Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 4 2

“அடப்பாவி இவளையா அன்னம்மா சூதுவாது தெரியாதவன்னு சொன்னாங்க. உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செஞ்சிட்டாளே. ஐயோ பாவம்னு நினைச்சு வீட்டுக்கு கூப்பிட்டு வச்சு சாப்பாடு போட்டா எதையோ திருடிருக்கா. என் கிட்ட பெரிய பொருள் எதுவும் இல்லாம போனாலும் அவ எடுத்தது திருட்டு தானே? அந்த சின்ன பையன் தான் வெகுளி. சே இவ ரொம்ப மோசமா இருக்காளே, என் வீட்லே திருடிருக்காளே. இவளுக்கு ஒரு நாள் இருக்கு. அந்த காட்டுல பாத்த பொண்ணும் அழகா இருந்தா அவளும் ஒரு திருடி தான். இவளும் அழகா இருப்பான்னு அன்னம்மா சொன்னாங்க. இவளும் திருடி தான். அழகா இருந்தா ஆபாத்தும் இருக்குமோ? ஆனா வெண்ணிலா அப்படி எல்லாம் இல்லை. அழகா இருக்கா. இயல்பா இருக்கா. இந்த மலைஜாதி கூட்டம் தான் நல்லவங்க கிடையாது. அதான் செக்யூரிட்டி விரட்டி விடுறாங்க. இதுல வேற மலைவாழ் மக்கள் நியாயவாதிகள்ன்னு பேசுறாங்க”, என்று மனதில் எரிச்சலாக நினைத்துக் கொண்டான்.

அன்று மாலை அறைக்கு வந்தவனுக்கு கேமராவில் பதிவாகி இருந்ததே நினைவில் வந்தது. அவள் நின்ற இடத்தைப் பார்த்தான். ஆனால் அவள் அங்கிருந்து என்ன எடுத்தாள் என்பதை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எப்போதும் அங்கு இருக்கும் புகைப்படத்தை அவள் எடுத்திருப்பாள் என்று அவன் கனவா கண்டான்? அதனால் அவன் அதை தேடவில்லை. என்ன எடுத்திருப்பா என்று வெகுநேரம் யோசித்து பின் விட்டுவிட்டான். ஆனாலும் அவள் மீது ஒரு வித வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு அவன் மனதையே அதிகம் பாதித்தது. சில நேரம் தாம் நம்பியவர்கள் ஒரு தவறை செய்யும் போது அது வலிக்குமே, அப்படி இருந்தது மாதவனுக்கும்.



Advertisement

வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள் குச்சியும் வனமங்கையும். அமைதியாக வந்த அக்காவை வியப்பாக பார்த்தான் குச்சி. மாலையை நினைத்து கவலைப்படுகிறாள் என்று எண்ணி “கூடிய சீக்கிரம் அந்த மாலையை அந்த சார் எங்க வச்சிருக்கார்னு கண்டு பிடிச்சு வாங்கிறலாம் கா”, என்றான்.

Advertisement

“மாலையை நான் பாத்தேன் டா குச்சி”

Advertisement

“என்ன? என்ன சொல்றக்கா?”

Advertisement

“ஆமா டா குச்சி. அதை அவர் சட்டை பைல தான் வச்சிருக்கார்”

“என்னக்கா சொல்ற?”

“ஆமா டா”

“அப்பவே சொல்ல வேண்டியது தானே?”

“நீ அவர் பக்கத்துலயே இருந்தியா அதான் உன் கிட்ட சொல்ல முடியலை”

“எப்படியோ அவர் பத்திரமா வச்சிருக்கார்ல? சரி விடு, கண்டிப்பா அதை அவர் கிட்ட இருந்து எடுத்துறலாம்”

“எப்படி டா?”

“அதை நாளைக்கு பாரு”, என்று சொன்னவன் அதன் பிறகு அதை பற்றி பேச வில்லை.

வீட்டுக்கு சென்றதும் அந்த புகைப்படத்தை எங்கே வைப்பது என்று தடுமாறினாள் வனமங்கை. அந்த சிறிய வீட்டில் அந்த புகைப்படத்தை அவள் எங்கே வைத்தாலும் அது தேனப்பன் மற்றும் குச்சிக்கு தெரிந்து விடும். அப்போது தான் அவளுக்கு அது உரைத்தது.

“அவனோட நிழல் உருவத்தை வைக்கவே உன் வீட்ல இடம் இல்லை. அப்படி இருக்க நீ நிஜத்து மேல ஆசைப் பட்டு அவனை இந்த வீட்ல இருக்க நினைக்க வைக்கிறியே? அவன் பெரிய இடத்தில் இருப்பவன். ஆனால் நீ யார் என்று யோசித்துப்பார்?”, என்று அவள் மனசாட்சி அவளுக்கு எடுத்துரைக்க போட்டோவை நெஞ்சுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டவள் “இதை அவன் வீட்ல வச்சிறனும். அதுக்கப்புறம் அவன் நினைவுகளும் என்னோட நெஞ்சுக்குள்ள பத்திரமா இருக்கும். அது போதும்”, என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த நாள் குளித்து முடித்து வேறு உடை மாற்றும் போதும் அவனது புகைப்படம் அவள் நெஞ்சுக்குள் தான் இருந்தது.

