Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Pooranam 50 2

ஒவ்வொரு முறையும் இப்படிதான் அவளை பிடிவாதமாய் கேட்டால் மட்டுமே பதில் வருகிறது. இயல்பாய் கேட்கையில் சொல்லி, அவளாக எதாவது பேசி இதெல்லாம் செய்தால் என்னவாம் என்று அவன் மனம் ஏங்குகையில் லட்சுமியின் முகத் திருப்பல்கள் அவனுக்கு கடுப்பாகத் தானே இருக்கும்..

ஆனால் ஈசன் ஒன்றும் மட்டும் புரிந்துகொள்ள தவறிவிட்டான்.. ஆரம்பத்தில் இருந்தே லட்சுமி விசயத்தில் தான் செய்வதெல்லாம் தவறு என்று அறியத் தவறிவிட, இப்போது அவள் இப்படி செய்கையில் மனம் கொந்தளித்தது.

“ம்ம்ச் என்ன மாமா இதெல்லாம்..” என்றாள் சீறலாய்.

“பின்ன இதுக்காக உன்னை கடத்திட்டா போக முடியும்.. இல்லை அதையும் செஞ்சா தான் நீ வழிக்கு வருவியோ…??” என்று ஈசனும் பதிலுக்கு பதில் பேச, லட்சுமிக்கு மனம் இப்போது அடித்துக்கொள்ள தொடங்கியது..



Advertisement

‘ஈஸ் மாமா ஏன் இப்படி பண்றாங்க..’ என்று யோசனையாய் அவனைப் பார்க்க,

“இப்போ என்ன டி யோசிக்கிற??? இவனை என்ன பண்ணலாம்னா… நீ என்னவோ பண்ணு லஷ்மி.. என்னைய என்னவேணா பண்ணு லஷ்மி.. ஆனா ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்காத.. எனக்கு சத்தியமா புரியல… இதோ கொஞ்ச நேரம் முன்னாடி முகத்தை திருப்பின, அடுத்து என்னாச்சு மாமான்னு நீயா கேட்கிற… என்னதான் டி ஆச்சு உனக்கு…” என்று ஈசன் வேகமாய் பேச, லட்சுமிக்கு இன்னும் இன்னும் இதயம் வேகமாய் துடித்தது..

“நீ பதில் பேசாம நான் கார் எடுக்க மாட்டேன்.. என்னதான் நினைக்கிற நீ?? கோவிச்சிட்டு போன சரி.. அப்புறம் நீயே உன்னை மாத்திக்க முயற்சி பண்ண சரி.. அடுத்து பாலா வர்றது நானே சொல்லிருக்கணும் தான் தப்பு தான்.. ஆனா நீ அதுக்கும் சண்டை போட்டா என்ன செய்றது மேல மேல எதுக்கு பிரச்சனை வளக்கணும்னு தான் அம்மாக்கிட்ட சொன்னேன்..

Advertisement

நீயும் வந்த, ஆனா போனப்போ என்மேல என்ன கோவம் இருந்துச்சோ அதே கோவத்தோட தான திரும்பி வந்த.. பின்ன ஏன் எல்லார் முன்னாடியும் ஒரு மாதிரி என் முன்னாடி மட்டும் ஒரு மாதிரி இருக்க..  நீயா வந்து எதாவது பேசினா அதுக்கு நான் நல்லபடியா பதில் சொல்லணும்.. ஆனா நான் எதாவது பேசினா மகாராணி உனக்கு மனசிருந்தா தான் எதுவும் பேசுவ.. அப்படிதானே…” என்று பொரிய,

Advertisement

‘ஐயோ…’ என்றுதான் இருந்தது லட்சுமிக்கு..

என்றாவது ஒருநாள் ஈசன் இதெல்லாம் கேட்பான் என்றும் தெரியும் தான். ஆனாலும் ஈசன் இத்தனை நாள் இவ்வளோ பொறுமையாய் போவதே பெரிதாய் பட, இப்போது வசமாய் மாட்டிகொண்டாள். வீடென்றால் கூட எதாவது சொல்லி தப்பித்து விடலாம்.. காரினுள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கத் தான் முடிந்தது.

“பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லு லஷ்மி…” என்றான் அவன் பிடியை விடாது,

Advertisement

“என்ன மாமா ???” என்றாள் வலியுடன்..

“இதான் டி… எனக்கு சுத்தமா புரியல எப்போ சிரிக்கிற.. எப்போ சலிக்கிற.. எதுவுமே புரியல.. மண்டை காயுது… ஒண்ணு சண்டை போட்டா அப்படி இரு.. இல்லையா சந்தோசமா இருந்தா அப்படி இரு..” என,

“ம்ம்….” என்று தலையை தாழ்த்திக் கொள்ள,

“என்ன ம்ம்…???” என்று ஈசனது குரல் அரட்டலாய் வந்தது..

