Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 5 3

விட்டத்தைப் பார்த்து படுத்திருந்த மாதவன் யாரோ கதவைத் தட்டவும் எழுந்து வந்தான். வெளியே நின்ற குச்சியைக் கண்டதும் ஆர்வமாக அவனைப் பார்த்தான். பின் அவன் கண்கள் வனமானகை வந்திருக்கிறாளா என்று தேடியது. பின் குச்சி முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன் “குச்சி எப்படி டா இருக்க? எங்க நீ வரவே மாட்டியோன்னு நினைச்சேன். என்னை மன்னிச்சிரு டா குச்சி. எனக்கு உண்மை எதுவும் தெரியாதுள்ள? அதனால தான் வனமங்கையை அப்படி பேசிட்டேன். எங்க டா உன் அக்கா? என் மேல கோபமா இருக்காளா? நீ வந்ததே எனக்கு சந்தோஸமா இருக்கு டா”, என்றான்.

அவன் கதவைத் திறந்ததில் இருந்து குச்சியிடம் பேசுவது வரை அவனையே கவனித்துக் கொண்டிருந்தார் வைத்தியர். மாதவன் குச்சி என்ற குலசேகரனிடம் காட்டிய அக்கறையையும் அன்பையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். கூடவே வனமங்கையைப் பற்றி பேசும் போது அவன் கண்கள் மலர்ந்த விதத்தையும் அவளை அவன் கண்கள் தேடிய விதத்தையும் பார்த்தவருக்கு அவன் மனதும் கொஞ்சம் புரிந்தது.



Advertisement

“என் அக்காவை கஷ்டப் படுத்தின யாரையும் நான் மன்னிக்க மாட்டேன். எங்க தாத்தையா உங்களை பாக்கணும்னு சொன்னாங்க. அதனால தான் கூட்டிட்டு வந்தேன். மத்த படி உங்களை பாக்க ஒண்ணும் நான் வரலை”, என்று மாதவனிடம் சொன்ன குச்சி “நான் வெளிய இருக்கேன் தாத்தையா. நீங்க பேசிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.

அப்போது தான் வைத்தியரைப் பார்த்த மாதவன் எழுந்து நின்று அவரைப் பார்த்தான். அவர் முகத்தில் இருந்த அறிவுக்களையைக் கண்டு இரு கரம் கூப்பி கும்பிட்டவன் “உள்ள வாங்க ஐயா”, என்றான்.

Advertisement

Advertisement

அவரும் சிறு புன்னகையுடன் உள்ளே சென்று அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தார்.

“நீங்க யாருன்னு சொல்லலையே? குச்சி வனமங்கையோட சொந்தக்காரங்களா?”, என்று கேட்டான் மாதவன்.

Advertisement

“அப்படின்னும் சொல்லலாம் தம்பி.  எனக்கு சொந்த ஊர் பஞ்சாப். பஞ்சம் பொழைக்க தமிழ் நாட்டுக்கு வந்து பல இடங்கள்ள அலைஞ்சு திரிஞ்சு இந்த மலை கிராமத்துக்கு வந்தேன். இந்த மலைவாசிங்க என்னை அவங்கள்ல ஒருத்தனா ஏத்துக்கிட்டு அடைக்கலம் தந்தாங்க. என்னோட அப்பா தாத்தா சொல்லிக் கொடுத்த சித்த மருத்துவத்தால இங்க இருக்குற பல மக்களை நான் காப்பாத்தினேன். இப்ப என்னை கடவுள் ஸ்தானத்துல வச்சிக் கும்பிடுறாங்க. ஆனா எனக்கு எப்பவுமே இந்த மக்கள் தான் கடவுள், அதைச் சொன்னாலும் அவங்களுக்கு புரியாது”

“நல்லதுங்க ஐயா. உங்களுக்காக தான் வனமங்கை மூலிகை எடுக்க வந்தாளா?”

