Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 11 2

“இவ அப்பா அங்க மாப்பிள்ளை தேடிப் போக இங்க இவளே வேற மாப்பிள்ளை பாத்துட்டா போல? இது வரை நம்ம பொண்ணுங்க யாரும் பண்ணாத காரியத்தை இவ பண்ணிருக்கா. இவ அப்பன் வந்ததும் இன்னைக்கு பஞ்சாயத்து தான். தலைவர் ஐயா என்ன சொல்றாரோ அது தான் கணக்கு. என்ன நடக்க போகுதோ?”, என்று ஒரு பெண்மணி சொல்ல அது இவள் காதில் தெளிவாக விழுந்தது.

வனமங்கை வெகுவாக பயந்து போனாள். தந்தைக்கு தெரிந்தால் என்னவாகுமோ என்று பயம், சாயங்காலம் வருகிறேன் என்றவனையும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டோமே என்று பயம். அவளை அந்த இடத்தில் தனியே விட்டுச் செல்ல மனதில்லாமல் அவள் அருகில் அமர்ந்தான் குச்சி. அக்காவின் சந்தோசத்தைக் கெடுத்த அனைவரின் மீதும் அவனுக்கு கோபமாக வந்தது. அன்று மதியம் அவள் உண்ணவே இல்லை.



Advertisement

“குச்சி, நீ சாப்பிடு டா. எனக்கு பசிக்கலை”, என்றாள்.

“எனக்கும் பசிக்கலைக்கா”, என்று அவன் சொன்னதும் அவனை வற்புறுத்தி உணவருந்த வைக்க வேண்டும் என்று கூட அவள் மூளை மறந்திருந்தது.

Advertisement

Advertisement

மாலை ஆனதும் ஆடுகளை பற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் “அக்கா நீ ஆடுகளை ஆடை. நான் இப்ப வந்துறேன்”, என்று சொன்ன குச்சி நேராக சென்றது வைத்தியர் ஐயாவைப் பார்க்க தான்.

அவன் முகத்தை பார்த்து பயந்து போனவர் “என்னடா?”, என்று கேட்டார்.

Advertisement

“எனக்கு பயமா இருக்கு தத்தையா?”

“என்ன ஆச்சு டா குச்சி?”

“இன்னைக்கு அக்காவும் அந்த சாரும் பேசினதை முருகன் பாத்துட்டான்”

“ஐயோ என்ன டா சொல்ற? அவனா?”

“ஆமா, மத்தவங்க கிட்டயும் சொல்லிட்டான்”

“போச்சு, கடவுளே”

“அப்பா வந்ததும் பஞ்சயாத்து கூடப் போகுதாம். எனக்கு பயமா இருக்கு தாத்தையா. உடனே அந்த சார் கிட்ட சொல்லணும்”

“இப்ப அந்த காட்டுப் பக்கம் போக முடியாது டா. முன்னாடி வழியா தான் போகணும். சரி வா போவோம்”, என்று சொன்ன வைத்தியர் அவசர அவசரமாக மாதவனைப் பார்க்க குச்சியுடன் செல்ல அவர்கள் நடு ஊருக்கு வரும் போதே தேனப்பன் எதிரே வந்தார். அவரைக் கண்டு வைத்தியரும் குச்சியும் ஸ்விட்ச் போட்டது போல அப்படியே நின்றார்கள். தேனப்பன் மாப்பிள்ளை வீட்டினருடன் வந்து கொண்டிருந்தார்.

“என்ன வைத்தியரையா எங்க கிளம்பிட்டீங்க?”, என்று தேனப்பன் கேட்க அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறி நின்றார். அப்பாவைக் கண்டு குச்சியும் அதிர்ச்சியில் நிற்க அடுத்த நொடி அங்கே ஊரே கூடியது. அதைக் கண்டு தேனப்பன் திகைத்துப் போனார்

வீட்டுக்குள் அதிர்ந்த மனதுடனும் நடுங்கிய உடலுடனும் அமர்ந்திருந்தாள் வனமங்கை. அவளுக்கு தந்தையையும் ஊர் மக்களையும் எதிர்க் கொள்ள பயமாக இருந்தது. என்ன நடக்குமோ என்று அஞ்சினாள். கூடவே மாதவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற வேண்டுதலையும் கடவுளிடம் வைத்தாள்.

அனைவரும் தனக்கு முன்னே கூடியதைக் கண்ட தேனப்பன் “அட என்னாச்சுப்பா? எல்லாரும் கூடி இங்கன நிக்கீங்க?”, என்று கேட்டார்.

