Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 6 4

அவள் தன்னைப் பார்க்கவும் வரவேற்பாக அவளைப் பார்த்து சிரித்தான். வினோதினிக்கு அதுவே போதுமாக இருந்தது.

ஒரு தட்டில் மூன்று இட்லி வைத்து எடுத்து வந்து வினோதினி முன்பு வைத்த பாமா அவளுக்கு சட்டினி சாம்பாரைப் பரிமாறினாள்.



Advertisement

ஏதோ அதைக் காண்கையில் கடவுளைப் பார்த்தது போல இருந்தது வினோதினிக்கு. அவள் கண் கலங்கிய படி தட்டையே பார்த்துக் கொண்டிருக்கவும் “முதல்ல சாப்பிடுங்க”, என்றான் இன்பா.

அவன் அப்படிச் சொல்லவும் பாமாவை நிமிர்ந்து பார்த்த வினோதினி “ரொம்ப நன்றி மா”, என்றாள்.

Advertisement

Advertisement

“இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவாங்க? அப்படின்னா நாங்க சொல்ல வேண்டிய நன்றிக்கு உன் வீட்லயே இடம் இருக்காது. நீ சாப்பிடு. நான் இதோ வரேன். இன்பா, சட்னி காலி ஆச்சுன்னா பிள்ளைக்கு ஊத்து”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

“பிளீஸ் எதுவும் நினைக்காம சாப்பிடுங்க”, என்று மீண்டும் சொன்னான் இன்பா. அப்போதும் அவள் தயங்க “நான் வேணும்னா எந்திச்சு போய்றவா?”, என்று கேட்டான்.

Advertisement

“இல்லை வேண்டாம். பிளீஸ் என் கூடவே இருங்க. நான் சாப்பிடுறேன்”, என்றவள் உண்ண ஆரம்பித்தாள்.

அவள் உண்ணும் வேகத்தைப் பார்த்த்தவனுக்கு அவளது பசி புரிய அவனது கண்களும் கலங்கிப் போனது.

ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் எப்படி இருந்தாளோ என்று எண்ணி அவள் மேல் இறக்கம் சுரந்தது. அவள் மூன்றாவது இட்லியை உண்டு கொண்டிருக்கும் போது பாமா சுட சுட மொரு மொரு தோசையுடன் வந்தாள்.

“எனக்கு போதும் மா”, என்று அவள் மறுக்க “மூச், நான் நிறுத்துற வரைக்கும் நீயும் நிறுத்தக் கூடாது. இப்படி காக்கா மாதிரி கொறிச்சா நாளைக்கு புருசனையும் பிள்ளையையும் தாங்க தெம்பு வேண்டாம்? இரு அடுத்த தோசை எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் செல்ல அவள் முகம் சிவந்து போனது.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள். “அம்மா திடீர் திடீர்னு இப்படி தான் உளறுவாங்க. நீங்க கண்டுக்காம சாப்பிடுங்க”, என்றான்.

அடுத்த மூன்று தோசையை உண்டு முடித்தவள் இன்பாவைப் பார்த்து “எனக்கு போதும். இதுக்கு மேல இடம் இல்லை. பிளீஸ் அம்மா கிட்ட சொல்லுங்க”, என்றான்.

“சரி நான் பாத்துக்குறேன். நீங்க இந்த ஒரு தோசையை மட்டும் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றவன் அடுப்படிக்கு சென்று அம்மாவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.

“டேய் நான் அடுத்த தோசை ஊத்தணும். விடு டா”, என்று பாமா சொல்ல “இப்ப அவளை கவனிச்சது போதும். மதியம் நல்லா கவனிச்சிக்கோ. ஒரெடியா தோசையா கொடுத்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டான்.

“அந்த பிள்ளையோட பசி அவ கண்ணுல தெரிஞ்சது டா. அவளுக்கு போதுமா?”

“போதும் மா”

“அப்ப, மதியம் சாப்பிட கூட்டிட்டு வருவியா?”

“கண்டிப்பா கூட்டிட்டு வரேன். அப்ப உன் கைவரிசையைக் காட்டு”

“சரி டா”

“யாரோ ஒரு பொண்ணுக்கு சமைக்க உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே?”, என்று அன்னையிடம் போட்டு வாங்கினான்.

