Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 8 2

அணு அப்படியே நகர்ந்து உள் அறைக்குச் சென்று விட்டாள். ரத்தம் வடிந்த முகத்துடன் அமர்ந்திருந்த கிருஷ்ணனைப் பார்க்கும் போது இரக்கம் வந்தது தேவிக்கு. ஆனாலும் எதுவும் செய்ய வில்லை.

யாருமே அன்று இரவு உணவு உண்ணவில்லை. கிருஷ்ணன் அப்படியே படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் குரட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.



Advertisement

மெதுவாக எழுந்த தேவி மகளைச் சென்று பார்த்தாள். அணு புத்தகத்தை கையில் வைத்த படியே தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி கீழே வைத்து விட்டு அவளுக்கு போர்வையை மூடி விட்டவள் வெளியே வந்தாள்.

Advertisement

இலவச வேஷ்டி துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து கிருஷ்ணன் தலையில் இருந்த ரத்தத்தை துடைத்தாள். இன்னும் லேசாக ரத்தம் கசிந்து கொண்டு தான் இருந்தது.

Advertisement

அந்த காயத்தின் மேல் சிறிது காப்பி பொடியை வைத்து கட்டி விட்டு அவரையே பார்த்த படி அமர்ந்திருந்தாள். என்ன தான் குடித்து விட்டு அடித்தாலும் அவளால் கணவன் என்ற உறவை மறக்க முடியுமா? அவளுடைய உயிரும் ஊனும் அவருக்கு சொந்தமானவை ஆயிற்றே.

Advertisement

“நீங்க ஏன் நல்லவங்களா இல்லாம போனீங்க? இப்ப நடந்தது எல்லாம் உங்களுக்கு காலைல நினைவு இருக்குமான்னு தெரியலைங்க. எங்க பேச்சு எல்லாம் உங்க மனசுல பதிஞ்சதான்னு கூட தெரியலை. ஆனா நாளைக்கு நீங்க குடிச்சிட்டு வந்தா நான் கட்டாயம் உங்களை வீட்டுக்குள்ள சேக்க மாட்டேன். உங்களை நம்பி கல்யாணம் பண்ணின என்னை நீங்க காப்பாத்தலை. இப்ப என்னை நம்பி இருக்குற இந்த பிள்ளைகளுக்காக நான் உங்களை தொலைச்சு தான் ஆகணும்”,. என்று மானசீகமாக கணவனுடன் பேசியவள் மகள் அருகே சென்று படுத்துக் கொண்டாள்.

ஆனால் தூக்கம் தான் வரவில்லை. இப்போது அவள் மனதில் மூத்த மகளின் நினைவு தான் இருந்தது. அவளுடைய கோபம் மனதுக்கு வருத்தத்தை தந்தாலும் அவள் என்ன நிலைமையில் அங்கே இருக்கிறாளோ என்று கவலையாக இருந்தது.

அடுத்த நாள் கண் விழித்துப் பார்க்கும் போது ஏனோ உற்சாகமாக இருந்தது வினோதினிக்கு. நன்றாக தூங்கியதால் தான் இந்த தெளிவு என்று அவளுக்கே புரிந்தது.

குளித்து முடித்து கிளம்பும் வரை அவள் மனதில் எந்த நெருடலும் இல்லை. கீழே சென்று விஜி முகத்தில் முழிக்க வேண்டும் என்று எண்ணும் போது தான் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

கடைசியில் அவள் குணத்தை காட்டி விட்டாளே என்று கடுப்பாக இருந்தது. சிறு வயதில் இருந்து விஜி அப்படித் தான். அவளுக்கு வினோதினியைக் கண்டாலே பிடிக்காது. இப்போது வரை அது தொடரவும் மனதுக்கு வேதனையாக இருந்தது.

பிடிக்காத இடத்தில் இருப்பது நரகம் தான். அதை தான் இனி டிரான்ஸ்பர் கிடைக்கும் வரைக்கும் அனுபவிக்க வேண்டும் என்று புரிந்தது.

அவள் நினைத்தது போலவே அவள் கீழே வரும் போது விஜி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டு வினோதினி முகம் சுருங்கியது தான். ஆனால் அடுத்த நொடி அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாதது போல வாசலை நோக்கிச் சென்றாள்.

“அக்கா நில்லு”, என்று விஜி சொன்னதும் நின்றாள். ஆனால் திரும்பி பார்க்க வில்லை.

“எனக்கு பணம் வேணும், ஒரு ஆயிரம் ரூபாய் கொடு”, என்றாள் விஜி.

“என்ன ஆயிரம் ரூபாயா? என்ன என் கிட்ட கொடுத்து வச்சிருக்கியா?”, என்று எளக்காரமாக கேட்டாள் வினோதினி.

“அம்மா பணம் தானே கொடு”

“யார் பணமா இருந்தாலும் இப்ப அது என் பணம். அதை உனக்கு ஏன் நான் கொடுக்கணும்?”