“என்ன தேனப்பா? பாக்க சண்டியர் கணக்கா இருக்காரே. இவர் தான் நீ கூட்டிட்டு வந்த மாப்பிள்ளையா?”, என்று கேட்டார் ஒரு தாத்தா.

“ஆமாங்க பெரியையா, பேர் மருது. என் பொஞ்சாதிக்கு சொந்தம் தான். இவர் தான் வனமங்கைக்கு மாப்பிள்ளை”

“அட போப்பா, நிலவரம் தெரியாம பேசிட்டு இருக்க?”

“என்ன ஆச்சு பெரியப்பா”

“இன்னும் கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்து கூடுதுயா”

“எதுக்குங்க ஐயா?”

“நீ உன் மகளுக்கு அசுலூர்ல போய் மாப்பிள்ளை பாத்து கூட்டியார. ஆனா உன் மகளே வேற மாப்பிள்ளை பாத்துட்டா யா?”

“ஐயா என்ன சொல்றீங்க?”

“உன் மக பாரஸ்ட் காரன் கூட சிரிச்சு பேசிட்டு இருந்ததை நம்ம முருகன் பாத்துட்டான்”

“ஐயோ என் மகளைப் பத்தி தப்பா பேசாதீங்க. அவ அப்படி எல்லாம் கிடையாது. வைத்தியர் ஐயா சொன்னதுனால மூலிகை கேட்க பேசிருப்பா”

“மூலிகை பறிக்க அருவிக் கரைக்கு போகனுமா மாமா?”, என்று கேட்டான் முருகன்.

“ஏலேய் முருகா, உனக்கு என் மகளை கொடுக்கலைன்னு அவ மேல அபாண்டமா பழி போடாதலே”

“நம்ம காளி மேல சத்தியம் மாமா. ரெண்டு பேரும் அருவிக் கரைல கட்டி பிடிச்சிட்டு நின்னதைப் பாத்தேன். அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் என்ன நடந்துச்சோ? யார் கண்டா”, என்று நக்கலாக சொன்னான்.

“என்ன மாமா இதெல்லாம்? இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை”, என்றான் மருது.

“ஐயோ இல்லை மாப்பிளை, நம்ம வனமங்கை அப்படி எல்லாம் கிடையாது. அவ சுத்த தங்கம்,”

“அப்ப தங்கத்தை கூட்டிட்டு வந்து சத்தியம் பண்ணச் சொல்லுங்க”, என்றான் முருகன்.

“குச்சி அக்காவை கூட்டியா”

“அக்கா பாவம் பா”

“உன்னைக் கூட்டிட்டு வான்னு சொன்னேன்”, என்றதும் வேகமாக வீட்டுக்கு சென்று அவளை அழைத்து வந்தான்.

“வைத்தியர் ஐயா நீங்களாவது சொல்லுங்க. என் மக அப்படி இல்லைன்னு”, என்று தேனப்பன் கெஞ்ச அவருக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவர் இல்லை என்று மறுத்தால் அவரும் சத்தியம் செய்ய வேண்டுமே. காளி மேலே பொய் சத்தியம் செய்ய எல்லாம் அவருக்கும் தைரியம் இல்லை.

நடுக்கத்துடனும் கலக்கத்துடனும் தலை குனிந்த படி கூட்டத்தின் முன்பு வந்து நின்றாள் வனமங்கை. யாரையும் அவளுக்கு நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“வீட்ல இரு, எங்கயும் ஊர் சுத்தாதேன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டியா? இப்ப உன்னைப் பத்தி என்னல்லாமோ சொல்றாங்களே. அந்த பாரஸ்ட் காரன் கூட பேசுனியா வனமங்கை?”, என்று கேட்டார்  தேனப்பன்.

அவளோ என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.

“வாயைத் திறந்து பதில் பேசு வனமங்கை. அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லு. அவன் உன் கிட்ட தப்பான நோக்கத்துல பழகலைன்னு காளி மேல சத்தியம் பண்ணு. மருது மாப்பிள்ளையும் வந்தாச்சு. சீக்கிரம் சத்தியம் பண்ணு. இன்னைக்கே உனக்கும் மருதுக்கும் கல்யாணம் முடிக்கலாம்”, என்று சொன்னார் தேனப்பன்.

