Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 11 3

“பேசாதையா, எல்லாம் உன்னால தான். நல்லா இருந்த குருவி கூட்டைக் கலைக்குற மாதிரி என் குடும்பத்தை சிதைச்சிட்டியே? இப்ப உனக்கு சந்தோஷமா?”, என்று கேட்க வைத்தியர் கண்களும் கண்ணீரைச் சொறிந்தது.

“எனக்கு இப்படி எல்லாம் ஆகும்னு தெரியாதே”, என்று அவர் அழ “நீ கொஞ்ச வருஷம் முன்னாடி இங்க வந்தவர். ஆனா நாங்க எல்லாம் பரம்பரையா இருக்குறவங்க. நைட் எல்லாம் என் மகளுக்கு ஈம சடங்கு நடத்துவாங்கயா”, என்றார் தேனப்பன்..



Advertisement

“என்ன சொல்ற?”

Advertisement

“ஆமா என் பொண்ணு உயிரோட இருக்கும் போதே அவளுக்கு செத்ததுக்கு அப்புறம் செய்யுற சடங்கு செய்வாங்க. அது கூட பரவாயில்லை. ஆனா அதுக்கப்புறம் அவளை அவளை… “, என்று அவர் சொல்ல முடியாமல் திணற “அப்பா அக்காவை யாரும் எதுவும் செய்யக் கூடாது. நான் செய்ய விட மாட்டேன். எனக்கு அக்கா வேணும்”, என்று அழுதான் குச்சி.

Advertisement

“இனி உன் அக்கா நமக்கு இல்லை டா குச்சி. ராத்திரி முழுக்க அவளை காவு கொடுக்க சடங்கு செஞ்சு காலைல சூரிய உதயத்துக்கு அப்புறம் அவளை நடுக் காட்டுக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க”

Advertisement

“என்னது காட்டுக்குள்ளயா?”, என்று பதறினார் வைத்தியர்.

“ஆமா, காட்டுக்கு போன பிறகு அவ எப்படி உயிரோட திரும்புவா? கண்ணுல பட்ட மிருங்கங்களுக்கு உணவா போக வேண்டியது தான். அதுக்கப்புறம் இவளுக்கும் இந்த கிராமத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாம யாரும் பத்து நாளைக்கு அந்த திசைக்கே போக கூடாது. ஒண்ணு இவளை விலங்குகள் அடிச்சு கொல்லும். இல்லைன்னா சாப்பாடு தண்ணி இல்லாம வானந்தரத்துல செத்து போவா. வனமங்கைன்னு பேர் வச்சது இவளை அந்த வனத்துக்கு காவு கொடுக்கவா? இதுக்கா இந்த படுபாவியை கஷ்டப் பட்டு வளத்தேன்?”, என்று அவர் அழ “தப்பு பண்ணி விட்டோமோ?”, என்று துடித்துப் போனார் வைத்தியர்.

“எப்படியாவது என் பொண்ணைக் காப்பாத்தணும்”, என்று அவரது செல்கள் எல்லாம் துடிக்க எப்படி எப்படி என்று சிந்தித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் சடங்கு ஆரம்பித்து விடும். இந்த இடைவெளியில் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நேரத்தில் ஊரைத் தாண்டவும் முடியாது.

காலையில் தான் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவர் வனமங்கையின் அருகில் சென்று நின்றார். தந்தை சொன்ன அனைத்தையும் கேட்டு திகில் அடைந்து போய் இருந்த வனமங்கை வைத்தியரை பரிதவிப்பாக பார்த்தாள்.

அவள் தலையில் கை வைத்தவர் “இந்த அப்பா உன்னைக் காப்பாத்துவேன் டா. கண்டிப்பா காப்பாத்துவேன்”, என்று அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்த படி சொல்லி விட்டு தன்னுடைய குடிலை நோக்கி நடந்தார்.

அழுது கொண்டே இருந்த தேனப்பன் “ஏலேய் குச்சி, உன் அக்காவுக்கு அந்த மஞ்ச சேலையை எடுத்துக் கொடு. கட்டிட்டு வரட்டும். என்னோட வம்சத்துல ஒண்ணு இப்பவே முடியப் போகுதே”, என்று கதற அவனோ அக்காவைக் கட்டிக் கொண்டு அழுதான்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு யாருமே இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை என்றதும் மூன்று பெண்கள் உள்ளே வந்தார்கள்.

