Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 11 1

அத்தியாயம் 11 

கொட்டிக் கொண்டிருக்கும் மழைத்

துளியில் சிந்திச் சிதறிச் செல்கிறது



Advertisement

உன் நினைவுகள், கண்ணீராய்!!!

சிதம்பரம் கதிர் மற்றும் இளவரசி திருமணத்தைப் பற்றிச் சொன்னதும் அனைவரின் மனதிலும் நிம்மதி அலை அலையாக பரவியது. சிதம்பரத்தின் கையைப் பற்றிக் கொண்ட கதிர் “தேங்க்ஸ் மாமா, என்னை நீங்க தப்பா நினைக்கலை தானே?”, என்று கேட்டான்.

Advertisement

Advertisement

“நீ என் மருமகன் கதிர். நான் பாத்து வளந்தவன் டா. நீ என் கூட பிறந்தவளோட மகன். அப்படின்னா நீயும் என் ரத்தம் தான். உன்னை எப்படி தப்பா நினைப்பேன்? உனக்கு நான் பொண்ணு கொடுக்காம இருப்பேனா டா?”, என்று கேட்டவர் அவனை அணைத்துக் கொண்டார்.

“ரொம்ப தேங்க்ஸ் மாமா”, என்று நெகிழ்ந்து போய் சொன்னான் கதிர்.

Advertisement

“நாம எல்லாருமே வினோதினிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் கதிர். அவ இந்த பேச்சை ஆரம்பிக்கலைன்னா இதுக்கு முடிவே தெரிஞ்சிருக்காது”, என்று சிதம்பரம் சொன்னதும் அனைவரும் வினோதினியைப் பார்த்தார்கள்.

“ரொம்ப நன்றி மா”, என்று சொன்னார் பார்வதி.

“என்ன ஆள் ஆளுக்கு அவளை தூக்கி வச்சி பேசுறீங்க? கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் ஹார்ட் அட்டாக்கே வர வச்சிட்டா தெரியும்ல? நம்ம இளவரசி மயங்கி விழுற அளவுக்கு போனதுக்கு அவ தான் காரணம். அவ இப்ப இந்த கல்யாண விஷயம் பேச ஆரம்பிக்கலைன்னா கொஞ்ச நாள் கழிச்சு கண்டிப்பா கதிர் அவன் மனசுல உள்ளதை அப்பா கிட்ட சொல்லிருப்பான். இளவரசி படிச்சு முடிச்சதும் அப்பா கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். அவ என்னமோ பொண்ணு பாக்குறேன் அது இதுன்னு பேசி குட்டையை குழப்பிட்டா. அவளை முதல்ல இங்க இருந்து போகச் சொல்லுங்க. பாத்தாலே எரிச்சல் வருது”, என்றான் இன்பா.

“வாயை மூடு டா”, என்று அவனைப் பார்த்து சொன்னார் பார்வதி.

“பாட்டி”, என்று அவன் அதிர்ந்து விழிக்க “அந்த பொண்ணு வாயைத் திறக்கலைன்னா இந்த பய இளவரசியை விரும்புறதைப் பத்தி வாயைத் திறந்துருக்கவே மாட்டான்? நாமளும் இவனுக்கு இளவரசியை பிடிக்கலைன்னு நினைச்சு அவளுக்கு வேற மாப்பிள்ளை பாத்துருப்போம். அப்படி வேற மாப்பிள்ளை பாத்திருந்தா உன் தங்கச்சி சாகத் துணிஞ்சிருப்பா. இளவரசி வாழ்க்கையை சரி பண்ண தான் வினோதினி அப்படி செஞ்சா. அவ நல்ல மனசு தெரியாம நீ அவளை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்ற?”

“அப்படின்னா அவ சொன்ன பொண்ணு யாரு? அப்பா கிட்ட போட்டோ காட்டினாளே? அவங்க வீட்டு நம்பர் எல்லாம் கொடுத்தா. அது யாரு?”

“அது யாருன்னு உன் அப்பன் கிட்ட கேளு”, என்று பார்வதி சொன்னதும் அனைவரும் சிதம்பரத்தைப் பார்த்தார்கள்.

“வினோதினி காட்டின பொண்ணோட போட்டோ நம்ம இளவரசியோடது தான்”, என்று சிதம்பரம் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்னங்க சொல்றீங்க?”, என்று கேட்டார் பாமா.

“ஆமா பாமா, இளவரசி போட்டோவைக் காட்டி தான் இது கதிருக்கு பொருத்தமான பொண்ணுன்னு வினோதினி சொன்னா. அதுக்கப்புறம் தான் நானும் கோபமா பேச ஆரம்பிச்சேன். கதிர் உண்மையைச் சொல்லுவான்னு பாத்தா சொல்லவே இல்லை. அதான் வீட்டை விட்டு வெளிய போகச் சொன்னேன். அப்பவும் சொல்லலை. அதுக்கப்புறம் தான் இளவரசிக்கு மாப்பிள்ளை பாத்துருக்கேன்னு சொன்னேன்”, என்றார் சிதம்பரம். அனைவருக்கும் குற்ற உணர்வாக இருந்தது.

