Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்த பூந்தோரணம்

Aanandha Poonthoranam 57 1

                         ஆனந்தம் – 57

ஈசன் சொன்னதைக் கேட்டு லட்சுமி அதிர்ந்து தான் போனாள்.. வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து இது தான் முடிவென்று சொல்ல, அவளால் மறுக்கவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை.

தனியே ஈசன் சொல்லியிருந்தால் கூட, எப்படியோ அவனை சம்மதிக்கக் கூட வைத்திருப்பாள். ஆனால் அனைவரின் முன்னும் சொல்லிட, அதிலும் பேச்சியை வேறு வரவழைத்து சொல்லிட அவளால் வாயே திறக்க முடியவில்லை..

‘ஈஸ் மாமா தனியா வரட்டும்..’ என்று அவனை நன்றாய் வசைப்பாடிக்கொண்டு இருந்தாள்..



Advertisement

“லட்சுமி… என்ன டி அமைதியா இருக்க..” என்ற பேச்சியையும் முறைத்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை..

“என்னம்மா லட்சுமி எல்லாருக்கும் இதுல பரிப்பூரன சந்தோசம்.. இப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது பெருசில்லையா…” என்று கஜேந்திரன் கூற,

“அதில்லைங்க மாமா.. இது..” என்று தயங்க,

Advertisement

“லட்சுமி நீ ஒண்ணும் சொல்லாத.. எவ்வளோ பெரிய விஷயம்.. அதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறப்போ வேணாம் சொல்லக்கூடாது..” என்று மரகதமும் சொல்ல, முத்தழகும் வந்து, “சந்தோசமா சரின்னு சொல்லு லட்சுமி..” என, அவளால் மறுக்கவே முடியவில்லை.

Advertisement

“நீங்க எல்லாரும் சொல்றதுனால இதுக்கு சம்மதிக்கிறேன்..” என்றவள் ஈசனை நன்றாக  முறைத்தாள்.

அவனுக்கும் தெரியும்.. தனியே லட்சுமியிடம் சொன்னால் முடியாதென்பாள் என்று. அதனால் தான் அனைவரின் முன்னும் அவன் கருத்தை சொல்ல  அது சரியென்று படவே, அனைவரும் சம்மதிக்க, லட்சுமியும் சம்மதம் சொல்லவேண்டிய நிலை.

வேறொன்றும் இல்லை, வெங்கடாசலம் வந்து இவர்களிடம் பண உதவிக் கேட்க, லட்சுமியும் அவள் பேங்க் சென்று வந்தது பற்றி கூற,  வெகு நேரம் யோசனையாய் இருந்தான்.. அதன் பின் லட்சுமியிடம் சில கணக்கு வழக்குகள் பற்றி பேச, அவளும் எதற்கு கேட்கிறான் என்றே புரியாமல் அவளுக்குத் தெரிந்ததை சொன்னாள்.

Advertisement

“சரி லஷ்மி.. மதுரை லேண்ட் சேல் பண்ண அமௌன்ட் நீதானே வச்சிருக்க..??” என்று கேட்க லட்சுமிக்கு தூக்கி வாரிப் போட்டது..

“ஆ.. ஆமா மாமா..” என்றவள், வேகமாய், “ஆனா அதைப்பத்தி இப்போ என்ன.. நீங்க பேங்க்ல இருக்க அமௌன்ட் பத்தி மட்டும் பேசுங்க..” என்றாள்

ஈசனுக்கு லட்சுமி அவனிடமிருந்து எதையோ மறைப்பது போலிருக்க கண்களை கூர்மையாக்கியவன் “லஷ்மி.. எதுவும் எனக்குத் தெரியாம பண்றியா???” என்றான்.

“அட.. அதெல்லாம் இல்ல மாமா.. ஆனா அந்த அமௌன்ட் பத்தி இப்போ பேச வேணாம்.. ப்ளீஸ்” என,  சரி இதற்குமேல் அவளிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று தோன்ற, “ஹ்ம்ம் சரி.. நீ போய் ரெஸ்ட் எடு கொஞ்சம்.. நான் கிளம்புறேன்..” என்றவன் எழப் போக, லட்சுமியோ விட்டால் போதும் என்று எண்ணிக்கொண்டாள்.

ஈசன் கிளம்பவும், தன் தோழிகளோடு  வீடியோ சேட்டிங்கில் பேசவும், வீட்டு வேலைகள் பார்க்கவும், பின் மீண்டும் சூப்பர் மார்கெட் கிளம்பிச் செல்ல, என்று     நேரம் சரியாய் போனது.

இரவு சீக்கிரம் ஈசன் வீட்டிற்கு வர, அவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே பேச்சியும் வர, கஜேந்திரனும் “என்ன ஈசா பேசணும்னு சொன்ன..??” என்றபடி வந்தமர,

“ஆமாங்கய்யா… வெங்காடசலம் சார் அமௌன்ட் கேட்டார்ல.. அதுக்கொரு யோசனை பண்ணிருக்கேன். எல்லாருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு  அவர்க்கிட்ட பேசுவோம்..” என்றான் லட்சுமியை ஒரு பார்வை பார்த்து..