“நடந்தது நடந்து போச்சு தேனப்பா. இனி எதையும் மாத்த முடியாது. முன்னாடியே சூதானமா இருந்துருக்கணும். பொம்பளைப் பிள்ளையை கண்டிச்சு வளக்கலைன்னா இப்படி தான் ஆகும். நேரம் ஆச்சுன்னு சொல்லி விட்டாங்க. நீ வெளிய போ. நாங்க அவளுக்கு உடுப்பு மாத்தி கூட்டியாறோம்”, என்று சொல்ல அழுத படியே எழுந்த தேனப்பன் குச்சியையும் வனமங்கையிடம் இருந்து பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

சபையின் நடுவில் காளி சிலையின் முன் ஒரு பெரிய கல் மீது அமர்ந்திருந்தாள் வனமங்கை.

அவளுக்கு மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றி மாலை போட்டு பெரிய போட்டு வைத்து விட்டனர். பின் அவளுடைய அம்மாவின் கருகுமணி மாலையை தாலி என்று சொல்லி அவளுக்கே போட்டு விட்டார். இப்போது அவள் திருமணமானவள் என்று அர்த்தம். திருமணம் நடக்க வில்லை என்றால் அவள் ஆத்மா சாந்தியடையாது என்பதால் இந்த சம்பர்தாயம்.

மாதவன் கையால் தாலி வாங்கி அவனுடன் வாழ ஆசைப் பட்டவளின் ஆசைகள் அவளுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த பெரிய அக்னியில் கரைந்து கொண்டிருந்தது.

வீட்டுக்கு சென்ற வைத்தியர் ஒரு பெரிய பையில் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு தான் சடங்கு நடக்கும் இடம் வந்தார். அவர் வந்த போது தலையில் பூ, கழுத்தில் மாலை, தாலி என மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள் வனமங்கை.

“உன்னை இந்த கோலத்தில் தான் பாக்க ஆசைப் பட்டேன் மகளே. ஆனா உன் பக்கத்துல அந்த பையன் இல்லையே. உன்னை காவு கொடுக்க விட மாட்டேன். உன் காதலை நான் நிறைவேற்றுவேன். உன் உயிரையும் வாழ்க்கையையும் நான் காப்பாற்றுவேன்”, என்று மனதில் சூழுரைத்துக் கொண்டு அந்த சிறு பெண்ணுக்கு வந்த நிலைமையை அமைதியாக வேடிக்கை பார்த்தார். அப்போது அவரால் அது தான் முடிந்தது.

எப்படி செத்துப் போன பிணத்தை வைத்து இறுதி நாள் சடங்கு செய்வார்களோ அதைப் போல அன்று இரவு முழுவதும் நடந்தது. பிணத்துக்கு பதிலாக வனமங்கை அமர்ந்திருந்தாள் அவ்வளவே.

காலையில் மாதவனைக் காணச் செல்வதற்கு முன் அவள் உண்டது தான். அதன் பின் இப்போது வரை அவள் எதுவும் உண்டிருக்க வில்லை. ஆனாலும் பசி என்பதே அவளுக்கு மறுத்து போயிருந்தது.

கண் முன் இருந்த காளி சிலையிடம் அவள் கேட்ட ஒன்றே ஒன்று. உயிர் போவதற்குள் மாதவன் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே?

இரவெல்லாம் ஒப்பாரிச் சத்தமே கேட்டுக் கொண்டிருக்க உண்மையிலே மரித்த நிலைமையில் இருந்தாள். அழுது அழுது தேனப்பன் மடியில் தூங்கி விட்டிருந்தான் குச்சி. தேனப்பனோ மகளைப் பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தார். இப்போது அவர் மனது கூட “இதை எல்லாம் இவ அனுபவிக்கிறதுக்கு பதிலா எனக்கு தெரியாம அந்த பையன் கூட ஓடிப் போயிருக்க கூடாதா?”, என்று எண்ணியது. ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல அவருக்கு தைரியம் இல்லை.

அந்த ஊரில் இருந்த அனைத்து ஜனங்களும் அங்கே தான் அமர்ந்திருந்தார்கள். கதறல் ஒலி மட்டுமே அந்த இருளில் கேட்டுக் கொண்டிருந்தது.

நேரம் சென்று கொண்டிருக்க ஈர உடையுடன் இருந்த வனமங்கைக்கு குளிர் ஊசியாக குத்தியது. ஆனால் அதைத் தாங்குவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை.

