Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 11 2

“எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு மா. ஆனா எனக்கு பிடிச்சு என்ன செய்ய? இந்த பய என்ன சொல்றான்னு தெரியலை. அது மட்டுமில்லாம அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ?”

“இன்பாவை அப்புறமா சம்மதிக்க வைக்கலாம். முதல்ல நமக்கு வினோதினி சம்மதம் முக்கியம். அதை விட அவங்க வீட்டு சம்மதம் முக்கியம். அவங்களும் சரின்னு தான் சொல்லுவாங்க. நம்ம இன்பாவுக்கு என்ன குறைச்சல்?”



Advertisement

“சரி மா, வெளிப்படையா இல்லாம மறைமுகமா வினோதினி கிட்டயும் அவங்க வீட்லயும் பேசிப் பாருங்க. கடைசியா இன்பா கிட்ட சொன்னா போதும். எனக்கு சம்மதம் தான். நீங்க பெரியவங்க. நீங்களே பேசுங்க. நான் வயல் வரைக்கும் போய்ட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

Advertisement

அவர் போனதும் “என்ன டி, சட்டுன்னு கல்யாணம் வரைக்கும் பேசிட்ட?”, என்று கேட்டார் சண்முகநாதன்.

Advertisement

“ஆரம்பிச்சதை முடிச்சிறனுங்க. இழுத்துட்டே இருந்தா எப்படி?”

Advertisement

“ஒரு வேளை இன்பாவுக்கு அந்த பொண்ணைப் பிடிக்கலைன்னா என்ன டி பண்ணுவ? இப்ப கூட பாத்தா தானே? அவளை எப்படி திட்டினான்?”

“நீங்க என்னைத் திட்டினதே இல்லையா? உங்களுக்கு என்னைப் பிடிக்காதா?”

“பார்வதி”

“ஆமாங்க. உரிமை உள்ள இடத்துல தான் கோவம் வரும். அவனுக்கு அவளைப் பிடிக்கும். இப்ப என் கவலை என்ன தெரியுமா?”

“வினோதினி வீட்ல வேண்டாம்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறியா?”

“அதெல்லாம் அவங்க வீட்ல சரின்னு தான் சொல்லுவாங்க. ஆனா வினோதினியை நினைச்சு தான் கவலையா இருக்கு. இவன் ஏதோ பண்ணிருக்கான். அதான் அந்த பிள்ளை முகம் அப்படி இருக்கு. அவளுக்கும் இவனை பிடிச்சிருக்கனும். அதான் என்ன நடந்ததுன்னு மூச்சு கூட விடாம போயிருச்சு. இப்ப கோபத்துல அவ இவனைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறதுன்னு தான் கவலையா இருக்கு”

“சரி நீ அப்புறமா அவ கிட்ட பேசு. ஏதாவது தகவல் சொல்றாளான்னு பாப்போம்”, என்று சொன்ன தாத்தா அந்த பேச்சை முடித்தார்.

இங்கே வினோதினியைக் காண வந்த பாமா, இளவரசி, கதிர் மூவரும் அவளுடைய வீட்டைத் தட்டி தட்டி அழைத்தார்கள். ஆனால் உள்ளே இருந்து வினோதினி எந்த சத்தமும் கொடுக்க வில்லை.

இன்பாவின் செயலை நினைத்து அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருக்கும் போது இவர்கள் குரல் கேட்டது தான். ஆனால் இப்போதைக்கு அவர்களை எதிர்க் கொள்ள அவளுக்கு தைரியம் சுத்தமாக இல்லை. அதுவும் இன்பாவை அவளால் கண் கொண்டு பார்க்க முடியாது. அதனால் தான் அவர்கள் அழைப்பது கேட்டும் கேட்காதது போல அமர்ந்திருந்தாள்.

“தூங்குறாங்க போல அத்தை. நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்”, என்றான் கதிர். கதிர் பேசுவது நன்றாகவே அவளுக்கு கேட்டது. “அப்பாடி, திரும்பி போயிருவாங்க”, என்று எண்ணி நிம்மதியாக அழுது கொண்டிருந்தாள். சில நேரம் அழுவதற்கு கூட தனிமை கிடைத்தால் அது சொர்க்கம் தான்.

“சரி அப்புறமா வந்து பேசுவோம். பிள்ளை தூங்கிட்டா போல? கொஞ்ச நேரம் தூங்கட்டும். நைட் சாப்பிட வரும் போது பாத்துக்கலாம். நீங்க வாங்க”, என்று சொல்லி பாமா முன்னே நடக்க அவள் பின்னே செல்லப் பார்த்தாள் இளவரசி.

