Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 10 1

அத்தியாயம் 10

உந்தன் விரல்கள் எல்லை

மீறும் போது என்னையே

உணர்ந்தேன் நான்!!!



Advertisement

வனமங்கையை எப்படி சமாதானப் படுத்தப் போகிறோம் என்று மாதவன் எண்ணிக் கொண்டிருக்க அவளோ அவன் தனக்கு இனி இல்லை என்ற உண்மையைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். சில நாட்களாக சந்தோஷமாக இருந்த அக்கா மீண்டும் இப்படி இருக்கவும் குழப்பத்தில் ஆழ்ந்தான் குச்சி.

Advertisement

“ஒரு வேளை அந்த சார் கூட பேசக் கூடாதுன்னு அப்பா சொன்னதுனால தான் அக்கா இப்படி இருக்குதா?”, என்று அவனுக்கு தெரிந்ததை எண்ணிக் கொண்டு மாதவனையும் அக்காவையும் எப்படிப் பார்க்க வைப்பது என்று எண்ணிக் கொண்டிருந்தான். ஏனென்றால் மாதவனைக் கண்டதும், அவனைப் பற்றி பேசியதும்  வனமங்கை முகம் ஒளிர்வதை அவன் பார்த்திருக்கிறானே?

Advertisement

இங்கே மாதவனோ மூலிகை வாங்க வரும் வைத்தியரிடம் அவளைப் பற்றி ஏதாவது கேட்கலாம் என்று எண்ணினாலும் அவரிடம் ஒரு பெண்ணைப் பற்றி எப்படி கேட்க பயமாக இருந்தது அவனுக்கு.

Advertisement

அவருக்கும் அவனிடம் வனமங்கையைப் பற்றி பேச சங்கடமாக இருந்தது. நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் போனாலும் வனமங்கையைக் காண முடியாததால் தான் அவன் இப்படி சோகமாக இருக்கிறானோ என்று அவருக்கு தோன்றியது. ஆனால் அவரால் செய்ய இனி ஒன்றும் இல்லை என்பதால் அவரும் அமைதியாகி விட்டார்.

கிட்ட தட்ட வனமங்கையைக் காணாமல் மூன்று வாரங்கள் சென்று விட்டது. அவள் கோவிலுக்கும் வர வில்லை. அதனால் தவித்துப் போனான். அவளுடைய வீட்டுக்குச் செல்ல அவனுக்கு ஒரு நொடி ஆகாது தான். ஆனால் தன்னால் அவளுக்கோ அவளது குடும்பத்துக்கோ அவப்பெயர் வருவதை அவன் விரும்பவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் காலையில் எழுந்ததில் இருந்தே வனமங்கைக்கு எதுவோ தவறாக நடக்கப் போவதாக பட்டது.

அவள் நினைத்த படி தான் கடைசியில் நடக்கவும் செய்தது. ஆடுகள் கட்டி இருக்கும் இடத்தை சுத்தம் செய்த தேனப்பன் குளித்து கிளம்பினார். அவர் ஆடு மேய்ப்பதற்கான உடையை போடாமல் வேறு உடையை எடுத்து போடவும் அக்காவும் தம்பியும் அவரைக் குழப்பமாக பார்த்தார்கள்.

“அப்பா எங்கயோ கிளம்புற போல? சந்தைக்கா போற?”, என்று கேட்டான் குச்சி.

“சந்தைக்கு இல்லை. உன் அத்தை வீட்டுக்கு போறேன் டா குச்சி”, என்றதும் வனமங்கைக்கு திக்கென்று இருந்தது.

அக்கா முகம் ஒரு மாதிரி ஆகவும் “இன்னைக்கு எதுக்குப்பா அங்க போற? திரும்பி எப்ப வருவ?”, என்று கேட்டான் குச்சி.

“நான் நாளைக்கு சாயங்காலம் தான் வருவேன். வரும் போது உன் மச்சானையும் கூட்டிட்டு வருவேன். இன்னும் அஞ்சு நாள்ல சித்திரா பவுர்ணமி வருது. அன்னைக்கே உன் அக்காவோட கல்யாணத்தை நடத்த போறேன். நாளைக்கே நம்ம சொந்த பந்தம் எல்லாம்  வந்துரும்”, என்று சொல்ல தலையில் பாரம் விழுந்தது போல துடித்துப் போனாள் வனமங்கை.

