்பியும் அவனைப் பார்த்தார்கள்.

Advertisement

Advertisement

“சின்னப் பையனா குச்சி நீ? உன் அக்கா தான் உனக்கு ஊட்டி விடணுமா? நீயே சாப்பிட மாட்டியா?”, என்று புன்னகையுடன் கேட்டான் மாதவன்.

“உங்களுக்கு எதுக்கு சார் பொறாமை? என் அக்கா ஊட்டி விட்டா தான் வயிறு நிறையும்”, என்று சிரித்தான் குச்சி.

Advertisement

“சரி சரி சாப்பிடு. உன் அக்கா சாப்பிடலையா?”, என்று அவளைப் பார்த்துக் கொண்டே கேட்க அவள் கண்களை தாழ்த்திக் கொண்டு “நான் சாப்பிட்டேன் சார்”, என்று பதில் சொன்னாள் வனமங்கை.

“எனக்காக தானே சீக்கிரம் சாப்பிட்ட?”, என்று அவன் கேட்டதும் அவள் பேவென்று அவனைக் கண்டு விழித்தாள். “இல்லை எங்க நான் உன் முகத்தை பாத்துருவேன்னு பயந்து தானே சீக்கிரம் சாப்பிட்டேன்னு கேட்டேன்”, என்றான்.

அது உண்மை என்பதால் அவள் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க “என் அக்கா எப்பவுமே சீக்கிரம் சாப்பிட்டுருவா சார். நீங்களும் வாங்க சாப்பிடுங்க”, என்று சொல்லி அவளைக் காப்பாற்றினான் குச்சி.

“நான் உங்களை உங்க வீட்ல விட்டுட்டு வந்து சாப்பிடுறேன்”

“அது நேரம் ஆகிரும். நீங்க சாப்பிடுங்க. அப்புறம் நாங்க போறோம்”, என்று வனமங்கை சொல்ல அவளுக்கு தன் மீது இருக்கும் அக்கறையைக் கண்டு வியப்பாக பார்த்தான். பின் சிறு சிரிப்புடன் எழுந்து உள்ளே சென்றான். அங்கே இரண்டே இரண்டு தட்டுகள் மட்டுமே உண்டு என்பதால் வனமங்கை உண்டு விட்டு வைத்திருந்த தட்டு மட்டும் தான் இருந்தது.

குச்சி சாப்பிட்டதும் இரண்டையும் விளக்கி வைத்து விடலாம் என்று எண்ணி அவளுடைய தட்டை விளக்காமல் கழுவி மட்டுமே வைத்திருந்தாள். அதை எடுத்து கழுவ ஆரம்பித்தான் மாதவன்.

அப்போது தான் வனமங்கைக்கும் அது நினைவு வந்தது. “ஒரு நிமிஷம் இரு டா குச்சி”, என்று சொன்ன வனமங்கை அடுத்த நொடி வேகமாக உள்ளே ஓடினாள். அவனும் தட்டைக் கழுவி விட்டுத் திரும்பியதால் வந்த வேகத்தில் அவன் மீது மோதி கீழே விழப் பார்த்தாள்.

“ஏய் பார்த்து”, என்ற சொல்லோடு அவளைத் தாங்கி பிடித்திருந்தான் மாதவன். பதட்டத்தில் அவளுடைய ஒரு கை அவன் சட்டையை இறுகப் பற்றி இருந்தது. எச்சில் கையை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தாள். அவனுடைய ஒரு கை அவள் இடையை பற்றி இருந்தது. இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்த படி அசையாமல் நின்றார்கள்.

