Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 7

தனப்பாக்கியம் தன் சின்ன பேத்தியை கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“இந்த மூட்டு வலியோட ரெண்டு மாடி ஏறி எப்படிடி போவேன்? இந்த ஒருமுறை மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வாயேன் என் ராசாத்தி ல?”

அவர் கையில் இருந்த தூக்கை இவள் புறம் நீட்டிக்கொண்டிருக்க, அதை கிஞ்சித்தும் கவனியாமல் டிவியில் மூழ்கி இருந்தாள் ஆர்த்தி.

“வயசானவ இத்தனை தூரம் இறங்கி வந்து கெஞ்சுறேனே! பேச்சுக்கு மரியாதை இருக்காடி இந்த வூட்டுல? அப்படியே உன் ஆத்தாக்காரியாட்டம் மனுஷன மதிக்காமையே திரிங்கடி!” கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போனவர் திட்ட ஆராம்பித்து விட்டார்.



Advertisement

அப்போதும் ஆர்த்தி அசையவில்லை.

வாரக்கடைசி விடுமுறையில் ஹாஸ்டலில் இருந்து வந்திருந்த மதன் அவர் கண்ணுக்கு தெரிய,

“யய்யா ராசா! இங்க வாயேன்” தாஜா செய்து அழைத்தார்.

Advertisement

“என்ன ஆத்தா? சீக்கிரம் சொல்லுங்க! பசங்க வெளில நிக்குறானுவ!” படத்திற்கு செல்ல கிளம்பியவனை அவர் தடுக்க, அவசரகதியில் அவன் சொன்ன பதிலே எப்படியும் அவருக்கு அவன் உதவி செய்ய போவதில்லை என்பதை புரிய வைத்திருக்க,

Advertisement

“பார்த்து போயிட்டு வாயா!” என்று அனுப்பி வைத்துவிட்டார்.

தூக்கில் சுட சுட இருந்த ‘சுசியம்’ ஆறி போகும் முன் அதை மனோகரிடம் சேர்ப்பிக்க வேண்டும். அவனுக்கு ரொம்பவே பிடித்த இனிப்பு அது.

வீட்டின் மொட்டை மாடியில் வேண்டாத பொருட்கள் போட வைத்திருக்கும் சிறிய அறையில் தான் தங்கியிருக்கிறான்.

Advertisement

புவனேஸ்வரி அவள் பிறந்தகத்தில் சிறு விசேஷம் என்று நேரமே கிளம்பி சென்றிருக்க, அவனுக்காக தனபாக்கியமே ஆசையாய் செய்தது.

வேலையாட்களிடம் கொடுத்தால் கொண்டு போய் கொடுத்து விடுவார்கள் தான்! ஆனால், அவன் அதை சீண்டியும் பார்க்க மாட்டான். ரோஷக்காரன்!!!

அவன் அங்கே வந்த புதிதில் மூன்று வேளை சாப்பாட்டிற்கும் புவனேஸ்வரியிடம் அத்தனை பேச்சு வாங்க வேண்டியிருக்கும்.

எல்லாம் மறைமுக குத்தல்களாகவே வந்து விழும்.

வாயில் வைக்கும் உணவை உள்ளே தள்ள அரை குவளை நீரை குடிப்பான். ரோஷத்தில் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும் எத்தனை நாள் அப்படி இருக்க முடியும்? என்ற நிதர்சத்தில் ஏச்சு பேச்சு வாங்கினாலும் சரி என்று பசிக்கு மட்டும் உண்டுக்கொள்வான்.

அன்பழகன் அவனிடம் என்றாவது பாசமாய் பேசுவது போல தெரிந்து விட்டால் போதும், அடுத்த ரெண்டு தினங்களுக்கு அவனுக்கு விழும் மண்டகப்படி எல்லை மீறும்.

