Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 48 1

                        ஆனந்தம் – 48

ஈசனுக்கு, அவனுக்குத் தெரியாமல் வீட்டில் என்னவோ நடப்பது போலவே இருந்தது.. முதலில் அப்படியெல்லாம் இல்லை என்று நினைத்தவன், இந்த மூன்று நாட்களாய் நடப்பவைகளை கண்டு அந்த எண்ணம் ஊர்ஜிதமானது..

அதிலும் லட்சுமி நான் போலீஸ் கம்பளைன்ட் கொடுக்கிறேன் என்றபிறகு, அவளும் கஜேந்திரனும் தேனிக்கு சென்று கம்பளைன்ட்டும் கொடுத்துவிட்டு வந்தபிறகு, ஈசனுக்கு, தனக்கு தெரியாமல் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து என்னவோ செய்கிறார்கள் என்று ஒரு எண்ணம்.



Advertisement

இதற்கிடையில் லட்சுமி பேரில் மதுரையில் இருந்த நிலம் இப்போது தான் பத்திரவு பதிவாகியிருந்தது.

சொல்ல போனால் பேச்சி அந்த நிலம் பற்றி பேச ஆரம்பித்த பிறகு தான் ஈசனுக்கும் லட்சுமிக்கும் சண்டையே கிளம்பியது, அதனால் அடுத்து பேச்சி அவ்விசயத்தை பற்றி வாயே திறக்காமல் இருந்தார். ஈசன் அப்படியிருப்பானா ??

அதுவும் தன்னை தேடி வந்து அவனிடம் பேச்சி பத்திரத்தை வேறு அவனிடம் கொடுத்த பிறகு..

Advertisement

“தம்பி இதெல்லாம் கொஞ்சநாள் அப்புறம் கூட பாத்துக்கலாம்.. இப்போதானே லட்சுமி அங்க வந்திருக்கா…” என்று பேச்சி தயங்க,

Advertisement

“அதுக்கும் இதுக்கும் என்னத்தை சம்பந்தம்.. எதுவுமில்ல.. அன்னிக்கே அந்த ராம்நாட் பார்ட்டி கேட்டாரு.. சர்வே கூட பண்ணியாச்சு… பேசிடலாம்…” என்றுவிட்டான் முடிவாய்.

ஆனால் பேச்சிக்கு தன் மகளை நினைத்து பயமாய் இருந்தது.. என் பேரில் இருப்பது யாரை கேட்டு இதெல்லாம் ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்.

அவளோ மிக மிக இயல்பாய் “அது உன்பாடு ஈஸ் மாமா பாடும்மா.. எனக்கு இடம் இருக்கிறதே நீ சொல்லி தான் தெரியும்… நீ விக்கனும்னு முடிவு பண்ணா சரி.. ஆனா அந்த பணத்தை கைல வச்சு என்ன செய்ய போற.. அதை யோசி…” என்றாள்.

Advertisement

“ஹ்ம்ம் முதல்ல விக்கிறதுக்கு ஏற்பாடு ஆகட்டும் டி… பணம் கைல இருந்தா இங்க கூட இன்னும் நாலு வீட்டு கட்டி வாடகைக்கு விட்டுக்கலாம்…” என்று பேச்சியும் சொல்ல,

“இருக்கிற வீடெல்லாம் போதாதாம்மா..” என்றவள் “யோசிச்சு முடிவெடுக்கலாம்…” என்றுவிட  அதற்குமேல் பேச்சியும்  எதுவுமே பேசவில்லை.

என்னதான் ஈசன் வெளி வேலைகளில் கவனமாய் இருப்பது போல் இருந்தாலும், லட்சுமி வந்தபிறகு வீட்டில் நடப்பவைகளையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.. தன்னை மட்டும் விட்டு லட்சுமி வீட்டிலிருக்கும் மற்றவர்களோடு எல்லாம் இயல்பாய் பொருந்தி போனது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தாலும்,

‘நான் மட்டும் என்ன பண்ணேன்…’ என்று அவன் மனதில் ஏற்படும் சுணக்கத்தை தடுக்க முடியவேயில்லை..

பாலா கூட “அண்ணா… லச்சு பேசிடுச்சுண்ணா… அப்புறம் தான் நானே ஊருக்கு இந்த வார கடைசில தான் வருவேன்னு சொன்னேன்…” என,

“ஓ…” என்றுமட்டும் சொல்லிக்கொண்டான்.

