Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 1 3

முதலில் ரங்கனின் தந்தை தான் ரத்தினத்துக்கு காரோட்டியாக இருந்தார். ரங்கனுக்கு ஆறு வயது இருக்கும் போது அவனுடைய தாயும் தந்தையும் இறந்து விட ரங்கனை தன்னுடனே அழைத்து வந்து விட்டார் ரத்தினம். அப்போது ஆதவனுக்கு எட்டு வயது.

இரண்டு அக்காக்களுடன் வளர்ந்த ஆதவன் தனக்கு ஒரு துணை கிடைத்த சந்தோசத்தில் ரங்கனை தன்னுடைய ஆருயிர் தம்பியாக ஏற்றுக் கொண்டான். இருவரையும் பார்க்கும் போது ரத்தினத்துக்கு ராமனும் குகனும் தான் நினைவுக்கு வருவார்கள். ஆதவன் மேல் அந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தான் ரங்கன். இருவருக்கும் இடையே அழகான நட்பும் இழையோடியது. ரங்கனை ரத்தினம் தான் படிக்க வைத்தார்.



Advertisement

ஆதவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது ரங்கன் பத்தாம் வகுப்பு முடித்தான். அதன் பின் ஆதவன் காலேஜ் செல்ல ரங்கன் படிப்புக்கு கும்பிடு போட்டான். யார் சொல்லையும் அவன் கேட்க வில்லை.

ரத்தினம் அவனை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்த, ஒரு நாள் முழுக்க எங்கேயோ காணாமல் போய் விட்டான் ரங்கன். வீட்டில் உள்ள அனைவரும் அவனைத் தேடித் தவித்தார்கள்.

Advertisement

Advertisement

அவன் கோவிலில் இருப்பதை தெரிந்து கொண்ட ரத்தினம் அவனை சமாதானப் படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடனே வைத்துக் கொண்டார். “அவன் படிக்கலைன்னாலும் பரவால்ல. ஆனா நம்ம வீட்லயே இருக்கட்டும். படிக்க வைக்க போறேன்னு சொல்லி அவனை வீட்டை விட்டுத் துரத்திறாதீங்க”, என்று சொல்லி விட்டாள் மங்கை.

அதன் பிறகு தான் எங்கே போனாலும் ரத்தினம் அவனை அழைத்துச் செல்வார். கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்தார். மில்லில் நடக்கும் வேலை, ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில்கள் அனைத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். வியாபாரம் எப்படி செய்ய வேண்டும், தொழிலார்களிடம் எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தார்.

Advertisement

ரங்கனும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வான். ரத்தினத்துக்கு உடல் நிலை சரியில்லை என்றால் ரங்கன் தான் தேங்காய் லோட் ஏத்துவது முதல் பணத்தை பேங்க்கில் போடுவது வரை அனைத்து வேலையும் செய்வான். அவனுக்கு பதினெட்டு வயது முடிந்ததும் அவனுக்கு லைசன்ஸ் எடுத்துக் கொடுத்து தனக்கு டிரைவராக வைத்துக் கொண்டார். சைக்கிள், கார், லாரி என்று அனைத்தையும் ரங்கன் ஓட்டுவான். படிக்க வில்லை என்றாலும் மற்ற அனைத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுத்தார் ரத்தினம். அதனால் அவனுக்கு அவர் மேல் மரியாதையுடன் கூடிய பக்தியே உண்டு.

இவன் ரத்தினத்தை படிக்க மாட்டேன் என்று சொல்லி படுத்தி எடுத்தான் என்றால் ஆதவன் வேறு விதமாக அவரை படுத்தி எடுத்தான். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதவன் இன்ஜினியரிங் படிக்க என்று விருப்ப பட ரத்தினம் சம்மதிக்காமல் ஆர்ட்ஸ் காலேஜ் சேர்த்து விட்டார். அப்போது இருந்து தந்தைக்கும் மகனுக்கும் ஆகாமல் போனது. அவனும் அவர் சொல் படி சேர்ந்து விட்டான் தான். ஆனால் அவன் கல்லூரியில் செய்யாத சேட்டையே கிடையாது.

