Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 10 4

“ஏன்?”

“எனக்கு கல்யாணமே வேண்டாம்”, என்று சொன்னதும் “இவன் ஒரு நாளும் என்னை பெண் கேட்கப் போவதில்லை”, என்று எண்ணிக் கொண்டாள் இளவரசி.



Advertisement

“உனக்கு நல்லது செய்யணும்னு நான் நினைக்க கூடாது அப்படி தானே? அதை நேரடியா சொல்லிரு கதிர்”

Advertisement

“சத்தியமா நான் அப்படி நினைக்கலை மாமா. நீங்க தான் எனக்கு எல்லாமே. உங்களை எதுத்து பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இதுக்கு காரணமானவங்களை கொல்லணும்னு வெறி வருது”, என்று சொல்லி வினோதினியைப் பார்த்தான். அவளோ அவனை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

“அப்பா, அவன் தான் அவ்வளவு சொல்றான்ல? அவனை விடுங்க”, என்று இன்பா சொல்ல “நீ வாயை மூடு இன்பா. உனக்கு பேச எந்த உரிமையும் இல்லை. கல்யாணம் பண்ணாம இருக்குறதுக்கு அவனையும் ஜோடி சேக்கலாம்னு பாக்குறியா?”, என்று கேட்டவர் “இங்க பார் கதிர், முடிவா கேக்குறேன். என்ன சொல்ற?”, என்று கேட்டார்.

Advertisement

“மாமா நீங்க என்னைக் கொல்லக் கூட செய்யுங்க. ஆனா இது மட்டும் வேண்டாம்”

“அதான் ஏன்?”

“என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா”, என்று அவன் சொல்ல இளவரசிக்கு நெஞ்சு துடித்தது. அது தானா என்ற ஏக்கமும், ஒரு வேளை வேறு யாரோ என்று பயமும் வந்தது. பாமாவுக்கு அவன் சொன்னதைக் கேட்டு திகைப்பு தான். இன்பாவுக்கோ நடப்பதை நினைத்து தலை வலித்தது.

“அப்படிச் சொல்லு? இதைச் சொல்ல இவ்வளவு நேரமா? நான் என்ன காதலுக்கு எதிரியா டா? சரி பொண்ணு யாருன்னு சொல்லு. இப்பவே பேசிறலாம். நம்ம ஊரா வெளியூரா?”, என்று சிதம்பரம் கேட்க “இல்லை வேண்டாம்”, என்றான் கதிர்.

“என்ன வேண்டாமா? என்ன தான் டா உன் பிரச்சனை?”

“எனக்கு கல்யாணம் வேண்டாம் மாமா”

“அப்படின்னா என் பேச்சைக் கேக்க மாட்ட, அப்படி தான?”

“இந்த ஒரு விசயத்துல என்னை மன்னிச்சிருங்க மாமா”

“என்னை மதிக்காத யாரும் இந்த வீட்ல இருக்க வேண்டாம்”, என்று இறுக்கத்துடன் சிதம்பரம் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள். கதிர் சிலை போல நிற்க “வெளிய போ டா. இத்தனை நாள் உன்னை என் பிள்ளையா நினைச்சதுக்கு எனக்கு இது தேவை தான். இப்ப நீ போறியா? இல்லை நான் போகட்டுமா?”, என்று கேட்டார் சிதம்பரம்.

“அப்பா”, என்று இன்பா அழைக்க “அப்ப நீயும் வெளிய போ டா”, என்றார்.

“ஏங்க இன்னைக்கு ஏன் இப்படி பேசுறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?”, என்று கேட்டார் பாமா.

“நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இரு பாமா”

“அவனும் நம்ம பிள்ளை தாங்க”

“அப்படின்னா காலம் முழுக்க உன் பிள்ளைகளை மடியில போட்டு தாலாட்டு. நான் எங்கயாவது போறேன்”, என்று சிதம்பரம் சொல்ல “நானே போறேன் மாமா”, என்றான் கதிர்.  பார்வதி மற்றும் சண்முகநாதனுக்கு கூட இது அதிர்ச்சி தான். வினோதினியோ அடுத்து என்ன ஆகும் என்று எண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசியோ அழுத கண்களுடன் நின்றிருந்தாள்.

கதிர் வாசலைப் பார்த்து சோர்வுடன் நடக்க “ஒரு நிமிஷம் இரு. உன் சொத்து எல்லாம் வாங்கிட்டு போயிரு. அது போக உன் பேர்ல பணம் போட்டு வச்சிருக்குற பாஸ் புக் எல்லாம் வாங்கிட்டு போயிரு. இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”, என்றார் சிதம்பரம்.