“இல்ல.. ஒண்ணுயில்ல…”

“அப்போ.. இவ்வளோ நேரம் நான் பேசினது எல்லாம் ஒண்ணுமில்லையா… சரி சொல்லு நான் எப்படி இருக்கணும்.. அதாவது சொல்லு.. இப்பவும் சொல்றேன் லஷ்மி.. நான் உன்னை மட்டமா நினைக்கல.. ஒரு கோவத்துல அப்படி பேசிட்டேன் தான்.. மன்னிப்பு கேட்கணுமா சொல்லு.. கால்ல விழுந்து கேட்கவா…” என்று சொல்லிக்கொண்டே ஈசன் அவள் காலைத் தொட போக,

“ஐயோ ஈஸ் மாமா என்ன பண்றீங்க…” என்று லட்சுமி காலை வேகமாய் உள்ளே மடக்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்களிலும் சரி முகத்திலும் சரி அத்தனை கலவையான உணர்வுகள்.

அந்த நொடி நிஜமாகவே ஈசன் செய்யப் போனது லட்சுமிக்கு மனம் வலிக்கத் தான் செய்தது..  “என்ன மாமா இதெல்லாம்…” என்று பதற்றமாய் கேட்க,

“ம்ம்ச்….” என்று கார் ஸ்டியரிங்கை ஓங்கி குத்தியவன், “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல…” என்றுவிட்டு, காரை எடுக்க, அடுத்து இருவருமே பேசிக்கொள்ளவில்லை..

மௌனமாகவே பொழுது நகர, லட்சுமியின் கல்லூரி முன்னே கார் நிற்க, அவளும் அமைதியாய் இறங்கிக்கொள்ள, அவனும் அப்படியே கிளம்பிவிட்டான். லட்சுமிக்கோ மனம் மிகவும் கஷ்டமாய் போனது. அவன் அன்று பேசியதை விட, இன்று செய்ய இருந்தது இன்னும் வலியைக் கொடுத்தது..

‘வேணும்னா கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கவா…’ என்று அவன் சொல்லிக்கொண்டே குனிந்ததும், ‘ஐயோ மாமா… என்ன பண்றீங்க…’ என்று பதறியது, நினைக்கையிலேயே அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓட, கண்கள் கலங்கிப்போனது..

‘நான்… நான் ரொம்ப பண்றேனோ.. ஆசைப்பட்ட வாழ்க்கை அமைஞ்சும், நானும் சந்தோசமா இல்லாம… அவங்களையும் நிம்மதியா இருக்க விடாம… ச்சே…’ என்று நினைக்கும் போதே அவள் முதுகில் பட்டென்று தட்டினாள் ஸ்நேகா..

வேகமாய் கண்களை துடைத்தவள், ஸ்நேகா பக்கம் திரும்ப, அவளது முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்நேகா..

“என்னடி..??”

“என்ன என்னடி…??? எங்க உன் ஈஸ் மாமா…” என்று அவள் பின்னே தேட,

“அவர் அப்போவே கிளம்பிட்டார்…” என்று நடக்கத் தொடங்கினாள் லட்சுமி..

“கிளம்பிட்டாரா?? அடிப்பாவி.. ஒருவார்த்தை என்னை இன்ட்ரோ பண்ணத் தோனிச்சா….” என்று விளையாட்டாய் பேசியபடி லட்சுமியோடு ஸ்நேகா நடக்க, அவளோ மௌனமாய் நடந்தாள்..

ஸ்நேகா அவளைப் பார்த்தவள்,  “ம்ம் சொல்லு என்ன பிரச்சனை?? இன்னிக்கு என்ன மேடம் பண்ணீங்க??” என, லட்சுமி வேகமாய் திருப்பிப் பார்த்தாள்.

“என்னடி பாக்குற… நீ கண்ண துடைச்சது என் கண்ணுல விழுந்துச்சு.. சொல்லு இப்போ என்ன பிரச்சனை பண்ண…”

லட்சுமிக்கு சட்டென்று மனதில் கோவம் வந்துவிட்டது.. எல்லாம் என்னவோ அவளால் மட்டும் தானா என்பது போல்..

“ஆமா நான் தான் எல்லாமே பண்றேன்…. எல்லாமே என் தப்புதான்… நான் தான் தப்பு…. இதானே எல்லாம் எதிர்பார்க்கிறீங்க…” என்று கத்திவிட்டு முன்னே வேகமாய் நடக்க, “இவ இருக்காளே…” என்று தலையில் அடித்தபடி அவளை பின் தொடர்ந்தாள் ஸ்நேகா..

ஆனால் ஈசனோ, மனதில் வெகுவாய் நொந்து போனான்.. என்ன பேசினாலும் மனம் திறந்து பேசாதவளை என்ன செய்ய.. பொறுமையாகவும் கேட்டாகிவிட்டது.. கோவமாகவும் கேட்டாகி விட்டது.. இப்படியிருந்தால் என்ன தான் செய்வது… இன்னும் எத்தனை நாளைக்கு இந்த குழப்பமும் ஓட்டமும்.. செய்யும் தொழில்களில் தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் என்றால், சொந்த வாழ்வாவது நன்றாய் இருக்கிறதா, அதுவும் இல்லை என்கையில் ஈசனது வாழ்வில் இத்தனை இடர்களா என்று நினைக்கையில் அப்படியே காய்ந்தது அவனுக்கு..