“நீ என் வீட்ல இருக்குற? கொடுத்து தான் ஆகணும்”

“நான் உன் வீட்ல தான் இருக்கணும்னு நீ தான் ஆசைப் படுற. ஆனா நான் தலை விதியேன்னு தான் இருக்கேன். அதனால கண்டிப்பா தர மாட்டேன்“

“நான் அம்மா கிட்ட சொல்லுவேன்”

“தாராளமா சொல்லிக்கோ. ஒண்ணுக்கு நாளா கூட சொல்லிக்கோ. அப்படியே அம்மா கிட்ட நீ கேட்ட ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கிக்கோ. அப்புறம் நான் போன பிறகு என் பேகை குடையலாம்னு கனவு காணாத. அங்க ஒரு சல்லி பைசா கூட உனக்கு சிக்காது”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள்.

“சாப்பாடு”, என்று விஜி இழுக்க “உன் கையால பச்சை தண்ணி குடிக்கிறதும் விஷம் குடிக்கிறதும் ஒண்ணு தான்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

“போ போ, சாயங்காலம் வரும் போது நீயே பணம் கொடுப்ப. உன்னைக் கொடுக்க வைக்கிறேன்”, என்றவள் உடனே தாயை அழைத்தாள்.

காலையில் எப்போதும் போல எழுந்த தேவி அணுவை எழுப்பி குளிக்க போகச் சொல்லி விட்டு வெளியே வந்தாள். அங்கே கிருஷ்ணன் இல்லை.

“இந்த மனுஷன் எங்க போய்ட்டார்? இன்னேரம் எந்திரிக்க கூட மாட்டாரே?”, என்று எண்ணிக் கொண்டு அடுப்படிக்கு சென்று வேலையைப் பார்த்தாள்.

அணு பள்ளிக்கு போகும் வரைக்கும் கூட கிருஷ்ணன் வரவில்லை.  கணவனைப் பற்றிய குழப்பத்துடன் தேவி இருக்கும் போது தான் விஜி அழைத்தாள்.

உண்மை தெரியாமல் ஏதாவது பேசி வினோதினிக்கு விஜியால் மேலும் தொல்லை வரக் கூடாது என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டு போனை எடுத்தவள் “சொல்லு விஜி, என்ன காலைலயே கூப்பிட்டுருக்க?”, என்று கேட்டாள்.

“அக்கா என்ன மா சொன்னா? கேட்டியா?”

“கேட்டேன் டி. ஆனா தெளிவா ஒண்ணும் சொல்லலை. ஆனா வேற வீடு பாக்கலைன்னு சொல்லிட்டா. சரி நீ என்ன காலைல கூப்பிட்டுருக்க?”

“கேஸ் இல்லைன்னு ஒரு ஆயிரம் ரூபாய் பணம் கேட்டேன் மா. கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா”, என்றதும் மகளின் நோக்கம் புரிந்தது அந்த தாய்க்கு.

“அவ கிட்ட இருந்துருக்காது டி”, என்று மகளை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் தேவி.

“இல்லை மா, இருந்துச்சு. அன்னைக்கு அவ கிட்ட ஒரு நூறு ரூபாய் கேட்டேன். பர்ஸ்ல எடுக்க சொன்னா. நான் அப்ப பாத்தேன். ஐயாயிரம் இருந்துச்சு. நான் ஐநூறு மட்டும் எடுத்தேன். அப்புறமும் எடுத்தேன். மீதி இருந்துச்சு”

“ஓ, சரி அவ கிட்ட கொடுக்கச் சொல்றேன். நீ வை”, ஏற்று சொல்லி விட்டு வைத்த தாய்க்கு விஜியின் நோக்கம் நன்கு புரிந்தது. மகளை அங்கிருந்து காப்பது தன்னுடைய கடமை என்று புரிய வினோதினியை அழைத்தாள். ஆனால் அதை அவள் எடுக்கவே இல்லை.

அவளை எப்படி தொடர்பு கொள்ள என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தார் கிருஷ்ணன். கோவிலுக்கு போய் விட்டு பக்தி பலமாக நின்றவரை அவள் வியப்பாக பார்க்க அவரும் அவளை தான் பார்த்தார் .

“நான் இது வரைக்கும் செஞ்ச தப்பு எனக்கு தெரியலை. இப்பவும் நான் முழுசா திருந்திட்டேனான்னு கேட்டா எனக்கு தெரியலை. ஆனா அணுவும் நீயும் என்னைச் சாகச் சொன்ன பிறகு தான் என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. சும்மா இருந்தா எனக்கு குடிக்கணும்னு தான் தோணுது. அதனால ஏதாவது வேலை தேட போறேன். பஸ்க்கு மட்டும் பணம் கொடு. இது வரைக்கும் நான் செஞ்ச தப்புக்கு என்னை மன்னிச்சிக்கோ”, என்றார்.

கண்கள் ஆனந்தத்தில் கண்ணீரைச் சொரிய “நீங்க வேலை தேடிப் போகணும்னு எந்த அவசியமும் இல்லைங்க. வீட்லயே இருங்க”, என்றாள்.

