Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 9 1

அத்தியாயம் 9

நீ என்னை நெருங்குகையில்

என் துயரங்கள் அனைத்தும்

சிதறித் தான் போகிறது!!!



Advertisement

கீதா குளித்து முடித்து வரும் போது சாப்பாடு தயாராக இருந்தது. அம்மாவும் மகனும் பேசிய படியே உண்ண ஆரம்பித்தனர்.

Advertisement

அப்போது “எதுக்கு மா அக்காவை அங்க தனியா விட்டுட்டு வந்த? ரெண்டு குழந்தைகளையும் பாத்துக்க அவ கஷ்டப் படுவா?”, என்று சொன்னான் மாதவன்.

Advertisement

“அதான் அவங்க மாமியார் வந்துருக்கங்கன்னு சொன்னேன்ல டா? அவங்க நல்லா பாத்துக்குவாங்க”

Advertisement

“எல்லாரும் நம்ம வீட்லயா இருக்காங்க”

“ஆமா”

“அப்படின்னா அவங்களையும் நீ தானே அங்க இருந்து கவனிக்கணும்?”

“அதுக்கில்லை டா. பேரப் பிள்ளைங்க கூட ஒரு வாரம் இருக்கணும்னு அவங்க சம்பந்தி வீடுன்னு கூட பாக்காம நம்ம வீட்ல வந்து தங்கிருக்காங்க. அந்த அம்மா மட்டும் வந்திருந்தா கூட பரவால்ல. சம்பந்தியும் வந்துருக்கார். எந்த ஈகோவும் இல்லாம நம்ம வீட்ல வந்து தங்கிருக்காங்க. உங்க அக்காவையும் குழந்தைகளையும் நல்லாவும் பாத்துக்குறாங்க. அவங்களே அவ்வளவு இறங்கி வரும் போது நாமளும் நம்ம மகளை கொஞ்சம் அவங்களுக்காக விட்டுக் கொடுக்கணும்ல?”

“எதுக்கு? எனக்கு புரியலை? இதுல விட்டுக் கொடுக்குறது எல்லாம் எங்க வருது?”

“இல்லை டா மாதவா. குழந்தையை பரமறிக்கிறது ஒரு கலை. அதுல பல விதம் உண்டு. நான் உங்களை வளத்த மாதிரி நான் பேரப் பிள்ளையை கவனிப்பேன். அவங்க அவங்க பிள்ளைகளை வளத்த மாதிரி கவனிப்பாங்க. அதுல நான் செய்றது அவங்களுக்கு ஏதாவது பிடிக்காதது மாதிரி ஆகிட்டா வனிதாவை தான் தப்பா நினைப்பாங்க. அதான் மகன் கூட இருந்துட்டு வறேன்னு சொல்லிட்டு வந்தேன்”

“நம்ம வந்த உடனே நம்ம கிட்ட பொறுப்பைத் தள்ளிட்டு விட்டுட்டு போயிட்டாங்கன்னு நினைக்க மாட்டாங்களா மா?”

“அதுக்கு தான் டா ஒரு பொய் சொல்லிட்டு வந்துருக்கேன்”

“பொய் சொல்றது உனக்கு பெரிய விஷயமா? எங்க பாட்டி கிட்ட நீ சொல்லாத பொய்யா?”

“அதை விடு டா, அதெல்லாம் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள்”

“சரி சரி சொல்லு, என்ன தான் சொல்லிட்டு வந்த?”

“உனக்கு காய்ச்சல்னு தான்”

“என்னது? எனக்கு காச்சலா? கடைசில என்ன தான் இழுத்து விட்டுட்டு வந்துருக்கியா?”

“ஆமா டா மாதவா. சாதாரண காச்சல் இல்லை. விஷக் காச்சல்னு வேற சொல்லி வச்சிருக்கேன். நாள பின்ன விசாரிச்சா உண்மையை உளறிராத. நாலு நல்ல விஷயம் நடக்கும்னா பொய் சொன்னா தப்பில்லை டா”, என்று கீதா சொன்னதும் அடக்க முடியாமல் சிரித்தான் மாதவன்.

அதன் பின்னர் வனமங்கையைப் பற்றிச் சொல்லலாம் என்று அவன் எண்ண கீதாவின் முகத்தில் சோர்வு அதிகமாக தெரிந்தது. அவனுக்கும் வேலை இருக்கவே அவளை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவன் வேலைக்கு கிளம்பி விட்டான். அவன் திரும்பி வரும் போது வாசலில் அமர்ந்து வெண்ணிலாவும் கீதாவும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அதைக் கண்ட மாதவனுக்கு திக்கென்று இருந்தது.

“கடவுளே இந்த வெண்ணிலா பொண்ணு எதையாவது சொல்லித் தொலைக்க கூடாது. அதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும். இன்னைக்கு எப்படியாவது வனமங்கையை பத்தி அம்மாவிடம் சொல்லி விட வேண்டும்”, என்று எண்ணியவனுக்கு இன்று வெள்ளிக் கிழமை என்பது நினைவு வந்தது. அப்படி என்றால் வனமங்கையை அம்மாவுக்கு நேரடியாகவே காட்டி விடலாம் என்று முடிவு செய்து “அம்மா கிளம்பு, கோவிலுக்கு போயிட்டு வருவோம்”, என்றான்.

