Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 12 2

வெயில் மறைந்திருந்தது. அதுவே மணி மாலை ஐந்து இருக்கும் என்று புரிய வைத்தது. இன்னும் சற்று நேரத்தில் இருட்டி விடும் என்று இருவருக்குமே புரிந்தது.

“இப்படி இறக்கமே இல்லாத ஜனங்களா என்னோட ஜனங்கள்? அதனால் தான் மற்ற மக்கள் தங்களின் இனத்தைக் கண்டு அஞ்சுகிறார்களோ? பழி பாவத்துக்கு அஞ்சாமல் இப்படி செய்கிறார்களே?”, என்று எண்ணி அவளது இனத்தையே வெறுத்தாள். மாதவன் அழைத்தவுடன் அவனுடன் செல்லாத தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டாள்.



Advertisement

அவள் உணர்வுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தது. தன் நிலையை எண்ணி இதயம் பிளக்கும் வலி வந்தது.

Advertisement

சிறிது நேரம் கழித்து ஏதோ அதிர்வு கேட்க ஏதோ விலங்குகள் வருகிறது என்று தெரிந்து கொண்டாள். சிக்கினால் சின்னா பின்னம் தான் என்று புரிந்தது. ஆனால் எழுந்து ஓடத் தான்  அவள் உடலில் தெம்பில்லை. மயக்கம் வேறு வரும் போல இருந்தது.

Advertisement

எந்த நிமிடமும் மயங்கி விடுவேன் என்று பயம் காட்டிய உடலை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்யவாம்? ஆனால் அந்த அதிர்வு அருகில் கேட்க வேறு வழியில்லாமல் மீண்டும் ஓட ஆரம்பித்தாள்.

Advertisement

எங்கிருந்தாவது சிறுத்தை, புலி என்று வந்து விடுமோ என்று பயமாக இருந்தது. ஓடிக் கொண்டிருந்தவள் காலில் ஒரு செடி மாட்டிக் கொண்டது. வந்த வேகத்தில் தலை குப்புற கீழே விழுந்தாள். அங்கே இருந்த பாறையில் அவளது முன் தலை பலமாக மோதியது. அடுத்த நொடி அவள் நெற்றியில் இருந்து ரத்தம் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஆனாலும் எழுந்து அமர்ந்தாள். அப்போது அவள் கண்ணில் பட்டது உடும்பு.

அதைக் கண்டு “பிடித்தால் விடாதே”, மீண்டும் அவள் தெரித்து ஓட அதுவும் அவளை துரத்தியது. அது அவளை நெருங்க ஆரம்பிக்க “மங்கை மங்கை”, என்று மாதவனின் குரல் அவள் காதில் கேட்டது.

காதில் தேன் வந்து பாய்வது போல “என்னங்க”, என்று அலறினாள். கண்டேன் சீதையை என்பது போல அவள் குரல் கேட்ட திசை நோக்கி ஓடியவன் அவளை கண்டு கொண்டான்.  கூடவே அவன் கண்ணில் அவளை துரத்தி வந்த உடும்பும் பட்டது. இடையில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்தவன் சரியாக குறி வைத்து அதைச் சுட்டான். அதன் கையில் ஒரு பக்கம் குண்டு பட சத்தம் கொடுத்துக் கொண்டே அது காட்டுக்குள் ஓடி விட்டது.

“காப்பாத்துங்க”, என்ற படி அவன் முன் ஓடி வந்தவள் அப்படியே குப்புற விழுந்து மயங்கி இருந்தாள். அவள் நிலையை பார்த்தவனுக்கு கண்களில் நீர்க் கோர்த்தது. முதலில் அவளைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று புரிய அப்படியே அவளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டவன் துப்பாக்கியை கையில் வைத்த படியே நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு குகை தெரிய அந்த குகையை நோக்கிச் சுட்டான். பல வவ்வால்கள் சிறகடித்துப் பறக்க அந்த சத்தமே பயங்கரமாக இருந்தது. குகைக்குள் அவளைத் தூக்கிச் சென்று படுக்க வைத்தவன் அவளைப் பார்த்தான். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாததால் ஜாக்கிரதையாகவே இருந்தான்.

வேகமாக அருகில் கிடந்த குச்சிகளை சேகரித்து விட்டு தான் அவளைக் கவனித்தான். ஏனென்றால் இப்போது லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

இப்போது நெருப்பை பற்ற வைத்தால் ஏதாவது விலங்குகள் வரலாம் என்பதால் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். மயங்கி இருந்த நிலையிலும் அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை அவள் பயத்தை பறைசாற்றியது. அவளது காயங்களும் அப்போது தான் அவன் கண்ணில் பட்டது.