“ஆமா தம்பி”

“அது தெரியாம நிறைய பேசிட்டேன். அதான் குச்சி கோபமா இருக்கான்”

“நடந்தது எல்லாத்தையும் சொன்னான். அவன் சொன்னதுல ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியாம இருந்துச்சு. அதனால தான் உங்களைப் பாக்க வந்தேன். உங்களைப் பாத்ததும் அது புரிஞ்சிருச்சு”

“நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலையே?”

“அது ஒண்ணும் இல்லை தம்பி. அதை விடுங்க. இந்த காடு உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“ரொம்ப புடிச்சிருக்கு ஐயா”

“சரி தம்பி நான் கிளம்புறேன்”

“என்ன ஆச்சு ஐயா? வந்தீங்க, உடனே கிளம்புறீங்க? என்னைப் பாக்க வந்ததுக்கு காரணம் ஒண்ணுமே சொல்லலையே?”

“தெரியலை, உங்களைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதனால தான் வந்தேன். பாத்துட்டேன் கிளம்புறேன்”

“என்னால உங்களுக்கு ஏதாவது உதவி ஆகணுமா ஐயா?”

“கேட்டா செய்வீங்களா தம்பி?”, என்று கேட்டவரின் கண்களில் சிறு வெளிச்சம் வந்தது.

“கண்டிப்பா ஐயா. நீங்க குச்சிக்கு வேண்டியவர். உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்?”

“ஹா ஹா இந்த காட்டுலயும் சரி உங்க கிட்டயும் சரி இந்த பொடியனுக்கு நிறைய செல்வாக்கு இருக்கும் போலயே?”

“அது என்னன்னு தெரியலை ஐயா, அவனையும் சரி அவனோட அக்காவையும் சரி என்னால வேற யாரோவா நினைக்க முடியலை. உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா? கேக்குறது தப்புன்னு மனசுக்கு புரிஞ்சாலும் என்னால கேக்க முடியலை”

“தப்புன்னு தெரிஞ்சும் சில நேரம் நம்ம மனசு அந்த பக்கம் தான் அலைபாயும்”, என்று பூடகமாக சொன்னவர் “என்ன கேக்கணுமோ கேளுங்க”, என்றார்.

“வனமங்கை எப்படி இருக்கா?”

“உங்களைப் பாக்குறதுக்கு முன்னாடி இருந்த வனமங்கையா அவ இப்ப இல்லை”, என்று அவர் சொன்னதும் அதிர்ச்சியாக “ஐயா”, என்று அழைத்தான் மாதவன்.

“ஆமா தம்பி. வனமங்கை இப்ப அவளா இல்லை. அவ எனக்கு பொண்ணு மாதிரி. அதான் உங்களைப் பாக்க வந்தேன். உங்க ரெண்டு பேர் மனசுல உள்ளதையும் ஒரு கிழவனா என்னால புரிஞ்சிக்க முடியுது. வனமங்கையைப் பத்தி பேசும் போது உங்க கண்கள்ல வர ஒளியே எனக்கு எல்லாம் சொல்லுது. அதை நீங்களே இன்னும் புரிஞ்சிக்கலையோன்னு எனக்கு தோணுது. ஆனா இதுல என்னால கருத்து சொல்ல முடியாது”

“நீங்க பேசுறது எனக்கு ஒண்ணுமே புரியலை”

“புரியும்… புரிஞ்ச பிறகு என்னைப் பாக்க வாங்க. நாங்க தான் நினைச்ச நேரத்துல உங்களை வந்து பாக்க முடியாது. ஆனா நீங்க எப்ப வேணும்னாலும் இந்த கிழவனைப் பாக்க வரலாம். எங்க இடத்துக்கு வந்து என்னைக் கேட்டா எல்லாரும் சொல்லுவாங்க”

“சரிங்க ஐயா. அப்புறம் நான் ஏதாவது செய்யனுமான்னு கேட்டேனே?”

