Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 9 2

“விடு டி நான் வரலை”, என்ற படியே அவள் இழுத்த இழுப்புக்கு சென்றாள் வினோதினி. ஆனால் தாய், தந்தையரைப் பார்க்க அவள் மனம் முழுவதும் சங்கடம் சூழ்ந்தது.

அவள் கீழே சென்ற போது கிருஷ்ணனும் தேவியும் அமர்ந்திருந்தார்கள்.



Advertisement

அம்மாவைக் கண்டு முகம் திருப்பினாள் வினோதினி. அது தேவிக்கு கஷ்டமாக இருந்தாலும் சிறு வயதில் வினோதினி இப்படிச் செய்வது தான் நினைவு வந்தது அந்த தாய்க்கு. மகளுடைய வாடி வதனியா தோற்றம் கண்டு தான் தன்னுடைய பெண்ணுக்கு நியாயம் செய்ய வில்லை என்ற உண்மை உரைத்தது.

Advertisement

அப்பாவைக் கண்டதும் வினோதினி தயக்கமாக அவரைப் பார்த்தாள். சும்மாவே அவரிடம் பேச மாட்டாள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் வாங்க என்று கூட அவளால் சொல்ல முடிய வில்லை. ஆனால் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. “நல்லா இருக்கியா வினு?”, என்று கேட்டார்.

Advertisement

அவரை வியப்பாக பார்த்தவள் “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.

Advertisement

“இங்க வா”, என்று அவர் அழைக்க தயக்கத்துடன் அணு முகத்தைப் பார்த்தாள்.

“வாக்கா. நம்ம அப்பா தானே?”, என்று சொல்லி அவளை அழைத்து சென்று அவர் அருகில் அமர வைத்த அணு அவருக்கு மற்றொரு பக்கம் அமர்ந்து கொண்டாள் அவர் மேல் சாய்ந்து கொண்டாள்.

கிருஷ்ணன் கை அணுவின் தலையை வருட “இவர் இந்த அளவுக்கு மாறிட்டாரா?”, என்று வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி. அவர்கள் மூவரையும் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவி. விஜியோ சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

தந்தையையே திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்த வினோதினியின் புறம் கிருஷ்ணன் திரும்ப அவளோ தலையை திருப்பிக் கொண்டாள். “அப்பாவை மன்னிச்சிரு டா”, என்று கிருஷ்ணன் சொல்ல அவரை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

அணுவால் அவரை உடனே ஏற்க முடிந்தது. அதே போல தேவி விஜியாலும் அவரை ஏற்க முடிந்தது. ஆனால் வினோதினியால் சட்டென்று முடியவில்லை.

சிறு வயதில் இருந்து அவளுக்கு அவர் கொடுத்த காயங்கள் பல. உடல் அளவில் சில காயங்கள் ஆறி இருந்தாலும் சில வடுக்கள் இன்னும் மறையாமல் இருக்க தான் செய்கிறது. மனதளவிலோ இன்னும் ஆறாமல் ரணமாய் பல காயங்கள் இருக்க தான் செய்கிறது. அதில் இருந்து அவளால் சட்டென்று வெளியே வர முடியவில்லை.

அப்போது அங்கு வந்த விஜி வினோதினியை சங்கடமாக பார்த்தாள். வினோதினி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று பயமாக இருந்தது. ஆனால் வினோதினி அவளை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.

அப்போது தூங்கி எழுந்து அங்கே வந்த ரிஷி “வினுமா”, என்ற படி அவள் மடியில் ஏறி அமர்ந்தான். வினோதினியும் “குட் மார்னிங் குட்டி”, என்ற படி அவனை அணைத்து அவனுடைய குண்டு கன்னங்களில் முத்தமிட்டாள். தேவி அதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். தான் பேசியது வினோதினிக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்று இப்போது புரிந்தது.

“ரிஷி குட்டி”, என்று அணு அழைக்க தூக்க கலக்கத்தில் இருந்தவன் கண்ணைக் கசக்கிய படி அணுவைப் பார்த்தான். அடுத்த நொடி “அணு”, என்று அழைத்த படி அவளிடம் சென்றான்.

அவள் அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்க “தாத்தா கிட்ட வா கண்ணா”, என்று அழைத்தார் கிருஷ்ணன். அவரை வேற்று கிரக வாசி போல பார்த்தான் குழந்தை.

இத்தனை நாள் தூக்காதவர் இப்போது கூப்பிட்டால் அவன் வருவானா என்ன? அவன் வர மாட்டேன் என்னும் விதமாய் அணுவிடம் ஒண்ட கிருஷ்ணன் முகம் வாடியது. அதை கவனித்த வினோதினி ஒன்றும் சொல்ல வில்லை.

எல்லாரும் அமைதியாக இருக்க “வினு”, என்று அழைத்தாள் தேவி. அன்னையின் குரல் கேட்டாலும் வினோதினி அவளை திரும்பிப் பார்க்க வில்லை.

எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்து “அம்மா கிட்ட பேச மாட்டியா டா?”, என்று கேட்டாள். மற்ற அனைவரும் பார்வையாளர்களாக இருந்தார்கள். பொய் சொல்லி சந்தோஷப் பட்ட விஜி இப்போது முள் மேல் நிற்பது போல நின்றாள்.

“நான் பேச வேண்டியதுக்கும் சேத்து தான் நீங்க பேசிட்டீங்களே?”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு இறுக்கத்துடன் அன்னையிடம் சொன்னாள் வினோதினி.