தேனப்பன் ஆடுகளை ஓட்டிச் சென்றதும் “அக்கா கிளம்பு”, என்றான் குச்சி.

“எங்க டா காலைலே போறோம்?”, என்று குழப்பமாக கேட்டாள்.

“உன்  மாலை எடுக்க தான்”, என்று அவன் சொன்னதும் அவளுக்குள் ஒரு மெல்லிய படபடப்பு வந்தது.

“நிஜமாவா டா?”

“ஆமா, நீ வரியா? இல்லை நான் மட்டும் போய்ட்டு வரவா?”

மாதவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஊற்று அவள் அடிநெஞ்சில் இருந்து மேல் எழும்ப “நானும் வரேன் டா குச்சி. என்னையும் கூட்டிட்டு போ”, என்றாள்.

“சரி வா”, என்று சொன்னதும் மீண்டும் அவள் முகம் கழுவி வெளியே வந்தாள். அதற்குள் குச்சி ஒரு பெரிய தூக்குவாளியோடு கிளம்பி அமர்ந்திருந்தான்.

“என்னது குச்சி பாத்திரத்துல?”

“நேத்து அந்த சார் நம்மளை எப்படிக் கவனிச்சிக்கிட்டார். திருப்பி அவரைப் பாக்க நாம வெறும் கையோடயா போக முடியும்?”

“ஆமால்ல? சூடா தினையரிசி பாயாசம் இருக்கு டா. அதையும் எடுத்துக்கவா?”

“இது என்ன கேள்வி, எடுத்துக்கோ?”

“நாம கொடுத்தா அவர் சாப்பிடுவாரா?”

“கொடுப்போம், குடிக்கலைனா விடு. நாம ராவுக்கு வந்து குடிச்சிக்கலாம்”, என்றதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கிளம்பினாள்.

“முகத்தை மறைச்சிக்கோக்கா”, என்று குச்சி சொன்னதும் முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு அவனுடன் நடந்தாள்.

“இவர்களை கண்ட காவலாளி “சாரைப் பாக்க காலைலே வந்துட்டீங்களா? எல்லாருக்குமே அவரை பிடிச்சிருது. ரொம்ப நல்ல மனசு அவருக்கு”, என்று சொல்லிய படியே கதவைத் திறந்து விட்டான்.

அவனுக்கு சிறு புன்னகையை பரிசளித்து விட்டு இருவரும் உள்ளே செல்ல அவர்கள் எதிரே வந்தான் வெற்றி.

“அடடே வாங்க வாங்க, இப்ப உடம்புக்கு பரவால்லயா?”, என்று கேட்ட படி வரவேற்றான். “பரவால்ல சார். நாங்க அந்த சாரைப் பாக்க வந்தோம். அவங்க எங்க?”, என்று கேட்டான் குச்சி.

“மாதவன் சாரையா?”, என்று அவன் கேட்டதும் தான் அவன் பெயர் மாதவன் என்பதே அவர்களுக்கு தெரிந்தது.

“ஆமா”, என்று குச்சி சொன்னதும் “வாங்க கூட்டிட்டுப் போறேன்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

வீட்டின் அருகே வந்ததும் அவர்களைக் கண்ட அன்னம்மா புன்னகையுடன் வரவேற்றாள். “அன்னம்மா, சார் ஒரு அரைமணி நேரம் ரூம்ல படுத்துருக்கேன்னு சொன்னாங்க. எனக்கு கேமரா வைக்க வேண்டிய வேலை இருக்கு. இவங்களை சார் கிட்ட கூட்டிட்டு போங்க”, என்றான்.

“அது என்ன சார் கேமரா?”, என்று கேட்டான் குச்சி.

“அதுவா? படம் எடுக்குற கருவி. வரியா காட்டுறேன்”, என்று சொன்னதும் மாலையை மறந்து “வரேன் சார்”, என்று வெற்றியிடம் சொன்னவன் “அக்கா நீ சார் கிட்ட இதைக் கொடுத்துட்டு பேசிட்டு இரு. நான் அது என்னன்னு பாத்துட்டு இப்ப வந்துறேன்”, என்று பெரிய மனிதன் போல சொல்லி விட்டுச் சென்றான்.

“நல்ல பய, நீ வா மா”, என்று சொல்லி வனமங்கையை மாதவனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் அன்னம்மா. கொஞ்சம் நடுக்கத்துடன் தான் உள்ளே சென்றாள் வனமங்கை. குச்சி இல்லாமல் அவளுக்கு அவனைக் காண செல்ல பிடிக்க வில்லை தான். ஆனால் குச்சி இருந்தால் அவளால் அந்த புகைப்படத்தை அங்கே வைக்க முடியாதே. எப்படியாவது மாதவன் அசந்த நேரம் அந்த புகைப்படத்தை அங்கே வைத்து விட வேண்டும் என்று தான் அன்னம்மாவுடன் சென்றாள்.

