Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 9 3

“அது வந்து அத்தை….”, என்று அவன் தயங்க “என்ன வந்து போயின்னு இழுக்குறீங்க? அவங்களை இவ இப்படி தான் மரியாதை இல்லாம நடத்துறாளா? அப்படி பண்ணும் போது சப்புன்னு நாலு அப்பு அப்ப வேண்டியது தானே?”, என்று கேட்டாள். கிருஷ்ணன் எதுவும் சொல்ல வில்லை. பிள்ளைகளை சரியாக வளர்க்காதவர், அவர்களின் வளர்ச்சியைக் கூட இருந்து பார்க்காதவர் என்ன சொல்வாராம்?

“இல்லை அத்தை.. சொன்னா விஜி கோபப் படுவா”, என்றான் ரவி.



Advertisement

“ஆக, கல்யாணம் பண்ணி வந்த நாள்ல இருந்து இவ உங்க அப்பா அம்மா கிட்ட இப்படி தான் நடந்துகுறாளா?”, என்று தேவி கேட்டதும் “ஆமா, முதல் தடவை தட்டிக் கேட்டப்ப செத்துருவேன்னு மிரட்டினா. இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அது தோத்துப் போகக் கூடாதுன்னு அமைதியா இருந்துட்டேன்”, என்று மனைவியை ரவி போட்டுக் கொடுக்க அவனை விஜி முறைத்துப் பார்த்தாள்.

“என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? இது தான் நீ குடும்பம் நடத்துற லட்சணமா?”, என்று கோபத்துடன் தேவி கேட்க “அம்மா அதுங்களுக்காக நீ ஏன் என்னைக் கத்துற?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் விஜி.

Advertisement

Advertisement

“என்னது அதுங்களா?”, என்று கேட்ட தேவி மீண்டும் அவளை ஒரு அடி அடித்தாள்.

“முன்னாடியே உன்னை அடிச்சு வளத்திருந்தா நீ இப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசுவியா டி?”

Advertisement

“அம்மா அவங்களை எனக்கு பிடிக்கலை. அதனால தான். இந்த பிரச்சனையை இதோட விடேன்”

“உனக்கு யாரை தான் டி பிடிச்சிருக்கு? சொந்த அக்காவையே உனக்கு பிடிக்கலை. இதுல நீ அவங்களையா மதிப்ப?”

“நான் என்ன இவளை மதிக்கலை? இவ தான் என்னை மதிக்கலை. ஆனா நான் இவளுக்கு வடிச்சு கொட்டிட்டு தான இருக்கேன்?”, என்று விஜி கேட்க அவளை கூர்மையாக பார்த்தாள் வினோதினி. ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

ஆனால் தேவி அமைதியாக இருக்க வில்லை. “அதனால தான் அவ ரோட்ல மயங்கி விழுந்தாளா?”, என்று கூர்மையாக கேட்டாள் தேவி.

“இது எப்படி அம்மாவுக்கு தெரியும்?”, என்று வியப்பாக எண்ணி நடப்பதைப் பார்த்தாள் வினோதினி.

“இவ மயங்கி விழுந்தாளா? இது என்ன புதுக் கதை? அப்படின்னு இவ சொன்னாளா? நீ உடனே நம்பிட்டியா மா?”, என்று நக்கலாக கேட்டாள் விஜி.

“அவ சொல்லலை டி. கடவுள் வந்து சொன்னார். நீ செஞ்ச எல்லாத்தையும் சொன்னார். அப்ப தான் என் தப்பு புரிஞ்சது. நான் உன்னை நம்பினேன் பார். அது தான் என் தப்பு. ஆனா நீ விஷம். உன் வாயில இருந்து வரது எல்லாம் பொய். நீ சொன்னது எல்லாம் பொய், அப்படித் தானே?”

“அப்படி எல்லாம் இல்லை மா”, என்று விஜி தயங்க “உன்னைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். பூசி மொழுகாதே. நாங்க இப்ப எதுக்கு வந்தோம்னு நினைக்கிற? உன் வீட்ல உக்காந்து விருந்து சாப்பிட இல்லை. வினோதினிக்கு வேற வீடு பார்த்து அவளை அங்க விட்டுட்டு போக வந்தோம்”, என்று தேவி சொல்ல வினோதினி முகம் ஒளிர்ந்தது. அவளுக்கு அன்னை மீது இருந்த கோபம், வருத்தம் எல்லாம் மாயமாக மறைந்தது.

தன்னுடைய குட்டு எப்படியோ வெளிப் பட்டு விட்டது என்று உணர்ந்த விஜி அதை ஒப்புக் கொள்ள மனதில்லாமல் “எதுக்கு மா அவளுக்கு வேற வீடு பாக்கணும்? அதான் இந்த வீடு இருக்கே?”, என்று கேட்டாள்.

“எதுக்கு? அவளை இந்த வீட்லயே  இருக்க வச்சு காலம் முழுக்க அவளை பட்டினி போட்டு கொல்லவா? அவ சம்பளப் பணத்தை எல்லாம் அட்டையா உரியலாம்னு பாத்து தானே அவளை இங்க தங்க வச்ச? இனி அது நடக்காது”, என்று விஜிடம் சொன்ன தேவி வினோதினி புறம் திரும்பி “வினு, உன் பேக் எல்லாம் எடுத்துட்டு கிளம்பு. நீ இனி இந்த வீட்ல இருக்க வேண்டாம். கிளம்பு”, என்றாள்.

“சரி மா”, என்று சொல்லி விட்டு சந்தோஷமாக தன்னுடைய அறைக்கு போனாள் வினோதினி. அணுவும் அவள் பின்னேயே சென்று விட்டாள். ரிஷி குட்டியும் அவர்கள் பின்னேயே ஓடியது.