ஆக லட்சுமிக்கு வழக்கம் போல், அவளது நாட்கள் செல்ல, அவள் வந்தபிறகு ஈசனுக்கு தான் தன் வாழ்வில் அனைத்துமே மாறி போனதாய் ஓர் உணர்வு..

‘இப்படி இவளையே நினைக்க வைக்கிறா….’ என்று லட்சுமி மீது அவனுக்கு எரிச்சல் கூட வந்தாலும், என்னவோ அவளையே நினைப்பதும் கூட நன்றாய் இருப்பதாய் தான் தோன்றியது..

லட்சுமி கல்லூரி சென்றிருக்க, கஜேந்திரன் அவர் அறையில் மதிய நேர தூக்கத்தில் இருந்தார்.. முத்தழகு இப்போதெல்லாம் பேச்சியோடு அங்கே இருந்துவிடுவதால், மரகதம் மட்டும் வீட்டிலிருக்க, ஈசன் மெல்ல தன் அம்மாவிடம் நூல் விட்டு பார்த்தான்..

“ஏன்மா.. என்ன அடிக்கடி நீயும் லஷ்மியும் ரகசியம் பேசிக்கிறீங்களாம்.. கிழவி சொல்லுச்சு…” என்று தட்டில் கவனம் இருப்பது போல் கேள்வியை எழுப்ப,

அவருக்குத் தெரியாதா அவன் எப்படி தூண்டில் போட்டு எப்படி வார்த்தைகளை வாங்குவான் என்று. ஈசனை நினைத்து மனதிற்குள் சிரிப்புதான் வந்தது அவருக்கு..

“ம்மா.. என்ன பதில் சொல்லாம சிரிக்கிற???”

“சாப்பிட வந்தோமா.. சாப்பிட்டோமான்னு இருக்கணும்.. அதைவிட்டு என்னை எல்லாம் கேள்வி கேட்க கூடாது…” என்றார் அவனை விட கெத்தாய்..

“ஹா… அதுசரி… அப்போ இந்த வீட்ல என்ன நடந்தாலும் நான் கேட்கக்  கூடாதா..??” என்று அவனும் வேண்டுமென்றே முறுக்க,

“கேக்கலாமே…. தாரளாமா கேட்கலாம்… ஆனா உன் பொண்டாடியக் கேளு… என்னை உங்க அய்யாவே கேள்வி கேட்டது இல்லை.. சரியா…” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்..

அவனுக்கு புரிந்துவிட்டது.. இவரிடம் கேட்டால் இனி பதில் வராது என்று.. அவனும் பார்த்துகொண்டு தானே இருக்கிறான், ஈசன் வீட்டிற்கு வரும் நேரம் லட்சுமியும் மரகதமும் எதாவது பேசிக்கொண்டு இருப்பர், இவன் வந்ததும் கப்சிப் என்றாகிவிடுவர்.. அதேபோல லட்சுமி இப்போதெல்லாம் கஜேந்திரனோடு அடிக்கடி எதுவோ பேசுவது போல் தெரிய,

‘அப்படியெல்லாம் இவ அய்யாக்கிட்ட சகஜமா பேசமாட்டாளே…’ என்று ஈசன் சந்தேகமாய் அவர்களை பார்க்கும் போதே நாங்கள் பேசவேயில்லையே என்பது போல் ஒரு பாவனை இருவர் முகத்திலும் வந்துவிடும்..

யாரிடமும் பதில் வராது போகவும், லட்சுமியிடம் வழிய சென்று கேட்கவும் பேசவும் என்னவோ தடுத்தது.. முன்பாவது சண்டை போடுவதற்காகவாவது அவனோடு பதிலுக்கு பதில் பேசுவாள்.. ஆனால் இங்கே வந்தபிறகு, ஈசனாக ஏதாவது கேட்டாலும் பதில் வராது.. வேலையிருப்பது போல் சென்றுவிடுவாள்..

முதலில் அவனாக சென்று பேச, அடுத்து அவனுக்குமே ‘சரிதான் போடி…’ என்ற ஒரு எண்ணம். ஆனாலும் அந்த எண்ணம் அப்படியே நீடிக்காமல், அவன் மனம் மீண்டும் லட்சுமியின் பின்னே ஓட, அவளோ ஈசன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாதவள் போல் படுத்திருக்க,

“இங்க பாரு லஷ்மி.. நீயா கோவிச்சிட்டு போன.. இப்போ வந்துட்ட.. இன்னமும் மனசுல அதெல்லாம் போட்டு வச்சிட்டு ஏன் வந்த??” என்று முதல் நாள் இரவு தான் கேட்டிருந்தான்..

