Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Ennaik Kollum Vanathevathai 14 1

அத்தியாயம் 14 

அழகான வனத்தில்

தொலைந்து தான் போகிறேன்

உந்தன் நினைவுகளோடு!!!



Advertisement

இன்றோடு வனமங்கை மாதவனின் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. கீதாவும் ஊரில் இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மகனிடம் வந்து விட்டாள். 

Advertisement

குளித்து முடித்து வந்த வனமங்கையின் முகம் சோர்வாக இருந்தது. “கல்யாண நாள் வாழ்த்துக்கள் மா”, என்று சொன்ன கீதா தான் அவள் சோர்வை கவனித்தாள்.

Advertisement

“நன்றி அத்தை”

Advertisement

“என்ன ஆச்சு மா? உடம்புக்கு முடியலையா?”

“இல்லை அத்தை. நல்லா தான் இருக்கேன். ஆனா தலை சுத்திட்டே இருக்கு”, என்று சொன்னதும் கீதா கண்கள் மின்னியது. 

“நாள் தள்ளி போயிருக்கா மா?”, என்றதும் கண்களில் ஒரு வித ஒளியுடன் இதழ்கள் புன்னகையில் விரிய “ஆமா அத்தை”, என்றாள். 

“ரொம்ப சந்தோஷம் மா. இன்னைக்கே ஆஸ்பத்திரி போய் செக் பண்ணிக்கலாம்”

“ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம் அத்தை”

“ஆமால்ல? உனக்கு தான் ஹாஸ்பிட்டல் போகவே பிடிக்காதே. சரி என்ன செய்யன்னு யோசிப்போம். மாதவன் கிட்ட போய் சொல்லு?”, என்று சொல்லி மருமகளை அனுப்பி வைத்தாள். 

“சரி அத்தை”, என்று சொல்லி அறைக்குள் வந்தவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கூடவே அவனிடம் எப்படிச் சொல்ல என்று கூச்சமாகவும் இருந்தது. 

அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை எழுப்ப மனதில்லாமல் அவன் அருகே படுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.  “ஹேப்பி வெட்டிங்க் டே பொண்டாட்டி”, என்று சொல்லிக் கொண்டே கொஞ்சினான் மாதவன். 

அப்போது தான் கண் விழித்தாள் வனமங்கை. அவன் சொல்வது புரிந்தாலும் “அப்படின்னா என்னவாம்?”, என்று கேட்டுக் கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

“இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள் போதுமா?”

“வெறும் வாழ்த்து மட்டும் தானா? பரிசு இல்லையா?’

“பரிசுக்கே யாராவது பரிசு கொடுப்பாங்களா?”

“அடப்பாவி, சமாளிக்கிறீங்களா?”

“இல்லை டி, செல்லம். சத்தியம். என் வாழ்க்கையை அலங்கரிக்க வந்த தேவதை டி நீ”

“ஐயோ போதும் போதும். ஆக மொத்தத்துல கிஃப்ட் இல்லை. அப்படித் தானே?”

“இருக்கு டி, இதோ தரேன்”, என்று சொல்லி ஒளித்து வைத்திருந்த ஒரு பையைக் கொடுத்தான். 

“ஐயையோ, புடவையா?”, என்று அலறினாள் வனமங்கை. 

“அவளுக்கு இப்போது வரைக்கும் புடவை பிடிப்பதே இல்லை. ஊருக்காக கட்டிக் கொண்டாலும் அவளுக்கு பிடிக்காதது எது என்று கேட்டால் புடவை தான். அவளுடைய வீட்டில் இருந்தவரை இரு தாவாணியை தான் கட்டியிருப்பாள். ஆனால் இங்கே இவர்கள் புடவை கட்டும் முறை அவளுக்கு கஷ்டமாக தெரிந்தது. 

“ஏண்டி நல்லா இல்லையா?”

“நல்லா தான் இருக்கு. இருந்தாலும்”

“எனக்கு இதைப் பாத்ததும் உனக்கு வாங்கணும்னு தோணுச்சு டி. அப்புறம் இதுவும் உனக்கு தான்”, என்று சொல்லி ஒரு செட் தங்க நகையையும் பரிசளித்தான்.