“மனுஷியா டி நீ? உன் கூட பிறந்தவளைப் போய் பட்டினி போடுற? அதுவும் அவளைப் பத்தி தப்பு தப்பா சொல்ற. நீ எனக்கு பொண்ணே இல்லை. இன்னையோட எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி எனக்கு ரெண்டு பொண்ணுங்க தான்”, என்றாள் தேவி.

“அம்மா என்னை மன்னிச்சிரு மா. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்”, என்று விஜி கேட்க “உன்னை பெத்துட்டேன்ல? மன்னிச்சு தானே ஆகணும்? ஆனா அதுக்கு நீ ஒழுங்கு மரியாதையா உன் மாமனார் மாமியார் கிட்ட நல்ல படியா நடந்துக்கோ. அவங்க உன்னை நல்லவன்னு சொல்லட்டும். அப்ப நான் உன்னை மன்னிக்கிறேன். அது வரைக்கும் நீ நம்ம வீட்டு பக்கம் வரக் கூடாது”, என்றாள் தேவி.

“அம்மா”, என்று அவள் அதிர்வாக அழைக்க “என்ன டி அம்மா? உன் கிட்ட பேசவே பிடிக்கலை. ஏங்க வாங்க வெளிய போய் நிப்போம்”, என்று கணவரை அழைத்தாள்.

“சாப்பிட்டாவது போங்க அத்தை”, என்றான் ரவி.

“என் பொண்ணுக்கு சோறு போடாத வீட்ல எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று சொன்ன தேவி கணவனுடன் வெளியே வந்து தன்னுடைய போனில் இருந்து இன்பாவை அழைத்தாள்.

அதை எடுத்து “சொல்லுங்க மா”, என்றான்.

“நாங்க இங்க ஊர்ல தான் இருக்கோம். வீட்டுக்கு எப்ப வரட்டும்? எப்படி வரணும்னு சொன்னீங்கன்னா ஒரு ஆட்டோ பிடிச்சு வரோம்”

“நீங்க அங்கயே இருங்க மா. நான் இப்ப உங்களைக் கூப்பிட வரேன்”

“இல்லை, என் கூட வினுஅப்பா இருக்காங்க. அணு வேற இருக்கா. நாங்க ஆட்டோலே வரோம்”

“இல்லை மா, நீங்க அங்கயே இருங்க. நான் வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் பரபரப்பாக சட்டையை எடுத்துப் போனான்.

“என்ன ஆச்சு மச்சான்”, என்று கேட்டான் கதிர்.

“நீ ஒரு உதவி செய்யணும் மாப்பிள்ளை”

“சொல்லு மச்சான்”

“வினோதினி குடும்பத்தை இங்க கூட்டிட்டு வரணும் டா. நீ காரை எடு”

“நான் காரை எடுக்குறது இருக்கட்டும். நீ இந்த விஷயத்தை அத்தை மாமா கிட்ட சொல்லிட்டியா? இல்லைனா தாத்தா பாட்டிக்கிட்டயாவது சொன்னியா?”

“ஐயோ இல்லையே, மறந்தே போயிட்டேன் டா. இப்ப என்ன பண்ண?”

“சொல்லித் தான் ஆகணும்”

“சரி வா, இப்ப சொல்லிட்டு கிளம்பலாம். அப்பா இல்லைன்னா தப்பிச்சேன். அம்மாவை ஈஸியா ஏமாத்திறலாம்”

“ரொம்ப பேராசைப் படாதே. மாமா வீட்ல தான் இருக்காங்க”, என்று பீதியைக் கிளப்பினான் கதிர்.

“போச்சா? இன்னைக்கு என்ன நடக்க போகுதோ? பிளீஸ் காப்பாத்து மாப்பிள்ளை”

“காப்பாத்திட்டா போச்சு. வா என் கூட”, என்ற கதிர் சிதம்பரம் முன்னால் நின்றான்.

அவனைக் கண்டதும் “என்ன கதிர்?”, என்று கேட்டார்.

“மாமா, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்?”, என்று அவன் தயங்க டி‌வி பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, கீரை ஆய்ந்து கொண்டிருந்த பாட்டி, தலைவாரிக் கொண்டிருந்த இளவரசி, காய்கறி வெட்டிக் கொண்டிருந்த பாமா அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

எப்படிச் சொல்ல என்று கதிர் தயங்க சிதம்பரம் தன்னுடைய மகனைப் பார்த்தார். இன்பா முகத்தில் ஒரு பரபரப்பு தெரிய அதை கவனித்து விட்டு இன்பாவுக்காக தான் கதிர் பேச வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டார்.

விஷயம் பெரியது என்று அவர் மூளை சொல்லியது. “சொல்லு கதிர்”, என்றார்.

“மாமா அன்னைக்கு நம்ம இன்பாவை காப்பாத்துச்சுல்ல? அந்த பொண்ணு….”

“ஆமா வினோதினி, அந்த பொண்ணுக்கு என்ன? இன்னைக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வருதா?”

“இல்லை மாமா, அது வந்து… அவங்க தங்கி இருந்து வேலை பாக்க இடம் இல்லை போல? வீடு வாடகைக்கு கிடைக்குமான்னு கேட்டுருந்தாங்க….”

“யார் கிட்ட கேட்டுச்சு அந்த பொண்ணு?”

“நம்ம இன்பா கிட்ட தான்

“அப்ப அவனுக்கு வாயில்லையா? நீ வந்து பேசுற”, என்று அவர் கேட்டதும் “நீயே சொல்லு மச்சான்”, என்றான் கதிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!