அக்காவையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டிருந்த குச்சிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

மாதவனுக்கு தான் பொருத்தம் இல்லை என்று அவனை வேண்டாம் என்று ஒதுக்க முடிந்த வனமங்கைக்கு இன்னொரு ஆளை கணவனாக ஏற்க முடியும் என்று தோன்ற வில்லை.

“அப்பா எனக்கு கல்யாணம் வேண்டாம் பா”, என்று கலக்கத்துடன் சொன்னாள். “போகும் போது அபசகுணமா பேசாத கண்ணு. கல்யாணத்தை நினைச்சு எல்லாம் பயப்படாத. உன்ற அத்தை உன்னை நல்லா பாத்துக்குவா. ஆட்டை சரியா மேச்சிட்டு மத்த ஆளுங்கப் கூட வீட்டுக்கு சீக்கிரம் வந்துருங்க. குச்சி அக்கா கூடவே இரு. அவளை தனியா விட்டுட்டு எங்கயும் போக கூடாது”, என்று சொல்லி விட்டு அவர் செல்ல அவளோ இடிந்து போய் அமர்ந்தாள்.

“அக்கா என்னக்கா ஆச்சு? அக்கா சொல்லுக்கா”

“இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் டா குச்சி”

“நம்ம எதிர் வீட்டுக்கு அக்காக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சு தானே? அதே மாதிரி தானே உனக்கும்? அப்புறம் ஏன் பிடிக்கலைன்னு சொல்ற?”

“ஐயோ உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலையே?”, என்று அவள் கதறி அழ “உனக்கு அந்த சாரை தான் புடிச்சிருக்காக்கா?”, என்று கேட்டான்.

அவள் திகைத்து அவனைப் பார்க்க “சொல்லுக்கா, அந்த சாரைக் கட்டிக்க சொன்னா கட்டிக்குவியா?”, என்று கேட்டான்.

“அந்த பேச்சு வேண்டாம் டா குச்சி. அவர் ரொம்ப படிச்சு பெரிய பதவில இருக்குறவர். அவருக்கு நான் எல்லாம் பொருத்தமே கிடையாது”

”ஆனா அவருக்கு உன்னைத் தானேக்கா பிடிச்சிருக்கு?”

“குச்சி”

“ஆமாக்கா, தாத்தையா சொன்னார். அந்த சார் உன்னை பாக்க முடியாம தவிக்கிறார்னு. ரொம்ப மெலிஞ்சிட்டாராம்”

“என்ன டா சொல்ற? வைத்தியர் ஐயா உன் கிட்ட சொன்னாரா?”

“இல்லை, இன்னைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூஜைக்கு பூ பறிச்சு அவருக்கு கொடுக்க போனேன். அப்ப அவர் சாமிக் கிட்ட உனக்காக வேண்டிட்டு இருந்தார். அப்ப சொன்னது கேட்டது. அந்த சாரும் உன்னைத் தான் நினைச்சிட்டு இருக்கார் போல?”

“அவர் எல்லாம் எனக்கு கிடைக்க மாட்டார் டா குச்சி”

“ஒரு தடவை பேசிப் பாப்போமா? அவர் கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ சொல்லுக்கா”, என்றதும் அவள் கண்ணிலும் சிறிது ஆவல் எட்டிப் பார்த்தது,.

“ஆனா எப்படி டா அவரைப் பாக்க முடியும்? அந்த காட்டுக்குள்ள நாம போக முடியாது. அவர் இன்னைக்கு கோவிலுக்கும் வர மாட்டார்”

“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?”, என்று சொன்னவன் “நீ காட்டுக்கு போக சோத்தைக் கட்டிட்டு ஆடை அவுத்துட்டு இரு. நான் இப்ப வந்துறேன்”, என்று சொன்னவன் வைத்தியரைக் காணச் சென்றான்.