“அம்மாவை மன்னிச்சிரு வினு”, என்று தேவி சொல்ல அங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜி “அம்மா எல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல குளிச்சிட்டு சாப்பிடுங்க”, என்று சொல்லி அவர்களின் பேச்சைத் தடுக்கப் பார்த்தாள்.

விஜி அப்படிச் சொன்னதும் வினோதினி மாடியை நோக்கிச் சென்றாள். மகள் எதனால் உண்ணாமல் போகிறாள் என்று காரணம் தெரிந்த தேவியும் கிருஷ்ணனும் தேவியும் அமைதியாக இருக்க “அக்கா எங்க போற? சாப்பிட வா”, என்றாள் அணு.

“எனக்கு பசிக்கலை. நீங்க சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள். விஜிக்கு அப்பாடி என்று இருந்தது.

“வினு நில்லு, இங்க வா”, என்று தேவி மீண்டும் அழைக்க எரிச்சலுடன் கீழே இறங்கி வந்தாள். விஜிக்கு பயம் பிடித்தது.

“அம்மா முதல்ல குளிச்சிட்டு சாப்பிடுங்க எல்லாரும். டிபன் ஆறுது”, என்றாள் விஜி.

“அது ஆறினா பரவால்ல. எனக்கு சில விஷயம் தெரியணும்”, என்றாள் தேவி. வினோதினி தேவியைக் குழப்பமாக பார்க்க விஜிக்கோ தொண்டைக்குள் மீன் முள் சிக்கிய உணர்வு தான்.

விஜியைக் காப்பாற்றுவது போல அப்போது ரவி அவனுடைய பெற்றோரை அங்கு அழைத்து வந்தான். அவர்களை கண்டு முகத்தை திருப்பினாள் விஜி.

ஆனால் அமர்ந்திருந்த கிருஷ்ணன் மற்றும் தேவி இருவரும் எழுந்து அவர்களை நலம் விசாரித்தார்கள். அவனுடைய பெற்றோர்களும் அவர்களிடம் நன்கு பேசினார்கள். இரண்டு குடும்பமும் முதல் முறை இப்போது தான் சந்திக்கிறார்கள் என்பதால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வினோதினியிடம் நன்கு பேசினார்கள். அணு கூட அவர்களிடம் “நல்லா இருக்கீங்களா மாமா, நல்லா இருக்கீங்களா அத்தை?”, என்று கேட்டு விட்டாள். ஆனால் விஜி கம்மென்று இருந்தாள்.

நலம் விசாரிப்புக்கு பின் “நாங்க வயலுக்கு போகணும். சாயங்காலம் வந்து பாக்குறோம்”, என்றாள் ரவியின் அன்னை மீனாட்சி.

“இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க? சாப்பிட்டு கிளம்புங்க. உக்காருங்க. விஜி என்ன பாத்துட்டு இருக்க? அத்தையும் மாமாவும் சாப்பிடட்டும். எடுத்து வை”, என்று சொன்னாள் தேவி.

“அவங்க எல்லாம் இங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சமைக்கலை”, என்று முகத்தில் அடிப்பது போல விஜி பதில் கொடுக்க அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.

“நாங்க சாப்பிட்டு வந்துட்டோம், நாங்க வரோம்”, என்று மறுத்தாள் மீனாட்சி.

ஆனால் தேவி அமைதியாக இருக்க வில்லை. “என்ன பழக்கம் விஜி இது? வீட்டுக்கு வந்தவங்களை சாப்பிட வைக்கிறது தான் நம்ம பழக்கம். இத்தனைக்கும் அவங்க உன் மாமானார் மாமியார். அவங்களை இப்படி தான் பேசுவியா?”, என்று கோபமாக கேட்டாள்.

அவர்கள் முன்னிலையில் அம்மா அப்படி கேட்டது பிடிக்காமல் “கண்டவங்களுக்கு எல்லாம் என்னால சமைச்சு போட முடியாது”, என்றாள் விஜி. அவள் பேசுவதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ரவியைக் கண்ட வினோதினிக்கு “இவன் எல்லாம் ஒரு மகனா?”, என்று தான் தோன்றியது.

விஜி அப்படிச் சொன்னதும் அடுத்த நொடி தேவியின் கரம் அவள் கன்னத்தில் பதிந்தது. “ஐயோ விடு மா தங்கச்சி. எங்களுக்கு பழகிருச்சு. நாங்க உங்களைப் பாக்க தான் வந்தோம். யாரையும் எதுவும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு எங்க மகன் சந்தோஷம் முக்கியம். அதனால நாங்க இதை எல்லாம் பெருசா எடுக்க மாட்டோம். முடிஞ்சா வீட்டுக்கு வாங்க”, என்று சொல்லி விட்டு ரவியின் தந்தைக் கிளம்ப மீனாட்சியும் சென்று விட்டாள்.

மகனின் வீட்டுக்கு வந்து சொந்த மருமகளால் அசிங்கப் பட்டு போகும் அவர்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது வினோதினிக்கு. ஆனால் எதுவும் சொல்ல வில்லை. அமைதியாக நின்றாள்.

“என்ன மாப்பிள்ளை இது? இவ உங்க அம்மா அப்பாவை அவமானப் படுத்துறா. பாத்துட்டு கண்டுக்காம இருக்கீங்க?”, என்று கேட்டாள் தேவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!