ஈசன் என்ன சொல்லப் போகிறான் என்று தெரிந்துகொள்ள லட்சுமி ஆவலாய் நிற்க,

“அய்யா.. நான் சண்முகம் அண்ணனுக்கு கொடுத்ததை நீங்க வசூல் பணத்துல இருந்து எடுத்துக்க சொன்னீங்க இல்லையா,  அந்த பணம் கூட சேர்த்து லட்சுமிக்கு மாமா பேங்க்ல ஃபிக்ஸட்ல போட்டது, அவ பேர்ல இருக்க இன்னொரு  சேவிங்க்ஸ் அமௌன்ட் எல்லாம் சேர்த்தா சார் கேட்ட அமௌன்ட் வரும்..” என்று நிறுத்தியவன், மீண்டும் லட்சுமியைப் பார்த்தான்..

‘பேசிட்டு இருக்கும் போதே ஜர்க் விட்டு என்னை ஏன் பாக்குறீங்க மாமா..’ என்று அவள் கண்களிலேயே கேள்விக் கேட்டவளுக்கு, பதிலுக்கு ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்தவன்,

“வெங்கடாசலம் சார் அவர் பார்ட்னருக்கு அமௌன்ட் ரெடி பண்ண முடியலைன்னு தானே நம்மக்கிட்ட கேட்டார், இப்போ நம்ம அந்த பார்ட்னர்ஷிப் கேட்போம்.. லஷ்மி பேர்ல…” என்று ஈசன் சொல்லி முடிக்க,

அத்தனை நேரம் கதை கேட்பவள் போல் கேட்டிருந்தவள், இறுதியில் ‘லஷ்மி பேர்ல்’ என்றதைக் கேட்டதும் ஆடித்தான் போனாள்.

“அத்தை இதுல உங்களுக்கு எதுவும் மறுப்பில்லையே..” என்று பேச்சியைப் பார்த்து கேட்க, அவரோ “கண்டிப்பா இல்ல.. நல்ல விஷயம் தான..” என்று வேகமாய் தன் சம்மதத்தை சொன்னார்.

“அய்யா… நீங்க..” என்று ஈசன் கஜேந்திரனிடம் கேட்க, அவரோ ஈசனை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்தவர், லட்சுமியையும் அழைத்து அவர் அருகே அமரச் சொல்ல, தயங்கியபடி வந்தமர்ந்தாள்.

“ரொம்ப நிறைவா இருக்கு ஈசா.. நல்ல யோசனை.. இதுநாள் வரைக்கும்  பணத்தை மட்டுமே வச்சு தொழில் செஞ்சோம்.. ஆனா அதிலயும் நேர்மை நியாயம் கடைப்பிடிச்சோம். அதுனாலதான் எவ்வளோ பெரிய பிரச்னைகள் வந்தப்பவும் நம்மனால எழுந்து நிக்க முடிஞ்சது..  இப்போ இது அடுத்த படி.. பணத்தைத் தாண்டி, படிப்புங்கிறது கடவுள் மாதிரி.. ஆக அந்த நல்ல காரியத்துக்கு நம்ம பணம் உதவுறது நல்ல விஷயம் தான்..

என்னடா பள்ளிக்கூடம் கட்டன்னு வந்து கேட்கிறார்.. அதுக்குக்கூட நம்ம வட்டிக்குத் தான் கொடுக்கனுமான்னு யோசனையாவே இருந்தது இப்போ நிம்மதியா இருக்கு.. லட்சுமி பேர்லயே வாங்குவோம்.. நிர்வாகப் பொறுப்பு ஆளுக்கு சரி பாதின்னு கேட்போம்…  வெறும் பணத்தை கைல வச்சிருந்தா அது காகிதம் தான்.. இதுபோல நல்ல காரியங்களுக்கு செய்றப்போ தான் அதோட மதிப்பும் கூடும்…” என்று சொல்ல, ஈசனுக்கு தான் நினைத்ததையே தான் அவரும் சொல்கிறார் என்று பெருமையாய் இருந்தது.

மரகதமும் முத்தழகும் கூட  “நல்ல யோசனை..” என்று கூற, லட்சுமி தான் மௌனித்துப் போனாள்..

அவளால் அத்தனை  எளிதில் சம்மதம் சொல்லவே முடியவில்லை.. வீட்டினர் ஒவ்வொருவராய் பேச லட்சுமிக்கு சம்மதம் சொல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போக, சரி என்று சொன்னவள் அடுத்து எதுவும் பேசாமல் மேலே அறைக்குச் சென்றுவிட்டாள்.

