Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 6 3

பஸ் வரும் இடத்திற்கு சென்றவள் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போனாள். பள்ளிக் கூடத்திற்குச் செல்ல அத்தனை பிள்ளைகள் நின்றிருந்தார்கள். அப்போது ஒரு பஸ் வர அதில் ஏறலாம் என்று எண்ணினாள்.

ஆனால் அதுவே புல்லாக வந்தது. இங்கிருப்பவர்களும் அதில் ஏற முயற்சிக்க பஸ் கிளம்பியே விட்டது. பெண் பிள்ளைகள் முதற்கொண்டு படியில் தொங்கிக் கொண்டு போக சத்தியமாக தன்னால் அதில் போக முடியாது என்று புரிந்து கொண்டாள்.



Advertisement

உடல் வேறு சோர்வாக இருக்க சிறிது நேரத்தில் முகத்தின் முன் பூச்சி பறப்பது போன்ற உணர்வு வர அப்படியே மயங்கிச் சரிந்தாள் வினோதினி.

அங்கிருந்த அனைவரும் பதறி அவளை சுற்றி நின்று கொண்டார்கள். அங்கு நின்ற பாட்டி அவளை தன் மடியில் போட்டுக் கொண்டு “இது யாரு என்னன்னு தெரியலையே? யாராவது தண்ணி வச்சிருக்கீங்களா?”, என்று கேட்டார்.

Advertisement

Advertisement

ஒரு பள்ளிக்கூடம் போகும் சிறுமி தன்னுடைய தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க அவள் முகத்கில் தண்ணீர் தெளிக்கப் பட்டது. அன்று மாவட்ட ஆட்சியரைப் பார்க்க சீக்கிரமே கிளம்பி இருந்தான் இன்பா. வண்டியில் போகும் போது வினோதினியை பார்க்க மாட்டோமா என்று அவன் மனம் ஏங்கியது.

அவள் பஸ்ஸில் வந்தால் எப்படி பார்க்க என்று எண்ணிய படியே தான் சென்றான். அப்போது தான் அவள் ஏற வேண்டிய பஸ் ஸ்டாண்டில் கூட்டம் இருப்பதைப் பார்த்தான். தன்னாலே அவன் வண்டி அங்கு சென்று நின்றது. கூட்டத்தை விலக்கி அவன் பார்த்த போது அவளுடைய மயக்கத்தை தண்ணீர் தெளித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

Advertisement

வினோதினியை அந்த கோலத்தில் பார்த்ததும் அதிர்ந்து போனவன் அவசரமாக அந்த பாட்டி அருகே குனிந்து “வினோ, என்ன ஆச்சு உனக்கு?”, என்று கேட்ட படி அவள் கன்னம் தட்டினான்.

“இன்பா தம்பி, இந்த பொண்ணை உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டாள் ஒரு பெண்.

“ஆமா அக்கா, தெரிஞ்ச பொண்ணு தான்”, என்று சொல்லி விட்டு மீண்டும் அவளுடைய கன்னம் தட்ட மெதுவாக கண்களைத் திறந்தாள்.

எதிரே இன்பா முகம் இருக்கவும் “கனவு காண்கிறேனா?”, என்று தான் அவளுக்கு தோன்றியது.

“என்ன மா ஆச்சு திடீர்னு?”, என்று அந்த பாட்டி கேட்க அதன் பிறகு தான் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தாள்.

அனைவரின் முன்னிலையிலும் தான் அந்த நிலையில் இருப்பது ஒரு சங்கடத்தை கொடுக்க அவசரமாக எழுந்து நிற்க முயன்றாள். அப்போது அவளுடைய கால்கள் தள்ளாட அவளது தோளைப் பற்றிக் கொண்டான் இன்பா.

“நீ ரொம்ப சோர்வா தெரியுற மா”, என்று அந்த பாட்டி சொல்ல “ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருந்தா வேற எப்படி இருக்கும்?”, என்று எண்ணிக் கொண்டவள் “எனக்கு ஒண்ணும் இல்லை. தேங்க்ஸ்”, என்றாள்.

அவள் நிலையாக நின்றதும் இன்பா தன்னுடைய கைகளை விலக்கிக் கொண்டு நின்றவன் “பேங்க் தானே போகணும் வினோதினி? நான் கொண்டு போய் விட்டுறேன். வண்டியில ஏறுங்க”, என்றான்.

“அதெல்லாம் வேண்டாம். நான் பஸ்ல போய்க்கிறேன்”, என்று தன்மையாக மறுத்தாள். அவனிடம் நேற்று போல கோபப் பட அவளால் முடிய வில்லை.

“இன்பா ரொம்ப நல்ல தம்பி மா. அவரை நம்பி நீ தாரளாமா போகலாம். எங்கன்னு சொன்னா கொண்டு போய் விட்டுருவார். பஸ்ல போகணும்னு நினைச்சா அந்த கூட்டத்துல நீ இன்னொரு தடவை மயங்கிருவ”, என்று ஒரு பெண் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பிளீஸ் வாங்க”, என்று அவன் சொல்ல அதற்கு மேல் மறுப்பது சரி இல்லை என்பதால் “சரி, என்னை பேங்க்ல விட்டுருங்க”, என்றாள்.

வண்டியைக் கிளப்பியவன் “ஏறுங்க”, என்றான். அவன் பின்னே ஏறி அமர்ந்தவள் அவனைப் பிடிக்காமல் வண்டியைப் பிடித்துக் கொண்டாள். அதைப் பற்றி அவன் யோசிக்கவும் இல்லை. அவன் வண்டியைக் கிளப்பினான்.

சிறிது தூரம் சென்றதும் “என்ன நடந்தது, இப்படி மயங்கி விழுற அளவுக்கு?”, என்று கேட்டான் இன்பா.

