Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 12 3

நேராக ஜீப் போய் நின்றது வனமங்கை வீட்டின் முன்பு தான். ஜீப் சத்தம் கேட்டதுமே அங்கே கூட்டம் கூடி விட்டது. தேனப்பனும் வெளியே வந்தார். வீங்கிய முகத்துடன் குச்சியும் வெளியே வந்தான்.

இன்று என்ன பிரச்சனையோ என்று எண்ணி அனைவரும் பார்க்க ஜீப்பில் இருந்து மாதவன் முதலில் இறங்கினான். அதன் பின் மற்றவர்கள் இறங்கினார்கள். கடைசியாக இறங்கிய வனமங்கையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள்.



Advertisement

“அக்கா”, என்ற படி ஓடி வந்த குச்சியை அணைத்துக் கொண்டாள் வனமங்கை.

தன்னுடைய மகளை காப்பாற்றிக் கூட்டி வந்த மாதவனைக் கண்டு கை எடுத்துக் கும்பிட்டார் தேனப்பன்.

Advertisement

“என்ன எல்லாருக்கும் அதிர்ச்சியா இருக்கா? காதலிச்சது குத்தமா? உடனே அவளைக் கொல்ல முடிவு பண்ணிருவீங்களா? சாமின்னு நினைச்சு நீங்களே தண்டனை கொடுத்தீங்களே? இப்ப நான் கும்பிடுற சாமி இவளைக் காப்பாத்திருச்சு தானே? இப்ப தெரியுதா கெட்ட மனசு இருக்குற உங்க வேண்டுதலை கடவுள் நிறைவேத்தலை. நல்ல மனசு இருக்குற என் வேண்டுதலைத் தான் அந்த கடவுள் நிறைவேத்திருக்கார். உங்களை நல்ல வார்த்தை சொல்லி நான் திருத்த வரலை. அது என் வேலையும் இல்லை. இனி ஒரு தரம் இப்படி நடந்துச்சுன்னா இந்த இடத்துக்கு போலீஸ் வரும். ஒரு பெண்ணைக் கொடுமை செய்றவங்களை பிடிச்சு இழுத்துட்டு போகும். உங்க கிராமத்தை கண்காணிக்க ஏற்பாடு பண்ணிட்டேன். நான் இங்க வேலை செய்யலைன்னாலும் இங்க இருக்குற ஏதாவது பொண்ணுக்கு ஆபத்து வந்தா போலீஸ் வந்து கேக்கும். நான் இப்ப வந்தது என் வனமங்கையை முறைப்படி கூட்டிட்டு போக. அவங்க அப்பா சம்மதத்தோட அவளை என் மனைவியா அழைச்சிட்டு போகத் தான் வந்தேன்”, என்றவன் தேனப்பன் அருகில் வந்தான்.

Advertisement

அவர் அவனை தன்னுடைய குலத்தைக் காக்க வந்த கடவுள் போல பார்க்க “இப்ப சொல்லுங்க ஐயா உங்க மகளை எனக்கு கட்டிக் கொடுக்க சம்மதமா?”, என்று கேட்டான்.

Advertisement

“அதை என் கிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை தம்பி. இப்ப அவ நீங்க கொடுத்த உசுருல தான் உயிரோட இருக்கா. இனி அவ உங்களுக்கு தான் சொந்தம். அவ இனி உங்க சம்சாரம் தான். சந்தோஷமா கூட்டிட்டு போங்க”, என்றார் தேனப்பன்.

தன்னுடைய பாக்கெட்டில் இருந்த கருகுமணி மாலையை எடுத்தான் மாதவன். அவள் அதைக் கண்டவுடன் தன்னுடைய கழுத்தை தடவிப் பார்க்க அது அங்கே இல்லை. “இது எப்ப இவன் கைக்கு வந்துச்சு?”, என்று அவள் எண்ண அனைவரின் முன்னிலையில் தாலியாகிய அந்த கருகுமணி மாலையை அவளுக்கு அணிவித்து தன்னவளாக்கிக் கொண்டான் மாதவன். பின் தேனப்பன் காலில் விழுந்து வணங்கினார்கள்.

“அந்த உடும்பு கிட்ட இருந்து நீ தப்பிச்சு வரும் போது கீழ கழண்டு விழுந்தது. இது உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும். அதான் எடுத்து பத்திரமா வச்சிருந்தேன்”, என்று சொல்ல அவனைப் பெருமையாக பார்த்தாள் வனமங்கை.

