Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 13

அன்பழகனின் நம்பத்தகுந்த சில ஆட்கள் அந்த இரவு நேரத்தில் நாலாப்பக்கமும் கௌசல்யாவை தேடி சென்றனர்.

‘எந்நேரமும் வந்துடுவேன்’ என மழை வேறு அவ்வப்போது இருமலுடன் பூச்சாண்டி காட்ட, தன் பங்குக்கு அன்பழகனும் மனோகரை அழைத்துக்கொண்டு தேட சென்றுவிட்டார்.

கார் ஓட்டிக்கொண்டிருந்த மனோகருக்கு அத்தனை ஆத்திரமாய் வந்தது.

‘தப்பை சரி செய்யப்பாரு!’ என்று சொன்ன பிறகு அவள் அழுகையை விட்டு வீட்டிற்க்குள் அமைதியாய் வலம் வந்ததை ‘மனமாற்றம்’ என அவன் நினைத்து நிம்மதி கொண்டிருக்க, இப்படி ஒரு கிறுக்குத்தனம் செய்யத்தானா அந்த அமைதி எல்லாம்…?!



Advertisement

எண்ணங்களின் எரிச்சலில் ‘ச்ச!!!’ தன்னை மீறி ஸ்டியரிங்கில் ஓங்கி குத்திவிட்டான். அதில் ஹாரன் சத்தம் இட, அதில் அவன் பக்கம் திரும்பினார் அன்பழகன்.

“என்னவோ அன்னைக்கு அவளுக்காக அப்படி வக்காலத்து வாங்கிக்கிட்டு வந்த? இப்போ பாத்தல்ல? அந்த ஓடுகாலி நாயி, ராவோட ராவா ஓட்டம் பிடிச்சதை? முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள அவளுக்கு ஆம்பளை தேவப்படுது… இவளை எல்லாம் அன்னைக்கே காலை உடைச்சு மூலைல கிடாசிருந்தா இன்னைக்கு இந்தளவு வந்துருக்குமா?

என் கௌரவத்தை குழி தோண்டி புதைக்கவே பொறந்துருக்கா! சனியன், செத்து தொலைஞ்சுருந்தா கூட தேவலாம்! கைல மட்டும் சிக்கட்டும், நானே கொன்னு போடுறேன்!”

Advertisement

அன்பழகன் விடாமல் ஏசிக்கொண்டே வர, வெளியே தூறலாய் துவங்கிய மழை பெரு வேகமெடுத்து கொட்ட ஆரம்பித்திருந்தது.

Advertisement

“****கழுதை, நல்லா சோடி புடிச்சுருக்கா பாரு, பிச்சைக்காரன் குடும்பத்துல! நம்ம ஜாதி என்ன, குலம் என்ன, சொத்துபத்து என்ன? சாக்கடைல மேய போவுது பாரு அது புத்தி!” பேசிக்கொண்டே வந்தவர்,

“ஆமா, நீ எதுக்கு கொஞ்ச நாளா அவளை தினம் கூட கூட்டிக்கிட்டே சுத்துன?” என்றார்.

அவன் பல்லை இறுக்க கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தான்.

Advertisement

‘ஓ’ புரிந்தது போல தலையாட்டியவர், “அப்ப உனக்கு முன்னமே விஷயம் தெரிஞ்சுருக்கு! அதான் அவளை தனியா விடாம இழுத்துக்கிட்டு அலைஞ்சுருக்க? அப்படிதானே?” என்றவர்,

“விஷயம் தெரிஞ்ச மறுநிமிஷம் நீ என்கிட்ட தானே அதை சொல்லிருக்கணும்? அப்போவே இதுக்கொரு முடிவு கட்டிருப்பேன்… இப்ப இத்தனை தூரம் இழுத்து விட்டு என் பேரை நாரடிக்குற அளவுக்கு போய்……… ஓஹோ! என் பொண்டாட்டி உன்னை கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்கான்னு பழி வாங்க சந்தர்ப்பம் பாத்துட்டிங்களோ?” என்றார் நக்கலாய்.

