Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 4 2

அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. அப்போது பேங்க் மேனேஜர் உள்ளே வரவும் அனைவரின் கண்களும் அங்கே திரும்பியது. அனைவரும் அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இன்பா அருகில் வந்து நின்ற மேனேஜர் “வாங்க சார், ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டார்.



Advertisement

அப்போது தான் வினோதினியும் அவனைக் கண்டாள். “இது அவன் தானே?”, என்று எண்ணி அவள் கண்கள் வியப்பில் விரிந்தது.

Advertisement

அவள் பார்வையை அவனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். பின் மேனேஜர் புறம் திரும்பி “கொஞ்சம் லோன் விஷயம் பேசணும்னு வந்தேன் சார்”, என்றான்.

Advertisement

“சரி உள்ள வாங்க”, என்று சொல்லி அவனை உள்ள அழைத்துச் சென்று அமர வைத்த அவர் “நான் அப்பவே வந்துட்டேன் சார். கொஞ்சம் பணம் வீட்ல இருந்தது. அதை மறந்து வந்துட்டேன். அதான் எடுக்கப் போனேன்”, என்றார்.

Advertisement

இங்கே வெளியே அமர்ந்திருந்த வினோதினி தனக்கு அருகில் இருந்தவரிடம் “மேனேஜர் கொஞ்சம் ஒரு மாதிரின்னு சொன்னீங்கண்ணா. அவர் என் கிட்ட கூட சரியா பேசலை. வேலைல சேர வந்துருக்கேன்னு சொன்னேன். அதுக்கென்னன்னு கேட்டுட்டு சரி வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டார். ஆனா இவரை மட்டும் உள்ள கூட்டிட்டுப் போய் நல்லா பேசுறார்?”, என்று கேட்டாள்.

“மேனேஜர் நிஜமாவே ஒரு மாதிரி தான் மா. ஆதாயம் இல்லாம எதையும் செய்ய மாட்டார். இப்ப வந்துருக்குறது யாருன்னு நினைக்கிறீங்க? இந்த ஊர் வி.ஏ.ஓ”

“என்னது வி.ஏ.ஓ வா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஆமா, வி.ஏ.ஓ தான். பேர் இன்பநாதன். நம்ம பக்கத்து ஊர் தான். உண்மைலே நல்ல மனுசன். காலேஜ் முடிச்சிட்டு வக்கீலுக்கு படிச்சிருக்கார். ஆனாலும் நம்ம ஊர் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு நிறைய நல்லது பண்ணுவார். குளத்து வேலைக்கு போறவங்களுக்கு சம்பளம் கொடுக்குற ஆள் பயங்கர ஊழல் பண்ணினதுனால இப்ப அந்த பொறுப்பும் இவர் தலைல வந்துருக்கு. ஏழை மக்கள் என்ன உதவி கேட்டாலும் செய்வார் மா. இங்க இருக்குற இத்தனை பேருக்கும் மாசம் மாசம் பணம் வாங்க ஏற்பாடு பண்ணினவர் அவர் தான். அவரைப் பாத்து நம்ம மேனஜர்க்கு பயம் உண்டு. வேலைக்கு உலை வச்சிறக் கூடாதுல்ல?”, என்று சொல்லி விட்டு அவர் தன்னுடைய வேலையைப் பார்க்க அவனைப் பற்றிய நல்ல எண்ணம் அவள் மனதில் விழுந்தது.

பின் அவளும் அவனை மறந்து தன்னுடைய வேலையைப் பார்த்தாள். மேனேஜரிடம் தனக்கு தேவையான விவரங்களை எல்லாம் கேட்டுக் கொண்டவன் அவர் கேட்ட தகவல்களை எல்லாம் கொடுத்தான். மேனேஜர் அவனுக்கு விடை கொடுக்க எழுந்து நிற்க அவனுக்கு அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

எப்படிக் கேட்பது என்று தயங்கியவன் பின் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்று எண்ணி “பேங்க்ல ஒரு ஆள் குறையுதுன்னு சொன்னீங்களே? அதுக்கு ஆள் போட்டுட்டாங்களா?”, என்று கேட்டான்.