‘இந்த பாரு வாழ வக்கத்து வந்து நின்னன்னு பாவம் பார்த்து அந்த மனுஷன் உள்ள சேர்த்துருக்காரு… மூணு வேளை சோத்தை தின்னமா, படிப்பை முடிச்சதும் கைய காலை ஊனி எழுந்துக்க பாத்தமான்னு இருக்கணும்! அதை விட்டுட்டு சொந்தக்காரன் வூடு தானேன்னு இங்கேயே டேரா போட பார்த்தா என் இன்னொரு முகத்தை நான் காட்ட வேண்டி வரும் சொல்லிட்டேன்!

பொட்டபுள்ளைங்க இருக்க வூடு! இருக்குற இடம் தெரியாம இருந்துக்க பாரு! ரெண்டுல ஒன்னை வளைச்சு போட்டு உறவுக்காரனா ஒட்டிக்கலாம்ன்னு மனக்கோட்டை கட்டிடாத!!!

அதே மாறி சிரிச்சு பேசி அதுங்க மனசை களைச்சு புடலாம்ன்னு கனவு கூட காணாத… சொல்லிட்டேன் ஆமா’

இதே உள்ளடகத்தில் பலநாள் பலவித பேச்சுகளை புவனா நெருப்பாய் அவன்மீது கொட்ட அதன்பின்னே மனோகர் முற்றிலுமாய் தனக்குள் ஒடுங்கிப்போனான்.

படிப்பு முடியும் வரை பொறுத்திருந்தவன், அதன் பின்னே தனக்கு வேண்டியதை தானே சமைத்து உண்ண ஆரம்பித்தான்.

படிப்பு முடித்ததும் இங்கிருந்து எங்கேனும் சென்றுவிடுவான் என்று எண்ணியிருந்த புவனேஸ்வரிக்கு அது நடவாமல் போனதில் அதீத கடுப்பு. அதன் வெளிபாடு அவனை நேருக்கு நேர் பார்க்கும் சமயங்களில் மும்மாரியாய் பொழியும்.

தனபாக்கியம் இதற்குமேல் வழி இல்லை என்று தானே மாடியேற முடிவெடுத்தார். இருப்பினும், ஒரு முயற்சியாய் இங்கிருந்தே அவனை அழைத்துப்பார்க்கலாமா? என்று தோன்ற, அவர் ‘மனோகரா…. மனோகரா?…’ என ஏழு கட்டையில் போட்ட கூப்பாட்டில் முதல் மாடியில் இருந்த கௌசி தான் வேகமாய் வந்து நின்றாள்.

“ஏன் ஆத்தா மாமன ஏலம் போட்டுட்டு இருக்கீங்க? இங்கிருந்து கூப்பிட்டா கேட்காதுன்னு தெரியும் தானே?”

“ம்கும்… கேட்க்காதவனை கூவி கூவி அழைக்கனும்ன்னு வேண்டுதல் டி!” என நொடித்தவர், சட்டென குரலை குழைத்து, “ஏ தங்கம் இங்க வாயேட்டி….” என்றார்.

திடீர் கொஞ்சலில் துணுக்குற்றாலும் அவர் கையில் இருந்த தூக்கு அவளை போக வைக்க, “என்ன ஆத்தா?” என்று வந்து நின்றாள்.

“இந்த தூக்க சித்த மாமன் கிட்ட கொண்டு போய் குடுத்துட்டு வாயேண்டி!” அவள் தாடை கிள்ளி கொஞ்சலாய் கேட்டார் தனபாக்கியம்.

அங்கிருந்த ஆர்த்தியை ஒரு பார்வை பார்த்தவள், “உங்களுக்கு வேலை சொல்ல பெரிய பேத்தி தான் சிக்குனாலோ?” என்று முறுக்க, ஆர்த்தி அவளை முறைத்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“அவ கடக்குறா ராங்கி! அவ ஆத்தா புத்தி தானே அவளுக்கும் இருக்கும்!”

“அப்போ எனக்கு யார் புத்தியாம்?”