ஒரு வழியாக பொழுது புலர்ந்தது. எல்லாருடைய வாழ்க்கையையும் வெளிச்சமாக்கும் ஆதவன் மெதுவாக மேல் எழும்பினான். ஆனால் வனமங்கையை இருளில் தள்ள அவளுக்கு பாடை கட்ட பட்டு தயாராக இருந்தது.,

“சூரியன் வந்துட்டான். அந்த பொண்ணை படுக்க வைங்க யா”, என்று தலைவர் குரல் கொடுக்க இருவர் வனமங்கையை அழைத்து வந்து வடக்கு தெற்காக அந்த பாடையில் படுக்க வைத்தார்கள்.

அப்போது தான் கண் விழித்த குச்சி “அக்கா அக்கா”, என்று கதற அவனை சமாதானப் படுத்த கூட முடியாமல் தேனப்பனும் கதறினார்.

குச்சியை அணைத்துப் பிடித்திருந்த வைத்தியர் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. ஆனாலும் அவர் மூளை சிந்தித்த படியே தான் இருந்தது. பாடையில் படுத்திருந்த வனமங்கை கடைசியாக தன்னுடைய தம்பி மற்றும் தகப்பனைப் பார்த்தாள். பின் வைத்தியரைப் பார்த்தாள். பின் கண்களை மூடிக் கொண்டாள். வேறு யாரையும் காண அவளுக்கு விருப்பம் இல்லை.

“தூக்குங்க டா”, என்று சத்தம் கேட்டதும் நால்வர் சேர்ந்துப் அவளை பாடையுடன் சேர்த்து தூக்கிப் பிடித்தார்கள். அவர்களுக்கு முன்னே சென்ற ஒருவன் பறை என்ற மேலத்தை அடித்த படி சென்றான்.

விலங்குகள் அந்த சத்தம் கேட்டு ஓடி விடும் என்பதற்காக தான் அது என்று புரிந்தது. வனமங்கையை அங்கிருந்து கொண்டு செல்வதற்கு முன் சில சடங்குகள் நடக்க கடைசியாக அவளை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் பின் இன்னும் சில பேர் நடக்க வைத்தியரும் அவர்களுடன் கலந்த்து கொண்டார்.

“நீங்க எதுக்கு வரீங்க ஐயா? அவ்வளவு தூரம் உங்களால நடக்க முடியாது”, என்று சொன்னான் ஒருவன். அவர் அதைக் காதிலே கேட்டுக் கொள்ள வில்லை. கால் வலியை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய மகளின் பின்னே சென்றார். தேனப்பன் குச்சியை கைத்தாங்களாக அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து கதறித் தீர்த்தார். குச்சியோ அதிர்ச்சியில் உறைந்து போய் கை கால்களைக் குறுக்கி அமர்ந்திருந்தான்.

வானத்தை வெறித்துப் பார்த்த படி படுத்திருந்தாள் வனமங்கை. “அவ்வளவு தானா? என்னோட கடைசி ஆசை கூட நிறைவேறாதா? என்னவனின் முகத்தைக் கூட என்னால பாக்க முடியாதா?”, என்று அவள் மனம் கதறியது.

கிட்டத்தட்ட ஆறு மணிக்கு நடக்க ஆரம்பித்தவர்கள் நடுக்காட்டுக்கு வரும் போது எட்டு மணி ஆகி இருந்தது. நடுக்காட்டில் நின்றவர்கள் மூன்று சுத்து சுத்தி அவளை கீழே இறக்கி விட்டனர்.

“எல்லாரும் திரும்பி பாக்காம போங்க”, என்று ஒருவன் சொல்ல அதன் படி அனைவரும் கிளம்பினார்கள். எழுந்து அமர்ந்த வனமங்கை அவர்களையே பார்த்த படி இருந்தாள். வைத்தியர் ஐயாவது தன்னை பார்ப்பார் என்று அவள் எண்ண அவரோ முதல் ஆளாக சென்று கொண்டிருந்தார். அவளுக்கு மனமே விட்டுப் போனது.

சிறிது தூரம் நடந்ததும் திடீரென்று வேகமாக ஓட ஆரம்பித்தார் வைத்தியர். “என்னய்யா ஒடுறீங்க?”, என்று யாரோ கேட்க அதற்கு பதில் சொல்லும் நிலையில் கூட அவர் இருக்க வில்லை. அவரது உடலை வைத்து கொண்டு ஓடுவது கஷ்டமாக இருந்த போதும் தன்னுடைய மகளைக் காப்பாற்ற ஓடிக் கொண்டே இருந்தார்.

காதல் தொடரும்…..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!