என்ன செய்ய என்று யோசித்தவன் வைத்தியர் ஐயா கொடுத்த பையை திறந்தான். அந்த பையை ஆராய்ந்தவனுக்கு வைத்தியர் அட்சய பாத்திரம் போல பல பொருள்களை வைத்திருந்தார்.

இரண்டு கண்ணாடி குப்பியில் தண்ணீர், ஒரு தடிமனான போர்வை, கத்தி போன்ற சில பொருள்கள், சில பழங்கள், ஒரு உணவு பொட்டலம் என அனைத்தும் இருந்தது. அதில் இருந்த போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தினான். அந்த பையில் காயத்துக்கு என பச்சிலை மருந்தையும் அவர் வைத்திருக்க அவளுடைய காயத்துக்கு மருந்து போட்டு விட்டான்.

பின் அவள் கால் பக்கம் வந்து அவள் கால்களை ஆராய்ந்தான். அவள் காலைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கல்லு குத்தி சதை பிளந்து இருந்தது. நகமெல்லாம் பெயர்ந்து ரத்தக் கறையுடன் இருந்தது.

“என்னால தான் டி உனக்கு இவ்வளவு கஷ்டம். நான் மட்டும் உன் வாழ்க்கையில் வரலைன்னா உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்துருக்காதுல்ல?”, என்று தலையில் அடித்து அழுதவன் நெருப்பைப் பற்ற வைத்து விட்டு பையில் இருந்த டார்ச்சை ஆண் செய்து அவள் கால்களுக்கு மருந்து வைத்தான்.

சிறிது நேரத்தில் கண் விழித்தவள் அவனைக் கண்டதும் ஆனந்தத்தில் கதறி அழுதாள். இன்னுமே அவள் பயம் அவளை விட்டுப் போக வில்லை என்று பயந்தவன் அவளை இறுக அணைத்துக் அவளுக்கு ஆறுதல் கொடுத்தான்.

அவளும் அவன் மார்பில் வாகாக ஒண்டிக் கொண்டாள். அவளது கவலை, பயம் அனைத்தும் பின்னுக்குச் சென்று விட்டது.

“ஒண்ணும் இல்லை டா. நான் இருக்கேன் உனக்கு. உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன்”, என்று சொன்னவனின் கைகள் அவள் முதுகை ஆதரவாக வருடி விட்டது.

“செத்துருவேன்னு நினைச்சேன் தெரியுமா?”, என்று அவள் கதற பொறுமையாக அவளைத் தேற்றி உணவு உண்ண வைத்தான். உணவின் சுவை ஒரு மாதிரி இருப்பதே அது கெட்டு விட்டதை புரிய வைத்தது. ஆனால் அவளுக்கு அது தேவாமிர்தமாக இருந்தது.

“அது கெட்டுப் போச்சு வனமங்கை. இந்த பழத்தைச் சாப்பிடு”, என்றான்.

“கெட்டுப் போகலை. கேப்பைகூழ் புளிச்சிருச்சு அவ்வளவு தான். இருக்குற பசில எனக்கு அதெல்லாம் தெரியலை. பழம் எல்லாம் பாத்தது. உங்களுக்கு வேணுமா?”, என்று கேட்டாள்.

“வேண்டாம்”, என்று சொன்னவன் அவள் வயிற்றை நிறைத்தான். பின் ஒரு வாழைப் பழத்தை எடுத்து அவன் உண்டு விட்டு டார்ச் விளக்கை மட்டும் அணைத்தான்.

இருட்டில் அவள் மிரண்டு அவன் கரம் பற்ற “வீணா பேட்டரி போகும் மங்கை, அவசரத்துக்கு நமக்கு தேவைப் படும். அதான். நான் உன் பக்கத்துலே இருக்கேன், பயப்படாதே”, என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டான். அவன் இதயத் துடிப்பை கேட்ட படி அவன் மார்பில் தலை சாய்த்து படுத்திருந்தாள் வனமங்கை.

“என்னை மன்னிச்சிரு மங்கை. எல்லாம் என்னால தான்”, என்றான்.

“இல்லை தப்பு என் மேல தான். நீங்க கூப்பிட்டப்பவே உங்க கூட வந்துருக்கணும்”

“சரி விடு. இனி நீ எனக்கு தான் சொந்தம். இனி உன் மேல எனக்கு மட்டும் தான் அதிக உரிமை”, என்று சொல்ல ஆம் என்னும் விதமாய் தலையசைத்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டாள். வெகு நேரம் விழித்திருந்தவன் வேறு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்ற வேண்டுதலோடு கண்ணயர்ந்து விட்டான்.

காலையில் பறவைகளின் கீச் கீச் ஒலியில் கண் விழித்தாள் வனமங்கை.  தன் முகம் எதன் மீதோ பதிந்திருக்கவும் அவசரமாக கண்களை விரித்துப் பார்த்தாள். அவள் மாதவனின் நெஞ்சில் தான் உறங்கிக் கொண்டிருந்தாள். அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தவள் மீண்டும் அவன் நெஞ்சிலே படுத்துக் கொண்டாள்.