“சும்மா இருந்தா குடிக்க தோணும்”

“உங்களை குடிக்க விடாம பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க என் கண் முன்னாடி இருந்தா போதும்”, என்று சொன்ன தேவி “வாங்க முதல்ல சாப்பிடலாம்”, என்றாள்.

அவருக்கு சாப்பாடு பரிமாற “நீயும் சாப்பிடு”, என்றார். சந்தோஷமாக அவர் எதிரே அமர்ந்து உண்டாள். சாப்பிட்டு முடித்ததும் அவருடைய நெற்றியை வருடிய தேவி “ரொம்ப வலிக்குதா?”, என்று கேட்டாள்.

சிறு சிரிப்புடன் கை கழுவ எழுந்து சென்றார். அவர் சாப்பிட்டு முடித்தது தான் தாமதம் “ஏங்க இந்த மாவை எல்லா பாக்கெட்லயும் அடைக்க எனக்கு உதவி செய்ங்க”, என்று அழைத்து விட்டாள்.

அதன் பின் அவரை தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய வைத்துக் கொண்டே இருந்தாள். அவரும் குடிக்க வேண்டும் என்பதை மறந்து தான் போனார்.

அன்று பேங்க் வந்த வினோதினி எதுவும் உண்ண வில்லை. வயிறு பசித்தது தான். ஒரெடியாக மதியம் ஹோட்டலில் உண்ணலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

அப்போது இன்பா அவளை அழைத்தான். அதை எடுத்தவள் “சொல்லுங்க”, என்றாள்.

“சாப்பிட்டீங்களா?”, என்று தான் எடுத்ததும் கேட்டான்.

“ம்ம், நீங்க என்ன காலைலே கூப்பிட்டுருக்கீங்க?”, என்ற அவளின் பதிலில் அவள் சாப்பிடாதது புரிந்தது. அவளை உண்ண வைக்க முடியவில்லையே என்று கவலையாக இருந்தது. இன்றும் அவன் எடுத்துச் சென்றால் தேவையில்லாத பேச்சு வரும் என்பதால் “வீடு விஷயம் பேச தான் கூப்பிட்டேன்”, என்றான்.

“அதெல்லாம் வேண்டாம். அதுக்கு அவசியமே இல்லை”, என்று சோர்வாகச் சொன்னாள் வினோதினி.

“என்ன ஆச்சு?”, என்று அவன் கேட்டதும் நடந்ததைச் சொன்னாள். நடந்ததைக் கேட்டு அவனுக்கு அதிர்ச்சி தான். விஜி எந்த அளவுக்கு காய் நகர்த்தி இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

“இப்ப என்ன பண்ணப் போறீங்க?”, என்று கேட்டான்.

“அம்மா இப்படி எல்லாம் பேசுவாங்கன்னு நான் எதிர் பாக்க்லை. என்னால உங்களுக்கும் கஷ்டம். என் விதி இது தான்னு நினைச்சிக்கிறேன். நீங்க வீடு பாக்குறதை விட்டுருங்க”, என்றாள்.

“சரி உங்க விருப்பம்”, என்று சொல்லி போனை வைத்தவன் வீட்டில் இருந்த கதிரிடம் புலம்பித் தீர்த்து விட்டான்.

கதிருக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. “அவங்க விஷயத்தில் நீ தலையிட வேண்டாம் டா. அந்த அளவுக்கு அந்த பொண்ணு இன்னும் உனக்கு உரிமையாகலை”, என்று எவ்வளவோ கதிர் சொல்லிப் பார்த்தான். ஆனால் அது காதல் கொண்ட மனதில் ஏறினால் தானே?

அன்று விவசாயக் கடன் விஷயமாக பேங்க் வந்தான் இன்பா. சொல்லிய காரணம் அது என்றாலும் உண்மையான காரணம் அவளைக் காண வேண்டும் என்பது தான்.

பேங்க் உள்ள வந்ததும் அவனை அவள் பார்த்து விட்டாள். அவனைப் பார்த்து சோர்வாக சிரித்தாளே தவிர வேறு எதுவும் பேச வில்லை. அவள் நிலை புரிந்தவன் புன்னகைத்து விட்டு லோன் கொடுப்பவரிடம் விசாரிக்கச் சென்றான். மற்றவர்களும் அவர்களின் வேலையைப் பார்க்க யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை என்று தெரிந்ததும் கடைசியாக அவள் அருகே வந்தான்.

எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்கும் போது ஏதோ செக் பத்தி விசாரிப்பது போல “உங்க போனைக் கொஞ்சம் கொடுங்க”, என்றான் இன்பா.

“ஏதோ போன் செய்யக் கேட்கிறான் போல”, என்று எண்ணி தன்னுடைய போனை அவசரமாக எடுத்துக் கொடுத்தாள். அடுத்த மூன்று நிமிடத்தில் அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.

“எதுக்கு போனை வாங்கினான்?”, என்று எண்ணினாலும் அவளுக்கு விடை கிடைக்க வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!