“தம்பி தம்பி”, என்று அழைத்ததும் “இதோ வரேன் அன்னமா”, என்று குரல் கொடுத்த படி உள்ளே இருந்து வந்த மாதவன் அங்கே நின்ற வனமங்கையைக் கண்டு திகைத்து விழித்தான்.

“காலையிலே அக்காவும் தம்பியும் உங்களைப் பாக்க வந்துட்டாங்க”, என்றாள் அன்னம்மா.

“அப்படியா குச்சி எங்க?”, என்று உண்மையான அன்புடன் தான் கேட்டான்.

“நம்ம வெற்றி தம்பி கூட கேமரா பாக்க போறேன்னு சொல்லிட்டு ஓடினான். சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் சோறு பொங்குறேன்”, என்று சொல்லி விட்டுச் அன்னம்மாள் சென்றதும் அந்த இடமே அமைதியாக இருந்தது.

“உள்ள வா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் மாதவன். அவன் குரல் ஒரு மாதிரி இருப்பது குழப்பத்தைக் கொடுக்க என்ன ஆச்சு இவனுக்கு என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றாள்.

வீட்டுக்குள் சென்றதும் யார் என்ன பேச என்று தெரியாமல் அமைதியே நிலவியது. “நல்லவ மாதிரி இருந்துட்டு என் கிட்டயே திருடிட்டாளே?” என்று கோபம் இருந்ததால் அவன் அமைதியாக இருந்தான். தொலைந்தது எதுவாக இருந்தாலும் அவனுக்கு தேவையில்லாதது தான். ஏனென்றால் முக்கியமான எதையும் அவன் இந்த காட்டுக்கு எடுத்து வரவில்லை. ஆனாலும் அவளது திருடும் குணம் அவனுக்கு ரசிக்க வில்லை.

அவன் கோபம் புரியாதவளுக்கு அவன் அமைதி மட்டும் எப்படி புரியுமாம்?

அதனால் “இது உங்களுக்காக எடுத்துட்டு வந்தோம்”, என்று சொல்லி சின்னது ஒன்று பெரியது ஒன்றுமாக இரண்டு தூக்குச் சட்டிகளை அங்கே இருந்த டேபிளில் வைத்தாள்.

“என்னது இது? விஷம் வச்ச சோறு எதுவும் எடுத்துட்டு வந்துருக்கியா? என்னைக் கொன்னுட்டு வேற எதையும் பெருசா திருடிட்டு போகலாம்னு வந்தியா?”, என்று கோபமாக கேட்டான் மாதவன்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து விழித்த வனமங்கையின் கண்கள் கலங்கி விட்டது. அவனுடைய கோபம், அவனது பேச்சு தன்னை திருடி என்றது அவளை அதிகம் பாதித்தது.

அவள் கண்ணீர் அவனையும் பாதித்தது. அதே நேரம் கோபமும் குறையாமல் இருந்தது “சும்மா அழுது நடிக்காத. நேத்தே உன் குணம் எனக்கு புரிஞ்சிருச்சு. என்னோட ரூமுக்குள்ள வந்து எதையோ திருடினல்ல நீ? என் கிட்ட கேட்டுருந்தா பிச்சையா போட்டுருப்பேன்ல? எப்படி என் வீட்லே உனக்கு திருடத் தோணுச்சு. கேமரால நீ என் ரூமுக்கு வந்து திருடினது பதிவாகிருச்சு. உன் குணமும் புரிஞ்சிருச்சு. இனி என்னைத் தேடி இங்க வராத. உன்னைப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை. உன் தம்பி தான் வெகுளி. நீயில்லை. நீ என்ன எடுத்தன்னு எல்லாம் கேக்கவே மாட்டேன். எனக்கு அது தேவையும் இல்லை. ஆனா இனி நீ என் முகத்துல விழிக்க கூடாது”, என்று சொன்னான்.

அடுத்த நொடி அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள் வனமங்கை. “ஏதாவது பதில் பேசுறாளான்னு பாரு”, என்று அதற்கும் கோபமாக எண்ணினான் மாதவன். அவனுக்கு அவள் அப்படிச் செய்தது சுத்தமாக பிடிக்க வில்லை. அவள் பொய்த்துப் போனதை எண்ணி அவன் மனதில் மிகப் பெரிய ஏமாற்றம் உருவானதால் தான் அவனுக்கு கோபமாக வந்தது.

திரும்பி நின்ற வனமங்கைக்கு ஏற்கனவே அது தவறு என்று புரிந்ததால் தான் அதை திருப்பி வைக்க வந்தாள். அதனால் அவன் அப்படி பேசியது அவளுக்கு கோபத்தை தர வில்லை. ஆனால் அவன் வார்த்தைகள் அவளுக்கு பெரும் வலியைக் கொடுத்தது.

ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த புகைப்படத்தை வெளியே எடுத்தவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!