நடந்தவற்றை எண்ணி அவள் உடல் நடுங்கியது. அவன் மட்டும் வரவில்லை என்றால் என்னவாகியிருப்பாளோ? அந்த பயத்தில் அவள் அவனை இன்னும் இறுக்க அவனும் கண் விழித்து விட்டான்.

அவள் உடல் நடுங்குவதைக் கண்டவன் “மங்கை, உனக்கு ஒண்ணும் இல்லை டா, நான் இருக்கேன்”, என்றான்.

எழுந்து அமர்ந்தவள் கண்களில் நீர் வழிய அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “பைத்தியம்? அதான் நான் இருக்கேன்னு சொல்றேன்ல? இது தான் கடைசி. இனி எந்த ஆபத்தும் உன்னை நெருங்க விட மாட்டேன்”, என்று ஆறுதல் சொன்னான்.

பயத்தில் உறைந்திருந்தவள் காலை கடன்களை கழிக்க செல்லக் கூட பயந்தாள். பக்கத்திலே ஒரு சின்னக் குட்டை இருக்க அவன் தான் அவளை பத்திரமாக அழைத்துச் சென்று அவளுக்கு காவல் இருந்தான்.

தனிமையிலும் இக்கட்டிலும் கண்ணியமாக நடந்து கொண்ட அவன் மீது காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு. அவன் நினைத்திருந்தால் இரவு என்ன வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். தான் விரும்பியவன் நல்லவன் என்ற நினைவில் அவள் நெஞ்சம் விம்மியது.

மீண்டும் குகைக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள். அவளைத் தோளில் சாய்த்த படியே கதை பேசிக் கொண்டிருந்தான். வைத்தியர் ஐயா செய்த உதவியைப் பற்றியும் சொன்னான்.

“சார் சார்… நாங்க பேசுறது கேக்குதா? எங்க இருக்கீங்க”, என்ற வெற்றியின் சத்தத்தில் தெளிந்தவன் “எல்லாரும் வந்துட்டாங்க. வா போகலாம்”, என்று சொல்லி அவளை கைத்தாங்களாக அழைத்து வந்தான். “இங்க இருக்கோம் வெற்றி”, என்று அவனுக்கு குரல் கொடுக்கவும் மறக்க வில்லை.

“சார் உங்களுக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று பதறிய படியே கேட்டான் வெற்றி.

“எனக்கு ஒண்ணும் இல்லை. வாங்க வெற்றி போகலாம்”, என்று சொன்ன மாதவன் வனமங்கையுடன் நடந்தான். அவன் கையில் இருந்த பேகை வெற்றி வாங்கிக் கொண்டான்.

மாதவனின் இடுப்பை பிடித்த படி நடந்து வந்தாள். வேறு பக்கம் தேடிக் கொண்டிருந்த ராம், விஷ்ணு இருவரும் கூட இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

ஊர் வந்ததும் வெற்றி அவர்கள் குடியிருப்புக்கு செல்லப் போக “இல்லை வனமங்கை ஊருக்கு போங்க”, என்றான் மாதவன்.

அவனை அனைவரும் குழப்பமாக பார்க்க அவன் சொன்னதைக் கெட்டு வனமங்கை உடல் நடுங்கினாள். மீண்டும் அங்கேயா என்று அவள் நெஞ்சே அடைத்தது. அவள் பிறந்து வளர்ந்த இடம் தான். ஆனால் அங்கே செல்ல பதறினாள்.

அவள் பதட்டத்தை உணர்ந்தவன் “என்னை நம்புற தானே?”, என்று கேட்டான்.

அவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்தே அவளைக் காப்பாற்றையவனை அவள் நம்பாமல் போவாளா என்ன? “நம்புறேன்”, என்னும் விதமாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

“சார் அங்க வேண்டாமே”, என்றான் ராம்.

“ஆமா சார், எனக்கும் அப்படி தான் தோணுது. அவங்களைப் பொறுத்த வரைக்கும் வனமங்கை தொலைஞ்சதாவே இருக்கட்டும்”, என்றான் வெற்றி.

“இல்லை மங்கை உயிரோட இருக்கான்னு எல்லாருக்கும் தெரியணும். அவங்க சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பொய்ன்னு அவங்களுக்கு புரிய வைக்கணும். இன்னைக்கு இவளுக்கு இந்த பிரச்சனை வந்தது. நான் காப்பாத்திட்டேன். அதே மாதிரி வேற ஏதாவது ஒரு பொண்ணுக்கு வந்துச்சுன்னா. இது தொடர்கதையா மாறக் கூடாது”, என்ற மாதவன் யார் பேச்சையும் கேட்க வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!