அவளுடைய கண்களை பார்த்த படியே நின்ற மாதவனுக்கு அவளுடைய கண்களுக்குள்ளே சென்று கொண்டிருக்கும் உணர்வு வந்தது. கூடவே அவளிடம் இருந்து வந்த மஞ்சள் கலந்த சுகந்தம் அவனை வேறு ஏதோ உலகத்துக்கு அழைத்துச் சென்றது. முதல் முறை ஒரு பெண்ணின் அருகாமையில் தடுமாறி நின்றான். முதன்முதலில் ஒரு பெண்ணின் அருகாமையில் ஒரு ஆண்மகனாக உணர ஆரம்பித்தான். அவனுடைய உணர்வுகள் அவன் வசம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. கூடவே அவள் கண்கள் அவனுக்கு பரிட்சையமாக இருந்ததால் அவனுக்கு அவளை வேறு யாரோ என்று நினைக்க முடியவில்லை. அதுவும் அவள் கண்களில் இருந்த மயக்கம் அவனுக்கும் கிறக்கத்தைக் கொடுத்தது.

தன்னுடைய கைக்குள் அடங்கி இருந்த அவள் மேனி நடுங்குவதை கண்டவனுக்கு அந்த நடுக்கத்தை போக்கியே ஆக வேண்டும் என்ற நினைப்பு வர அவன் அணைப்பு கொஞ்சம் இறுகியது. அவன் அணைத்ததில் அவள் மேலும் நடுங்கத் தான் செய்தாள்.

அவளை தன்னுடைய கைக்குள் இருந்து விலக விட முடியாமல் தவித்தான் மாதவன். அவளது முகத்தை மறைத்திருக்கும் அந்த துணியை விலக்கித் தூர எரிய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இன்னும் ஒரு நொடி தாமதம் ஆகியிருந்தாலும் அவன் அதை செய்திருப்பான்.

அவன் அழகில் அவன் அருகாமையில் அவனுடைய வாசனையில் மயங்கி கிறங்கி நின்ற வனமங்கையும் அந்த நேரம் முகத்தை அவனிடம் காட்டியிருப்பாள் தான்.

“அக்கா, அங்க என்ன பண்ணுற? வா”, என்று குச்சி சத்தம் கொடுத்ததும் அடுத்த நொடி பதறி போய் அவன் கையில் இருந்து விலகி “மன்னிச்சிக்கோங்க. தட்டை விளக்கலை. கழுவி மட்டும் தான் வச்சேன். அதைச் சொல்லத் தான் வந்தேன்”, என்று அவன் முகம் பார்க்காமல் அவன் மார்பை பார்த்துக் கொண்டு சொன்னாள் வனமங்கை. அப்போது தான் அவன் சட்டைப் பையில் இருந்த அவளது மாலை தெரிந்தது. லேசாக வெளி வந்திருந்ததால் அவளுக்கு தரிசனம் கொடுத்தது.

“பரவால்ல, கழுவிட்டேன்”, என்று சொல்லி சிரித்தான் மாதவன்.

“இல்லை கொடுங்க, நான் விளக்கித் தரேன்”, என்று சொன்னவளுக்கு அதை அவனுடைய பாக்கெட்டில் பார்த்ததும் சொல்ல முடியாத ஒரு உணர்வு வந்தது.

“ஏன்? அதான் நீ கழுவிட்டல்ல. நானும் ஒரு தடவை கழுவிட்டேன். அப்புறம் என்ன? வா”, என்று சொல்லி விட்டு வெளியே செல்ல அவளும் அவன் பின்னே சென்றாள்.

அதன் பின் அவனே தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு உணவு உண்ண ஆரம்பிக்க வனமங்கை உணவை குச்சிக்கு ஊட்டினாள். கூடவே மாதவனின் தட்டில் குழம்பு கூட்டு என்று குறைந்தால் அதை அவனுக்கும் வைத்தாள். அன்னை அக்கா இல்லாமல் மற்றொரு பெண் அவனுக்கு பரிமாறுகிறாள் என்றால் அது வனமங்கை தான் என்று எண்ணிய படியே உணவை உண்டு முடித்தான் மாதவன். ஆனால் அவள் கண்கள் அடிக்கடி அவனது சட்டைப் பையிலே பதிந்தது. ஆனால் அதை எப்படி எடுக்க என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் மாதவன் தட்டை எடுத்துக் கொண்டு எழப் போக அவன் தட்டைப் பறித்தவள் “நீங்க போய்க் கைக் கழுவுங்க. நான் எல்லாம் கழுவி வைக்கிறேன்”, என்றாள்.