“அடியே நீ என்னோட ரத்தம் டி! உதவின்னு ஒருத்தர் கேட்டு மறுக்குற எண்ணம் நம்ம உதிரத்துலையே கிடையாதே” அவர் பெருமையாய் அள்ளி விட,

“ஐயய்யயையோ… முடி……..யலையே!!!’ காதை மூடிக்கொண்டாள் ஆர்த்தி.

அவளை ஒருமுறை முறைத்தவர், “நீ என் செல்ல பேத்தில்ல! இதை அவன்கிட்ட குடுத்துடு டி!” என்றார்.

“குடுக்குறதெல்லாம் கெடக்கட்டும்! இதுக்குள்ள என்ன இருக்கு?”

“அது எதுக்கு உனக்கு?” லேசாக எகிறினார்.

“சொல்லலன்னா போங்க! இதை அப்படியே தூக்கிட்டு போய் மொதோ மாடில வச்சு நானே தின்னுபுட்டா என்னா செய்வீங்க?” அத்தனை ஜவடாலாய் அவள் கேட்க, உடனே அவர் கெஞ்ச வேண்டியதாயிற்று!

சிறிது நேரம் கெஞ்ச விட்டு ரசித்தவள், “சரி சரி உங்கள பார்த்தால் பாவமா இருக்கு! உங்களுக்காக கொண்டுப்போய் குடுக்குறேன்!” என்றாள் பெரிய மனதாய்.

சந்தோசமாய் அவளை அனுப்பி வைத்தவர் அவள் பாதி படிகள் ஏறியதும், “ஏன்டி இவளே, மாமனை அப்படியே தோட்டத்துக்கு வர சொன்னேன்னு சொல்லிடுடி” என்று உரக்க கத்த ‘ம்ம்ம்’ போட்டவள் இரண்டிரண்டு படிகளாய் வேகமாய் தாவி ஓடினாள்.

அந்த சின்ன அறையில் ஒரு பாதி பொருட்கள் நிறைந்து கிடக்க, மறுபாதியில் அவன் படுப்பதற்கு இடமும், மீதமிருந்த இடத்தில் ஒரு பெட்டி, சின்ன மண்ணெண்ணெய் அடுப்பு, அதை சுற்றி சமைக்க தேவைப்படும் பொருட்கள் என வெகு சிக்கனமாய் இருந்தது.

ஒருக்களித்திருந்த கதவை வேகமாய் திறந்து உள்ளே நுழைந்தவள் படிகள் தாவி வந்ததில் மூச்சு வாங்க, “மா…மா” என்றாள்.

திடீரென அவள் வந்து நின்றதில் திடுக்கிட்டவன், அவசரமாய் எழுந்து சட்டையை எடுத்து மாட்ட, அதை பார்த்தவள், “அய்ய! பொம்பளை புள்ள மாறி பண்ணாதீங்க மாமா” என்றாள்.

திரும்பி முறைத்தவன், “கதவை தட்டிட்டு வர தெரியாதா?” என்றான் கடினகுரலில்.

அதற்கு பதில் சொல்லாமல் அடுப்பின் அருகே போனவள், “அச்சோ, ரசம் கொதிக்கபோகுது மாமா!” என்றுவிட்டு அங்கிருந்த கரித்துணிக்கொண்டு பாத்திரத்தை இறக்கி வைத்து,

“ரசம் கொதி வரதுக்கு முன்னாடி இறக்கிடணும்! அப்போதான் ருசிக்கும்… தெரியுமா?” என்றாள்.

“எல்லாம் எனக்கு தெரியும்! நீ கிளம்பு”

“ம்ச்! எப்பபாரு உர்ர்…உர்ர்…ன்னு… ஏன் மாமா இப்படி இருக்கீங்க?”

மௌனமாய் அவளை ஒரு பார்வை பார்த்தவன், “உன்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?” என்றான்.

“நானா ஒன்னும் வரலை… ஆத்தா தான் அனுப்பி வச்சாங்க”

“எதுக்கு?”

“இந்தாங்க!” கையில் இருந்த தூக்கை அவன்புறம் நீட்ட, அதை வாங்காமலே, “என்னதிது?” என்றான் மனோகர்.