“எதுக்குங்க இவ்வளவு நகை? ஏற்கனவே அவ்வளவு இருக்கு”, என்று மறுத்தாள். பிறந்ததில் இருந்து தங்கத்தை கண்டிறாத, பாசியை மட்டுமே அணிந்திருந்த வனமங்கை எப்போதும் போல மறுத்தாள். 

“விலை கூடிட்டே போக கூடியது டி. என் பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடுக்கணும்னு எனக்கு தோணுது, செய்றேன். அதுல உனக்கு என்ன?”, என்று சொன்னதும் “உடனே ஐயாவுக்கு கோபம் வந்துருமே?”, என்று சொல்லி அவன் மூக்கை கிள்ளினாள். 

கிள்ளிய கையை இழுத்து பிடித்தவன் “உன் மேல கோப பட்டு நான் என்ன செய்ய போறேன்? நீ என் உயிர் டி. சரி எனக்கு என்ன கிஃப்ட் வச்சிருக்க?”, என்று கேட்டான். 

“நான் பெரிய கிஃப்டா வச்சிருக்கேன்”

“அப்படியா என்னது டி அது? காட்டு பாப்போம். அம்மா கூட போய் வாங்கினியா?”

“அது கண்ணுக்கு தெரியாது”

“ஏய் போடி, உன் காதல்னு சொல்ல போற? அது தான் என் கூடவே இருக்குற கிஃப்ட் ஆச்சே?”

“இல்லை, இது வேற?”

“சரி, என்னன்னு சொல்லு”

“கண்ணை மூடுங்க”

“பாக்க முடியாததுன்னு சொன்ன?”

மூடுங்க சொல்றேன்”, என்றதும் கண்களை மூடினான் மாதவன். 

அவனுடைய கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்தாள் வனமங்கை. என்னவென்று புரியாமல் கண் விழித்துப் பார்த்தான். 

“என்ன டி?”

“நீங்க… நீங்க அப்பாவாகப் போறீங்க?”, என்று அவள் சொன்னதும் அவன் மீது பூக்களைத் தூவியது போல ஆனந்தமாக இருந்தது. 

“என்ன டி சொல்ற?”

“ஆமா”

இப்படி ஒரு தருணம் வரும் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கழித்து ஒரு முறை கீதா குழந்தையை பற்றி விசாரித்தாள். அதற்கு வனமங்கை முகம் சோர்ந்து போகவும் அவன் அம்மாவை திட்டி விட்டான். அதன் பிறகு குழந்தை பற்றிய பேச்சு அந்த வீட்டில் எடுக்க படவே இல்லை. ஆனால் மனதில் அந்த கவலை இருந்து கொண்டே இருந்தது. 

“உண்மையிலே இது பெரிய கிஃப்ட் டி. டாக்டர் கிட்ட போகலாமா?”

“வேண்டாம்”, என்று அவள் சொல்ல அன்றே கிட்டை வாங்கி வந்து பரிசோதிக்க சொல்லிக் கொடுத்தான். அவர்கள் நினைத்தது போல தான் ரிசல்ட் வந்தது. 

“எப்படி டி இது? நான் எதிர் பார்க்கவே இல்லை”, என்று சொல்லி அவன் அவளை சீண்ட அவள் முகம் செவ்வானமானது. 

அன்று இரவு அவனுடைய மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் வனமங்கை. அவன் விரல்கள் அவள் தலையை வருடி விட்டது. 

“என்ன டி உன் வீட்டுக்கு போகணும் போல இருக்கா?”

“இல்லைங்க, போன மாசம் தானே எல்லாரையும் பாத்துட்டு வந்தோம். கொஞ்ச நாள் ஆகட்டும்”

“இல்லை டி இந்த நேரத்துல அம்மாவை ரொம்ப தேடும்னு சொல்லுவாங்க. உனக்கு அம்மா இல்லாட்டியும் அப்பா கூட இருக்கலாம்ல?”