“என் கிட்ட வைத்தியம் பாக்க பல ஊர்ல இருந்தும் மக்கள் வராங்க. அதுல முடக்குவாதத்தை சரி பண்ணுற ஒரு மூலிகை மட்டும் இந்த காட்டுக்குள்ள இருக்கு. நானும் அதை எங்க இடத்துல விளைய வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். முடியலை. இந்த இடத்துல மட்டும் தான் செழிச்சு வளந்து கிடக்கு. அதைப் பறிக்க மட்டும் அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும். இல்லைன்னா நீங்களே பறிச்சு கொடுத்தா கூட போதும்”

“வாங்க ஐயா, அது என்னன்னு காட்டுங்க. நானே பறிச்சு கொடுக்குறேன். இல்லைன்னா நீங்க எப்ப வேணும்னாலும் வந்து பறிச்சிக்கலாம்”, என்று சொன்னவன் அவரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றான். குச்சியும் அவனுடன் சென்றான். ஆனால் மாதவனை முறைத்துக் கொண்டே சென்றான்.

வைத்தியர் மாதவனுக்கு அந்த மூலிகையை பற்றிச் சொல்லிக் கொண்டே அதைக் காட்ட “நானே இந்த மூலிகையைப் பறிச்சுக் கொண்டு வரேன்”, என்றான் மாதவன்.

“அவ்வளவு தூரம் வரவேண்டாம் தம்பி. சுத்தி வந்தா ரொம்ப தூரம். அதனால இதோ இந்த பக்கம் தினமும் காலைல ஒன்பது மணிக்கு என் ஆள் ஒருத்தரை இந்த வேலிக்கு அந்த பக்கம் அனுப்புறேன். நீங்க அவங்க கிட்ட கொடுத்து விட்டாப் போதும். இதோ இந்த அளவு போதும். அதிகமானா காஞ்சிரும்”, என்றார் வைத்தியர்.

அவன் சரி என்று சொன்னதும் வைத்தியர் மற்றும் குச்சி இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். வனமங்கையைப் பார்க்க முடியவில்லை என்றாலும் குச்சியைப் பார்த்தது மாதவனின் மனதுக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தது.

பின் வீட்டுக்கு அழைத்து பேசினான். அவனது அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவன் அன்னை சொல்ல மேலும் சிறிது நேரம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்து விட்டே அறைக்குச் சென்றான்.

வீட்டுக்கு போகும் வழியில் “நான் வேணும்னா தினமும் வேலிக்கு அந்த பக்கம் வந்து மூலிகையை வாங்கிட்டு வரவா தாத்தையா?”, என்று கேட்டான் குச்சி.

“நீ வாங்கலாம் தான். ஆனா ….”

“ஆனா என்ன தாத்தையா?”

“ஒண்ணும் இல்லை. சரி நீயே போய் நாளைக்கு வாங்கிட்டு வா. ஆனா அவரைப் பாத்து முறைக்க எல்லாம் கூடாது”

“முறைக்க தான் செய்வேன். அவர் அக்காவை திட்டினார்ல?”

“அவர் ஒண்ணும் பொய் சொல்லலையே குச்சி”

“அப்படின்னா நீங்களும் என் அக்காவை திருடின்னு சொல்ல வறீங்களா தாத்தையா?”

“இல்லை டா பொடியா. உன் அக்கா எதுக்காக அந்த தம்பியோட போட்டோவை எடுத்துட்டு வந்தான்னு கண்டு பிடி. அதுக்கு நீ அந்த தம்பியை முறைச்சிட்டு இருந்தா ஆச்சா?”

“சரி சரி முறைக்கலை போதுமா?”

“போதும் டா. அப்புறம் நாளைக்கு நீ மூலிகை வாங்கப் போகும் போது வனமங்கையையும் கூட கூட்டிட்டுப் போ”

“ஐயையோ நான் மாட்டேன் பா. அப்பா அக்காவை எங்கயும் விடக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. நான் மட்டும் தான் தாத்தையா போவேன்”, என்று குச்சி சொல்ல வைத்தியர் யோசனையில் ஆழ்ந்தார்.

வனமங்கை வருவாள்…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!