வேறு ஒரு ஆணுடன் திருமணமா என்று அதிர்ந்து போனவள் “நான் அந்த சாரைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். எனக்கு அவரைத் தான் பிடிச்சிருக்கு”, என்று சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதும் அங்கே குண்டூசி விழும் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதியாக இருந்தது.

“நல்ல வேளை, எங்க குடும்ப மானம் தப்பிச்சது. நாங்க வரோம் மாமா”, என்று சொல்லி விட்டு தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு இரவென்றும் பாராமல் கிளம்பி விட்டான் மருது. அவர்களை தடுக்க வேண்டும் என்பதைக் கூட மறந்து தேனப்பன் இடிந்து போயி நிற்க குச்சிக்கோ அக்காவின் நிலைமையை எப்படி மாதவனிடம் சொல்ல என்று கலக்கமாக இருந்தது. அவனால் மட்டுமே வனமங்கையை காப்பாற்ற முடியும் என்று நம்பினான். ஆனால் இங்கிருந்து எப்படி செல்ல என்று தெரிய வில்லை. வைத்தியரை பாவமாக பார்த்தான். அவருக்கும் இந்த தகவலை எப்படி மாதவனிடம் சொல்ல என்று தெரியவில்லை.

அழுது கொண்டிருக்கும் வனமங்கையை கண்டவர் “இப்ப என்ன தப்பு நடந்து போச்சு? காதல் அப்படிங்குறது கால காலமா நடக்குறது தானே? மன்னர்கள் கூட சாமானியர்களை காதலிச்சு கல்யாணம் பண்ணலையா? அந்த தம்பி ரொம்ப நல்லவர். நம்ம கிராமத்துக்கு பல நன்மை செய்யணும்னு சொல்லிட்டு இருக்கு. பேசாம அவருக்கே வனமங்கையை கட்டிக் கொடுத்துறலாம். நம்ம பழைய மூடப் பழக்கங்களை எத்தனை நாள் நம்பிட்டு இருக்க போறீங்க?”, என்று கேட்டார்.

“வாயை மூடு யா. எல்லாம் உன்னால தான். ஒரு வயசு பொண்ணை வயசு பையன் கிட்ட மூலிகை வாங்க அனுப்புனியே? இதனால என் குடும்ப மானம் போச்சு. என் பொண்ணு வாழ்க்கை போச்சு. இப்ப அவ உசுரே போகப் போகுது தெரியுமா? என் பொண்ணு கிட்ட காதல் அப்படிங்குற ஆசையைக் காட்டிட்டு அவன் போய்ட்டான். நீயும் உன் வேலையைப் பாத்துட்டு போய்ருவ. ஆனா தப்பு பண்ண ஏன் பொண்ணை இங்க கொன்னுருவாங்கயா”, என்று தேனப்பன் தலையில் அடித்துக் கொண்டு அழ வைத்தியருக்கு இந்த விஷயம் தெரியாது என்பதால் திகைத்து போனார். குச்சியும் அதைக் கேட்டு அக்கா கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

“சரி, எல்லாம் வெட்ட வெளிச்சமாகிடுச்சுல்ல? தலைவர் ஐயா வீட்டு முன்னாடி எல்லாரும் வாங்க. சடங்கு இருக்குறதுனாலா யாரும் அன்னம் உண்ணக் கூடாது. இன்னைக்கு நைட் யாரும் வெளியூருக்கு போக கூடாது. தேனப்பன் உன் மகளுக்கு மஞ்ச துணி போட்டு கூட்டி வா? எல்லாரும் வாங்க போவோம்”, என்று ஒரு ஆள் சொல்ல அனைவரும் சடங்கு நடக்கும் இடம் சென்றார்கள்.

தேனப்பன் அழுத படியே வீட்டுக்கு செல்ல வைத்தியரும் குச்சியும் வனமங்கையை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.

“என் வாழ்க்கை இனி அவ்வளவு தான்”, என்ற விரக்தியில் இருந்தாள் வனமங்கை. வீட்டுக்கு சென்றதும் அவளை இழுத்துப் போட்டு அடித்த படியே அழுதார் தேனப்பன்.

“எதுக்கு இப்படி செஞ்ச? இன்னும் எனக்கும் உன் தம்பிக்கும் யார் இருக்கா?”, என்று அவர் கதற பாசத்துடன் கூடிய அவரது அடி கூட அவளுக்கு வலிக்க வில்லை.

நடப்பது ஒன்றும் புரியாததால் “தேனப்பா அங்க என்ன நடக்கும்?”, என்று கேட்டார் வைத்தியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!