“இது தெரியாம நான் அவங்களை திட்டிட்டேனே?”, என்று குற்ற உணர்வுடன் சொன்னான் கதிர்.

“நீயாவது திட்ட மட்டும் தான் செஞ்ச. ஆனா நான் செஞ்ச வேலை வெளிய தெரிஞ்சா…”, என்று எண்ணிய இன்பாவுக்கு முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்ள என்று தெரியவில்லை. லேசாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை. குற்ற உணர்வுடன் அமைதியாக நின்றான். அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை வித்தியாசமாக பார்த்தார் பார்வதி.

“ரொம்ப நன்றி மா. உனக்கு எப்படி இந்த யோசனை தோணுச்சு?”, என்று கேட்டாள் பாமா.

“கதிரை உயிர்ப்போட வைக்கணும்னு இளவரசி அவளையே தனிமை படுத்திக்கிட்டா மா. எனக்கு அவளைப் பாக்குறப்ப இவருக்காக அவ அவளையே அழிச்சிக்குவான்னு தான் தோணுச்சு. மனசுல அவ்வளவு அன்பை வச்சிக்கிட்டு அவ கண்ணீரோடு போராடுறதைப் பாக்கும் போது அவளுக்கு உதவணும்னு தோணுச்சு”

“அப்படித் தோணுச்சுன்னா நீ நேரடியா கதிருக்கும் இளவரசிக்கும் கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லிருக்கலாமே மா?”

“இந்த வார்த்தையை இத்தனை நாள் நீங்க யாரும் ஏன் சொல்லலை?”, என்று கேட்டதும் “வினோதினி”, என்று அழைத்தாள் பாமா.

“உங்க எல்லாருக்கும் இளவரசி மனசுல உள்ளது தெரியும் தானே? ஏன் யாரும் நேரடியா கல்யாண விஷயம் பேசலை? ஏன்னா யாருக்கும் கதிர் மனசுல என்ன இருக்குனு தெரியலை. அவர் மனசுல உள்ளதை கதிரே வாயைத் திறந்து சொல்லணும்னு தானே எல்லாரும் எதிர் பாத்தீங்க? அது தான் நியாயமும் கூட. பொண்ணு கேக்க கூட தைரியம் இல்லாதவங்களுக்கு எப்படி பொண்ணைக் கொடுக்கன்னு தானே யோசிச்சிருப்பீங்க? வேற பொண்ணு பத்தி பேசினா கதிர் அவரோட மனசுல உள்ளதைச் சொல்லுவாங்கன்னு  நினைச்சேன். ஆனா அது நடக்கலை. இளவரசி மயக்கம் போட்டு விழுந்து இந்த அளவுக்கு நடக்கும்னு எதிர் பாக்கலை. சரி எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. நான் போய் தூங்குறேன்”, என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஒரு பெண்ணின் போராட்டத்தை நிறுத்தி விட்டாள் தான். ஆனால் அவள் மனதில் போராட்டம் வந்திருந்தது. பேச்சினோடே கதிர் சொன்ன இன்பாவின் காதல் விஷயம் அவள் மனதில் மேலே எழுந்து அவளை இம்சித்தது.

“இன்பா என்னை விரும்பினானா? யாராவது லவ் பண்ணுற பொண்ணை இந்த அளவுக்கு கஷ்டப் படுத்துவாங்களா? அவன் என்னை விரும்பிருந்தா இப்படி பண்ணிருப்பானா? ஒரு வேளை அவன் காதலை நான் ஏத்துகிட்டு எங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு இந்த அளவுக்கு பேசினால் என்னோட நிலை என்ன?”, என்று எண்ணிய படியே வீட்டை நோக்கி நடந்தாள்.

“கல்யாணம் அளவுக்கு யோசிக்கிற? அந்த அளவுக்கு அவனை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று மனசாட்சி கேள்வி கேட்க விதிர்த்துப் போனாள். “அதானே, நான் ஏன் அப்படி யோசிச்சேன்?”, என்று எண்ணியவளுக்கு உண்மையிலே தலை வலி உயிர் போனது. வீட்டுக்கு வந்து கதவை அடைத்து விட்டு படுத்து விட்டாள். இங்கே இன்பாவும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

அவள் செய்தது எல்லாம் டிராமாவாக இருக்கும் என்று அவன் கனவா கண்டான்? சோகமாக அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அவனை பார்வதி கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

“கடவுளே நான் இது தெரியாம என்னல்லாம் பேசிட்டேன்? நான் அவ கிட்ட நடந்ததுக்கு என் முகத்தைக் கூட பாக்க மாட்டா. இனி அவ முகத்துல எப்படி முழிப்பேன்? அவ கிட்ட என் காதலைச் சொன்னா அவ எப்படி ஏத்துக்குவா?”, என்று எண்ணி தலையில் கை வைத்து விட்டான்.