“சரி ஐயா நாங்க கிளம்புறோம்”, என்றான் மாதவன்.

“சரி சாமி, பத்திரமா போயிட்டு வாங்க”, என்ற தேனப்பன் மகளைப் பார்த்தார். அவள் கண்களில் நீருடன் தலையசைக்க “நீ நல்லா இருப்பத்தா. உன் அம்மாவோட ஆசீர்வாதம் உன் கூடவே இருக்கும்”, என்றார்.

மாதவன் குச்சியை தன்னுடன் அழைக்க அவனோ என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தான்.

அப்போது அங்கே வந்தார் வைத்தியர். இருவரையும் கண்டு அவருக்கு மனது நிறைந்து போனது. அவர் காலில் விழுந்து வணங்கினார்கள் இருவரும். மன நிறைவுடன் அவர்களுக்கு ஆசி அளித்தவர் “குச்சி இங்கயே இருக்கட்டும். எனக்கு அப்புறம் அவன் தான் மருத்துவ வாரிசு. தேனப்பனுக்கும் ஒரு துணை வேணும். ரெண்டு பேரையும் நான் பாத்துக்குறேன்”, என்றார்.

“சரிங்க ஐயா, நாங்க கிளம்புறோம்”, என்று மாதவன் சொன்னதும் குச்சி உதடு பிதுக்கிய படி அழத் தயாராக இருக்க அவனை அனைத்துக் கொண்ட வைத்தியர் “அவ அந்த தம்பி கூட போனா தான் டா சந்தோஷமா இருப்பா. அவ சந்தோஷமா இருக்கணும்னா அவளை சிரிச்ச முகத்தோட அனுப்பி வை”, என்று சொன்னார்.

உடனே அவன் அழுகை காணாமல் சொன்னது. அக்காவின் சந்தோசத்துக்காக அவளை விட்டுக் கொடுத்தான் குச்சி.

“உன்னை அடிக்கடி பாக்க வரோம் டா”, என்றான் மாதவன்.

“அப்படி எல்லாம் வா முடியாது. இந்த பொண்ணை தேடி மூணு நாள் காட்டுக்கு யாரும் போக கூடாது. நீங்க அசூலூர், அதனால சும்மா விடுறேன். எப்ப இந்த பொண்ணைக் காட்டுல போய் விட்டோமோ, அப்பவே அவளுக்கும் இந்த கிராமத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவ அவளோட அப்பாவையும் தம்பியையும் பாக்க வந்தா அவங்களை இந்த ஊரை விட்டே தள்ளி வைப்போம்”, என்றார் ஊர்த் தலைவர்.

“தள்ளி வச்சா வைங்க. நான் அவங்களை என் குடுசைக்கு அழைச்சிட்டு போறேன்”, என்றார் வைத்தியர்.

“வைத்தியர் ஐயா நீங்க இதுல தலையிட்டா உங்களையும் நாங்க தள்ளி வைப்போம்”, என்று சொல்ல மற்றவர்களும் “ஆமா”, என்று கத்தினார்கள்.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். என்னையும் தள்ளி வைங்க. நான் ஒரு பத்து நாள் என் குடிசைல தான் இருப்பேன். இந்த பத்து நாள்ல எவனும் வாந்தி பேதின்னு என்னைத் தேடி வரக் கூடாது. அப்படி வராம இருந்தா பத்தாவது நாள் நான் இந்த ஊரை விட்டே போயிருவேன். அப்படி ஒரு வேளை இந்த ஊர்க்காரங்க யாராவது வைத்தியம் பாக்க வந்தா நான் இந்த ஊர்ல தான் இருப்பேன். இந்த பத்து நாளும் குச்சியும் தேனப்பனும் அவங்க குடிசையிலே தான் இருப்பாங்க”, என்றார்.

“பத்து நாள் நாங்க யாரும் உங்களைத் தேடி வர மாட்டோம்”, என்றனர் ஊர் மக்கள்.