 “உங்களுக்கு இந்த வீட்ல எத்தனை உரிமை இருக்கோ அவ்வளோ உரிமையும் எனக்கும் இருக்கு…” என்று சொன்னவள் திரும்பி படுத்துக்கொள்ள, ஈசனுக்கு அந்த நேரத்தில் அப்படியே அவளை போட்டு தனக்குள் அமுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் போல தான் இருந்தது..

ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாமல் அவளை பார்த்தே படுத்திருக்க, அவளோ வேகமாய் எழுந்து போர்வையை இழுத்து போத்தி இன்னும் தள்ளி படுத்துக்கொண்டாள்..

‘அடேங்கப்பா போ டி…’ என்று அவள் காது படவே சொன்னவன், அவனும் திரும்பிப் படுத்துக்கொண்டான்..

லட்சுமிக்கு இப்போதெல்லாம் மனதில் வேறு எண்ணங்கள்.. ஈசனோடு கோவித்து கிளம்பிச் சென்றதெல்லாம் சரி.. ஆனால் வீட்டில் இருக்கும் சூழல் புரியாமல் அவள் கிளம்பிச் சென்றது இதுவரைக்கும் அவள் மனதை போட்டு படுத்திக்கொண்டே இருந்தது..

‘இந்த ஈஸ் மாமாதான் பிரச்சனை எல்லாத்தையும் மனசுல வச்சு என்னை கவனிக்கலைன்னா, லாஸ்ட்ல நானும் அப்படித்தான் இருக்கேன்.. அவங்களை மட்டுமே நினைச்சு நினைச்சு மத்தவங்களைப்  பார்க்காம விட்டுட்டேன்…’ என்று எண்ணி தனக்கு தானே நன்றாக திட்டி, அடுத்து அவள் செய்தது அவளாகவே பாலாவிடம் பேசியது..

‘டேய்.. என்ன நீ பெரிய இவனா.. மெட்ராஸ் போனதுமே மண்டைல கொம்பு எதுவும் வந்திடுச்சா….’ என்று சண்டையிட ஆரம்பித்தவள்,

‘அப்புறம் எனக்கு வர்றபோ…’ என்று ஆரம்பித்து அவளுக்கு தேவையான பொருட்கள் அது இதென்று சொல்லி ஒரு லிஸ்ட் கொடுத்து, ‘இதெல்லாம் வாங்கிட்டு தான் ஊருக்கு வர்ற…’ என்று செல்ல மிரட்டலோடு தான் அலைபேசியை வைத்தாள்.

அதேபோல் தான், தன் மாமானார் மாமியாரிடம் மனம் விட்டு பேசி மன்னிப்பு கேட்டதும்.. இதெல்லாம் ஈசனுக்கு தெரியாதே.. ஆகையால் அவனும் ஒரு வீம்போடு சுற்ற,  போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க கஜேந்திரனைத் தான் அழைத்துக்கொண்டு சென்றாள்.

“ஈசனும் வரட்டுமே…” என்று கஜேந்திரன் சொல்ல, அவளோ அவர்முன் எதுவும் சொல்லாமல் ஈசனைப் பார்க்க,

“ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க எழு பேரா.. அய்யா நீங்களே போயிட்டு வாங்க..” என்றுவிட்டான்..

மனதிற்குள் சுறுசுறுவென்று ஒரு கோபம்… போகும் போது வா என்று கூப்பிட்டால் எப்படி என்று.. அதிலும் லட்சுமி அத்தனை நேரம் அறையில் தான் இருந்தாள்.. அவனும் அங்கேதான் இருந்தான்.. ஒருவார்த்தை கூட சொல்லவில்லை..

சொல்லவும் இல்லை அழைக்கவும் இல்லை என்றதும் கடுப்பாய் போய்விட்டது அவனுக்கு. கஜேந்திரனை பற்றி அவனுக்குத் தெரியும்.. ஆனால் லட்சுமி..??

அவளது பார்வைகள் எப்போதுமே அவனை சுற்றியே இருக்கும்.. இப்போது அவனை தவிர அனைவரையும் பார்க்கிறாள் என்று தோன்ற, பிடிவாதமாய் அவளை தன்னருகே இருத்தி, அவனைப் பார்க்கக் வைக்க வேண்டும் போலிருந்தது.