“உனக்கு எதுக்கு கஷ்டம்? நான் பாத்துக்குறேன்”, என்று அவன் சொல்ல அவளோ அவனுடைய தட்டை விடவே இல்லை.

“கழுவியாவது வைக்கிறேன்”, என்று அவன் சொல்லியும் அவள் விட வில்லை என்பதால் சிறு சிரிப்புடன் தட்டை வைத்து விட்டு எழுந்தான். இந்த குணம் எல்லாம் இயல்பாகவே பெண்ணுக்கு வரும் போல என்று எண்ணினானே தவிர மனம் கவர்ந்தவனின் எச்சில் பிளேட்டை மட்டுமே பெண் இந்த அளவு ஆசையாக செய்வாள் என்பதை உணர வில்லை.

அதன் பின் மாதவனும் குச்சியும் உள்ளறைக்குச் சென்று பேசிக் கொண்டிருக்க வனமங்கை எல்லாவற்றையும் விளக்கி வைத்தாள். மேலும் அடுப்படியில் கிடந்த சில பொருள்களையும் சரி செய்தாள்.

“இது என்ன சார் தாவாணி. இது எதுக்கு இங்க இருக்கு?”, என்று தெரியாதது போல மாதவனிடம் கேட்டான் குச்சி.

என்ன சொல்ல என்று தெரியாமல் “அது எனக்கு தெரிஞ்சவங்களோடது”, என்றான் மாதவன்.

“உங்க அக்காவோடதா?”

“இல்லை இல்லை, அது ஒரு திருடியோடது”, என்று அவன் சொல்லும் போது அங்கு வந்த வனமங்கை அவன் சொன்னதைக் கேட்டு திகைத்து நின்றாள்.

அக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு “திருடியா? யார் சார் அது?”, என்று கேட்டான் குச்சி.

“இந்த காட்டுக்குள்ள ஒரு திருடி நுழைஞ்சிட்டா குச்சி. யாருன்னு தெரியலை. அவளையும் அவ கூட்டத்தையும் தான் தேடிட்டு இருக்கேன். தீவிரவாதின்னு நினைக்கிறேன். கண்டிப்பா என் கைல ஒரு நாள் மாட்டுவா. அன்னைக்கு இருக்கு”, என்று சொல்ல அதைக் கேட்ட இருவருக்கும் திக்கென்று இருந்தது.

“சரி சார் நாங்க வீட்டுக்கு போகட்டுமா?”, என்று கேட்டான் குச்சி.

“சரி வாங்க கொண்டு வந்து விடுறேன்”

“இல்லை நாங்களே போய்க்குவோம். வாக்கா போகலாம்”

“ஏண்டா நான் வந்து விட மாட்டேனா?”

“இல்லை சார் உங்க கூட போய் நாங்க இறங்கினா அங்க எங்க ஆட்கள் ஏதாவது பேசுவாங்க அதான்”, என்று சொல்ல அவனது புத்தி கூர்மையை வியந்தவன் “சரி தான் பெரிய மனுஷா. பாத்து பத்திரமா போகணும் சரியா? எங்கயும் மயங்கி விழுந்து வைக்காத. அடிக்கடி இங்க வாங்க. உன் அக்காவையும் சேத்து தான்”, என்று சொல்லி புன்னகைத்தான்.

“இங்க வந்தா தான் எங்களை விரட்டி விடுவாங்களே?”

“அப்படியா? இனி உன்னை யார் விரட்டுறான்னு பாக்குறேன்”, என்றவன் அவர்களை வெளியே அழைத்துச் சென்று கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடமும் இவர்கள் எப்போது வந்தாலும் உள்ளே விடச் சொல்லி அவர்கள் முன்னிலையிலே சொன்னவன் அவர்களுக்கு விடை கொடுத்தான்.