“எனக்கும் தெரியாது!” என்றவள், அதை திறந்து பார்த்து, “ஹை!!! சுசியம்!!!” என்றாள் ஆவலாய்.

அவள் முகத்தை ஊன்றி பார்த்தவன், “சாப்பிடு” என்றுவிட்டான்.

மலர்ந்த முகம் இன்னும் மலர, “ஹை! நிஜமாவா மாமா? ஆனா ஆத்தாக்கு தெரிஞ்சா திட்டுவாங்களே?” கடைசி வரி சொல்கையில் பாவமாய் போனது அவள் முகம்.

“நான் சொல்ல மாட்டேன்!” அவளுக்கு வேண்டியதை சொல்லிவிட்டான். அதற்குமேல் என்ன தடை! அங்கிருந்த முக்காலியை எடுத்து போட்டவள் சட்டமாய் அமர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டாள்.

ஆனால், அவள் அங்கேயே அமர்வாள் என எதிர்ப்பார்க்காத மனோகர், “உன் ரூமுக்கு போய் சாப்பிடு போ!” என்றான் உடனே!

“ஆர்த்தி பார்த்தா மாட்டிவிட்டுடுவா மாமா! நான் சாப்பிட்டுட்டே போறேன்” என்றவளை அதற்குமேல் விரட்ட முடியாது என தெரிந்துப்போக, தட்டில் வடித்து வைத்த சாதத்தை போட்டு ரசத்தை ஊற்றி உண்ண ஆரம்பித்தான்.

வாய் சுசியத்தை சுவைத்தாலும் கண்கள் அவனை தான் நோட்டமிட்டுக்கொண்டிருந்தது.

வெறும் ரசத்தை அவன் உண்ண சிரமமப்படுவது அவன் முகத்திலேயே தெரிய, “எதுக்கு மாமா இப்படி கஷ்டப்படனும்? முன்னமாறி கீழேயே வந்து சாப்பிடலாம்ல?” என்று கேட்டுவிட்டாள்.

நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் குனிந்து உணவை வாயில் அடைத்துக்கொள்ள, “எனக்கு தெரியும்! அம்மா ரொம்ப பேசுறாங்கன்னு தானே நீங்க கீழ சாப்பிட மாட்டேங்குறீங்க?” என்றாள்.

“………”

“எனக்கும் அம்மா உங்கக்கிட்ட நடந்துக்கிறது கொஞ்சம் கூட பிடிக்கலை மாமா! அம்மா பேச்சை கேட்டு இந்த அண்ணாவும், ஆர்த்தியும் கூட உங்களை மதிக்கிறது இல்ல” என்று சொல்ல, மெள்வதை ஒரு நொடி நிறுத்தியவன், பின் அதை அப்டியே விழுங்கி தண்ணீரை குடித்தான்.

“கீழ ரெண்டு ரூமு சும்மா தான் இருக்கு! அதை குடுக்கலாம்ல உங்களுக்கு?” அவனிடமே கேட்டாள்.

“நீங்களும் ஏன் மாமா இங்கேயே இருக்கணும்? பக்கத்துலையே எதாவது நல்ல இடமா பார்த்து போய்டலாம்ல?” அதுவரை அமைதியாய் இருந்தவன், அவள் இப்படி கேட்டதும் விலுக்கென்று நிமிர, அவன் பார்வையின் அர்த்தம் விளங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கௌசி.

“சாப்பிட்டுட்டியா?” என்றான்.

இன்னும் இரண்டு மூன்று மிச்சம் இருந்தது. விட்டால் அதையும் தின்று விடுவாள் தான். மொத்தமாய் மொக்க மனம் கேளாமல், தூக்கை மூடி வைத்தவள், “ம்ம்ம்” என்றாள் அவனிடம்.

“அப்போ கிளம்பு!” என்றான் மறுநொடியே!