மாதம் ஒரு முறை என்கொயாரி என்று சொல்லி அவரை கல்லூரிக்கு அழைத்து விடுவார்கள்.

“ஏன் டி உன் மகன் இப்படி பண்ணுறான்?”, என்று மங்கையை தாளிப்பார் ரத்தினம்.

“ஓஹோ, என் மகனா? நீங்க இல்லாம அவன் எப்படி வந்தானாம்?”, என்று கேட்டு அவர் மூக்கை உடைப்பாள் மங்கை.

“கிறுக்கி, அது ஒரு பேச்சுக்கு சொல்றது டி? காலேஜ்ல இவன் பண்ணுறதுக்கு நான் தலை குனிஞ்சு நிக்குறேன் டி”

“அவன் படிக்க ஆசைப் பட்டு கேட்டதை நீங்க படிக்க வச்சீங்களா? இல்லை தானே? அப்பவும் நான் அமைதியா தான் இருந்தேன். இப்ப அவன் செய்யுறதுக்கு நான் பொறுப்பாக முடியாது. இப்பவும் நான் அமைதியா தான் இருப்பேன்”, என்று சொல்லி கணவரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

ரத்தினம் ஆதவன் இடையே மாட்டிக் கொண்டு விழிப்பது மங்கையும் ரங்கனும் தான். செல்வியும் சுபாவும் கூட ரங்கன் மேல் உயிராக இருந்தார்கள். ஆதவனுக்கு என்ன வாங்குகிறார்களோ அதே போல ரங்கனுக்கும் வாங்கி விடுவார்கள்.

அந்த அளவுக்கு அவன் மீது ஒற்றுதல் இருவருக்கும். ரத்தினம் அவ்வப்போது அவனுக்கு செலவுக்கு பணம் கொடுப்பார். ஆதவன் உடை எடுக்கும் போது அவனுக்கும் எடுப்பான். மங்கை ரத்தினத்துக்கும் ஆதவனுக்கும் எப்படி உணவு பரிமாறுவாளோ அது போல தான் ரங்கனுக்கும் கொடுப்பாள். அவனுக்கேன்றே அந்த வீட்டில் அறையும் உண்டு. அவன் அந்த வீட்டில் ஒருவன் தான்.

அவர்களுடன் அமர்ந்து தான் சாப்பிடுவான். அதை தவிர எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் ரங்கன் கேட்க மாட்டான். ஆனால் அவன் கையில் எப்போதும் சில ஆயிரங்கள் இருக்கும். ரத்தினம் கொடுக்கும் பணத்தையும் அவன் செலவு செய்ய மாட்டான். அவனுக்கு என்று செலவும் இல்லை. அதனால் அந்த பணத்தை அவன் தன்னுடைய அறையில் இருந்த உண்டியலில் தான் சேர்த்து வைப்பான்.

அவனுக்கு என்று வங்கியில் பணம் போட்டுக் கொண்டு வந்தார் ரத்தினம். அது ரங்கனுக்கு தெரியாமல் போனாலும் மற்ற அனைவருக்கும் தெரியும். ரத்தினத்திடம் யாராவது இவனை யார்  என்று கேட்டால் வேலைக்காரன் என்றோ டிரைவர் என்றோ சொல்ல மாட்டார். “என் நண்பனின் மகன்”, என்று தான் சொல்வார்.

ஆதவனும் அவனுடைய நண்பர்களிடம் “என்னோட தம்பி”, என்று தான் சொல்வான். சுபாவும் செல்வியும் அவனை ‘சின்னதம்பி’ என்று சொல்வார்கள். “அப்படின்னா என் பொண்டாட்டி குஷ்புவாக்கா?”, என்று ஆவலுடன் கேட்பான் ரங்கன். அந்த அளவுக்கு அவனுக்கு சினிமா மோகம். வேணி குடும்பத்திலும் அவனை யாரும் பிரித்துப் பார்க்க வில்லை. அப்படி பிரித்துப் பார்த்தால் ரத்தினம் அவர்களை கண்டு கொள்ள மாட்டார் என்பதால் கூட இருக்கலாம். ஆனால் வேணி குடும்பத்தினரிடம் எப்போதும் ரங்கன் தள்ளியே இருப்பான். தன்னால் அவர்களுக்கு இடையில் எதுவும் விரிசல் வந்து விடக் கூடாதே என்று கவனமாக இருப்பான். சுபா மற்றும் செல்வியை திருமணம் செய்து கொண்டவர்கள் கூட ரங்கனை அந்த வீட்டில் ஒருவனாக தான் எண்ணினார்கள்.

