Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 8 1

அத்தியாயம் 8

 

மொழியின் அருமையை



Advertisement

உணர்கிறேன் உன் மௌனத்தில்!!!

 

தன்னுடைய மனதை வனமங்கையிடம் சொன்ன பிறகு அவள் மனதையும் அறிந்த பிறகு மாதவனிடத்தில் மிகப் பெரிய மாற்றம். எப்போதும் கனவில் மிதப்பது போலவே இருந்தான். தனிமையையே அதிகம் நாடினான். மற்றவர்கள் அவனை வியப்பாக பார்த்தார்கள். 

Advertisement

 

Advertisement

காரணம் தெரியாததால் விட்டு விட்டார்கள். ஆனால் உண்மை அறிந்த வெற்றி மற்றும் வெண்ணிலாவுக்கு அவன் நிலைமை தெளிவாக புரிந்தது. மாதவனின் சந்தோஷம் வெற்றிக்கு சந்தோஷத்தை தந்தது என்றால் வெண்ணிலாவுக்கு எரிச்சலைத் தந்தது. 

 

அதே நேரம் தன்னுடைய கையில் இருந்த மூலிகையை வைத்தியரிடம் கொடுத்தாள் வனமங்கை. 

Advertisement

 

அதை வாங்கிய வைத்தியர் அவளுடைய முகத்தைப் பார்த்தார். அவள் முகத்தில் இத்தனை நாள் இல்லாத தெளிவு இருப்பதைக் கண்டவர் அவளைக் கண்டு புன்னகைத்தார். பின் அவள் தலையில் தன்னுடைய கையை வைத்தவர் “நல்லா இருப்ப டா, இரு குச்சிக்கு ஒரு கஷாயம் தரேன். கொண்டு போய்க் கொடு. பய கொஞ்சம் தெம்பா இருப்பான்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். 

 

காயத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த வனமங்கை அதை முதலில் குச்சியைக் குடிக்க வைத்தாள். பின் மாதவன் கொடுத்த  பையை குலசேகரனிடம் நீட்டினாள்.  

 

“என்னதுக்கா இது?”, என்று ஆர்வமாக கேட்டான் குச்சி. 

 

“அந்த சார் தான் இதை உன் கிட்ட கொடுக்கச் சொன்னார்”, என்று அவள் சொன்னதும் அவன் ஒன்றும் அதை ஆசையாக வாங்கி விட வில்லை. அவன் ஆர்வமும் அவனை விட்டுச் சென்றிருந்தது. 

 

“அவர் கொடுத்ததை எதுக்குக்கா நீ வாங்கிட்டு வந்த?”, என்று கேட்டான். 

 

“எனக்கு கொடுத்துருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன் குச்சி. ஆனா உனக்கு ஆசையா கொடுக்கச் சொன்னார்”

 

“என்னமோ அவன் கொடுத்த எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்ன மாதிரி சொல்ற?”, என்று அவள் மனது அவள் அவனுடைய கையணைப்பில் இருந்த தருணத்தை நினைவு படுத்தி கேலி செய்தது.

 

அது நினைவு வந்ததும் அவள் முகம் சிவந்தது. சிவந்த முகத்தை தம்பிக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டாள். “எனக்கும் இது வேண்டாம்க்கா, நாளைக்கே அந்த சார் கிட்ட திருப்பி கொடுத்துறேன்”, என்றான் குச்சி. 

 

“அன்னைக்கு அவருக்கு நீ எதுக்கு தேன் எடுத்துட்டு போன குச்சி?”

 

“அன்புல தான் அக்கா”

 

“அதே அன்புல தான் அவர் உனக்கு இதைக் கொடுத்துருக்கார். அன்னைக்கு நீ கொண்டு போன தேனை அவர் எனக்கு வேண்டாம்னு சொல்லி உன் கிட்ட திருப்பி கொடுத்திருந்தா உனக்கு கஷ்டமா இருந்துருக்காதா? இப்ப நீ அதை திருப்பிக் கொடுத்தா அவருக்கு கஷ்டமா தான இருக்கும்? அன்புல கொடுத்ததை உதாசீனப் படுத்தக் கூடாது டா குச்சி”

 

“உனக்கு அவர் மேல கோபம் இல்லையாக்கா? அப்படினா நான் இதை வாங்கிக்கிறேன்”, என்று சொல்லி அதை வாங்கியவன் ஆர்வமாக அதை பிரித்துப் பார்த்தான். 