“அதான் எனக்கு அம்மா இருக்காங்களே. அத்தை தான் எனக்கு அம்மா. அவங்களை விட வேற யாரு என்னை நல்லாப் பாத்துக்க முடியும்?”, என்று அவள் சொன்னதும் அவள் பதிலில் நிம்மதியானான். 

ஆனால் அடுத்தடுத்த வந்த நாட்களில் ஹாஸ்பிட்டலுக்கு மட்டும் அவள் வரவே மாட்டேன் என்று சொல்ல அவனுக்கு தான் பயமாக இருந்தது. 

மூன்று மாதம் கழித்து ஒரு நாள் குழந்தைக்கு இதயத் துடிப்பு இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று அவன் சொல்ல “என் குழந்தைக்கு இதயத் துடிப்பு இருக்கும். நான் அங்க வர மாட்டேன்”, என்று மறுத்தாள். கீதாவும் ஒரு தடவை சொன்னாள். ஆனால் வனமங்கை கேட்காததால் அதன் பின் மகனைத் தான் சமாதானம் செய்தாள். 

அவன் கோபத்துடன் முதுகு காட்டிப் படுக்க அவன் கோபம் புரிந்தாலும் வனமங்கை அவனை சமாதானம் செய்ய வில்லை. 

ஆனால் அடுத்து வந்த நாட்களில் அவன் அவளிடம் பேசாமல் இருக்க கீதாவிடம் சொல்லி புலம்பினாள். “இப்படி தான் மா பிடிவாதம் பிடிப்பான். நாம தான் வேற வழி இல்லாம இறங்கி போக வேண்டியது இருக்கும். மருந்து மாத்திரை எடுக்க வேண்டாம்னு நீ சொல்றது எனக்கு புரியுது மா. நீ ஊசியோ, மாத்திரையோ எதுவுமே எடுக்க வேண்டாம். ஆனா அவன் கூட போய் ஒரு ஸ்கேன் மட்டும் எடுத்துட்டு வா. அவனும் நிம்மதியா இருப்பான். அதுக்கப்புறம் உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன்”, என்று கீதா சொல்ல “சரி அத்தை”, என்று அவள் தான் பணிந்து போக வேண்டியது இருந்தது. 

வேறு வழியில்லாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவனுடன் சென்றாள். ஹாஸ்பிட்டல் வாடையே வனமங்கைக்கு பிடிக்க வில்லை. பிறந்ததில் இருந்து மருந்து மாத்திரை என்று பழக்கப் படாதவள் அந்த சூழ்நிலையை வெறுத்தாள். அதுவும் அங்கு சில பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருக்க அதைக் கண்டு அவள் மனதுக்குள் பயப்பந்து உருண்டது. 

குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டும் என்ற பயத்தில் இருந்த மாதவனும் அவள் முகத்தை கவனிக்க வில்லை. அவளை ஸ்கேன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். “குழந்தை நல்ல படியாக இருக்குது. சாரி சாரி குழந்தைகள் நல்ல படியா இருக்கு. ஆமா மிஸ்டர் மாதவன், ரெண்டு கரு உருவாகி இருக்கு. ரெண்டுமே ஹெல்தியா இருக்கு. கொஞ்சம் விட்டமின் மாத்திரை மட்டும் எழுதித் தரேன்”, என்று மருத்துவர் சொன்ன பிறகு தான் அவன் நிம்மதியானான். அதுவும் இரண்டு குழந்தைகள் என்றதும் அவனுக்கு சந்தோசமாக இருந்தது. 

ஆனால் அவளுக்கோ இரண்டு குழந்தைகள் என்று சந்தோஷம் வந்தாலும் மனதில் எழுந்த பயம் போகவே இல்லை. இப்போதே பிரசவத்தை நினைத்து பயந்தாள். ஹாஸ்பிட்டல் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவன் பிரசவத்தையும் இங்கே தானே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பான் என்று அவளுக்குத் தோன்றியது. 

என்ன ஆனாலும் அவளால் கட்டாயம் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று முடிவு எடுத்தாள். அவள் மனதில் ஓடும் எண்ண ஒட்டத்தை அவன் புரிந்து கொள்ள வில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!