அதை எல்லாம் எண்ணிய படி அமைதியாக வந்த ரங்கன் அவர்கள் எப்போதும் போகும் டீக்கடையில் காரை நிறுத்தினான்.

“வா டா, ஏதாவது சாப்பிட்டுட்டு கடைக்கு போவோம்”, என்றான் ஆதவன்.

“எனக்கு வேண்டாம்ணே. நீ போயிட்டு வா”, என்று மறுத்த ரங்கனிடம் “காலைல ஏழரை மணிக்கு மூணு தோசை தின்னுருப்ப. அது இப்ப வரைக்கும் எப்படி பத்தும்? ஒழுங்கா வா, சாப்பிடு”, என்று சொல்லி அழைத்து சென்றவன் அவன் வயிறு நிறையும் வரை விட வில்லை.

அதன் பின் தான் இருவரும் உடை எடுக்க சென்றார்கள். தனக்கு உடை எடுத்த ஆதவன் மறுக்க மறுக்க ரங்கனுக்கும் எடுத்துக் கொடுத்தான். பின் இருவரும் வீட்டுக்கு வரும் போது ரத்தினம் உணவு உண்டு கொண்டிருந்தார்.

“ஐயா, மன்னிச்சிருங்க. வர நேரம் ஆகிட்டு. அதான் உங்களைக் கூப்பிட வர முடியலை”, என்றான் ரங்கன்.

“இவன் கூட போனா நேரம் ஆகும்னு எனக்கு தெரியாதா?”, என்று சொல்லி மகனை ஒரு பார்வை பார்த்த ரத்தினம் பின் ரங்கன் புறம் திரும்பி “ஒரு நாள் நான் நடந்தே வீட்டுக்கு வந்தா ஒண்ணும் ஆகாது டா. முகம் கழுவிட்டு வந்து சாப்பிட உக்கார்”, என்றார். அவர் அப்படிச் சொன்னதும் அவனுடைய அறைக்குள் கை, கால், முகம் கழுவ ஓடினான் ரங்கன்.

கையை மட்டும் கழுவி விட்டு ஆதவன் சாப்பிட அமர “முகத்தை கழுவலையா டா?”, என்று கேட்டார் ரத்தினம்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்கு கிளம்புவேன் பா. அப்ப ஒரெடியா குளிச்சிக்கிறேன். அம்மா, சோறு வை மா”

“எப்ப பாத்தாலும் பதில் பேசிறணுமா டா?”, என்று கேட்டு ரத்தினம் அவனை முறைக்க “எப்ப பாத்தாலும் கேள்வி கேக்கணுமா பா?”, என்று கேட்டு அவரை முறைத்தான் மகன்.

இருவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட மங்கை பேச்சை மாற்றுவதற்காக “ரங்கனுக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்தியா டா?”, என்று கேட்டாள்.

“அவனுக்கும் தேவையானது எல்லாம் வாங்கியாச்சு மா. வாங்காம இருப்பேனா?”, என்று ஆதவன் கேட்க “உன்னை நம்பலாமா? இல்லை கம்மி விலைக்கு அவனுக்கு வாங்கிக் கொடுத்துட்டியா?”, என்று கேட்டு அவன் பி. பியை எகிற வைத்தார் ரத்தினம்.

அவரை முறைத்துப் பார்த்தவன் “அம்மா உன் புருஷன் கிட்ட சொல்லு. என் தம்பிக்கு நல்லதா தான் வாங்கிக் கொடுப்பேன். வேணும்னா அவன் ஜட்டியை வேணும்னாலும் காட்டச் சொல்றேன். அது கூட தரமா தான் இருக்கும்”, சொல்லி சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் அப்படிச் சொன்னதும் ரத்தினம் வாயை மூடிக் கொண்டு உண்ண ஆரம்பிக்க “இவருக்கு இது தேவை தான்”, என்று எண்ணிக் கொண்டாள் மங்கை. அப்போது அங்கு வந்த ரங்கனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அனைவருக்கும் சந்தோஷமாக பரிமாறினாள் மங்கை.