 

அவனுக்கென்று உடை, சில விளையாட்டுப் பொருள்கள், லெதர் பெல்ட், வீட்டுக்கு போட என்று செருப்பு என பல பொருள்கள் இருந்தது. 

 

அதை எல்லாம் பார்த்து சிறு சிரிப்புடன் தன்னுடைய அக்காவைப் பார்த்தான். 

 

அவன் சிரிப்புக்கான காரணம் புரியாமல் “என்ன டா?”, என்று கேட்டாள். 

 

“இதில் எதை நான் போட்டுக்கிட்டாலும் நம்ம ஆளுங்க ஒரு மாதிரி பாப்பாங்க. அப்பாவே இதை எல்லாம் பாத்து ஏதுன்னு கேப்பார்க்கா”

 

“என்ன, என்னைப் பத்தி ஏதோ பேசுற மாதிரி இருக்கு?”, என்று கேட்ட படி உள்ளே  வந்தார் தேனப்பன். அவரைக் கண்டதும் இருவரும் அதிர்ந்து போனார்கள். 

 

தன்னுடைய கையில் இருந்த கவரை தனக்கு பின்னால் மறைத்தான் குச்சி. அதைக் கண்டு கொண்ட தேனப்பன் “என்னது டா குச்சி எதையோ மறைக்கிற?”, என்று கேட்டார். 

 

“ஒண்ணும் இல்லை பா”

 

“இல்லை நான் பாத்தேன். என்ன அது? வனமங்கை என்னது அது? ரெண்டு பேரும் என் கிட்ட இருந்து மறைக்கிறீங்களா? ரெண்டு பேர் முகமுமே சரி இல்லையே?”, என்று கேட்டதும் இருவரும் தலை குனிந்தார்கள். 

 

அதுவே அவர்கள் தவறை அவருக்கு புரிய வைக்க கோபமாக அவர்கள் அருகில் வந்த தேனப்பன் குச்சி கையில் இருந்த கவரை பிடுங்கிப் பார்த்தார்.

 

அதில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனவர் “இது ஏது? யார் வாங்கித் தந்தா?”, என்று கேட்டார். 

 

“அந்த சார் தான்”, என்று தடுமாற்றத்துடன் உரைத்தான் குச்சி.  

 

“நீ வாங்கிட்டு வந்தியா குச்சி?”

 

“நான் தான் பா மூலிகை பறிக்கப் போகும் போது வாங்கிட்டு வந்தேன்”, என்று வனமங்கை சொன்னதும் அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்தார். 

 

அவள் அதிர்ந்து விழிக்க “அப்பா அக்காவை எதுக்கு அடிச்ச?”, என்று கேட்டான் குச்சி. 

 

“உனக்கும் நாலு வைக்கவா? வாயை மூடிட்டு இருக்கணும் சொல்லிட்டேன்”, என்று குச்சியை மிரட்டியவர் வனமங்கை புறம் திரும்னி “என்ன வனமங்கை இதெல்லாம்? நீ அந்த காட்டுக்குள்ள போனதே தப்பு. இதுல அவன் கொடுத்தான் இவன் கொடுத்தான்னு வாங்கிட்டு வரியா? என்ன பழக்கம் இது? நம்ம ஆளுங்க யாராவது பாத்தா நிலைமை வேற மாதிரி ஆகிருக்கும்”, என்றார். 

 

கன்னத்தில் கை வைத்த படி வனமங்கை அழுது கொண்டே இருக்கவும் “எனக்கு தான் பா வாங்கிக் கொடுத்துருக்காங்க. அக்கா என்ன பண்ணும்? அக்காவை திட்டாதே”, என்றான் குச்சி. அவன் கண்களிலும் கண்ணீர் பொங்கியது. 