முக்காலியை விட்டு வெடுக்கென எழுந்தவள், “உர்ராங்கொட்டான் கூட அப்பப்ப சிரிக்கும் மாமா! ஆனா நீங்க இருக்கீங்களே?” சலிப்போடு வாசலுக்கு செல்ல… கதவடைக்க அவள் பின்னாலே வந்தவனை பகிரங்கமாய் முறைத்து,

“ஆத்தா தோட்டத்துக்கு வர சொன்னாங்க! ஹும்!” என்ற கழுத்து வெட்டளோடு அங்கிருந்து ஓடினாள்.

அவள் சென்ற பின் அமைதியாய் அந்த அறையில் அமர்ந்திருந்தவன், அவள் மிச்சம் வைத்து சென்ற சில சுசியங்களை வாயில் அடைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

மாடியில் இருந்து வெளியேற இருவழிகள் இருக்கும். ஒன்று வீட்டின் உள்ளே நுழைந்து இறங்கும்படி இருக்க, மற்றொன்று வெளிப்புறமாய் தோட்டத்தில் சென்று முடியும்.

மனோகர் எப்போதும் வேலையாட்கள் பயன்படுத்தும் வெளிப்புற படிகட்டை தான் உபயோகிப்பான். இப்போதும் அதே வழியில் கீழிறங்கி தோட்டத்திற்கு செல்ல, அங்கே மாமரத்தின் அடியில் கால் நீட்டி அமர்ந்திருந்தார் தனபாக்கியம்.

சென்றவன், அவர் முன்னே அமர, “வாய்யா! அந்த சிங்காரி தூக்குவாளிய கனமா குடுத்தாளா? இல்ல வழிலேயே தின்னுட்டு வெறும் தூக்கை தூக்கிட்டு வந்தாளா?” எடுத்ததுமே இதைதான் கேட்டார்.

தான் சுசியத்தை கபளீகரம் செய்ததை மனோகர் ஆத்தாவிடம் சொல்கிறானா என்று தெரிந்துகொள்ள பின்பக்க வாசலில் வந்து மறைந்து நின்ற கௌசி, தனபாக்கியத்தின் பேச்சைக்கேட்டு, ‘வேலை ஆகுற வரை கண்ணு, மண்ணு’ன்னு கொஞ்சுட்டு இப்போ நான் சிங்காரியாம்’ல?’ என்று பொருமிக்கொண்டிருந்தாள்.

மனோகர், “ரொம்ப நல்லா இருந்துச்சு! என் அம்மா செய்யுற மாறியே!” என்றான்.

‘நீங்கள் கொடுத்ததை நான் உண்டுவிட்டேன்!’ என்ற செய்தி தாங்கிய பதில்.

தனபாக்கியமோ, “உங்க அம்மா இருந்துருந்தா நீ இப்படியா இருந்துருக்க போற? உன்னை தங்கத்தட்டுல வச்சு தாங்கிருக்க மாட்டாளா?” என்றார் ஆற்றாமையாய்.

அவரிடம் எப்போதுமே வெளிப்படும் பேச்சு தான் இது என்பதால் மனோகர் மௌனமாய் இருந்தான்.

“அவசரகதில உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவ போய் சேர்ந்துட்டா! ஒன்னும் புரியாத வயசுல வளர்ந்தும் வளராம நின்ன உன் அக்காளை ஆசையாசையா என் புள்ளைக்கு கட்டுனேன்! வாழ வந்தவ நிலைச்சு நின்னுருக்கக்கூடாது?

வந்த வேகத்துலியே போய் சேர்ந்துட்டா!

போனவ ஒரு புள்ளையை பெத்து குடுத்துட்டு போயிருந்தாலும் ‘நம்ம விதி இதான்’னு மனசை தேத்திக்கிட்டு என் குலவாரிசை வளர்த்து விட்டுட்டு நான் நிம்மதியா கண்ணை மூடிருப்பேன்!

அதுக்கு தான் குடுத்து வச்சுச்சா? அதுவும் இல்லையே? வம்சம் வாரிசு இல்லாம போயிடுமோன்னு பயந்து ஒருத்தியை புடிச்சு கட்டி வச்சேனே நானு?