கார் எந்தப்பக்கம் செல்கிறது, என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.. அவனது எண்ணமெல்லாம் அவனுக்கும் லட்சுமிக்குமான வாழ்வில் நிற்க, அவர்களது வாழ்வில் வர்ணமே இல்லாத வெற்று சுவராய் இருப்பது போலிருந்தது..

அவன் நினைக்காதது எல்லாம் நடக்க, ஆசைப்பட்ட ஒன்றுக் கூட நடக்கவில்லை எனும்போது தான் ஈசனுக்கு மனதில் தேனியில் அவன் வாங்க நினைத்த இடம் மனதில் தோன்றியது.. மனதில் மட்டுமில்லை கண் முன்னேவும் அவ்விடமே தோன்ற, என்னடா என்று பார்த்தால் தேனியில் அந்த இடத்தின் முன்னே தான் ஈசன் காரை நிறுத்தியிருந்தான்..

இவ்வளவு தூரத்தை எத்தனை வேகத்தில் கடந்திருந்தால் இப்போது இங்கே நின்றிருப்பான் என்று அவனுக்கே தோன்ற, இந்த இடத்தை வேண்டாம் என்று சொல்லியும் மறுபடியும் இங்கேயே வந்து நிற்பது அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருவிசயம் வேண்டாம் என்றால் அவனுக்கு எப்போதுமே வேண்டாம் தான்.. ஆனாலும் திரும்ப திரும்ப அவன் மனம் இந்த இடத்தில் வந்து நிற்க, தான் பலவீனம் ஆகிவிட்டோமோ என்று தோன்றியது..

‘நீ ஆகல.. லஷ்மி தான் உன்னை பலவீனம் ஆக்குறா…’ என்று அவன் மனம் சொல்ல, “லஷ்மி….” என்று முணுமுணுத்தவன், காரை விட்டிறங்கி, காரின் மீதே சாய்ந்து அந்த இடத்தை பார்த்தபடி நின்றிருந்தான்..

சுற்றி இருக்கும் அமைதி அவன் மனதில் இல்லை.. கண்ணேதிர தெரியும் பசுமை அவன் கருத்தில் பதியவில்லை.. அவன் மிகவும் நேசித்த இவ்விடமோ அவனுக்கு அமைதியை தரவில்லை, அப்படியே ஆழ்ந்த சிந்தனையில் அவனிருக்க,

“வேண்டாம்னு சொன்னதை நம்ம திரும்பிக்கூட பார்க்க கூடாது…” என்ற கணீர் குரல் கேட்டு, யாரென்று திரும்பிப் பார்த்தான்..

வேறு யார்… கதிரவன் தான்.. அவன் காரிலிருந்து இறங்கி வந்துகொண்டு இருந்தான்..

“என்ன ஈசன்…. இப்பவும் என்னை எதிர்பார்கலையா???” என்று சிரிக்க,

“நான் ஏன் உங்களை எதிர்பார்க்கணும்…” என்று ஈசனும் பதிலுக்கு சிரித்தான்..

“ம்ம்.. அதுசரிதான்.. அப்புறம்.. இங்க என்ன பண்றீங்க?? அடிக்கடி இங்கயே நம்ம பார்த்துக்கிறோம்…” என்றவன், “ம்ம் இந்த இடத்துக்கு பத்திரமே முடிஞ்சிடுச்சு தெரியுமா… அன்னிக்கு சொன்னீங்களே யார் முதல்ல பணம் கொடுத்து வாங்குறாங்களோ அவங்களுக்குத் தான் இடம்னு.. அதே தான் நடந்திருக்கு…” என்றான்.

ஈசனோ மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விழுங்கி, “ம்ம் ஆமா இப்போக் கூட நான் சொன்னது தானே நடந்திருக்கு.. அதாவது நான் வேணாம்னு சொன்ன பிறகு தான் எல்லாம் நடந்திருக்கு…” என,

“ம்ம்…” என்று கதிரவன் அவனாக சிரித்துக் கொண்டான்..

என்னவோ இருவர் பேசுவதும் எந்நேரத்திலும் சண்டை வரும் என்பதுபோல் இருந்தாலும், அவர்களுக்கு அது சாதாரண பேச்சாகவே பட, மேலே என்ன பேசுவது என்பது போல் இருவருமே பார்த்து நிற்க, ஈசனுக்கு அந்நேரம் பார்த்து அழைப்பு வந்துவிட்டது..

தோட்டத்தில் இருந்து அழைப்பு என்றதும் “சரி நான் கிளம்புறேன்…” என்று சொல்லிக்கொண்டு நகர, “இனி அடிக்கடி பார்க்கலாம்..” என்று கதிரவனும் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!