“இவங்களை திருத்தவே முடியாது ஐயா”, என்று சொன்ன மாதவன் அங்கிருந்த பெண்கள் புறம் திரும்பி “இங்க பாருங்க மா. இங்க இருக்குற உங்களுக்கு ஆண்களால ஏதாவது துன்பம் வந்தா பாரஸ்ட் ஆபிசர் கிட்ட போய் சொல்லுங்க. அவர் போலீசை வர வைப்பார். இந்த மூட நம்பிக்கை உள்ள ஆம்பளைங்களை நம்பி வீணா உயிரை விட்டுறாதீங்க”, என்றான்.

ஆள் ஆளுக்கு முணுமுணுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பெரியவர்களிடம் சொல்லி விட்டு இவர்களும் கிளம்பினார்கள். போகும் போது “நாங்க இன்னும் கொஞ்ச நாள் இந்த காட்டுல தான் இருப்போம். அது வரைக்கும் குச்சி எங்க கூட இருக்கட்டும்”, என்று சொன்னான் மாதவன். வனமங்கை மற்றும் குச்சி முகம் ஒளிர்ந்தது. சந்தோசத்துடன் அவர்களுடன் கிளம்பினான்.

இங்கே வீட்டுக்கு வந்ததும் அவர்கள் இருவருக்கும் அன்னம்மா ஆரத்தி எடுக்க விஷயம் தெரிந்த வெண்ணிலா வெளியே வரவே இல்லை.

வீட்டுக்குள் சென்றதும் வனமங்கை மற்றும் குச்சியை அமரச் சொன்னவன் குளிக்கச் சென்றான். குச்சி அக்காவிடம் நேற்று என்ன நடந்தது என்று கதை கேட்க அவளும் திகிலுடன் அதைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்ன கதையின் நாயகன் மாதவன் ரோல் மாடலாக குச்சியின் மனதில் பதிந்து போனான்.

அவன் குளித்து முடித்து வந்ததும் அவளை முகம் கழுவ அனுப்பியவன் இருவரையும் அழைத்துக் கொண்டு டவுனுக்கு வந்தான். வெற்றி தான் ஜீப் ஓட்டினான்.

இருவருக்கும் தேவையானதை கேட்டு கேட்டு அவன் வாங்கிக் கொடுக்க இந்த முறை சந்தோசமாகவே இருவரும் வாங்கிக் கொண்டார்கள். பின் அவர்கள் வீட்டுக்கு வரும் போது இரவு ஆகி இருந்தது.

மணமக்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி “குச்சி என் கூட படுக்கட்டும் சார்”, என்றான் வெற்றி.

அதை புரிந்து கொண்டு “இந்த கல்யாணம் வெறும் கண் துடைப்பு தான் வெற்றி. ஊருக்கு போய் அம்மா முன்னிலையில் பண்ணுறது தான் நிஜக் கல்யாணம். அப்புறம் தான் எல்லாம். அதனால அவன் எங்க கூடவே இருக்கட்டும்”, என்று சொல்ல வெற்றியும் புன்னகைத்துக் கொண்டான்.

இரவு உணவு எல்லாம் முடிந்ததும் குச்சி சீக்கிரமே உறங்கி விட வெளி அறையில் அமர்ந்திருந்த மாதவன் அருகில் வந்தாள் வனமங்கை.

தன்னுடைய வீட்டில் இரவு நேரத்தில் தனக்கு மனைவியாக இருப்பவளைக் கண்டு அவன் மனம் உவகை கொண்டது. அவளுக்கும் அப்படி தான். இருவரும் இந்த தருணம் வருமா வராதா என்று கனவு கண்டார்களே.

அவளைக் கண்களால் அருகில் அழைத்தான். சிணுங்கிய படி அவன் அருகே அமர அவளை இழுத்து அனைத்துக் கொண்டவன் “இந்த மூளையில் என்ன ஓடுது? கேட்டுரு”, என்றான்.

“நாம ஏன் உடனே ஊருக்கு போகலை? உங்களுக்கு லீவ் கிடைக்கலையா? இல்லைனா…”

“இல்லைன்னா என்ன? அதையும் கேட்டுரு. மொத்தமா பதில் சொல்றேன்”

“அது வந்து….”

“என் கிட்ட என்ன தயக்கம்? சொல்லு டி”

“உங்க வீட்டுக்கு போனா….”

“போனா…?”

“உங்க அம்மா என்னை ஏத்துக்க மாட்டாங்கன்னு தானே போகலை?”

