Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 8 2

“அவங்க இனத்துல இருக்குற ஒரு சின்ன பையனுக்கு நீங்க வாங்கிக் கொடுத்ததையே அவங்க ஏத்துக்கலையே சார்? அப்படி இருக்கும் போது உங்களை எப்படி அவங்க மாப்பிள்ளையா ஏத்துக்குவாங்க?”, என்று வெற்றி கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தான் மாதவன். 

“உங்களை பயப்பட வைக்கணும்னு நான் இதைச் சொல்லலை சார். நிறைய சிக்கல் இருக்கும். நீங்க கலங்க கூடாதுன்னு தான் சொல்றேன்”

 

“சரி வெற்றி, என்ன நடக்குதுன்னு பாக்கலாம். இந்த பையை வீட்ல வைங்க. நான் வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான். 



Advertisement

 

டவர் கிடைக்கும் இடம் சென்று  வீட்டுக்கு அழைத்தான். போனை எடுத்த கீதா “உனக்கு ஆயுசு நூறு டா. நினைச்சேன், பண்ணிட்ட?”, என்றாள். 

 

Advertisement

“ஏதாவது பொண்ணு பாத்து வச்சிருக்கேன்னு இந்த அம்மா குண்டை போடப் போகுதா?”, என்று அதிர்ந்தவன் “என்ன மா?”, என்று கேட்டான். 

Advertisement

 

“இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கிளம்புறேன் டா எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன்”

 

Advertisement

“எந்த ஊருக்கு மா போற?”

 

“அங்க உன் கிட்ட தான் டா வரேன். நாளைக்கு காலைல வந்துருவேன். ஒழுங்கா வண்டி அனுப்பிரு”

 

“என்ன மா சொல்ற? அக்காவை விட்டு எப்படி வருவ?”

 

“அவ மாமியார் கூட இருக்காங்க டா”

 

“அவங்க இருந்தாலும் நீ இருக்குற மாதிரி வருமா?”

 

“அதை அங்க வந்து சொல்றேன். எனக்கும் என் மகன் கூட ஒரு வாரம் இருக்கணும்னு தோணாதா? நீ என்னடான்னா வர வேண்டாம்ங்குற மாதிரி பேசுற?”

 

“ஐயோ தாயே, நான் ஒண்ணும் சொல்லலை. நீ வா”

“சரி டா, அந்த பொண்ணு எப்படி இருக்கா?”

 

“எந்த பொண்ணு?”

 

“அதான் அழகா இருப்பான்னு அன்னைக்குச் சொன்னியே?”

 

“நல்லா இருக்கா போதுமா?”

 

“சரி டா, நாளைக்கு பாக்கலாம். உன் மருமகன் அழுறான். என்னன்னு பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள். அம்மாவின் வருகையைப் பற்றின குழப்பத்துடன் வீட்டை நோக்கி நடந்தான் மாதவன். 

 

அடுத்த நாள் காலை கீதாவை அழைப்பதற்காக கிளம்பி ஜீப்பைத் துடைத்துக் கொண்டிருந்தான் வெற்றி. “எங்கண்ணா காலைலே கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டாள் வெண்ணிலா. 

 

“நம்ம சாரோட அம்மா ஊர்ல இருந்து வராங்க மா. அதான் கூப்பிட போறோம். ஆமா உனக்கு ஏதாவது வாங்கணுமா?”

 

“ஆமாண்ணா, சில புக்ஸ் வாங்கணும். எழுதி தரவா?”, என்று கேட்டு அவனை ஆழம் பார்த்தாள். 

 

“ஐயோ வேண்டாம் மா, அன்னைக்கு ஒரு நாள் ஏதோ வாங்கிட்டு வரச் சொன்ன. நான் மாத்தி வாங்கிட்டு வந்து வீணாக்கிட்டேன். நீயும் எங்க கூட வரியா? சாரோட அம்மா வரதுக்குள்ள வாங்கிறலாம்”  

 

“கரும்பு தின்னக் கசக்குமா என்ன?”, என்று எண்ணிய படி “அஞ்சு நிமிசத்துல வந்துறேன் அண்ணா”, என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினாள்.

 

“கிளம்பலாமா வெற்றி?”, என்று கேட்ட படி வந்தான் மாதவன். ஐயையோ இந்த பொண்ணு வரதைப் பத்தி சார் கிட்ட கேக்கலையே?”, என்று எண்ணியவன் அவனைப் பாவமாக பார்த்தான்.

 

“என்ன ஆச்சு வெற்றி?”

 

“சார் வெண்ணிலாவும் நம்ம கூட வறேன்னு சொல்லுச்சு. ஏதோ புக்ஸ் வாங்கணுமாம்”

 

“அவளே வறேன்னு சொன்னாளா?”