முதலில் ரத்தினம் உண்டு விட்டு எழுந்து சென்று விட அதற்கு பின் டைனிங் டேபிளே களை கட்டியது. டி‌வி ஹாலில் அமர்ந்து ஆதவனின் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்த ரத்தினம் “இவன் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டார்.

“டேய் அமைதியா சாப்பிடு டா. உங்க அப்பா கேட்டா சத்தம் போடப் போறார்”, என்று மகனை அதட்டினாள் மங்கை.

“அட போ மா, நம்ம பேசுற கதையைக் கேட்டு விருமாண்டியும் அங்க சிரிச்சிட்டு தான் இருப்பார்”, என்று தந்தையைப் பற்றி சரியாக கூறினான் ஆதவன்.

“அவர் உன் மேல அன்பா தானே டா இருக்கார்? அப்புறம் எதுக்கு அவர் கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசுற?”

“அவர் என்னோட அப்பா மா. அவர் மேல எனக்கு அன்பும் பாசமும் இல்லாம இருக்குமா? ஆனா அவர் எனக்கு பிடிச்சதை செய்ய விடணும்ல? அதெல்லாம் உனக்கு புரியாது  விடு. சரி அந்த பொரிச்ச மீனை வை. ரங்கன் தட்டுல சோறு காலியாகப் போகுது பார் வை”, என்றான் ஆதவன்.

அனைத்தையும் கேட்ட ரத்தினம் “நான் உன்னை இஞ்சினீயரிங்க் படிக்க வைக்காம இருந்தது தப்பு தான் ஆதவா. ஆனா எனக்கு அப்புறம் நம்ம சொத்தை எல்லாம் ரங்கனும் நீயும் தானே பாத்துக்கணும்? இஞ்சினீயரிங்க் படிச்சா நீ அது சம்பந்தமா வேலைக்கு போயிருவ. அதுக்காக தான் டா படிக்க வைக்கலை”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

“ஒரு நாள் உனக்கு எல்லாம் புரியும் டா”, என்று மனதில் எண்ணிக் கொண்டவர் ஆதவனும் ரங்கனும் பேசுவதைக் கவனித்தார்.

“ஏன் டா ரங்கா”, என்று அழைத்தான் ஆதவன். அவன் குரலே ஏதோ நக்கலாக பேசப் போகிறான் என்பதை உணர்த்தியது ரத்தினத்துக்கு. காதை கூர்மையாக்கிக் கொண்டு அவன் பேசுவதைக் கவனித்தார்.

“என்னண்ணே?”, என்று கேட்டான் ரங்கன்.

“உங்க ஐயா, எனக்கு தெரியாம குடவுன்ல எக்ஸசைஸ் எல்லாம் பண்ணுறாரா டா? வர வர ஆள் ஜம்முன்னு ஆகிட்டு வரார். பாக்கவே என்ன ஒரு கம்பீரம்?”, என்று ஆதவன் கேட்க மகன் தன்னை ரசிப்பதைக் கேட்டு வெட்க புன்னகை வந்தது ரத்தினத்துக்கு.

“ஐயாவுக்கு எதுக்குண்ணே எக்ஸசைஸ்? தினமும் அவர் உழைக்கிறதே அவருக்கு உடற்பயிற்சி தான். காலைல எந்திச்சதுல இருந்து ஓடிக்கிட்டே இருக்கார். அதனால நல்லா இருக்கார். சிங்கம் எப்பவுமே கம்பீரமா தானே அண்ணே இருக்கும்?”

“பாத்து ஓடச் சொல்லு டா உங்க ஐயாவை”, என்று சொன்ன ஆதவன் குரலில் நக்கல் வழிந்தாலும் அதில் அக்கரையே மிளிர்ந்தது.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!