ஸ்டியரிங்கில் இருந்த அவன் கரங்கள் இறுகியது. கடினப்பட்டு வாய்பூட்டை அவிழ்க்காமல் இருந்தான்.

“ஏன்டா, இதே உன் அக்கா பெத்த பிள்ளையா இருந்தா இப்படி நாசமா போவட்டும்ன்னு விட்டுருப்பியா? உண்ட வீட்டுக்கு நன்றியோட இருக்கணும் டா கொஞ்சம்னாலும்…

ம்கும்… ‘அத்தான்’ ‘அத்தை’ன்னு முறை சொல்லி கூட பேசாதவன்க்கிட்ட சொந்தபந்தத்தை பத்தியும், விசுவாசத்தை பத்தியும் பேசுறேன் பாரு! எங்களை யாரோ எவரோன்னு தானே நினைச்சுட்டு இருக்க நீ! புவனா சொல்றப்போ எல்லாம் நம்பலை! நீ வேலைக்காரன் இல்ல சொந்தக்காரன்னு நினைச்சேன்!”

அன்பழகன் நிறுத்தியப்பாடில்லை. ஆனால், கார் ‘கிரிச்’சிட்டு நின்றது.

“வண்டி நின்னுடுச்சு! நான் என்னன்னு பாக்குறேன்! நீங்க அங்க இருக்க கோவில்ல இருங்க!” சற்றே தள்ளி இருந்த கோவில் மண்டபத்தை கைக்காட்டி சொன்னான் மனோகர்.

மறுத்து பேச வந்தவரை தடுத்து, “பொண்ணு கிடைக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு வாங்க, அதைவிட்டா வேற வழி இல்ல நமக்கு!” என்றதும், காரை விட்டு இறங்கினார் அவர். கொட்டும் மழையில், ஒரு கரத்தை தலை மீது வைத்து தடுத்தபடி, அவர் மண்டபம் நோக்கி ஓட, அப்டியே ஸ்டியரிங்கில் தலைவைத்து சாய்ந்துவிட்டான் மனோ.

‘என்ன எல்லாம் பேசிட்டார்!? எனக்கு அக்கறை இல்லையா? அவள் எப்படியோ போகட்டும்ன்னு விட்டேனா?’ என மருகியவன்,

‘அக்கா…. நான் கௌசியை உன் பொண்ணா தான் க்கா பாக்குறேன்! உன் வயித்துல பொறந்துருக்க வேண்டியவ அவ! அவ எக்கேடோ கெட்டொழியட்டும்ன்னு விடுவேனா நானு?’ மானசீகமாய் தன் அக்காளிடம் பேச, தூரத்தில் யாரோ அவனை அழைப்பது போன்று கேட்டது.

அலுப்பாய் தலை உயர்த்தியவன், கோவிலுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காரை நோக்கி ஓடி வரும் உருவத்தை கண்டதும், உடல் விதிர்விதிர்க்க வேகவேகமாய் எழுந்து ஓடினான்.

குரலோ, தன்னை மீறி ‘கௌசி’ என அலற, அவன் நெஞ்சில் வந்து ‘பொத்’தென மோதியவள், “மாமா… அப்…பா… அப்…ப்பா” என திக்கி திணறி கோவிலை கை கட்டவும், அவளை இழுத்துக்கொண்டு கோவிலுக்கு ஓடினான் மனோகர்.

அந்த சிறு கோவிலின் மண்டபத்தில் ஹரியின் கழுத்தை நெறித்துக்கொண்டு சுவரோடு சுவராய் அவனை நகர விடாமல் அழுத்திப்பிடித்திருந்தார் அன்பழகன்.