“என்ன டா பொடியா, ரெண்டாவது தடவை இங்க வந்துருக்க? தேனப்பன் வீட்ல இல்லையாக்கும்? இருந்தா இங்க விட மாட்டானே?”

“அப்பா அக்காவுக்கு மாப்பிள்ளையை கூட்டிட்டு வர போயிருக்கு”

“என்ன டா சொல்ற?”

“ஆமா வர பவுர்ணமி அன்னைக்கு அக்காவுக்கும் எங்க அத்தை மகனுக்கும் கல்யாணமாம்”

“ஓ, இதுக்கு உன் அக்கா என்ன சொல்றா?”

“கேட்டதுல இருந்து அழுதுட்டு இருக்குது”

“இப்ப என்ன டா செய்ய?”

“அந்த சாரைப் பாத்து பேசினா அக்கா சரியாகிருவா தாத்தையா”

“குச்சி…. உனக்கு தெரியுமா டா?”

“எனக்கு தெரியும். சார் வந்து அக்கா கிட்ட பேசினா எல்லாம் சரியாகிரும். நாங்க ஆடு மேய்க்க மேல மலைக்கு போறோம். அந்த சாரை அங்க வரச் சொல்றீங்களா தாத்தையா?”, என்று தயக்கத்துடன் கேட்டான். கூடவே அவர் என்ன சொல்வாரோ என்று அவனுக்கு பயமாகவும் இருந்தது.

“வனமங்கை எனக்கு பொண்ணு மாதிரி டா. அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீ தைரியமா போ. நான் அந்த பையனை அங்க வரச் சொல்றேன். ஆனா வேற யாரும் பாத்துறாம பாத்துக்கோ டா குச்சி”

“சரி தாத்தையா, சீக்கிரம் வரச் சொல்லுங்க”

“சரி டா”, என்று அவர் சொன்னதும் அவன் சிட்டாக பறந்து விட்டான்.

அன்று மூலிகை வாங்கச் சென்ற வைத்தியர் “இப்படி தான் பொண்ணு மனசுல ஆசையை வளத்துட்டு அம்போன்னு விட்டுறதா தம்பி?”, என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவன் “ஐயா, வனமங்கை ஏதாவது சொன்னாளா?”, என்று கேட்டான்.

“நீங்க ஏன் அவ கிட்ட பேசலை?”

“அவ தான் என்னைக் கண்டா ஒதுங்குறா”

“அப்படியா? ஏனாம்?”, என்று போட்டு வாங்கினார்.

“ஏதோ நான் அவளுக்கு பொருத்தம் இல்லையாம். மனசு பொருந்துன பிறகு வேற என்னங்க பொருத்தம் வேணும்? அவ சுலபமா என்னைப் பாக்க வராதீங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள ஒழிஞ்சுக்கிட்டா. ஆனா என்னால முடியலை. அவளைப் பாக்கத் தான் தவிச்சிட்டு இருக்கேன். எனக்கு அவளைப் பாக்கணும் ஐயா”

“இன்னைக்கு விட்டா அவ கிட்ட பேச முடியாது”

“என்ன சொல்றீங்க?”

“நேரா மேல மலைக்கு போங்க. அங்க வனமங்கை இருப்பா. என்ன செய்யன்னு அவ கிட்ட விவரம் கேளுங்க. அவ சரின்னு சொன்னா இங்க இருந்து அவளைக் கூட்டிட்டு போயிருங்க. அவ அப்பன் மாப்பிள்ளை அழைக்க போயிருக்கான். நாளைக்கு சாயங்காலம் தான் வருவான். வர பவுர்ணமி அன்னைக்கு அவளுக்கு கல்யாணமாம்”

“ஐயா என்ன சொல்றீங்க? நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? வனமங்கைக்கு கல்யாணமா?”

“ஆமா நான் சொல்றது உண்மை தான். இதுக்கு மேல நீங்க தான் யோசிக்கணும். வனமங்கைக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. பாத்துக்கோங்க. விஷயம் தெரிஞ்சதுல இருந்து அவளும் அழுதுட்டு தான் இருக்கார். பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!