“நானும் அந்த பிள்ளையை தப்பா நினைச்சிட்டேன். தலை வலிக்குதுன்னு சொன்னா. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொன்ன பாமா அந்த வீட்டை நோக்கி நடக்க இளவரசியும் கதிரும் கூட அவளிடம் மன்னிப்பு கேட்டு நன்றி சொல்ல பாமா பின்னே சென்றார்கள். சிதம்பரம் மீண்டும் நியூஸ் பார்க்க அமர அமைதியாக அறைக்குள் சென்றான் இன்பா.

“இவனுக்கு என்ன ஆச்சுங்க? ஒரு மாதிரி போறான்?”, என்று சண்முகநாதனிடம் கேட்டார் பார்வதி.

“தெரியலையே டி”

“இவன் கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதுங்க. பய ஏதோ பண்ணிட்டு வந்துருக்கான்”

“என்ன டி சொல்ற?”

“வினோதினி போட்டோ எடுக்க போகும் போது அவ முகத்துல எந்த காயமும் இல்லை. ஆனா திரும்பி வரும் போது அவ முகம் ஆங்காங்கே சிவந்து இருந்துச்சு. அவ உதடு கூட வீங்கி இருந்தது”

“அப்படியா?”

“ஆமாங்க”

“கதிர் ஏதோ திட்டினேன்னு சொன்னானே? அவன் ஏதாவது கோபத்துல அடிச்சிருப்பானோ?”

“இளவரசியை விரும்பிக்கிட்டு இருக்குற கதிர் வினோதினி மேல கை வச்சிருக்க மாட்டான். எனக்கு இன்பா மேல தான் சந்தேகம். பய ஏதோ பண்ணிட்டான்”

“சரி அப்புறமா அந்த பொண்ணு கிட்ட என்னன்னு விசாரி”

“சரிங்க”, என்று பார்வதி சொல்லும் போது “நீங்க ரெண்டு பேரும் என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க? என்ன பா விஷயம்? என்ன மா?”, என்று கேட்டார் சிதம்பரம்.

“கதிருக்கும் இளவரசிக்கும் கல்யாணம் முடிவாகிருச்சு. அப்படியே இன்பாவுக்கும் பொண்ணு அமைஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருக்கா டா உங்க அம்மா”, என்று சமாளித்தார் சண்முகநாதன்.

“எங்க? எனக்கும் ஆசை தான். என் கூட சேந்தவனுங்க எல்லாம் அவனுங்க பேரப் பிள்ளைகளைத் தூக்கிட்டு அலையும் போது எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா இவன் கல்யாணம் வேண்டாம் நோண்டான்னு சொல்லிட்டு இருக்கான். பிடிக்கலைன்னு சொல்றவனைக் கையைக் காலைக் கட்டியா கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”

“ஏப்பா சிதம்பரம், எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லவா?”, என்று மெல்ல தூண்டிலை வீசினார் பார்வதி.

“என்ன மா?”

“வினோதினியைப் பார்க்க ரொம்ப அருமையான பொண்ணா தெரியுது. அவ குடும்பத்தையும் பாத்துட்டோம். கொஞ்சம் கஷ்டப் பட்ட குடும்பம்னு தெரியுதே தவிர வேற ஒண்ணும் தப்பா தெரியலை. அது மட்டுமில்லாம இப்பவே இளவரசிக்காக இவ்வளவு செய்யுறா”

“என்ன மா சொல்ல வறீங்க?”

“பேசாம நம்ம இன்பாவுக்கு வினோதினியைக் கேட்டா என்ன?”, என்று பார்வதி கேட்க சண்முகநாதனே அதிர்ந்து விட்டார் எனும் போது சிதம்பரத்தைக் கேட்கவா வேண்டும்?

“அம்மா அந்தா பொண்ணு இன்னைக்கு தான் நம்ம வீட்டிக்கு வந்துச்சு. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் யோசிக்கணுமா?”

“நான் ஒண்ணும் நாளைக்கே கல்யாணம் பண்ணணும்னு சொல்லலையே சிதம்பரம். கேட்டுப் பாப்போமான்னு தான் கேட்டேன். அன்னைக்கு தேவி வினோதினிக்கு சரியான வரன் அமைய மாட்டிக்குதுன்னு கவலைப் பட்டுட்டு இருந்தா. தீவிரமா பாக்குறாங்களாம். ஒரு வேளை வேற இடத்துல அமைஞ்சிருச்சுன்னா நல்ல பொண்ணை இழந்துருவோம். நீ என்னப்பா சொல்ற?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!