முழி பிதுங்கி, நா வறண்டு, மூச்சு விட முடியாது அவன் நிலை தடுமாறி தன் கரங்களால் அன்பழகனை தடுக்க முயல, அவனை அனாயாசமாய் ஒற்றை கையில் பிடித்தவர், “மரப்பாலம் தாண்டி ஒரு கோவில்ல நிக்குறோம் வாங்கடா” என்று போனில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.

அதைக்கண்டதும் பதறிய மனோகர், “என்ன செய்யுறீங்க விடுங்க அவனை” என்றபடி அன்பழகனின் கரத்தை வலுக்கொண்டு விளக்கிவிட, கழுத்தை இறுக்கிய கை தளர்த்தும் ‘பொத்’தென தரையில் விழுந்தான் ஹரி.

“ஐயோ… ஹரி!!” ஓடி சென்ற கௌசியின் பிடரி மயிரை கொத்தாய் பற்றி இழுத்த அன்பழகன், ஆத்திரத்தில் கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளினார். மனோகரன் தடுக்க பார்த்தும் நிறுத்த முடியவில்லை அவரை.

“காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்காதீங்க! விடுங்க அவள…!” நடுவில் புகுந்து அவரை விளக்கி கௌசியை அவன் இழுத்துக்கொள்ள, இப்போது அன்பழகன் கீழே கிடந்த ஹரியின் பக்கம் சென்றார்.

வறண்ட தொண்டையை செரும கூட முடியாது உயிரற்ற ஜீவனாய் கிடந்தவனின் விலா எலும்பிலேயே தன் கால்க்கொண்டு மிதித்தவர், “ஒன்னும் இல்லாத வெறும்பயலுக்கு சாதிக்காரன் பொண்ணு கேட்குதோ? என்னா தைரியம் இருந்தா என் மவ கழுத்துல தாலி காட்ட வந்துருப்ப?” பேசிக்கொண்டு வெறியாய் அடிக்க, அப்போது தான் ஒரு ஓரமாய் கிடந்த மஞ்சள் கயிற்றை கவனித்தான் மனோ.

அதை பார்த்ததும் அவன் பார்வை கௌசியிடம் போக, அவள் நிமிரவேயில்லை.

அன்பழகன் இன்னமும் அடித்துக்கொண்டு தான் இருந்தார்.

இதற்குமேல் அடித்தால் அவன் தாங்கவே மாட்டான் என மனோவுக்கு தோன்ற, “அவனை அடிச்சே கொன்னுடலாம்ன்னு இருக்கீங்களா? விடுங்க முதல்ல! விடுங்க” என்று வம்படியாய் தள்ளிக்கொண்டு நகர்ந்தான்.

தணலில் இட்ட புழுவென சுருண்டு கிடந்தவனைக்கண்டு வாய் பொத்தி அழ மட்டுமே முடிந்தது கெளசியால்.

“விடு மனோகரா! நான் மட்டும் ஒரு அஞ்சு நிமிஷம் தாமதிச்சு வந்துருந்தா இவ கழுத்துல தாலியே கட்டிருப்பான் இந்த கம்முனாட்டி! பார்த்த ஆத்துரத்துக்கு ரெண்டு பேரையும் கொன்னு போட்டுருக்கணும்!” உக்கிரமாய் சொன்னவரின் பார்வை கௌசியிடம் போக, வேகமாய் அவளை மறைத்தார் போல வந்து நின்றான் மனோ.

“இப்போ தான் ஒன்னும் நடக்கலையே! கௌசியை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போவோம் வாங்க!”

“இவனை இப்படியே விட்டுட்டு போக சொல்றியா?”

“வேற என்ன செய்ய போறீங்க?”

“நம்ம ஆளுங்க வந்துட்டு இருக்காங்க! வரட்டும்! இவனை உரு தெரியாம ஆக்காம விட மாட்டேன்! யார் வீட்டு பொண்ணு மேல கை வைக்குறான்? நான் யாருன்னு காட்ட வேண்டாமா? ஏன்டா இப்படி செஞ்சோம்னு அவன் சாகுறவரைக்கும் நோகணும்!”