‘உனக்கு நான் தான் டி முதல்ல.. மத்தது எல்லாம் அப்புறம் தான்…’ என்று அவள் கன்னத்தை இறுக்கி பிடித்து லட்சுமியின் முகத்திற்கு நேரே கத்த வேண்டும் போலிருந்தது..

ஆனால் அவனுக்கு தன் மனதில் தோன்றும் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியாத சூழல் அமைந்தது தான் பரிதபமாய் இருந்தது..

மகனது முகத்தை பார்த்த கஜேந்திரனோ தயங்கி நிற்க, “அய்யா நிஜமாத்தான் சொல்றேன்.. நீங்களும் கிளம்புங்க.. நான் தேனிக்கு போறப்போ போய் பேசிக்கிறேன்…” என்று அமர்த்தலாய் சொல்லிட, அவர்களும் கிளம்பிச் சென்றனர்..

இருவரும் சென்று காரில் ஏறும் வரைக்கும் ஈசன் பார்த்துக்கொண்டே இருந்தான்.. ஒருமுறையாவது லட்சுமி தன்னை திரும்பிப் பார்ப்பாளா என்று.. ம்ம்ஹும் அவளோ திரும்பவேயில்லை..

‘திரும்பு லஷ்மி.. திரும்பு லஷ்மி…’ என்று மனதில் உருப்போட்டுக் கொண்டே நிற்க, கார் கிளம்பிச் சென்றது தான் மிச்சம்..  ஈசன் மனதினுள் ஓர் ஏமாற்றம் பரவ,

“ம்மா…” என்று கத்தியவன்,

மரகதம் அரக்க பறக்க என்னவோ ஏதோவென்று வந்து, “என்ன ஈசா…” என்று விசாரிக்க, “நான் கேபிளுக்கு போறேன்…” என்று முகத்தை தூக்கி வைத்துச் சொன்னான்..

“அதுக்கா இவ்வளோ கத்துன…”

“ஆ… ஆமா… போங்க…” என்றவன் எதற்கு எரிச்சல் படுகிறோம் என்றே தெரியாமல் கத்திவிட்டு செல்ல, மரகதமோ ‘இவனுக்கு என்னாச்சு…’ என்ற ரீதியில் பார்த்தார்..

தேனி சென்று கம்பளைன்ட் கொடுத்துவிட்டு வரவும், லட்சுமி அடுத்து சூப்பர் மார்கெட் கிளம்பிவிட, கஜேந்திரனோ தன் மருமகளை மெச்சுதலாய் பார்த்திருந்தார்..

“என்னங்க லட்சுமிய அப்படி பார்த்திட்டு இருக்கீங்க…” என்று மரகதம் கேட்க,

“லட்சுமி ஆளே மாறிடுச்சு…” என்று அவரும் சொல்ல,

“மேல் படிப்பெல்லாம் படிக்கிறாள்ள.. அதான் இப்போல்லாம் கொஞ்சம் விவரமாகிட்டு வர்றா…” என்று மரகதமும் பதிலுக்கு சொல்ல, என்னவோ வெகு நாட்கள் கழித்து அந்த வீட்டில் அனைவர்க்கும் மனதில் ஒரு நிம்மதி..

அடுத்தாடுத்த வேலைகள் துரிதமாய் நடந்தன.. வேலாயுதம் மற்றும் முத்தரசி, மனோஜ் பெயரில் இருக்கும் அசையும் அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள் என்று அனைத்தின் மீதும் கோர்ட் மூலமாக ஸ்டே ஆர்டர் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..

கேஸும் போலிஸ் கைக்கு போய்விட, அந்த பாரம் ஈசனுக்கு இப்போது கொஞ்சம் குறைந்தது.. ஊர் ஊருக்கு என்று அவன் போட்டிருந்த ஆட்கள் பலரை குறைத்துவிட்டான்.. இருந்தாலும் ஒருசில முக்கியப் புள்ளிகளிடம் சொல்லி வைத்திருந்தான்.

வேலாயுதம் பணத்தை எடுத்துச் சென்றது எல்லாம் ஈசனுக்கு இப்போது பெரிதாய் தெரியவில்லை. அந்த ஒரு விஷயத்தால் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களும் அப்போது அவனுக்கு நினைவில் இல்லை.. ஒன்றே ஒன்று மட்டும் தான்.. தங்களை ஏமாற்றி சென்றவரை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும்.. முகத்துக்கு நேரே வைத்து கேள்விகள் கேட்க வேண்டும்.. அவ்வளவே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!