Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 4 3

ஊரைத் தாண்டி கதிரின் வண்டி பயணித்தது. வண்டி என்னவோ நிதானமாக தான் சென்றது. ஆனால் அவன் மனம் தான் பந்தையக் குதிரையின் வேகத்தில் சென்றது. அவளது அருகாமை அவனை அந்த அளவுக்கு பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அவளோ அவன் ஏதாவது பேசி விட மாட்டானா? அவன் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லி விட மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய சேலை காற்றில் பறந்து அவன் முகம் மூட “அச்சோ”, என்ற படி அதை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். தன் மீது வந்து மோதிய அந்த ஊதா வண்ண சில்க் காட்டன் புடவையின் மென்மையும் அதில் இருந்து வந்த வாசனையும் அவனை சொர்கத்தில் மிதக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.



Advertisement

மனம் கட்டுப்பாடற்று செல்ல, வண்டியும் அவன் கையில் தடுமாறியது. ஸ்பீட் பிரேக்கில் அவன் வேகம் குறைக்க அவன் மீது மோதி விலகினாள் இளவரசி. அவளுடைய மோதலில் ஒரு நொடி அவனுக்கு மூச்சடைத்தது.

Advertisement

“இந்த அத்தை ஏன் இப்படி பண்ணுறாங்க? ஏன் இவளும் தான் பஸ்ஸில் போறேன்னு சொல்ல வேண்டியது தானே? என்னோட உணர்வுகளோட விளையாடுறதே இவளுக்கு வேலையாப் போச்சு”, என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டான்.

Advertisement

அவளது அருகாமையில் அவனுடைய அடியாழத்தில் அவன் புதைத்து வைத்திருந்த காதல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி அவனைப் படுத்தி எடுத்தது.

Advertisement

அவன் எதுவும் பேசப் போவதில்லை என்று புரிந்து கொண்ட இளவரசிக்கு அழுகையாக வந்தது. அவளது முகம் கண்ணாடியில் தெளிவாக விழுந்தது. அவளது கண்களில் கண்ணீர் கோர்த்திருக்க அது விழுவதற்கு முன் “அரசி”, என்று அழைத்து விட்டான்.

திடுக்கிட்டு விழித்தவள் அவன் தான் அழைத்தானா என்று குழப்பமாக பார்க்க கண்ணீர் வடியும் அவளது பிம்பம் அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவளையே பார்த்த படி வண்டியைத் செலுத்தினான்.

“நீங்க என்னைக் கூப்பிட்டீங்களா?”, என்று கேட்டாள் இளவரசி.

“ம்ம்…”

“என்ன?”

“இன்னைக்கு…. நீ ரொம்ப அழகா இருக்க…”, என்று ஆழமான குரலில் உரைத்தவன் வேறு எதுவும் சொல்ல வில்லை. ஆனால் கண்ணாடியில் அவள் முகம் மலர்வதைப் பார்த்த படியே இருந்தான். அவனுடைய ஒற்றை பாராட்டு அவளை இந்த அளவுக்கு மலரச் செய்யுமா என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.

“தேங்க்ஸ்”, என்று புன்னகைத்தவள் கண்ணீரை துடைத்துக் கொள்ள அவனுக்கும் மனது அமைதி அடைந்தது போல இருந்தது. ஒரு திருப்பத்தில் வளையும் போது அவள் பிடிமானத்திற்காக தன்னுடைய கரத்தை அவன் தோளில் வைத்து விட்டாள். அவன் திட்டுவானோ என்று எண்ணியவள் அவன் எதுவும் சொல்ல வில்லை என்றதும் கையை எடுக்க வில்லை. அவளது அந்த ஒற்றைத் தொடுகை அவனுக்கும் தேவையாக இருந்தது போலும். அவனும் எதுவும் சொல்ல வில்லை.

அதற்கு பின் அந்த பயணத்தை இருவரும் ரசித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்போதும் அவன் எதுவும் அவளிடம் பேச வில்லை தான். ஆனால் அவளுக்கு பிடித்திருந்தது.

ஒரு வழியாக காலேஜ் வர வண்டியை நிறுத்தினான். மனமில்லாமல் இறங்கி நின்றவள் “நான் சாயங்காலம் பஸ்லே வரேன். அம்மா கிட்ட சொல்லிருங்க”, என்றாள்.

“ஏன்?”