வெறிப்பிடித்தார் போல கர்ஜித்துக்கொண்டிருந்தவரை கண்டு கதிகலங்கினாலும் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது புரிந்துப்போக, தைரியத்தை தருவித்து, “ப்பா… நான் இவரை தான் கல்யாணம் பண்ணணும் ப்பா! வேற ஒருத்தரை என்னால கல்யாணம் செய்ய முடியாது!” என்று கௌசி சொல்லிமுடிப்பதற்குள் அவளை அடித்துத்தள்ள நெருங்கினார் அன்பழகன்.

நொடியில் அவளை மறைத்துக்கொண்டவன், “முதல்ல வீட்டுக்கு போகலாம்! இங்க எதுவும் பேச வேண்டாம்” என்று அவரிடம் சொல்ல,

“என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இந்த தெருனாயோட ஓடி வந்ததும் இல்லாம என் முன்னவே அவன தான் கட்டுவேன்னு சொல்லுவ நீ?”

“அப்பா, என்னால வேற யாரையுமே கல்யாணம் காட்ட முடியாது ப்பா, புரிஞ்சுக்கோங்க!”

“வாயை மூடு கௌசி!” என்ற மனோ, அவனை தாண்டி கௌசியை அடிக்க பாய்ந்த அன்பழகனை தடுத்தபடி, “சொன்னா கேளுங்க! இங்கேயே நம்ம இருக்கிறது நல்லா இருக்காது! ஆளுங்க வந்துட்டா பொண்ணு விஷயம் ஊருக்கே நாறிடும்!” என்றான்.

“என்ன பேசுறா பாருடா!! அவனை தான் கட்டுவாளாமே? வர ஆத்திரத்துக்கு இங்கனவே கொன்னு புதைக்கலாம்ன்னு வருது!” என்றவர், “எல்லாத்துக்கும் இந்த நாய் தானே காரணம்” என்று கீழே கிடந்த ஹரியை மிதிக்க, மனோவிடம் இருந்தவள் மறுநொடி அன்பழகன் காலைக்கட்டிக்கொண்டு விழுந்தாள்.

“அப்பா வேண்டாம்ப்பா! அவர் பாவம்! செத்துடுவாரு” கண்ணீர் குரலடைக்க அவள் கெஞ்ச, ஒரே உதறலில் அவளை தள்ளிவிட்டவர், “உனக்கு என்ன வயசு ஆகுது? அதுக்குள்ள கல்யாணம் கேட்குதா? அதுவும் இவனோட? அப்படி உடம்பு அலையுதோ?” கேவலமாய் கேட்க, காதை பொத்திக்கொண்டு கதறினாள்.

“ஆம்பளை இல்லாம இருக்க முடியலையோ? எப்ப எவன் பாப்பான், ஈஈ’ன்னு பல்லிளிப்போம்ன்னு அலைஞ்சுட்டு இருந்தியா? உன் லட்சணம் முன்னவே தெரிஞ்சுந்தா வயசுக்கு வந்ததுமே எவன்கிட்டயாது தாட்டி விட்டுருப்பேனேடி!”

கௌசிக்கு அருவெருப்பிலும் அவமானத்திலும் உடல் கூசியது.

ஆயினும், “ப்பா… எனக்கு இன்னொருத்தரை கல்யாணம் செய்யுற தகுதி இல்லப்பா! அதை நான் இழந்துட்டேன்! புரிஞ்சுக்கோங்கப்பா!” தூரத்தில் ஹரன் ஒலியுடன் வந்துக்கொண்டிருந்த வண்டியின் வெளிச்சத்தில் கவனம் வைத்திருந்த அன்பழகனுக்கு மகளின் வார்த்தைகளின் அர்த்தம் மூளைக்கு உரைக்கவில்லை.

அவர் மனம் என்னவோ கணக்கு போட்டது.

