Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 7 3

நடுவில் காவேரி உட்கார்ந்துகொள்ளஒரு ஓரத்தில் சந்தியாவும், மறு ஓரத்தில் சுபாஷும் உட்கார்ந்து கொண்டனர். சந்தியா மனதில் பயத்தை வைத்துக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.  அப்போது அவர்கள் ஆட்டோ அருகில் இன்னொரு ஆட்டோ வந்தது. அதில் இருந்தது கதிரின் நண்பன் சோலை, அவன் கதிருடன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உடன் படித்தவன். இப்போது அவர்கள் ஊரிலேயே கடை வைத்திருக்கிறான். அவனும், கதிரும் ரொம்ப நெருக்கம் என்று சந்தியாவுக்குத் தெரியும். 

அவனைப் பார்த்ததும் சந்தியா முகம் மலர்ந்தவள், பிறகு தான் அவர்கள் சுபாஷுடன் செல்வது நினைவுக்கு வந்து, ஐயோ! இந்த அண்ணன் பார்த்துட்டாங்களே, கதிர் மாமாக்கிட்ட சொல்லிடுவாங்களே என்று பயந்தாள். 

அவளையே பார்த்துக்கொண்டு வந்த சோலை அவன் வாயில் விரல் வைத்து, சொல்லாத என்பது போல் தலை அசைக்க, சந்தியா சோலையைப் பற்றிக் காவேரியிடம் சொல்லவில்லை. கோவிலில் சென்று இறங்கியதும், சந்தியா திரும்பிப் பார்க்க, சோலையும் செல்லில் பேசியவாறு அவர்கள் பின்னே வந்து கொண்டிருந்தான். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சந்தியாவுக்கு நிம்மதியாக இருந்தது.

கோவிலின் உள்ளே சென்றால், அங்கே சுபாஷின் நண்பர்கள் சிலரும் இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சந்தியா இன்னும் பயந்தாள். அவள் காவேரியின் முகம் பார்க்க, அவளின் முகத்திலும் பயம் தெரிந்தது. 



Advertisement

சந்தியா காவேரியிடம் “போகலாமா….” என்று கேட்க, சுபாஷ் சாமி கும்பிட்டதும் போவோம் என்றவன், அவனின் நண்பன் ஒருவனை அழைத்து, அவனிடம் சந்தியாவை அழைத்துக் கொண்டு கோவிலை சுற்றிவிட்டு வரும்படி சொல்ல, அதிர்ந்த சந்தியா சுபாஷை பார்த்து நேரடியாக முறைத்தவள், நேராகச் சென்று சன்னதியில் நின்று சாமி கும்பிட ஆரம்பித்தாள்.

 சந்தியா கண் திறந்து பார்க்கும் போது, சாமியின் பாதத்தில் வைத்திருந்த தேங்காய் பழ தட்டில் இருந்த தாலியை பார்த்துவிட்டாள். அவளுக்கு எதோ தவறு நடக்கப் போகிறது என்று புரிந்தது, சந்தியா திரும்பி காவேரியை பார்க்க, அவளும், சுபாஷும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். 

சந்தியா உடல் பதற நின்றவள், கண்களால் சோலை எங்கே என்று தேட, அவன் வெளி வாயிலில் நின்றிருந்தான். சந்தியா வேகமாக அவன் அருகில் சென்றவள், அவன் கையைப் படித்து இழுத்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை, கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. 

Advertisement

சோலைக்கு அவளின் நிலைமை புரிந்தது, அவன் இரு சந்தியா என்றவன், வெளி வாயிலை பார்க்க, சந்தியாவும் பார்த்தாள். அங்கே கதிர் வேர்க்க, விறு விறுக்க வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தான் சந்தியாவுக்கு உயிரே வந்தது. 

Advertisement

கதிர் உள்ளே வந்தவன் சந்தியாவைப் பார்த்து முறைக்க, அவளால் “மாமா….” என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை, கதிர் விட்டால் சந்தியாவை அடித்து விடுபவன் போல நின்றான். 

அவர்கள் இருவருக்கும் இடையில் வந்த சோலை “இப்ப நேரம் இல்லை சீக்கிரம் வா..” என்றபடி கதிரை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, சந்தியாவும் அவர்கள் பின்னே ஓடினாள். 