அப்போது “ஏய் பொண்டாட்டி இரு டி”, என்றான் கதிர். இளவரசி அதிர்ச்சியாக ஆர்வமாக அவனைத் திரும்பி பார்த்தாள். அவன் கண்களில் அவள் எதிர் பார்த்த காதல் மின்னியது. “பழைய அத்தான் வெளிய வரங்க போல?”, என்று எண்ணிக் கொண்டு “என்ன?”, என்று கேட்டாள்.

“என்ன டி மிரட்டுற?”

“நீங்க செஞ்ச வேலைக்கு பின்ன மிரட்டாம என்ன செய்யவாம்?”

“நான் என்ன டி செஞ்சேன்?”

“நீங்க என் கிட்ட உங்க மனசை சொல்லிருக்கலாம்ல? உங்களால நான் எத்தனை நாள் அழுதுருக்கேன் தெரியுமா? உங்க மனசுல நான் இருக்கேனா இல்லையான்னு தெரியாம ஒவ்வொரு நிமிசமும் செத்துட்டு இருந்தேன்”

“கொஞ்சம் என்னையும் புரிஞ்சிகோ அரசி. என்னோட அம்மா அப்பா உயிரோட இருந்திருந்தா இந்த கஷ்டத்துக்கே அவசியம் இல்லை. ஆனா அவங்க இல்லாதப்ப என்னால முகத்துக்கு நேரா நின்னு மாமா கிட்ட எப்படி பொண்ணு கேட்டுருக்க முடியும்?”

“இப்ப மட்டும் எப்படிக் கேட்டீங்களாம்?”

“அது நீ செத்துருவேன்னு சொன்னதும் அதுக்கு மேல அமைதியா இருக்க முடியலை டி. உன்னை சாக கொடுக்கவா நான் உன்னை லவ் பண்னினேன்? நீ இல்லைன்னா நான் மட்டும் உயிரோட இருந்துருப்பேன்னு நினைக்கிறியா?”

“அத்தான்”

“உன்னை எனக்கு அந்த அளவுக்கு பிடிக்கும் டி. நீ தான் என்னோட உயிர்”, என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கையைப் பிடித்து விரல்களை வருடினான். அடுத்து அவளால் எதுவும் பேச முடியவில்லை.

அவன் தொடுகையில் மயங்கியவள் “விடுங்க, நான் போகணும்”, என்று அவன் முகம் பார்க்காமல் முணுமுணுத்தாள்.

“கல்யாணம் நிச்சயம் ஆகிருக்கு. எதுவும் கிடையாதா டி பொண்டாட்டி?”, என்று கேட்டவனின் கண்கள் அவளுடைய உதட்டில் நிலைக்க “எங்க நின்னுக்கிட்டு என்ன கேக்குறீங்க? கையை விடுங்க”, என்று கேட்டாள்.

“இடம் தான் பிரச்சனையா? அப்ப சரி பண்ணிறலாம்”, என்று சொல்லிக் கொண்டே அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றவன் அந்த பழைய வீட்டின் பின் பக்கம் சென்று அவளை சுவரோடு சாய்த்து நிறுத்தினான்.

“அத்தான் என்ன பண்ணுறீங்க? விடுங்க. யாராவது வந்துருவாங்க. பயமா இருக்கு”

“மாமாவே உன் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டார். இன்னும் எதுக்கு பயம்? ஆனா தயவு செஞ்சு படிப்பை மட்டும் நல்ல படியா முடிச்சிரு டி”

“சரி நான் படிக்கணும். போறேன். என்னை விடுங்க”

“நான் என்ன உன்னைத் பிடிச்சிட்டா இருக்கேன்? என் கை கூட உன் மேல படலை”

“விளையாடாதீங்க அத்தான். நகருங்க”

“சொல்லிட்டே இருக்கேன், போறேன் போறேன்னு ஏன் டி பறக்குற?”

“அத்தான் விடுங்க, இது தப்பு?”, என்று பயத்துடன் சொன்னாலும் அவளுக்குள்ளும் எதிர்பார்ப்புகள் கிளர்ந்தது.

அவளுடைய கன்னங்களை தன்னுடைய கரங்களால் தாங்கியவன் “பிளீஸ் ஒண்ணே ஒண்ணு டி. அப்புறம் கல்யாணம் வரைக்கும் உன்னை தொல்லையே செய்ய மாட்டேன்”, என்று சொன்னவன் அவளுடைய முகம் நோக்கி குனிய எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக் கொண்டாள் இளவரசி.