அப்பவும் என் மவன் கல்யாணமே வேண்டாம்ன்னு ஒத்த காலுல நின்னான்! நான்தான் வாரிசு வேணுன்னு பேசிபேசியே அவனை அந்த ராங்கிக்கு கட்டி வச்சேன்!

அதுக்கு தான் இப்போ அனுபவிக்குறேன் அவகிட்ட!” வாய் ஓயாமல் புலம்பியவரை,

“எதுக்கு இப்போ அதெல்லாம்?” என்று மென்மையாய் கடிந்தான் மனோகர்.

“என் மனவருத்தம் அந்தமாதிரி ராசா! உன் அக்கா இங்க வாழ்ந்தது என்னவோ ஒருவருஷம் தான்! ஆனா எங்க மனசெல்லாம் நிறைஞ்சு நிக்குறா அவ! அவ மேல இருக்க பிரியம் தான் அவ ஜாடைல இருக்க உன்மேலையும் எனக்கு பாசமா வருது! அவ மட்டும் இருந்துருந்தா…. இந்நேரம் இந்த வீடு எப்புடப்புடியோ இருந்துருக்கும்…

நீயும் இப்படி யாரோ மாறியா இந்த வீட்ல இருப்ப? உரிமைக்காரனால்ல நின்னுருப்ப? என் பேத்தியை உனக்கே கட்டி வச்சு வீட்டு மாப்பிள்ளையா ஆக்கிருக்க மாட்டேன்?”

இன்னும் பேசிக்கொண்டே கூட சென்றிருப்பார்!

மனோகர் தான் இடைப்புகுந்து, “இந்த பேச்செல்லாம் வேண்டாமே இப்போ! இறந்துபோனவங்கள உசத்தி, உயிரோட இருக்கவங்களை மட்டம் தட்டுறதெல்லாம் ரொம்ப தப்பு! அவங்க காதுல இந்த பேச்செல்லாம் விழுந்தா அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும்! அதனால இனி இப்படி பேச வேண்டாம்” தன்மையாய் அழுத்தமாய் சொன்னான்.

“இந்த தங்கமான குணத்தை கூட புரிஞ்சுக்காம கிடக்குறாளே அந்த ராங்கி! போடுற சோத்துக்குக்கூட கணக்கு பாக்குறவளுக்கு இப்படி வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்து பேசுற நீ! இதெல்லாம் அவளுக்கு எங்க தெரிய போவுது?

இதெல்லாம் தட்டிக்கேட்க வேண்டியவனும் மகுடிக்கு மயங்குன பாம்பாட்டம் அவ சொல்லுக்கு அடங்கி ஊருக்குள்ள மட்டும் வீராப்பு காட்டிக்கிட்டு திரியுறான்! என்னத்த சொல்ல? என் புள்ளையும் என் கையைவிட்டு போய்ட்டான்!

என் வீட்லயே நான் ஒரு செல்லா காசா தான் கிடக்கேன்!”

தனபாக்கியம் தன் புலம்பலை நிறுத்தும் பாடாய் தெரியவில்லை.

“ம்ம்ம்… நான் கொஞ்சம் தோப்பு வரைக்கும் போகணுமே! தென்னங்கொலை இறக்குறாங்க! கணக்கு பாக்கணும்!”

மனோகர் மெதுவாய் சொல்லிவிட்டு அவர் முகம் பார்த்தான்.

“இங்க பாடுபடுறதை நீ உங்க நிலத்துல பட்டாலும் உனக்கு புண்ணியமுண்டு! இவகிட்ட ஏச்சு பேச்சு வாங்கிட்டு இருக்குறதுக்கு உன் சொந்த இடத்துல கம்பீரமா வாழலாம்! யோசிய்யா!” என்றார்.