“ஒண்ணும் இல்லை, சும்மா நின்னுட்டு இருந்தேன். என்னை அறியாமலே மயங்கி விழுந்துட்டேன்”

“உங்களை வீட்ல விட்டுறவா? ரொம்ப சோர்வா தெரியுறீங்க. கண்டிப்பா உங்களால வேலை செய்ய முடியாது. ஒரு நாள் லீவ் போடுங்க”

“இல்லை வேண்டாம். எனக்கு ஒரு உதவி செய்யுறீங்களா?”

“சொல்லுங்க”

“ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறீங்களா?”

“ஹோட்டலா?”

“ம்ம், எனக்கு ரொம்ப பசிக்குது. நேத்து முழுக்க சாப்பிடவே இல்லை. இப்பவும் சாப்பிடலைன்னா என்ன ஆவேன்னே தெரியலை”, என்று கலங்கிய கண்களுடன் அவள் உண்மையைச் சொல்ல வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியே விட்டான்.

“என்ன சொல்றீங்க? நேத்து முழுக்க சாப்பிடலையா? என்ன ஆச்சுங்க?”, என்று அவன் அதிர்ந்து போய் கேட்க “உங்களுக்கு பதில் சொல்லக் கூட என்னால முடியலை. பிளீஸ்”, என்றாள்.

அடுத்த நொடி அவளிடம் எதுவும் கேட்காமல் வண்டியை வேகமாக செலுத்தினான்.

சிறிது தூரம் சென்றதும் வண்டி நேராகச் செல்லாமல் அவனுடைய ஊருக்குள் செல்லவும் திகைத்து போனவள் “ஒரு வேளை இவன் ஊர்ல ஹோட்டல் இருக்கும் போல”, என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் வண்டி ‘செழியன் இல்லம்’ என்ற வீட்டின் முன் நிற்கவும் குழம்பிய படி இறங்கியவள் அவனைப் பார்த்தாள்.

“வாங்க உள்ள போகலாம்”, என்றான் செழியன்.

“இல்லை வேண்டாம், பிளீஸ். என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுருங்க”, என்றாள்.

“என் மேல நம்பிக்கை இருந்தா என் கூட வாங்க. இல்லைன்னா உங்க இஷ்டம்”, என்று அவன் சொல்ல “நான் வந்தா உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?”, என்று கேட்டாள்.

“என் வீடுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அதான் உங்க பேர் போட்டுருக்கே?”, என்று அவள் சொல்ல அவளுக்கு தன்னுடைய பெயர் தெரிந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது.

“இன்னைக்கு ஒரு நாள் எங்க வீட்டை ஹோட்டலா நினைச்சிக்கோங்க. வாங்க”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான். தயங்கிய படியே அவன் பின்னே சென்றாள் வினோதினி.

இன்பாவும் வினோதினியும் வீட்டுக்குள் செல்லும் போது அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள். திடீரென்று வேலைக்கு போன இன்பா ஒரு பெண்ணுடன் திரும்பி வரவும் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள்.

கதிரோ “என்ன இந்த பொண்ணை வீட்டுக்கே அழைச்சிட்டு வந்துட்டான்?”, என்று எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான். வினோதினிக்கு தான் அங்கே வந்தது சங்கடமாக இருந்தது.

“இன்பா யாரு டா இந்த பொண்ணு?”, என்று கேட்டாள் பாமா.

“அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தின பொண்ணு மா. பேர் வினோதினி”, என்று அவன் சொன்னதும் யாரோ மந்திரக் கோலை சுழற்றியது போல அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டார்கள்.

“வா மா…. உன்னைக் கண்ணால பாக்க மாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா?”, என்றாள்  பாமா.

“எங்க உயிரையே எங்களுக்கு மீட்டு கொடுத்துருக்க மா”, என்றாள் பார்வதி.

“நீ எங்க குலதெய்வம் தாயி”, என்றார் சண்முகநாதன்.

“நீ செஞ்ச வேலைக்கு நன்றின்னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னா பத்தாது மா”, என்றார் சிதம்பரம்.

“அன்னைல இருந்தே உங்களை பாக்கணும் பாக்கணும்னு நினைச்சேன் தெரியுமா?”, என்ற படி அவளது கையைப் பற்றிக் கொண்டாள் இளவரசி.

அனைவரும் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த இன்பா “அம்மா, வீட்டுக்கு வந்தவங்களை வேடிக்கை பாத்துட்டே இருப்பீங்களா? முதல்ல சாப்பிட வைங்க”, என்றான்.

“நான் ஒரு கூறு கெட்டவ. வா மா. சாப்பிடலாம்”, என்றாள் பாமா.

“இல்லை பரவால்ல. எனக்கு வேண்டாம்”, என்று தர்ம சங்கடத்துடன் மறுத்தாள்.

“இது உன் வீடு மா. எதுக்கு தயங்குற? இளவரசி உள்ள கூட்டிட்டு போ. பாமா டிபன் எடுத்து வை”, என்று சிதம்பரம் சொன்னதும் “வாங்க”, என்று அவள் கை பற்றி அழைத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்தாள் இளவரசி.

பாமா அடுப்படிக்குச் செல்ல “இளவரசி நீ காலேஜ்க்கு கிளம்பு போ”, என்று சொன்ன இன்பா அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.

“நீங்க அடிக்கடி வீட்டுக்கு வரணும் சரியா?”, என்று சொல்லி விட்டு இளவரசி உள்ளே சென்றதும் தயக்கமாக நிமிர்ந்து கதிரைப் பார்த்தாள் வினோதினி.

நேற்று அவன் கொஞ்சம் அதிகமாக பேசியதும் அவனைப் பார்த்தால் கொஞ்சம் பயம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!