அவன் எதற்காக கோவிலுக்குச் செல்கிறான் என்றும் அவன் என்ன முடிவு எடுத்திருக்கிறான் என்றும் அவன் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள் வெண்ணிலா. அவளால் அவர்கள் செல்வதை தடுக்க முடியாது என்பதால் “கடவுளே அந்த பெண்ணை இந்தக் ஆண்ட்டிக்கு பிடிக்க கூடாது”, என்று கடவுளிடம் அவசரமாக வேண்டுதல் வைத்தாள்.

“இங்க கோவில் எல்லாம் இருக்கா டா? சரி போகலாம். வெண்ணிலா நீயும் வாயேன். போயிட்டு வருவோம்”, என்று கீதா சொன்னதும் மாதவன் முகம் சுருங்க வெண்ணிலா முகம் ஒளிர்ந்தது.

“அம்மா அவங்க எதுக்கு? அவங்களுக்கு வேலை இருக்கும். நாம மட்டும் போவோம்”, என்று சொன்னவன் வெண்ணிலாவை முறைத்தான். அந்த பார்வையே நீ வரக் கூடாது என்று சொல்லியது.

“அவ படிக்கிற வேலை தான் டா செய்றா. இவ்வளவு நேரம் படிச்சிட்டு தான் டா இருந்தா. அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்சேசன் வேணும்ல? அவளையும் கூட்டிட்டு போகலாம்”, என்றதும் அவனால் எதுவும் சொல்ல முடியாமல் போனது. “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று வெண்ணிலா சொல்லி விட “எனக்கு எதிரியே நீ தான் மா”, என்று அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்ப போனான்.

வெற்றிப் புன்னகை புரிந்த வெண்ணிலா “இருங்க ஆண்ட்டி சுடிதார் போட்டுட்டு வரேன்”, என்றாள்.

“கோவிலுக்கு சேலை கட்டினா நல்லா இருக்கும் டா. சேலை  வச்சிருக்கியா?”

“இருக்கு ஆண்ட்டி”

“அப்புறம் என்ன? அதையே கட்டிட்டு வா”, என்று சொல்லி விட்டு கீதாவும் கிளம்பப் போனாள்.

அம்மாவும் மகனும் கிளம்பி வெளியே வரும் போது வெண்ணிலா அழகான பச்சைப் புடவை உடுத்தி தயாராக இருந்தாள்.

“டேய் மாதவா, அங்க பாரேன். வெண்ணிலா எவ்வளவு அழகா இருக்கா. பேசாம அவளோட அண்ணன் கிட்ட நான் பொண்ணு கேக்கவா டா?”, என்று கீதா சொன்னதும் கடுப்பானவன் “அம்மா வாயை மூடிட்டு வா. இல்லை உன்னை நானே கொன்னுருவேன்”, என்றான். மனதுக்குள் பாம்பு கூட அழகு தான் என்று எண்ணிக் கொண்டான்.

“வர வர உனக்கு கோபம் ரொம்ப தான் டா வருது. என்னைக்கு தான் உனக்கு கல்யாணம் முகூர்த்தம் வரப் போகுதோ தெரியலை?”, என்று புலம்பிய படியே வெண்ணிலா அருகில் சென்ற கீதா “அழகா இருக்க மா”, என்று சொல்லி அவள் கன்னம் கிள்ளினாள்.

அதைக் கண்டு வெண்ணிலா அவனை மிதப்பாக பார்க்க அவனுக்கோ உள்ளுக்குள் பொறுமியது. “கடவுளே நான் ஒண்ணு நினைக்கிறேன். ஆனா நீ வேற ஒண்ணு நினைக்கிற போலயே?”, என்று எண்ணிக் கொண்டு ஜீப் அருகே சென்றான். அங்கே வந்த வெற்றி ஜீப்பை எடுக்கப் போக “நீங்க இருங்க, உங்க கால்ல உள்ள புண் இன்னும் சரியாகலை வெற்றி. நாங்க போயிட்டு வரோம்”, என்றான் மாதவன்.

வெண்ணிலாவும் அவர்களுடன் கிளம்பி இருப்பதைப் பார்த்த வெற்றி மாதவனை கேள்வியாக பார்க்க “எல்லாம் அம்மா தான்”, என்னும் விதமாய் கீதாவை கண்ணைக் காட்டினான் மாதவன்.

“சார் எதுக்கும் சீக்கிரம் அம்மா கிட்ட உண்மையைச் சொல்லிருங்க”, என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி விட்டு சாவியைக் கொடுத்தான் வெற்றி. அவன் கண்கள் வெண்ணிலாவை முறைத்துப் பார்க்கவும் தவறவில்லை. அவளோ வெற்றியின் பார்வையை எதிர்க் கொள்ள தைரியம் இல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.