எழுந்து நின்று தன்மீதிருந்த மண்ணை தட்டிவிட்டவன், “நான் இங்கிருந்து போகணும்ன்னு தான் எல்லாரும் நினைக்குறீங்க! இல்ல?” என்றுவிட, பதற்றத்துடன் தன் வயதையும் மீறி வேகமாய் எழுந்து அவன் கரம் பிடித்தார் தனபாக்கியம்.

“என்னய்யா இப்படி பேசிட்ட? உன்னை இங்கிருந்து அனுப்பணும்ன்னு நான் நினைப்பேனா? நீ சிரமப்படுறதை காண சகிக்காம தானே அப்படி சொன்னேன்?”

அவர் அந்த எண்ணத்தில் தான் சொன்னார் என்பது அவனுக்கும் தெரியும் என்பதால், “விடுங்க! ஏதோ நினைப்புல கேட்டுட்டேன்” என்றவன், “நான் கிளம்புறேன்! நேரமாச்சு” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

வீட்டை சுற்றி வெளிப்புற வாசல் வழியே அவன் கண்ணுக்கெட்டிய தொலையில் இருந்த தோப்பை நோக்கி செல்கையில்,

“இன்னைக்கு குலை இறக்க யாரும் வரலையே மாமா!” என்ற குரல் கேட்டு சட்டென நின்றான் மனோகர்.

அவன் பின்னே சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள் கௌசி.

“ஒட்டுக்கேட்டியா?”

“ச்ச…ச்ச!!! நான் அந்த பக்கம் நின்னுட்டு இருந்தேன்… நீங்க இந்தபக்கம் பேசுனது அதுவா வந்து என் காதுல விழுந்துச்சு!”

“அதுக்கு பேர் தான் ஒட்டுக்கேட்குறது” சொல்லிவிட்டு மேற்கொண்டு நடந்தான்.

“ஓ! அதை அப்படியும் சொல்லுவாங்களா?” என கேட்டவள், “ஆத்தா இன்னைக்கு செம்ம ப்ளேடு போலருக்கே” என்று சிரிக்க,

“பெரியவங்களை இப்படி சொல்லாதன்னு சொல்லிருக்கேன்” என்றான் கண்டிப்புடன்.

முன்னே செல்பவனை பார்த்து ‘வெவ்வே’ என பழிப்பு காட்டியவள், குரலில் மட்டும் பவ்வியமாய், “சரி மாமா” என்றாள்.

அவன் நடையை நிறுத்தாமல் போக, “அதான் அங்க வேலையே இல்லையே! அப்புறம் எதுக்கு மாமா போறீங்க?” என்றாள் இவளும் அவனோடே நடந்து.

“நீ எதுக்கு இப்போ என்னோட வர?” அவன் நடையை சட்டென நிறுத்தி அவள் புறம் திரும்ப, அதை எதிர்ப்பாராமல் அவன் மீது முட்டி, தடுமாறி நின்றவள், அண்ணாந்து அவன் முகம் பார்க்க, அவன் கண்களும் அவளை தான் வெறித்திருந்தன.

சில நொடிகளுக்கு மேல் அவன் முகத்தை வெறித்து பார்த்தவள், “எப்படி மாமா இவ்ளோ கலரா இருக்கீங்க?” என்றிருந்தாள்.

அவன் திட்டுவான், முறைப்பான், விலகி நடப்பான் என அவள் நினைத்திருக்க, அவன் அசையாமல் அப்படியே நின்றது ஆச்சர்யத்தை கொடுக்க, அது கொடுத்த தைரியத்தில்,

“நீங்க தாடி, மீசை எல்லாம் வச்சா செம்ம அழகா ‘ப்ரேமம்’ பட ஹீரோ மாறியே இருப்பீங்க தெரியுமா?” வெகு நாட்களாய் மனதில் தோன்றியதை இன்று சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க, அவளை பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான் மனோகர்.

அந்த பார்வை… அது சொல்ல வந்தது?

அவள் அதை அறிய முயல்கையில் வானம் இடித்துக்கொண்டு மழையை கொட்டியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!