“இல்லை, உங்களுக்கு வேலை இருக்கும். அதான்”

“உன்னைக் கூப்பிட வரதை விட முக்கியமான வேலை எதுவும் எனக்கு இல்லை. நானே கூப்பிட வரேன்”, என்று அவளுடைய முகம் கூட பார்க்காமல் சொல்லி விட்டுச் சென்று விட்டான். போகும் அவனையே பார்த்த படி நின்றாள் இளவரசி.

தன்னை அழைத்து வருவதற்கு அவன் பண்ணிய அழிச்சாட்டியம் என்ன? இப்போது தானே அழைக்க வருவேன் என்று அவன் சொல்வது என்ன?

அவனை எண்ணி அவளுக்கு வியப்பாக இருந்தது. “இவனை எந்த லிஸ்ட்ல தான் சேக்கவோ? இவனைப் படிக்க எனக்கு பத்து ஜென்மம் வேணும் போல?”, என்று எண்ணிக் கொண்டு அதே இடத்தில் நின்றிருந்தாள்.

தன்னையே பார்த்த படி சிலை என அவள் நிற்கும் தோற்றத்தை கதிர் பார்த்த படி தான் சென்றான். ஏன் அப்படிச் சொன்னோம் என்று அவனுக்கே குழப்பமாக இருந்தது. “கடவுளே, எதுக்கு இவ கிட்ட மட்டும் நான் நானா இல்லாம போறேன்?”, என்று குழம்பிய படியே வண்டியின் வேகம் கூட்டினான்.

“என்ன டி இங்கயே நின்னுட்ட?”, என்று அவளது தோழி சாரு கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்தாள் இளவரசி.

“ஒண்ணும் இல்லை, கதிர் போனாங்க. அதான்”

“கதிர் கூடவா வந்த? ஐயையோ மிஸ் பண்ணிட்டேனே?”, என்று சொல்லி அவள் இளவரசியை வெறுப்பேத்த அவளை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஏண்டி கிள்ளின?”

“நீ சொன்னதுக்கு கெஞ்சுவாங்களா? சரி வா கிளாஸ்க்கு போகலாம்”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இன்பா சில மனுக்களை அவரிடம் கொடுத்து விட்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்றான். கதிரும் அப்போது தான் வீட்டுக்கு வந்தான்.

மதிய உணவு தயாராக இருக்க கதிருடன் சேர்ந்து அதை உண்டு முடித்தவன் கதிரை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து அலுவலகம் வந்து மேலும் சில வேலைகளை முடித்தான்.

மாலை ஐந்து மணி ஆனதும் “சரி மச்சான், வா வீட்டுக்கு போகலாம்”, என்று அழைத்தான் கதிர்.

“போகலாம் போகலாம். இன்னைக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்று சொன்ன இன்பா அந்த அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வந்தான்.

வீட்டுக்குச் செல்லும் பாதையில் செல்லாமல் அதற்கு எதிர் பக்கம் வண்டி செல்ல “எங்க மச்சான் போறோம்?”, என்று கேட்டான் கதிர்.

“இரு டா சொல்றேன்”, என்று சொன்னவன் அந்த பேங்க்க்கு தான் சென்றான்.

பேங்க் வெளியே சற்று மறைவாக நின்று கொண்டவன் கதிரையும் அருகே அழைத்து நிற்க வைத்தான்.

“இங்க எதுக்கு மச்சான் வந்து நின்னுட்டு இருக்கோம்?”

“இரு மாப்பிள்ளை, சொல்றேன்”, என்று சொன்னவனின் கண்கள் யாரையோ தேட கதிருக்கு குழப்பமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து வினோதினி வெளியே வந்தாள். தன்னுடைய ஸ்கூட்டி அருகில் வந்து ஹேன்ட் பேகை மாட்டியவள் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

“வா மாப்பிள்ளை போகலாம்”, என்று சொன்ன இன்பா, கதிர் ஏறியதும் வண்டியை எடுத்தான். அவளுடைய வண்டியைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

“மச்சான் இது தான் அந்த பொண்ணா?”, என்று கேட்டான் கதிர்.

“ஆமா டா, எப்படி கண்டு பிடிச்ச?”

”அதான் உன் முகத்துல வழியுற ஜொல்லுல தெரியுதே. சரி எப்படி டா அவ இங்க இருக்கான்னு கண்டு பிடிச்ச?”