டிரைவர் சீட்டில் ஏறி ஜீப்பைக் கிளப்பினான் மாதவன். பெண்கள் இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் கோவிலுக்கு சென்ற போது கோவிலைச் சுற்றிப் பெருக்கிக் கொண்டிருந்த வனமங்கை ஜீப்பின் சத்தம் கேட்கவும் ஆவலாக திரும்பிப் பார்த்தாள்.

வருவது மாதவன் என்றதும் அவளுக்குள் ஒரு இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவனை அருகில் காணலாம். அவர்கள் மலை ஏறி வருவதற்குள் சீக்கிரம் பெருக்கி விடலாம் என்று எண்ணி பெருக்கினாள்.

அவர்கள் மலை ஏறி வந்த போது அவர்கள் கண்ணில் பட்டது குப்பையை அள்ளிக் கொண்டிருந்த வனமங்கை தான். மாதவனின் கண்ணைப் பார்த்தே அந்த பெண் தான் வனமங்கை என வெண்ணிலாவுக்கு புரிந்தது. கடுகடுத்த முகத்துடன் அவளைப் பார்த்தாள்.

“வெண்ணிலா இங்க பாரேன், இந்த பொண்ணு புடவை கட்டிருக்குறதை. ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல?”, என்று கேட்டாள் கீதா. கீதா சொன்னது சாதாரண வார்த்தை தான். அதை பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். கிண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வனமங்கை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று எண்ணி அவளையே பார்த்தான் மாதவன்.

பெருக்குமாரை போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்த வனமங்கையின் கண்கள் மாதவனைத் தான் பார்த்தது. அவள் கண்கள் அவனிடம் இவர்கள் யார் என்று கேள்வி கேட்டது. அது புரிந்தாலும் அதற்கு விடை சொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஆமா ஆண்ட்டி, சேலை கட்டிருக்குறது ஒரு மார்கமா தான் இருக்கு”, என்று சொன்ன வெண்ணிலா வனமங்கையை ஏற இறங்கப் பார்த்தாள். அந்த பார்வை வனமங்கைக்கு ரசிக்க வில்லை.

“ஏமா பொண்ணு நீ இங்க வேலை பாக்குறியா?”, என்று கேட்டாள் கீதா. அதில் வெண்ணிலா அவளைக் கண்டு நக்கலாக புன்னகைக்க “அம்மா”, என்று அதட்டினான் மாதவன். அப்போது தான் வனமங்கைக்கு அவள் அவனுடைய தாய் என்றே புரிந்தது. கீதா இப்போது கேட்டதும் சாதாரண கேள்வி தான். ஆனால் வெண்ணிலாவின் சிரிப்பைக் கண்ட வனமங்கைக்கு கீதா தன்னை வேலைக்காரி போல நினைத்துக் கேட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. வனமங்கை முகம் கன்றிப் போனது.

“என்ன டா நீ வேற? எதுக்கு எடுத்தாலும் டென்ஷன் ஆகிட்டு? சரி சரி வாங்க. சாமி கும்பிட போகலாம்”, என்று சொல்லி கீதா உள்ளே நடக்க வெண்ணிலாவும் அவள் பின்னே உள்ளே சென்றாள்.

அவன் அவளைப் பார்த்த படியே நிற்கவும் “என்ன டா அங்கயே நின்னுட்ட? உள்ள வா”, என்று அழைத்தாள் கீதா. அவனும் “வா சாமி கும்பிட போகலாம்”, என்று சொல்லி விட்டு உள்ளே நடந்தான்.

அவன் அந்த நேரத்தில் தன்னிடம் பேசியது சிறிது ஆறுதலைக் கொடுக்க அவனையே பார்த்த படி வெளியவே நின்றாள். கூடவே அவனது அம்மாவுக்கு தன்னை பிடிக்காதோ என்ற பயமும் அவளை அரித்தது.

“வனமங்கை, நேரம் ஆச்சு வா, சாமி கும்பிடப் போகலாம், ஐயா வரச் சொன்னாங்க”, என்று அவளது தோழி தான் வனமங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.

கற்ப கிரகத்தின் ஒரு புறம் வனமங்கையும் அவளது தோழியும் நிற்க மறுபுறம் கீதா வெண்ணிலா இறுதியாக மாதவன் என்ற வரிசையில் நின்றிருந்தார்கள்.

வெண்ணிலாவையும் மாதவனையும் அருகருகே வைத்துப் பார்க்க வனமங்கைக்கு என்னவோ போல இருந்தது. வெண்ணிலாவின் உடை முதல் கொண்டு அனைத்திலும் நாகரீகம் தெறித்து விழ தன்னுடைய உடையை குனிந்து பார்த்தவளுக்கு தன்னுடைய தகுதியும் புரிந்தது. ஏதோ அவன் தன்னை விட்டு வெகு தூரம் போன உணர்வு அவளுக்குள் எழ சாமியைத் தான் பார்த்தாள். அவன் கண்களோ அவளை விட்டு எங்கும் செல்ல வில்லை. அவள் உணர்வுகளை படித்துக் கொண்டிருந்தான். அவளை தன்னுடைய கைக்குள் நிறுத்தி ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!