“வரோம் சார்”, என்று குச்சி சொல்ல “சரி டா”, என்றவன் வனமங்கையைப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த கண்களில் இருந்தது என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை. அது தவிப்பா ஏக்கமா என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவளையே பார்த்த படி இருந்தான். அவளுக்கோ கண் முன்னே இருக்கும் அவளுடைய மாலையை பார்த்தும் அதை எடுக்க முடியாத ஒரு நிலையில் அவனிடம் கண்களால் விடை பெற்றாள்.

அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு தான் திரும்பி நடந்தான் மாதவன். “ரெண்டு பேரும் போய்ட்டாங்களா தம்பி?”, என்று கேட்டாள் அன்னம்மா.

“ஆமா அன்னம்மா. கொண்டு போய் விடுறேன்னு சொன்னேன். கேக்கலை”

“அவங்க கூட்டத்துல சட்டுன்னு ஒரு அந்நிய ஆளை நுழைய விட மாட்டாங்க தம்பி. அதுவும் வயசு பொண்ணு வேற. உங்க கூட போய் அவங்க இறங்கினா அது தப்பா தான் படும்”

“நானும் அப்படி தான் நினைச்சேன். அதான் போக விட்டேன்”

“பொண்ணு ரொம்ப அழகு. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?””

“அப்படியா நீங்க பாத்தீங்களா அவளை?”

“ஆமா தம்பி, ரொம்ப அழகு. பாத்தா அப்படியே ஸ்தம்பிச்சு நின்னுறுவீங்க”

“பாக்காமலே அடிக்கடி ஸ்தம்பிச்சு தான் நிக்க வைக்கிறா. இதுல பாத்துருந்தா அவ்வளவு தான்”, என்று எண்ணிக் கொண்டு “அடிக்கடி இங்க வரச் சொல்லிருக்கேன் அன்னம்மா. நான் இல்லாதப்ப வந்தா கொஞ்சம் கவனிச்சு அனுப்புங்க. தாயில்லாத பிள்ளைங்க. ஏதோ இனம் புரியாத உணர்வு எனக்கு அவங்க மேல வருது”, என்றான்.

“சூதுவாது தெரியாத பிள்ளைக. நான் பாத்துக்குறேன் தம்பி”, என்று சொல்லி விட்டு அன்னம்மா உள்ளே செல்ல மாதவன் வேலை நடக்கும் அந்த கூடாரத்தை நோக்கி நடந்தான்.

மற்றவர்கள் அவனிடம் வந்து சிறிது நேரம் பேச அவர்களுக்கு பதில் சொன்னவன் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து அதை ஆராய்ந்தான்.

சிறுத்தை, யானை வருகிறதா என்று பார்ப்பதற்காக ஆங்காங்கே மாட்டப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை பார்த்துக் கொண்டு வந்தான். அப்போது தான் அவனது அறைக்குள்ளே வனமங்கை செல்வது பதிவாகி இருந்ததைப் பார்த்தான்.

அவனுடைய அறையின் ஜன்னல் திறந்திருந்ததால் வெளியே மரத்தில் பொருத்தியிருந்த கேமராவில் அவனுடைய அறையின் ஒரு பகுதி தெரியும் படி இருந்தது. அவனுடைய அறையில் நின்று கொண்டிருந்த வனமங்கையின் முதுகு பக்கம் தான் அவனுக்கு தெரிந்தது. குச்சியும் அந்த அறைக்குள் சென்றான் தான். ஆனால் அவன் போன பக்கம் கேமரா இல்லாததால் அவன் பதிவாகவில்லை.

அவள் டேபிளில் இருந்து எதையோ எடுத்துப் பார்ப்பது புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. கடைசியில் அதை அவளுடைய உடைக்குள்ளே மறைத்து வைப்பதும் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!