“அவளுக்கு ஒரு தடவை இல்லை, ஆயுசு முழுக்கவும் சமைச்சு போடுவேன்”

“அம்மா”

“சீக்கிரம் அவளை மருமகளாக்க பாரு”

“எப்படி மா?”

“அவளைப் பாத்ததும் உன் முழியே சரி இல்லைன்னு கதிர் சொன்னான் டா. நான் நேர்லயே பாத்துட்டேன். எனக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. என் மருமக ரொம்ப அழகா இருக்கா”

“அம்மான்னா அம்மா தான்”, என்ற படி அவளின் கன்னம் கிள்ள “முதல்ல அவளைப் போய்க் கவனி”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவன் வெளியே வரும் போது வெறும் தட்டை கையில் வைத்த படி எங்கே கழுவுவது என்று விழித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்த இன்பா அவள் கையில் இருந்த எச்சில் தட்டை வாங்க முயற்சி செய்ய “என்ன பண்ணுறீங்க விடுங்க”, என்றவள் அவன் கையில் அந்த தட்டைக் கொடுக்கவே இல்லை.

“சரி வாங்க, தட்டை இங்க போட்டுட்டு கையைக் கழுவுங்க”, என்றதும் அவன் சொன்ன படி செய்தாள். ஆனாலும் அவள் தட்டை கழுவ எண்ண பாமா அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“இங்க உக்காரு டா”, என்று சொல்லி அவளை தன் அருகே அமர வைத்துக் கொண்டாள் பார்வதி.

சங்கோஜத்துடன் அவள் அமர அங்கே வந்த இன்பா “இப்ப உங்களுக்கு நான் எல்லாத்தையும் அறிமுகப் படுத்துறேன். இது என் தாத்தா. எங்க வீட்டு பெரிய சிங்கம். அப்புறம் இது எங்க பாட்டி, எங்க வீட்டு பெண் சிங்கம். அப்புறம் இது எங்க அம்மா, எங்க வீட்டோட மகாராணி, எங்க அப்பா தான் மகாராஜா, அப்ப பாத்தீங்களே, அவர் தான். வயலுக்கு கிளம்பிட்டார். அப்புறம் இவ எங்க வீட்டு இளவரசி, அவ பேரும் இளவரசி தான். அப்புறம் இவன் கதிர், இந்த வீட்டு மாப்பிள்ளை.. சே என் மாப்பிள்ளை. ரெண்டும் அவன் தான்”, என்றான். அவன் அப்படிச் சொன்னதும் மற்றவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க கதிர் மற்றும் இளவரசி இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு நொடி பார்த்துக் கொண்டார்கள்.

அனைவரையும் பார்த்து நட்பாக புன்னகைத்தாள் வினோதினி. “உன் ஊர் எது மா? அப்பா அம்மா என்ன செய்யுறாங்க?”, என்று கேட்டாள் பார்வதி.

முடிந்த அளவு தன்னுடைய குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் அனைத்தையும் சொன்னாள் வினோதினி. அவள் வெஜ்ஜா நான்வெஜ்ஜா என்பது வரைக்கும் அனைத்து தகவலையும் வாங்கி விட்டார்கள்.

“சரி பாட்டி, அவங்களுக்கு வேலைக்கு நேரம் ஆச்சு. நான் கொண்டு போய் விடுறேன்”, என்றான் இன்பா. வினோதினியும் எழுந்து கொண்டாள்.

“அப்ப மதியச் சாப்பாடுக்கு வந்துரு மா”, என்றாள் பாமா. வினோதினி பெவென்று விழிக்க “அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். வாங்க போகலாம்”, என்று அழைத்தான் இன்பா.

“போயிட்டு வரேன் பாட்டி, போயிட்டு வரேன் தாத்தா”, என்று உறவு முறை சொல்லி அழைத்த வினோதினி இளவரசியிடம் “வரேன்”, என்றும் பாமாவிடம் “சாப்பாடு அருமையா இருந்தது. ரொம்ப நன்றி மா. நான் வரேன்”, என்றாள். பின் கதிரிடம் மரியாதையான தலையாட்டலுடன் விடை பெற்றாள்.