‘இது எவ்வளோ பெரிய பொறுப்பு.. இதையேன் ஈஸ் மாமா என் தலையில வைக்கிறாங்க… கடவுளே…’ என்று கடவுளை துணைக்கு அழைத்தவள், ஈசன் வரவிற்காக காத்திருந்தாள்.

அவனோ மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வர, லட்சுமியோ அறையை அளந்து கொண்டிந்தாள். அறைக்கு வந்தவனோ ஒன்றும் பேசாது, உடையை மாற்றி முகம் கழுவி வந்து அமர, லட்சுமி அவனைத் தான் முறைத்தபடி இருந்தாள்..

“ஷ்… ஏற்கனவே வெயில் வாட்டி எடுக்குது.. இதுல நீ வேற ஏன் டி முறைக்கிற…” என்று வேண்டுமென்றே முகத்தை துடைத்த துண்டை அவள் முன் உதற,

அதை வேகமாய் பிடுங்கியவள், அதைக்கொண்டே அவனை அடித்தாள், “நான் கேட்டேனா.. நான் கேட்டேனா மாமா.. ஏன் இப்படி பண்றீங்க…” என்றபடி.

“ஏய் ஏய் விடு டி.. என்ன இது எப்போ பார் கை வைக்கிற பழக்கம்.. ஆசையா வச்சாலும் பரவாயில்ல.. அடாவடியா வைக்கிற..” என்று சொல்லிபடியே அவள் கைகளைப் பிடித்து முறுக்கியவன், அதே துண்டைக் கொண்டே அவனோடு சேர்த்து அவளையும் இறுக்கிக் கட்டி லட்சுமியை அவன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

“ம்ம்ச் இப்போ ஏன் இப்படி கட்டுனீங்க…” என்று சலித்தவள், அவனில் இருந்து எழப் போக, அது முடியாமல் போக, “மாமா…” என்று வேண்டுமென்றே பல்லைக் கடித்து தரையை காலால் உதைத்தால்..

“இங்கப்பாரு சேர்ல உட்காந்திருக்கோம்.. இப்படி ஆடின ரெண்டு பெரும் சேர்ந்து லஷ்மி கீழ விழனும்..” என்று மிரட்டியவன், “ஏன் டி கொஞ்சம் சாஃப்டா ஹேண்டில் பண்ணலாம்னு பார்த்தா விடவே மாட்டேங்கிற…” என்று அவனும் அவன் பிடியை இறுக்கினான்..

“ம்ம்.. பின்ன நீங்க பண்ணி வச்சிருக்க வேலைக்கு…” என்று லட்சுமி சொல்லும் போதே, “என்ன தப்பா பண்ணிட்டேன்..” என, அவன் சொன்னதோ, செய்ய நினைத்ததோ எதுவும் தவறில்லை என்று அவளுக்கும் தெரியும் தானே..

“தப்புன்னு இல்ல மாமா.. ஆனா???” என்றிழுக்க, “முடியாதுன்னு நினைக்கிறியா..?” என்றான் அழுத்தமாய்.

அவளோ அமைதியாய் இருக்க “இங்க பார் லஷ்மி எல்லாத்துக்குமே ஃபர்ஸ்ட் டைம்னு ஒண்ணு இருக்கும்.. சரி மத்த விசயத்த விடு, நம்மளை எடுத்துக்கோ, நமக்குள்ள இவ்வளோ அண்டர்ஸ்டாண்டிங் வரும், இவ்வளோ லவ் வரும்.. இப்படி ஒரு அழகான லைஃப் வரும் இதெல்லாம் நம்ம நினைச்சுப் பார்த்தோமா?? இல்லையே.. ஆனா நடந்தது… எதுனால… உன்னால.. ” என்று ஈசன் சொல்கையில் லட்சுமியின் கண்கள் அகல விரிய,

“உண்மை தான் லஷ்மி… உன்னால மட்டும்தான் நம்ம லைஃபே மாறியிருக்கு.. இப்படி நம்ம லைஃப் டைமையே மாத்தின உன்னால ஒருநாளைக்கு ஒரு மூணு மணி நேரம் ஸ்கூல் போக முடியாதா…??” என்று ஈசன் கேட்கும் போதே, லட்சுமி எதுவோ சொல்ல வர,

“இரு இரு லஷ்மி.. நாளைக்கு சார்க்கிட்ட பேசுவோம்.. இப்போதைக்கு நீ படிப்ப பாரு.. நான் இருக்கேன் உனக்கு..” என்று அனைத்து விதத்திலும் லட்சுமியை லாக் செய்ய,

படிப்பைக் காரணம் காட்டி, பின் சூப்பர் மார்கெட் என் பொறுப்பு என்று எதையாவது சொல்வோம் என்று பார்த்தால் அவனோ அவளுக்கும் மேலாய் அனைத்தையும் யோசித்திருக்க, மறுக்கவே முடியவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!