மூலையில் கிடந்த மஞ்சள் கயிறை கையில் எடுத்தவர், “உன் அக்கா இருந்துருந்தா, அவளுக்கு ஒரு பொண்ணு இருந்துருந்தா, அவ இது மாதிரி ஒரு தப்பு செஞ்சுருந்தா அவளை நீ ஒதுக்கி வைப்பியா மனோகரா?” என்றார்.

“இல்ல!” என்று மனோ சொன்ன மறுகணம், “அப்ப இந்த தாலியை அவ கழுத்துல கட்டு!” என்றிட மறுத்து பேச வந்தவனை, “உனக்கு என் மேல மரியாதை இருந்தா, உன் அக்கா மேல சத்தியமா சொல்றேன், அவ கழுத்துல இந்த நிமிஷமே தாலிய கட்டு!” என்றார்.

யோசிக்க கூட நேரம் எடுக்கவில்லை அவன். தாலியை வாங்கி கௌசியின் கழுத்தில் முடிச்சுட்டான்.

தலை தூக்கக்கூட முடியாத நிலையிலும் ஹரியின் மனம் இதைக்கண்டு அனலாய் காந்தியது.

இப்படி நடக்கக்கூடும் என்று கற்பனை கூட செய்திராதவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியை உணர்வற்று தொட்டு பார்த்தாள். அடுத்த நிமிடம் கண்கள் சொருக, நிலைகுலைந்து அவள் தரையில் சரிய, மனோவின் கரங்கள் அவளை தாங்க வருவதை பார்த்துக்கொண்டே கண் மூடினாள்.

“அவனுங்க வரும்முன்னே நீ அவளை தூக்கிகிட்டு நம்ம காருக்கு போ! இவளை யார் கண்ணுலையும் காட்டாத!” என்ற அன்பழகனின் ஆணையை நிறைவேற்ற கொட்டும் மழையில் அவளை தூக்கிக்கொண்டு அவன் காருக்கு விரிய, பேச்சுக்குரல் காதில் ஒலித்தாலும் கண் திறக்க திரானியற்றிருந்தாள்.

மழை நீர் முகத்தில் கொட்டியதில் கூட நினைவு வரவில்லை.

யாரோ கன்னத்தில் பலமாய் தட்டினர்.

பெயர் சொல்லி அழைத்தனர்.

செவிமடுக்கிறாள்… கண்கள் தான் திறந்துக்கொள்ள மாட்டேன் என்கிறது.

முகத்தில் ‘சொத்’தென நீர் கொட்ட, படக்கென திறந்துக்கொண்டன விழியில்.

கண்முன்னே நின்றவளோ, “உங்களை ராத்திரி சாப்பாட்டுக்கு வர சொல்லி அம்மா கூப்பிட்டுட்டே இருக்காங்க! எழுப்ப எழுப்ப எழுந்துக்கலன்னதும் தண்ணி தெளிச்சுட்டேன்” என்றாள் அவ்வீட்டில் வேலைக்கு இருப்பவள்.

ஒன்றும் பேசாமல் முகத்தை துடைத்த கௌசி, எழுந்துக்கொள்ள, வந்தவள் வந்த வழி சென்றுவிட்டாள்.

நேரம் பார்க்க மொபைலை எடுக்க அதில் ஆறு தவறிய அழைப்புகள் இருந்தது. யாரென்று பார்ப்பதற்குள் மீண்டும் அழைப்பு வர, அதில் ஒளிர்ந்த ‘மீனா’ என்ற பெயரை பார்த்ததும் முகத்தில் குறுஞ்சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

இந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும் மறுபக்கம் பொரிய ஆரம்பித்தது.

“எனக்கு தெரியும்! நீ இதான் பண்ணுவன்னு! ஊருக்கு போயிட்டு கால் பண்ணு ன்னு எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன்! மறந்து போயிருக்குமே உனக்கு?” மீனா வெடிக்க, எப்போதும் போல சிறு புன்னகையுடன் அவள் பேச்சை கேட்க ஆரம்பித்தாள் கௌசி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!