நான் கூடச் சும்மா ஊர் சுத்த தான் மாப்பிள்ளை வந்திருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா அவன் கல்யாணம் பண்ண கூட்டிட்டு வந்திருக்கான்டா…. ரொம்ப விவரமா திட்டம் போட்டிருக்கான்.” என்று சொல்லியபடி சோலை கதிருடன் சென்றான். 

Advertisement

அவர்கள் உள்ளே நுழைந்த போது, கோவில் ஐயர் தாலி இருந்த தட்டை கொண்டு வர, வேகமாக அவர் அருகில் சென்ற கதிர், அந்தத் தட்டில் இருந்த தாலியை எடுத்துதன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். அவனை அங்கே எதிர்பார்க்காத காவேரி அதிர்ச்சியுடன் “அண்ணா….” என்று அழைக்க,

 சுபாஷும் அப்போது அங்கே கதிரை எதிர்ப்பார்க்காததால் அதிர்ந்து நின்றான்.  கதிர் காவேரியின் பக்கம் திரும்பவே இல்லை, சுபாஷை பார்த்து “நீயெல்லாம் பாடம் சொல்லித் தர்ற வாத்தியாரு. உன்னை நம்பி பொம்பளை புள்ளைங்களைப் படிக்க அனுப்பினாநீ வீட்டுக்கு தெரியாம ஓடிப்போகச் சொல்லித்தர. உனக்கு வெட்கமா இல்லை. உங்க கதை வெளியே தெரிஞ்சுதுன்னாநாளைக்கு எவனாவது பொம்பளை புள்ளைங்களை நம்பி படிக்க அனுப்புவானா…..” என்றான் ஆத்திரமாக. 

பொண்ணு கேட்டிருந்தா மட்டும் கட்டி தருவீங்களா என்ன? வெட்டி விடத் தான பார்ப்பீங்க…” என்றான் சுபாஷ் கதிருக்கு இணையான கோபத்துடன்.

 இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்க, கதிரின் அருகில் வந்த சோலை “மாப்பிள்ளை… எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்புறோமோ, அவ்வளவு நல்லதுடா…” என்றான் கிசு… கிசுப்பாக. 

கதிர் காவேரியை பார்த்து “வா போகலாம்…” என்றான். 

அவ வரமாட்டா. நான் ஒன்னும் அவளைக் கூட்டிட்டு ஓடனும்னு நினைக்கலை. அவ படிச்சு முடிஞ்சதும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்போம்னு தான் நினைச்சேன். ஒரு சேப்டிக்கு தான் இந்தக் கல்யாணம். இப்ப உங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு, இனி காவேரிய உங்களோட அனுப்பினாநீங்க அவளுக்கு வேற இடத்தில கல்யாணம் செஞ்சுடுவீங்க….” என்று சுபாஷ் காவேரியை அனுப்ப மறுக்க,

 கதிர் இருவரையும் பார்த்தவன் “உங்களுக்கே உங்க காதல் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே. ஓடிப்போகத் தைரியம் இருக்கிறவங்களுக்கு வீட்ல பெத்தவங்கக்கிட்ட பேச தைரியம் இல்லையா….” என்றான் நக்கலாக.

முகம் கருத்த போதிலும் சுபாஷ் “நீங்க என்ன வேணா நினைச்சிக்கோங்க, காவேரி உங்களோட வர மாட்டா….” என்றான் உறுதியுடன். 

கதிருக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை. காவேரியை இரண்டு அறைவைத்து இழுத்துக் கொண்டு செல்லத்தான் நினைத்தான். இவர்களோ இரண்டு பேர். அந்தப் பக்கம் சுபாஷின் நண்பர்கள் ஏழெட்டுத் தடியன்கள் இருந்தார்கள். இவன் எதாவது செய்யப்போய், அவர்கள் காவேரியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டால் கஷ்டம் என்று பொறுமையுடன் பேசினான். 