“நீ இன்னும் அப்படி தான் நினைச்சிட்டு இருக்கியா? காலைல டவுனுக்கு போகும் போதே அம்மாக்கு பேசிட்டேன்”, என்று சொல்லி பேசியதைச் சொன்னான்.

கடைக்கு போனதும் குச்சியும் வனமங்கையும் ஆர்வமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாதவன் கீதாவுக்கு அழைத்தான்.

“சொல்லு டா மாதவா? என்ன இந்நேரம் கால் பண்ணிருக்க?”, என்று அவள் கேட்டதும் நடந்த அனைத்தையும் சொன்னான்.

“டேய் நிஜமாவா சொல்ற? எனக்கு திரில்லர் கதை கேக்குற மாதிரி இருக்கு டா. உன் கூட தான் வனமங்கை இருக்காளா?”

“ஆமா மா, இப்ப என்ன பண்ண? அவளுக்கு தலைல கொஞ்சம் காயமும் இருக்கு”

“நீ லீவ் கேட்டியா உங்க ஆபிசர் கிட்ட?”

“நாளான்னைல இருந்து கேட்டேன். பத்து நாள் எடுத்துக்க சொல்லிருக்காங்க. லீவ் முடியும் போது டிரான்ஸ்பர் பத்தின தகவலும் வரும்”

“அப்படின்னா நீ மூணு நாள் கழிச்சே வா. நான் இங்க எல்லா ஏற்பாடும் பண்ணுறேன்”

“பெருசா எல்லாம் செய்ய வேண்டாம் மா. உனக்கு தான் கஷ்டம்”

“காசு கொடுத்தா ஆட்கள் செய்ய போறாங்க. சரி நீ எடுக்கும் உன் மாமாக்கு ஒரு வார்த்தை சொல்லிரு. அப்புறம் நான் மாப்பிள்ளை கிட்ட பேசிக்கிறேன்”, என்று சொல்லி அவள் போனை வைத்ததும் வனிதாவின் கணவன் கிருஷ்ணனுக்கு அழைத்தான்.

அவருக்கு மச்சினன் மேல் எப்போதும் மரியாதை கலந்த அன்பு இருப்பதால் அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் “நீ தங்கச்சியை கூட்டிட்டு பொறுமையா வா மாப்பிள்ளை. நான் இங்க எல்லாம் பாத்துக்குறேன். இப்பவே லீவ் போட்டு உங்க ஊருக்கு போறேன்”, என்றான்.

“ஓகே மாம்ஸ் தேங்க்ஸ், புரிஞ்சிக்கிட்டதுக்கு”

“இதுக்கெல்லாம் தேங்க்ஸா? விடு மாப்பிள்ளை”

“மாம்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்”

“என்ன கேளு?”

“இல்லை இப்ப லீவ் போட்டு ஊருக்கு போறது என் கல்யாண வேலைகளைப் பாக்கவா? இல்லை உங்க பொண்டாட்டி பிள்ளைகளைப் பாக்கவா? ஏதோ பக்கத்து இலைக்கு பாயாசம் மாதிரியே இருக்கு”

“ஹா ஹா, கண்டு பிடிச்சிட்டியா? பிள்ளைங்க கண்ணுக்குள்ளே இருக்காங்க. நானே போகணும்னு நினைச்சேன்”

“பிள்ளைங்க மட்டும் தான் கண்ணுக்குள்ள இருக்காங்களா?”

“உன் அக்காவும் தான் மாப்பிள்ளை”, என்று அவன் சிரிக்க “ரொம்ப தேங்க்ஸ் மாமா. அக்கா கிட்டயும் விவரம் சொல்லுங்க. அவ கிட்ட சொல்லலைன்னு கோப படுவா. பாத்துக்கோங்க”, என்று சொல்லி போனை வைத்தான்.

இதையெல்லாம் அவன் இப்போது வனமங்கையிடம் சொல்லிக் கொண்டிருக்க அவளோ நம்பலாமா வேண்டாமா என்ற பார்வையைப் பார்த்தாள்.

“நீ நம்பவே வேண்டாம். நேர்ல போய் தெரிஞ்சிக்கோ. இப்ப இந்த மூளைக்கு வேற வேலை கொடுக்குறேன்”, என்றவன் அவளுடைய இதழ்களைச் சிறை செய்ய அவள் அனைத்தையும் மறந்தாள்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!