என்னவோ தைரியமாக குனிந்து விட்டான் தான். ஆனால் படபடப்பில் என்ன செய்ய என்று கூட அவனுக்கு தெரிய வில்லை. எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவள் நின்றிருக்க அவள் கன்னத்தில் தன்னுடைய இதழ்களைப் பதித்தான்.

இமை மூடி அவனது முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தவளின் இதழ்களோ அதனுடைய இணைக்காக துடித்துக் கொண்டிருந்தது. அவனது மூச்சுக் காற்று அனல் காற்று போல அவளுடைய முகத்தில் மோத அவளது தேகம் தகித்தது. அவனோ துடிக்கும் அவள் இதழ்களை சிறை செய்ய ஆசை கொண்டான். ஆனால் அதைச் செய்ய சத்தியமாக அவனுக்கு தைரியம் இல்லை.

வெகு நேரம் அவன் எதுவும் செய்யாமல் இருக்க கண்களைத் திறந்து பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “சத்தியமா பயமா இருக்கு டி”, என்று கிசுகிசுப்பாக உரைக்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள் “போடா பயந்தாங்கோளி”, என்று சொல்லி விட்டு அவனிடம் இருந்து நழுவி ஓடி விட்டாள். உதட்டில் உறைந்த புன்னகையுடன் வீட்டை நோக்கி நடந்தான் கதிர்.

கதிரும் இளவரசியும் பேசியது உள்ளே இருந்த வினோதினிக்கு நன்கு கேட்டது. கதிர் அவளிடம் ரகசியம் பேசவுமே வினோதினி அவர்கள் பேச்சு கேட்க வேண்டாம் என்று எண்ணி உள்ளறைக்கு சென்று படுத்து விட்டாள். அவர்கள் பேச்சு கேட்க வில்லை என்றாலும் அவர்கள் அங்கே தனியே இருப்பது ஏதோ ஒரு குறுகுறுப்பை அவளுக்கு தோற்றுவித்தது. அவளை அறியாமலே இன்பாவின் செயலை நினைத்துப் பார்த்தாள். அவள் விரல்கள் அவளுடைய உதடை வருடிக் கொடுத்தது.

“ஏன் இப்படி செஞ்சான்? என்னைத் தடுக்க அவனுக்கு இந்த வழி தான் கிடைச்சதா?”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டாள்.

முத்தம் என்பது காதலின் வெளிப்பாடு. அதை தண்டனையாக உணர வைத்த அவன் மீது கோபமாக வந்தது. அந்த கோபத்தை வெளிப்படுத்த முடியாத இயலாமையில் கண்ணீர் வந்தது. கூடவே அவள் மனதுக்கும் அவனை பிடித்திருக்கிறது என்ற உண்மையை தான் அவளால் தாங்க முடியவில்லை.

எப்போது எந்த நொடி அவன் அவள் மனதில் வந்தான் என்று அவளுக்கு தெரிய வில்லை. ஆனால் அவனை அவளுக்கு பிடித்திருந்தது என்று மட்டும் நிஜம். அதனால் தான் அவன் அவளைக் காயப் படுத்தியதும் அவன் பேசிய பேச்சும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அப்படியே படுத்திருந்தாள். உறக்கம் மட்டும் அவள் கண்களைத் தழுவவே இல்லை.

அவளுக்கு இன்று உறக்கமே வரப் போவதில்லை என்று புரிந்தது. இரவு ஏழு மணி ஆனதும் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள். ஏனென்றால் கண்டிப்பாக இன்பா வீட்டில் இருந்து யாராவது உணவு எடுத்துக் கொண்டு வருவார்கள். அப்படி இல்லையென்றால் அவளை உணவு உண்ண அழைக்கவாது யாராவது வருவார்கள் என்று அவளுக்கு தெரியும்.

முகம் கழுவி விட்டு கதவைத் திறந்து வெளியே வந்தவள் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு இரவு உணவை எடுத்து வந்த பாமா “இப்ப தலை வலி எப்படி இருக்கு டா?”, என்று கேட்டாள்.

“பரவால்ல மா”, என்று சொன்னவள் அவளைக் கண்டு சோர்வாக சிரித்தாள்.

சிரித்தாலும் அவளது முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன மா ஒரு மாதிரி இருக்க? உதட்டுல ஏதோ காயம் பட்டு வீங்கின மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள்.

“ஏதோ பூச்சி கடிச்சிருச்சு போல மா? அது அலர்ஜி மாதிரி இருக்கு”, என்று சொல்லி சமாளித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!