அவருக்குத் தான் நம்ம குடும்பத்தைப் பத்தி தெரியாது… உனக்குமா அக்கறை இல்லை. நம்ம அம்மா, அப்பாவை பத்தி நினைச்சு பார்த்தியா? அவங்களால இந்த அவமானத்தைத் தாங்கிக்க முடியும்னு நினைக்கிறியா. கண்டிப்பா சொல்றேன் காவேரி அவங்க உயிரையே விட்டுவாங்க. என்னால அந்தக் கொடுமைய எல்லாம் பார்க்க முடியாது… நான் இப்படியே எங்கையாவது போய்டுவேன்.” என்றான் கதிர் குரல் தழு… தழுக்க,

கதிர் அவ்வளவு சொல்லியும் காவேரி அழுதாளே தவிரஅவள் நின்ற இடத்தில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. சந்தியா தான் காவேரி வந்துவிட மாட்டாளா என்று தவியாகத் தவித்தாள். காவேரியை பார்த்த கதிர், இனி அவள் சுபாஷை விட்டு வரமாட்டாள் என்று புரிந்து கொண்டவன் “நீ என்னோட இப்ப வா… நானே அப்பாக்கிட்ட பேசி உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நம்மைப் பெத்து வளர்த்தவங்க பேச்சை கேட்கலைன்னாலும், அவங்க வயிறை எரிய வச்சிட்டுப் போறது நல்லது இல்ல காவேரி. என்னோட உயிரை கொடுத்தாவது, நான் கண்டிப்பா உங்களைச் சேர்த்து வைக்கிறேன்…” என்றான். 

அப்போதும் காவேரியும், சுபாஷும் நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்த சந்தியாவை அருகில் இழுத்த கதிர் “உனக்குத் தெரியும் அத்தை எத்தனை கோவில் ஏறி, இறங்கி விரதம் இருந்து பெத்த பொண்ணு சந்தியான்னு, அவ மேல சத்தியம் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன், நம்பி என்னோட வா…” என்றான் சந்தியாவின் தலையில் கைவைத்து.

காவேரிக்கு தெரியும் கதிர் சந்தியாவை விரும்புவது. அதோடு தான் திருமணம் செய்யப் போகும் பெண் மேல் அண்ணன் சத்தியம் செய்கிறான் என்றால், உண்மையாகவே தங்களைச் சேர்த்துவைப்பான் என்று நம்பியவள், சுபாஷை பார்த்து “நான் அண்ணனோட போறேன்…” என்றாள்.

சுபாஷும் காவேரியின் கண்களில் தெரிந்த நம்பிக்கையைப் பார்த்து சரி என்றான். ஒரு காரில் சந்தியாவையும், காவேரியையும் அழைத்துக்கொண்டு கதிரும், சோலையும் கிளம்பினார்கள். காரில் யாரும் யாரோடும் பேசவில்லை. நேற்று சோலையின் கடைக்கு வந்த ஒருவன் சுபாஷ், காவேரியின் காதலை பற்றிச் சொல்ல, கதிரிடம் எதற்கும் சொல்லிவிடுவோம் என்று செல்லில் அழைத்துச் சோலை விஷயத்தைச் சொன்னான். 

அப்போது அவனுக்குமே சுபாஷும், காவேரியும் இன்று திருமணம் செய்து கொள்ளப்போவது பற்றித் தெரியாது.  எதேட்சையாக இன்று கடைக்குச் சரக்கு வாங்க பக்கத்துக்கு ஊருக்கு கிளம்பிய சோலை சந்தியாவையும், காவேரியையும் பஸ் ஸ்டாண்டில் பார்க்க, காவேரியின் அதிகப்படியான ஒப்பனை அவனுக்குச் சந்தேகத்தைக் கிளப்ப, இருவரையும் தொடர்ந்து சென்றான்.

 சோலை சொன்ன விஷயத்தைக் கேட்ட கதிருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் பெற்றோரிடம் சொல்வதை விட, நாமே காவேரியிடம் நேரில் சென்று பேசுவோம் என்று சென்னையில் இருந்து கிளம்பிவந்தான். அவன் இரவு தாமதமாகக் கிளம்பியதால்காலையில் அவன் ஊர் வந்து சேர நேரமாகிவிட்டது. 

அவன் வந்த போது காவேரி வீட்டில் இல்லை. அவளும், சந்தியாவும் மதுரைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று அவன் அம்மா சொன்ன போது கூட, கதிர் பெரியதாக எதையும் நினைக்கவில்லை. அவள் வரட்டும் பேசிக்கொள்வோம் என்று தான் நினைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!