 

“இல்லை சார், என்ன வாங்கணும்னு எழுதி தறேன்னு தான் சொல்லுச்சு. நான் தான் அது வந்தா பாத்து எடுக்கும்ல? அதுக்கு தான் வரச் சொன்னேன்”

 

“சரி பரவால்ல”, என்று சொல்லி விட்டான் மாதவன். வெண்ணிலா கிளம்பி வந்ததும் ஆண்கள் இருவரும் ஜீப்பில் முன்னால் ஏற வெண்ணிலா பின்னால் அமர்ந்தாள். 

 

வெண்ணிலா அடி கண்ணால் மாதவனைப் பார்த்த படியே வர மாதவனோ அவள் ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ள வில்லை. அவன் வெற்றியிடம் பேசிய படியே வந்தான். 

 

வெண்ணிலாவை ஒரு புக் ஸ்டால் முன்பு இறக்கி விட்ட வெற்றி “புக் வாங்கிட்டு இங்கயே நில்லு மா. நாங்க பஸ் ஸ்டாண்ட் போயிட்டு வரோம்”, என்று சொல்லி விட்டு ஜீப்பைக் கிளப்பினான். 

 

மாதவனின் பாராமுகம் மனதை அறுக்க அவனைப் பற்றி எண்ணிய படியே புத்தக நிலையத்துக்குள் சென்றாள் வெண்ணிலா. 

 

வெற்றியும் மாதவனும் சென்று அரை மணி நேரம் கழித்து தான் கீதா வரும் பஸ் அங்கே வந்தது. கீதா மற்றும் வெற்றி இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் மாதவன். 

 

பின் மூவரும் ஏறியதும் ஜீப் கிளம்பியது. கீதா வரும் வழியில் பேசிய படியே வர “கொஞ்ச நேரம் அமைதியா வா மா”, என்றான் மாதவன். 

 

ஆனாலும் கீதா எதையாவது கேட்டுக் கொண்டே வர “அம்மா எப்பவும் இப்படி தான் வெற்றி. தப்பா நினைக்காதீங்க”, என்றான் மாதவன். 

 

“ரொம்ப தான் டா மாதவா பன்ற. ஒரு சந்தேகம் கேட்டா சொல்ல மாட்டியா டா நீ?”, என்று கேட்டு அவனை முறைத்தாள் கீதா. 

 

“அம்மா கலகலப்பா பேசுறது நல்லா தான் சார் இருக்கு. அப்படியே வெண்ணிலா மாதிரி பேசுறாங்க”, என்றான் வெற்றி. 

 

“அது யாரு வெண்ணிலா? என்னை மாதிரியே பேசுவாளா?”, என்று சத்தமாக கேட்ட கீதா மகன் காதருகே குனிந்து “நீ அழகா இருக்கான்னு சொன்னியே? அந்த பொண்ணா டா?”, என்று கேட்டாள். 

 

என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மாதவன் அன்னையை முறைத்தான். அவனுடைய முறைப்பே அவள் தான் இவள் என்று கீதாவுக்கு புரிய வைத்தது. 

 

“ராம் தம்பியோட தங்கச்சி மா. நம்ம கூட தான் தங்கிருக்கா. இதோ இப்ப கூட புக் ஸ்டால்ல இறக்கி விட்டுட்டு தான் வந்துருக்கோம். அவளையும் ஏத்திட்டு தான் போகணும்”, என்றான் வெற்றி. 

 

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்”, என்று சொன்ன கீதா வெண்ணிலாவைப் பார்க்க ஆர்வமானாள். 

 

“கடவுளே இந்த அம்மா ஏதாவது சொதப்பி வைக்க கூடாதே. வீட்டுக்கு போன உடனே வனமங்கையைப் பத்தி பேசணும்”, என்று எண்ணிக் கொண்டான் மாதவன். 

 

வெண்ணிலா ஜீப்பில் ஏறியதும் “ஹாய் ஆண்ட்டி”, என்று சொன்னாள். அவளையும் அவளது அழகையும் பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்த கீதா அவள் பேசியதும் “ஹாய் மா, நீ தான் வெண்ணிலாவா? ரொம்ப அழகா இருக்க”, என்றாள். 

 

மாதவன் முன்பு அப்படி சொன்னது இயல்பிலே வெண்ணிலாவுக்கு வெட்கத்தைக் கொடுக்க “போங்க ஆண்ட்டி கிண்டல் பண்ணாதீங்க”, என்றாள்.