“ஆமா சார். அதோ அந்த பொண்ணு தான். பேர் வினோதினி. ஊர் சென்னை. இன்னைக்கு தான் வேலைக்கு சேந்திருக்கு. முதல் நாளே வேலை செய்ய முடியாதுல்ல? அதான் மத்தவங்க கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு வேலை கத்துக் கொடுக்குறாங்க”, என்று சொன்னார் மேனேஜர்.

தனக்கு தேவையான விவரம் கிடைத்ததும் அவரிடம் நன்றி சொல்லி விட்டு சந்தோஷமாக வெளியே வந்தவன் அவளைப் பார்த்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் ஒரு வித மின்னல் வந்தது. அவளோ வரவேற்பாக அவனைக் கண்டு மெலிதாக புன்னகைத்தாள். அந்த புன்னகையில் அவனுக்குள் பல அதிர்வலைகள் உருவானது. “இவ என்னை நினைவு வச்சிருக்கா”, என்று சந்தோஷமாக எண்ணிக் கொண்டான்.

அப்போது ஒரு தாத்தா “பேராண்டி, இந்த படிவத்தை நிரப்பிக் கொடுப்பா”, என்று சொன்னதும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவன் அவருக்கு நிரப்பிக் கொடுத்தான். மேலும் இரண்டு பேருக்கு எழுதிக் கொடுத்தவன் ஏற்கனவே அங்கு வரச் சொன்னவர்களுக்கு அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுத்து எப்போது வந்து பணம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டே அங்கிருந்து சென்றான். அங்கிருந்து போகும் வரை அடிக்கடி அவன் பார்வை அவள் மீது பட்டு பட்டு மீண்டது.

அதை வினோதினி உணர்ந்து தான் இருந்தாள். “என்ன இப்படி லுக் விடுறான்? ஒரு வேளை இவனைக் காப்பாத்தினதுக்கு நன்றி சொல்லப் பாக்குறானோ?”, என்று எண்ணினாள் அவள். ஆனால் போகும் வரைக்கும் அவளுக்கு நன்றி என்ற ஒன்றை அவன் சொல்லவே இல்லை. அதை அவள் எதிர் பார்க்க வில்லை தான். ஆனால் அவனது பார்வை மட்டும் அவளுக்கு கடைசி வரை புரியவே இல்லை.

அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆசை கழுத்து வரை இன்பாவுக்கு இருந்தது தான். ஆனால் பேங்க் உள்ளே வைத்து சொல்லி அனைவரின் கவனமும் தங்கள் மீது விழுவதை அவன் விரும்ப வில்லை. அதனால் பொறுமையாக சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தான். அவளை அடிக்கடி பார்க்க கூடாது என்று தான் அவனும் எண்ணினான். ஆனாலும் அவன் கண்கள் அவள் பக்கமே போனது.

இதற்கு மேல் அங்கே இருப்பது சரி இல்லை என்று எண்ணி தான் கிளம்பி விட்டான். பின் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சென்றான்.

“டேய் கதிர், இன்னும் உள்ள என்ன டா பண்ணுற? பிள்ளை கிளம்பி நிக்குறா பாரு”, என்று சத்தம் போட்டார் சண்முகநாதன். கிளம்பி இருந்த இளவரசி அவன் எப்போது வெளியே வருவான் என்று காத்திருந்தாள்.

“இதோ வரேன் தாத்தா”, என்று குரல் கொடுத்த கதிருக்கு வெளியே வரவே மனதில்லை. எங்கேயாவது ஓடி விட மாட்டோமா என்று இருந்தது. சேலை கட்டி, பூ வைத்து, மிதமான நகைகள் என அழகாக இருந்தவளை சாப்பிடப் போகும் போதே பார்த்து தொலைத்து விட்டான். அவன் கண்கள் அவளை ரசிக்கச் சொல்லித் தூண்ட தன்னைக் கட்டுப் படுத்துவதே அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

“ஏலே, உள்ள என்ன முட்டையா போடுற? இப்ப வரப் போறியா இல்லையா டா?”, என்று பார்வதி கேட்க இளவரசி அதைக் கேட்டு சிரித்து விட்டாள்.