 

அவனுக்கு சமமாக மண்டியிட்டு அமர்ந்த தேனப்பன் “இந்தா பாரு சாமி, ஆம்பளை என்ன தப்பு பண்ணினாலும் பெருசா வராது. ஆனா பொம்பளைப் புள்ளை தப்பு பண்ணினா நம்ம இனத்துல தாங்க முடியாத தண்டனை கொடுப்பாக. அந்த நிலைமை உன் அக்காவுக்கு வரக் கூடாதுன்னு தான் உனக்கு துணைக்கு வச்சிருக்கேன். ஆனா நீ என்னடான்னா அவ கூட சேந்து ஊரைச் சுத்துற? இதுல அந்த பாரஸ்ட் காரனுங்க கூட வேற ரெண்டு பேரும் பேசுறீங்க? எனக்கு என்ன ஆகுமோன்னு பக்கு பக்குன்னு இருக்கு. இதுக்கு உடனே ஒரு முடிவு கட்டுறேன். நம்ம பக்கத்து மலைல உன் அத்தைக்காரி ஒருத்தி இருக்கா. அவ மகனுக்கு உன் அக்காவைக் கேட்டா. நான் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சேன். ஆனா சீக்கிரம் கொடுக்குறது தான் நல்லதுன்னு தோணுது. ஏதாவது பெருசா நடக்குறதுக்குள்ள கல்யாணம் நடக்கணும். இனி ரெண்டு பேரும் மூலிகை பறிக்க போக கூடாது. நான் வைத்தியர் ஐயா கிட்ட சொல்லிறேன்”, என்றார். 

 

“அப்பா கல்யாணம் எல்லாம் வேண்டாம் பா”, என்று கண்களில் நீருடன் சொன்னாள் வனமங்கை. 

 

“நான் சொன்னது சொன்னது தான். கஞ்சி தூக்கை வச்சிட்டுப் போனது எவ்வளவு நல்லதா போச்சு? இல்லைன்னா உங்க திருட்டுத் தனம் எனக்குத் தெரியாமலே போயிருக்கும்”, என்று சொல்லி விட்டு அந்த பையைத் தூக்கி தன்னுடைய உடைகளுக்கு அடியில் வைத்தார். 

 

“இனி ரெண்டு பேரும் வீட்டை விட்டு போனீங்க? அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டு நேராக வைத்தியரைத் தான் காணச் சென்றார். 

 

“வா தேனப்பா, என்ன இந்நேரம் வந்துருக்க? ஆடு பத்த போகலையா?”

 

“ஆட்டை பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட விட்டுட்டு வந்துருக்கேன் சாமி”

 

“என்ன முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”

 

“இன்னும் என் பிள்ளைகளை அந்த வனத்துக்குள்ள அனுப்பாதீங்க சாமி”

 

“என்ன ஆச்சு தேனப்பா?”

 

“பொம்பளைப் பிள்ளையை பெத்து வச்சிருக்கேன்.  அதை நல்ல படியா கரை ஏத்தணுமே? ஏதாவது விபரீதம் ஆச்சுன்னா, இங்க கொடுக்குற தண்டனையை அந்த பிஞ்சு தாங்குமா? அவளுக்கு ஒண்ணுன்னா என் மகன் தான் தாங்குவானா? எனக்கு அதுங்க ரெண்டும் நல்லா இருக்கணும். அதான் மகளுக்கு கல்யாணத்தை முடிக்கலாம்னு பாக்குறேன். இனி அவங்களை மூலிகை பறிக்க அனுப்பாதீங்க”

 

“சரி தேனப்பா, நீ இவ்வளவு சொன்ன பிறகு நான் அனுப்புவேனா? நாளைக்கு ஒரு நாள் மட்டும் ஏதாவது ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிக் கொடு. அதுக்கப்புறம் நானே போய்க்கிறேன்”, என்றதும் சரி என்று சொல்லி விட்டு “யாரை அனுப்பலாம்?”, என்ற யோசனையுடனே வீட்டுக்குச் சென்று விட்டார்.  வைத்தியரோ வனமங்கையை எண்ணி கவலையில் ஆழ்ந்தார். 