 

“உண்மை தான் மா. என் மகனே உன்னை அழகா இருக்கான்னு சொன்னான் தெரியுமா? என்ன டா? நீ சொன்ன தானே?”, என்று கீதா மாதவனிடம் கேட்க அவன் அன்னையை முறைத்துப் பார்த்தான். வெற்றியோ அதிர்ச்சியில் ஜீப்பை நிறுத்தி விட்டு மாதவனைப் பார்த்தான். 

 

மாதவன் முகம் கோபத்தில் சிவந்திருக்க தன்னை சமாளித்துக் கொண்டு ஜீப்பை இயக்கினான் வெற்றி. கீதா அப்படிச் சொன்னதும் தர்மசங்கடமாக மாதவன் வெண்ணிலாவைப் பார்க்க அவளோ தெனாவெட்டாக அவனைப் பார்த்தாள். அந்த பார்வையில் “உன்னை மடக்கியே ஆவேன்”, என்ற சவால் தெரிந்தது. 

 

அந்த பார்வை அவனுக்கு பிடிக்க வில்லை. இதை வளர விட்டால் ஆபத்து என்று புரிந்தது. அதனால் “நான் சொன்னது இவங்களை இல்லை மா. வேற பொண்ணைச் சொன்னேன். எதுவும் முழுசா தெரியாம சும்மா உளறிட்டு இருக்காத புரிஞ்சதா”, என்று அழுத்தி கீதாவிடம் சொன்னான். 

 

அவன் சொன்னதில் இருந்த அழுத்தமே கீதாவை மேலே பேச விட வில்லை. வெண்ணிலா முகமும் அவன் சொன்னதைக் கேட்டு கூம்பி போனது. வெண்ணிலா முகம் அப்படி ஆனதைக் கண்ட கீதா மகனைக் கண்டிக்க வில்லை என்றாலும் அவன் செய்தது தவறு என்று எண்ணி அவனை முறைத்தாள். தாயின் பார்வை புரிந்தாலும் அப்போதைக்கு அவன் எந்த விளக்கமும் கொடுக்க வில்லை. 

 

வெற்றியும் “வனமங்கையை தான் சார் சொல்லிருக்காங்க போல? அவங்க அம்மா தான் தப்பா நினைச்சிட்டாங்க”, என்று எண்ணிக் கொண்டான்.  

அதன் பின் அந்த ஜீப்பில் அமைதி மட்டுமே நிலவியது. இது வரை இருந்த கலகலப்பு போய் ஒரு வித இறுக்கம் குடி கொண்டது. வீடு வரும் வரைக்கும் யாரும் யாரிடமும் பேச வில்லை. 

 

ஜீப்பில் இருந்து இறங்கிய வெண்ணிலா யாரையும் பார்க்காமல் வீட்டுக்குள் ஓடி விட்டாள். அதைக் கண்ட கீதா “என்ன டா பழக்கம் இது மத்தவங்களை இன்சல்ட் பன்றது? உன்னால பாரு அந்த பொண்ணு முகமே மாறிட்டு. உனக்கு கோபம் எல்லாம் படத் தெரியுமா மாதவா?”, என்று கோபமாக கேட்டாள் கீதா. 

 

கீதா திட்டியதைக் கண்டு வெற்றி மாதவனை சங்கடமாக பார்க்கவும் “இங்க வச்சே திட்டணுமா? முதல்ல உள்ள போ மா”, என்றான் மாதவன். 

 

அவனை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் கீதா. சிறிது நேரம் வெற்றியிடம் வேலை விஷயம் பேசி விட்டு உள்ளே சென்ற மாதவனை வரவேற்றது கீதாவின் கோப முகம் தான். 

 

அன்னையைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன் “என்ன மா அமைதியாகிட்ட? வீடு எப்படி இருக்கு? காடு எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை”, என்று கேட்டான்.

 

அப்போதும் கீதா அமைதியாக இருக்கவும் “அந்த பொண்ணு முன்னாடியே நான் அவளை அழகா இருக்கேன்னு சொன்னதைச் சொல்ற? அந்த பிள்ளை என்னைப் பத்தி என்ன நினைக்கும்னு வேண்டாம்? தப்பு பண்ணினது நீ. ஆனா என் மேல கோபப் படுற?”, என்று கேட்டான். 

 

அப்போது தான் கீதாவுக்கும் தன்னுடைய தவறு உரைக்க “சாரி டா மாதவா, நான் தான் உன்னைத் தப்பா நினைச்சிட்டேன்”, என்றாள்.

 

வனமங்கையைப் பற்றி இப்போது சொல்லலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியவன் சொல்லி விடலாம் என்று சொல்லி “அம்மா உன் கிட்ட…. ஒரு விஷயம் பேசணும்”, என்று ஆரம்பித்தான். 

 

“பேச்செல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல நான் போய்க் குளிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் கீதா. 

 

காதல் தொடரும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!