அடுத்த நொடி அவர் காலடியில் வந்து விழுந்தவன் “என்னைக் கொன்னு கூட போடுங்க மாமா. வீட்டை விட்டு கூட வெளிய போறேன். ஆனா அந்த சொத்து எல்லாம் கொடுத்து என்னை அனாதையா ஆக்கிறாதீங்க. வீட்டை விட்டு வெளிய போனா கூட என்னைக்கு இருந்தாலும் நீங்க என்னைக் கூப்பிடுவீங்கன்னு நம்பிட்டு வாழ்ந்துருவேன். ஆனா எல்லாத்தையும் கொடுத்துட்டா  நமக்குள்ள ஒண்ணும் இல்லாம போயிரும் மாமா”, என்று அழுதான்.

“சும்மா நடிக்காத டா. அப்படி பாசம் வச்சிருந்தா என் பேச்சைக் கேட்டுருப்ப தானே?”

“கண்டிப்பா உங்க பேச்சைக் கேப்பேன் மாமா. ஆனா மனசுல ஒருத்தியை வச்சிட்டு இன்னொருத்தியோட என்னால வாழ முடியாது”

“அட கூறு கெட்டவனே அது யாருன்னு தானே அப்ப இருந்து உன் மாமன் கேக்குறான்”, என்றார் பார்வதி.

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது அம்மாச்சி. ஆனா அதுக்கப்புறம் என்னால நிம்மதியா இங்க இருக்க முடியாது. நான் இந்த வீட்டை விட்டு போறேன்”

“போறதுக்கு முன்னாடி ஒரு நல்ல செய்தி சொல்றேன் கேட்டுக்கோ”, என்று சிதம்பரம் சொல்ல கதிர் நின்றான். அனைவரும் சிதம்பரத்தைப் பார்க்க “இன்பாவுக்கு நான் ஏற்கனவே பொண்ணு பாத்துட்டேன். பொண்ணுக்கு ஊர் தூத்துக்குடி தான். அவங்க வீட்ல கேட்டுக்கிட்டது ஒண்ணே ஒண்ணு தான். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு. நானும் சரின்னு சொல்லிட்டேன். என் பிள்ளைகளுக்கு ஒரே மேடைல கல்யாணம் நடக்க போகுது. அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு நல்ல வழி பண்ணணும்னு தான் பேசினேன். ஆனா நீ எங்க பேச்சை எல்லாம் கேக்காத அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்ட. நாளைக்கு இளவரசியை பொண்ணு பாக்க வராங்க. ஆனா நீ வந்துறாத”, என்று சிதம்பரம் சொன்னது தான் தாமதம் மயங்கி கீழே விழுந்தாள் இளவரசி.

“ஐயோ என் பொண்ணு”, என்ற படி அவளைத் தூக்கி தன் மடியில் கிடத்திக் கொண்டாள் பாமா. இன்பா அவளைத் தூக்கி அறைக்குள் இருந்த கட்டிலில் படுக்க வைக்க பாமா அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளித்தாள். அனைவருமே பதட்டத்துடன் தான் நின்றார்கள்.

வினோதினியும் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. கதிரைச் சீண்டினால் அவன் அவனுடைய காதலைச் சொல்வான் என்று தான் எதிர் பார்த்தாள்.

தவறு செய்து விட்டோமோ என்று அவள் குற்ற உணர்வில் நிற்க அவள் முன்னால் வந்து நின்ற இன்பா “இப்ப சந்தோஷமா உனக்கு? நீ முதல்ல வெளிய போடி. எல்லாம் உன்னால தான். இவ்வளவு நாளா என் குடும்பம் நிம்மதியா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு எப்படி நிக்குறோம் பாரு. இதுக்கெல்லாம் காரணம் நீ தான். வெளிய போ. இனி ஒரு நிமிஷம் நீ இங்க இருந்த உன்னைக் கொன்னுருவேன்”, என்று கத்தினான்.

“இன்பா பேசாம இரு. அந்த பொண்ணு மேல எதுக்கு பாயிற?”, என்று சிதம்பரம் கேட்க வாயை மூடிக் கொண்டான். மெதுவாக கண் விழித்துப் பார்த்தாள் இளவரசி.

அவள் தலையை வருடி “என்ன ஆச்சு டா?”, என்று கேட்டாள் பாமா.

“அம்மா”, என்று அழுது கொண்டே பாமா நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதாள். கதிருக்கு உயிர் துடித்தது. அவளது நேசத்தை அறிந்தவன் ஆயிற்றே.

“ஏன் டி இப்படி அழுற? என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் பாமா.

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் மா”, என்று அழுது கொண்டே சொன்னாள்.

“நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு என்ன காரணம் இளவரசி?”, என்று கேட்டார் சிதம்பரம்.

அவள் தந்தையிடம் பேச பயந்து அமைதியாக இருக்க “உன் கிட்ட தான் கேக்குறேன் இளவரசி. எதுக்கு கல்யாணம் வேண்டாம். நாளைக்கு உன்னை பொண்ணு பாக்க வரது உறுதி”, என்றார் சிதம்பரம்.

“என்னை வற்புறுத்துனா நான் செத்து தான் போவேன். என்னை யாரும் பொண்ணு பாக்க வரக் கூடாது”, என்று இளவரசி கத்த “உன் மனசுல யாரும் இருக்காங்களா இளவரசி?”, என்று கேட்டார் சண்முகநாதன்.

“ஆமா”

“யார் அது?”

“சொல்ல மாட்டேன். அவரா வந்து என்னை விரும்புறேன்னு சொல்லாம நான் சொல்ல மாட்டேன்”

“நீயாவது உன் மனசுல என்ன இருக்கேன்னு சொல்லேன் டி”, என்றாள் பாமா.

“எந்த நம்பிக்கைல மா சொல்றது? ஆம்பளைன்னா தைரியம் இருக்கணும். விரும்புற பொண்ணு கிட்ட காதலைச் சொல்ல தைரியம் இருக்கணும். அவ அப்பா அம்மா கிட்ட எனக்கு அந்த பொண்ணு தான் வேணும்னு கேக்க ஆண்மை வேணும். இப்படி எதுவும் இல்லாதவர் பேரை எப்படிச் சொல்ல?”, என்று இளவரசி கேட்க வினோதினி மனதுக்குள் அவளுக்கு சபாஷ் போட்டாள்.

அடுத்த நொடி “மாமா”, என்று அழைத்தான் கதிர்.

திரும்பி அவனைப் பார்த்த சிதம்பரம் “நீ இன்னும் போகலையா?”, என்று கேட்டார்.

“எனக்கு அரசியை கட்டித் தருவீங்களா?”, என்று ஒரு வழியாக கேட்டே விட்டான். இளவரசி முகம் மலர்ந்தது.  “அப்பாடா, ஆபரேஷன் சக்ஸஸ்”, என்று எண்ணினாள் வினோதினி.

அவன் அப்படிக் கேட்டதும் அனைவரின் மனதிலும் ஒரு அமைதி வந்தது. சிதம்பரம் அவனையே பார்த்த படி நின்றார். “உண்ட வீட்டுக்கே துரோகம் செய்யக் கூடாதுன்னு தான் மாமா நான் அரசியை விரும்புறதை சொல்லலை. ஆனா அரசி உயிரையே விட்டுருவன்னு சொன்ன பிறகு என்னோட தன்மானம் எனக்கு பெருசா தெரியலை. நான் அவளைத் தான் விரும்புறேன். அவளை எனக்கு கட்டிக் கொடுங்க. விருப்பம் இல்லைன்னா விட்டுருங்க. நான் காலம் முழுக்க அவளையே நினைச்சிட்டு இருந்துடுறேன். அவளும் என்னைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டா. அவளுக்கு நான்னா உயிரு”, என்று இளவரசிக்காகவும் அவன் பேச கதிரை அவ்வளவு பிடித்தது இளவரசிக்கு.

சிதம்பரம் மகளைப் பார்த்தார். அவள் கதிரை பாக்கவும் “என்ன மா கட்டி வச்சிறலாமா?”, என்று வினோதினியிடம் கேட்டார் சிதம்பரம். அவள் அவரைக் கண்டு புன்னகைத்தாள். இன்பா நே என்று விழித்தான். கதிரோ அவர் என்ன சொல்வார் என்று அவர் வாயையே பார்த்திருந்தான்.

“இந்த ஒத்த வார்த்தையை உன் வாயில இருந்து வர வைக்க நாங்க எவ்வளவு போராட வேண்டியது இருக்கு. இளவரசி பிறந்தப்பவே அவளை உனக்கு கட்டிக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் மாப்பிள்ளை. ஆனா உங்க ரெண்டு பேர் மனசுல என்ன இருக்குனு தெரியாம தான் அமைதியா இருந்தேன். இன்னைக்கு வினோதினி எடுத்துக் கொடுக்கவும் நானும் உன் மனசை கண்டு பிடிக்க இவ்வளவு பேச வேண்டியதா போச்சு. என்னைக்குமே நீ தான் டா என் மாப்பிள்ளை. இளவரசி படிப்பு முடியட்டும். கல்யாணம் வச்சிக்கலாம்”, என்றார் சிதம்பரம்.

காதல் தொடரும்….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!