“காலைல பேங்க் வரும் போது பாத்தேன் டா. இங்க தான் அவளுக்கு வேலை கிடைச்சிருக்கு. பேங்க் மேனேஜர் சொன்னார்”

“ஓ, சரி இப்ப எங்க போறோம்?”

“அவ எங்க தங்கிருக்கான்னு தெரியனும்ல? அதான், இப்ப பாலோ பண்ணுறோம்”

“அதை அந்த ஆள் கிட்டயே கேக்க வேண்டியது தானே? நேரா வீட்டுக்கே போயிருக்கலாமே?”

“அதைக் கேட்டா சந்தேகம் வந்திருக்கும். அதான்”

“ஆனா மச்சான், நீயா டா ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறது? எனக்கு ஆச்சர்யமா இருக்கு. சரி இந்த பொண்ணு எந்த ஊரோ?”

“சென்னையாம் டா”

“சென்னையா? அப்ப இங்க யார் வீட்ல தங்கி இருக்கு? டேய் அங்க பாரு டா, முப்பிலி ஊருக்குள்ள போகுது”

“ஆமா டா, இங்க யாரு வீட்டுக்கு வந்திருப்பான்னு தெரியலையே?”

“இன்னும் கொஞ்சம், தூரம் போனா தெரிஞ்சிரும். டேய் அந்த குடிகாரன் ரவி வீட்டு முன்னாடி நிறுத்துறா டா. அடடே ரவி பொண்டாட்டிக்கும் சென்னை தான் டா. எம்.சி.ஏ படிக்க போன இடத்துல அந்த பொண்ணைக் கரெக்ட் பண்ணி…. சாரி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான். அவளுக்கு தெரிஞ்ச பொண்ணோ என்னவோ?”

“இருக்கும் டா. ஆமா உனக்கு ரவி பத்தி எப்படி தெரியும்?”

“என் கூட தான் காலேஜ் படிச்சான். அப்புறம் ஒரு நாள் ஏதேர்ச்சியா பாத்தப்ப சொன்னான். சரி வண்டியை நிறுத்து. அது யாருன்னு கேப்போம்”, என்று கதிர் சொன்னதும் வண்டியை நிறுத்தினான் இன்பா.

“எப்படி டா கேப்ப? யாராவது ஏதாவது நினைச்சிக்குவாங்க. எனக்கு பயமா இருக்கு டா”, என்றான் இன்பா.

“நீயா மச்சான் பயப்படுறது? எல்லா அதிசயமும் இன்னைக்கு நடக்குது. இரு வரேன்”, என்றவன் சுற்றி தன்னுடைய பார்வையை ஓட்டினான்.

அப்போது எதிரில் வந்த ஒரு தாத்தா “என்ன தம்பி இங்க நிக்குறீங்க?”, என்று இன்பாவிடம் கேட்டான்.

அவன் என்ன சொல்ல என்று தெரியாமல் திணற “இந்த ஊர்ல ரோடு ஏலம் சரியா இருக்கான்னு பாக்க வந்தோம்”, என்றான் கதிர்.

“அப்படியா தம்பி?”

“ஆமாங்க தாத்தா, இங்க ரவி வீடு எது? அவன் என் கூட தான் படிச்சான். அதான் பாத்துட்டு போகலாம்னு பாத்தோம்”

“அதோ அந்த வீடு தான்”

“எந்த வீடு தாத்தா? அங்க நாலு வீடு இருக்கே?”

“அதோ அந்த பொண்ணு உள்ள போகுதுள்ள அந்த வீடு தான்”

“அது யார் தாத்தா?”

“ரவிக்கு மதினியார். அவன் பொண்டாட்டியோட அக்காவாம். இங்க பேங்க் வேலை கிடைச்சு வந்திருக்கு. அந்த ரவி நல்லா குடிச்சீட்டு வீட்ல தான் கிடப்பான். போய் புத்தி சொல்லுப்பா”, என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

“யாருன்னு தெரிஞ்சிருச்சா? இப்ப வா மச்சான் வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி விட்டு கதிர் வண்டியை எடுக்க அவன் பின்னே ஏறி அமர்ந்த இன்பா அந்த வீட்டைத் திரும்பி திரும்பிப் பார்த்த படி சென்றான்.

காதல் தொடரும்…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!