பார்வதி கேட்டதும் இளவரசியும் தாத்தாவும் சிரிப்பது கதிருக்கு நன்கு கேட்டது. “கிளம்பிரு டா கதிர். இதுக்கு மேல தாமதிச்சா கிழவி நம்மளை அசிங்கப் படுத்திரும்”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்ததும் இளவரசி அவனை ஏற இறங்கப் பார்க்க அவள் பார்வையில் திணறியவன் அவளை முறைக்க முடியாமல் பார்வதியை முறைத்தான்.

அவன் பார்வை புரிந்த சண்முகநாதன் “ஏன் ஆத்தா, அவனே அதிசயமா கிளம்பிட்டான். நீ இன்னும் கிளம்பாம அவனையே கண்ணெடுக்காம பாக்குற?”, என்று கேட்டார்.

“இல்லை தாத்தா, உங்க பேரன் எத்தனை முட்டை போட்டார்ன்னு பாத்தேன். சரி தாத்தா நான் கிளம்புறேன். வரேன் ஆச்சி. அம்மா போயிட்டு வரேன்”, என்று சத்தம் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

“ஹா ஹா, என் பேத்திக்கு எப்பவும் ஷோக்கு தான்”, என்று சண்முகநாதன் சிரிக்க அம்மாச்சி மற்றும் தாத்தாவை முறைத்த கதிர் “உங்க ரெண்டு பேரையும் வந்து பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு பாமாவிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

கதிர் வண்டியை கிளப்பி விட்டு அவள் ஏறுவதற்காக காத்திருந்தான். அவளும் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். “ஏத்தா என்ன இப்படி உக்காருற? கீழ விழுந்து கால் உடைஞ்சிச்சின்னா உன்னை யாரு உன் மாமனா கட்டிப்பான்? நல்லா உக்காந்து அவனை பிடிச்சிக்கோ’, என்றார் பார்வதி.

“ஏய் கிழவி, போகும் போது நல்ல வார்த்தை சொல்ல மாட்ட? வர வர உனக்கு கொழுப்பு கூடிருச்சு”, என்று அம்மாச்சியை சத்தம் போட்ட கதிர் இளவரசி புறம் திரும்பாமலே “நல்லா உக்காந்துட்டியா? போகலாமா?”, என்று கேட்டான்.

“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க வண்டி கிளம்பியது. போகும் இருவரையும் பார்த்த படியே நின்றிருந்தார் பார்வதி.

“என்ன அத்தை அப்படி பாக்குறீங்க?”, என்று கேட்டாள் பாமா.

“ரெண்டு பேரையும் பாக்க எவ்வளவு அம்ஸமா இருக்கு? சீக்கிரம் கட்டி வைக்க சொன்னா செய்யுறீங்களா?”

“எங்க அத்தை? எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா?”

“உன் புருஷன் என்ன தான் சொல்றான்?”

“அவ படிப்பு முடியட்டும்னு சொல்றார். அதுக்கு முன்னாடி அவர் மக மனசை கெடுக்க வேண்டாமாம்”

“இப்ப மட்டும் எப்படி அவன் கூட அவளை அனுப்ப ஒத்துக்கிட்டான்?”

“அவர் எங்க ஒத்துகிட்டார்? கதிர் கூட இளவரசி போறது உங்க மகனுக்கு தெரியாது அத்தை”

“ஆத்தாடி, தெரிஞ்சா குதிப்பானே?”

“அது தான் இல்லை அத்தை. இத்தனை நாளும் அவ அவன் கூட போறது அவருக்கு தெரியாமலா இருக்கும்? தெரிஞ்சிக்கிட்டே தான் அமைதியா இருக்கார். நாமளும் தெரியாத மாதிரியே இருப்போம்”

“எப்படியோ, சீக்கிரம் நல்லது நடந்தா சரி? எங்க இந்த மனுஷன் டி‌வில உக்காந்துட்டாரா?”, என்று கணவரைத் தேடிப் போனாள். பாமா மதியத்துக்கு சமைக்க சென்று விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!