 

வீட்டுக்கு வந்த தேனப்பன் கண்ணில் விழுந்தார்கள் பிள்ளைகள். வனமங்கை ஒரு மூலையில் ஒடுங்கியிருக்க அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருந்தான். இருவர் முகத்திலும் கண்ணீர்க் கோடுகள். இருவரைக் கண்டு தேனப்பனுக்கும் கவலையாக இருந்தது. 

 

அவர்களை ஒரு பார்வை பார்த்தவர் அவர்களுக்கு பிடித்த விதமாக சமைத்து அவர்களை சாப்பிட அழைத்தார். பின் என்ன நினைத்தாரோ இருவருக்கும் ஊட்டி விட்டார். அவர் கரம் வனமங்கையின் அடி பட்ட கன்னத்தை வருடியது. அவளும் தகப்பனின் மடியில் ஆறுதல் தேடி படுத்துக் கொண்டாள். 

 

அடுத்த நாள் காலை பிள்ளைகள் இருவரையும் மற்ற ஆட்களுடன் ஆடு மேய்க்க அனுப்பி விட்டு மூலிகை வாங்க தேனப்பனே சென்றார். அவர் கையில் மாதவன் கொடுத்த பையும் இருந்தது. 

 

அவரைக் கண்டு குழம்பிய மாதவன் “நீங்க…”, என்று இழுத்தான். 

 

“நான் குச்சியோட அப்பா. வைத்தியர் அனுப்பினார்”, என்றதும் “வணக்கம்”, என்றான். வருங்கால மாமனார் என்ற பரபரப்பும் அவனுக்கு வந்திருந்தது. ஆனால் அவர் அடுத்து செய்ததில் அவன் பரபரப்பு அமிழ்ந்து போனது. 

 

“இந்தாங்க, நீங்க வாங்கிக் கொடுத்தது”, என்று சொல்லி அந்த பையை நீட்டினார் தேனப்பன். 

 

“ஐயா இது நான் குச்சிக்கு….”

 

“வேண்டாங்க, எதுவுமே வேண்டாம். நீங்க யாரு எங்களுக்கு வாங்கிக் கொடுக்க? நீங்க வேற நாங்க வேற. எங்க பிள்ளைகட்ட பேசி எங்களுக்கு தீராத அவப் பெயரை வாங்கித் தந்துறாதீங்க. என் பொஞ்சாதி செத்த பிறகு என் பிள்ளைகளுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எங்க கூட்டை கலைச்சிறாதீங்க சாமி”, என்று சொல்லி அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவர் “மூலிகை தாங்க நான் போறேன்”, என்றார். 

 

அவர் பேசியது மனதுக்கு கஷ்டமாக இருந்தது மாதவனுக்கு. “ஐயா நான் வந்து….”, என்று ஆரம்பித்தான். 

 

“வேண்டாம் சாமி, உங்க கிட்ட பேசுற அளவுக்கு நான் பெரிய மனுஷன் இல்லைங்க. வந்த வேலை முடிஞ்சா நான் கிளம்பிருவேன்”, என்று அவர் சொல்ல அதற்கு மேல் அவரிடம் பேசாமல் மூலிகையைப் பறித்துக் கொடுத்தான். அவரும் அதை வாங்கிக் கொண்டு அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்று விட்டார். 

 

அவனுடைய கையில் இருந்த அந்த பை அவனுக்கு கனமாக இருந்தது. அதை சுமந்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். வனமங்கை எப்படி இருக்கிறாளோ என்று அவன் மனது கவலை கொண்டது. அவன் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு சார்? போகும் போது சந்தோஷமா போனீங்க? வரும் போது இப்படி இருக்கீங்க? இது என்ன பை?”, என்று கேட்டான் வெற்றி. 

 

“இது நான் குச்சிக்கு வாங்கிக் கொடுத்தது வெற்றி. அதை அவனோட அப்பா வந்து திருப்பிக் கொடுத்துட்டுப் போய்ட்டார்”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!