அனைவரும் வாசலுக்கு வந்து அவளை வழி அனுப்பி வைத்தார்கள். அந்த அன்பான குடும்பத்தை கண்ணால் பார்த்து மனதால் நிறைத்து அவனுடன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

வண்டி பேங்க் நோக்கிச் சென்றது. போகும் போது அமைதியே நிலவியது. இவ்வளவு பெரிய உதவி செய்தவனிடம் நன்றி என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதுமா என்று எண்ணி அமைதியாக வந்தாள் .

நேராக பேங்க் முன்னே வந்து நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்தினான் இன்பா. அவளுக்கும் தெரியுமே, இருவரும் ஒன்றாக சென்று இறங்கினால் அனைவரின் பார்வையிலும் பட நேரிடும் என்பது.

இறங்கியதும் தயக்கமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். உணவு உண்டதால் அவள் முகத்தில் இருந்த சோர்வு சற்று குறைந்திருந்தாலும் அவள் சந்தோஷமாக இல்லை என்று மட்டும் புரிந்தது.

என்ன காரணம் என்று கேட்க அவனுக்கு ஆசை தான். ஆனால் அது அதிகப் படி என்பதால் அமைதியாகி விட்டான்.

“என்னை மன்னிச்சிருங்க”, என்றாள் வினோதினி.

“எதுக்குங்க?”

“நேத்து நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்”

“நீங்க பேசினதுல எந்த தப்பும் இல்லை”

“நீங்க சொல்ல வரதைக் கேட்காம நான் பேசினது தப்பு தானே?”

“நான் சொல்ல வந்ததைக் கேட்டுருந்தா அதை விட அதிகமா பேசிருப்பீங்க?”, என்று அவன் சொன்னதும் குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

அவளுடைய குழப்பத்தைப் பார்த்தவன் “அதை இன்னொரு நாள் சொல்றேன். இப்ப பேங்க் போங்க. நேரம் ஆச்சு”, என்றான். தலையாட்டி விட்டு பேங்க் உள்ளே சென்றாள். இன்பாவும் கலெக்டரை மறந்து வீட்டுக்கு வந்தான்.

அவன் சென்ற போது இளவரசி காலேஜ்க்கு கிளம்பிச் சென்றிருக்க கதிரும் வெளியே சென்றிருந்தான்.

“அந்த பொண்ணை பேங்க்ல விட்டுட்டியா டா?”, என்று கேட்டாள் பாமா.

“ஆமா மா”

“மதியம் அவளை சாப்பிட கூட்டிட்டு வரியா?”

“அதெல்லாம் வர மாட்டா மா. வேணும்னா கேரியல்ல அடைச்சுக் கொடு”

“அப்ப காலைல மட்டும் வந்தா?”, என்று பார்வதி கேள்வி கேட்க காலையில் நடந்ததைச் சொன்னான். கூடவே நேற்று முழுக்க அவள் சாப்பிடாததையும் சொன்னான்.

“அவளுக்கு ஏதோ பிரச்சனை மா. என்னன்னு தெரியலை. ஒரே நாள்ல அவ எல்லாம் சொல்லுவான்னு எதிர் பாக்க கூடாது. சரி சமைக்க ஏதாவது வாங்கிட்டு வரட்டா? கொஞ்சம் நல்லதா செஞ்சி கொடுமா”, என்றான்.

“இப்பவே வருங்கால பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா?”, என்று கேட்க வந்த வாயை அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து அடக்கிய பாமா “மட்டன் கடை இன்னைக்கு இருக்காது டா. அதனால வீட்ல இருக்குற கோழியை அடிச்சு பிரியாணி செஞ்சிறேன். நீ போய் கொடுத்துட்டு வந்துரு”, என்றாள்.

“சரி மா”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தவனுக்கு மதியம் உணவு கொண்டு போனால் அவள் ஏதாவது சொல்வாளோ என்று கொஞ்சம் ஜெர்க் ஆகத் தான் செய்தது.

காதல் தொடரும்….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!