Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 15

15

மாலை போல டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை குடும்பமாய் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். குடும்பமாய் என்றால், ஆண்களை தவிர… பெண்கள் மட்டும், உடன் ஜேகோபை சேர்த்துக்கொண்டு.



Advertisement

ஜேகோப்புக்கு இது எப்போதும் பழகிய ஒன்று தான்! தேவகிக்கு கம்பெனி கொடுக்க வேண்டி அவர் பார்ப்பதை எல்லாம் பார்க்க ஆரம்பித்தது, நாளடைவில் அவனுக்கும் பழகிப்போனது.

வைகை புயல் வடிவேலுவின் காமெடிகள் அணிவகுத்து வந்துக்கொண்டிருந்தன. தங்களை மீறி ரசித்து சிரித்து எல்லோரும் டிவியில் மூழ்கி போயிருக்க, நொறுக்கு தீனியாய் சற்று முன் சுட்டு எடுத்த ரிப்பன் பகோடா வாயில் அரைப்பட்டுக்கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

ஜேகோப் இதுவரை பார்த்திராத பல நகைச்சுவைகளும் வர, வெகு ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருந்தான். அப்போது ‘இரண்டு’ படத்தின் நகைச்சுவை காட்சிகள் ஓட ஆரம்பித்தன.

‘அந்த ஆட்டோக்கார தம்பி எங்கன்னு பாரு’ என வைகை புயல் சொல்ல, ‘அந்த ஆட்டோ டிரைவர் என்ன இவ்ளோ லூசா இருக்கான்?’ கேட்டுக்கொண்டே வயிற்றை பிடித்துக்கொண்டு கண்ணில் நீர் வர சிரித்து வைத்தான் ஜேகோப். ஆனால் அடுத்து….

Advertisement

‘தேல்பத்ரி சிங்…. தேல்பத்ரி சிங்…’ என பிஜிஎம் ஓட, முதலில் கவனிக்காதவன், ஒருகட்டத்தில் அதை கண்டுக்கொள்ள அதிர்ந்துப்போனான்.

‘என்னை இவ்ளோ முட்டாளா நினைச்சு தான் அந்த பேர் வச்சாங்களா?’ என்று தன்மானம் சீண்டப்பட, அவன் தலை அனிச்சையாய் திரும்பி ரோஷிணியை பார்த்தது. அவள் கடைக்கண்ணால் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்த காமெடி வந்ததில் இருந்தே சேனலை திருப்ப அவளும் எவ்வளவோ பாடுபட்டாள். ம்ஹும்… முடியவில்லை. அவள் பயந்தது போலவே அவன் அவளை கண்டுக்கொள்ள, கொஞ்சமும் அலுங்காமல் எழுந்தவள் அங்கிருந்து மெதுவாய் நழுவ, அவள் நழுவுவதை பார்த்ததுமே எழுந்துக்கொண்டான் ஜேகோப்.

அவன் எழுந்ததை கண்டதும், நடந்தவள் திடுதிடுமென மாடிக்கு ஓட ஆரம்பித்தாள். அவள் ஓடவும் இவனும் பின்னேயே துரத்திக்கொண்டு ஓடினான்.

டீவி சுவாரஸ்யத்தில் தங்கள் முதுகின் பின்னே இவர்கள் ஓடியது கூட பெண்கள் கருத்தில் பதியவில்லை.

சங்கவிக்கோ  டிவியிலும் கவனமில்லை. இவர்கள் மீதும் கவனமில்லை. தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள் வெகு ஆர்வமாய்.

படிகளில் தலைதெறிக்க ஓடியவள், எங்கு ஒளிவதென திண்டாட, நாலே தாவலில் மாடியை அடைந்து அவளை எட்டிப்பிடித்தவன், அவள் தப்பிக்க முடியாவண்ணம் சுவரோடு சுவராய் அவள் இரு தோள்களிலும் கையை  வைத்து அழுத்தி சாய்த்தான்.

‘மாட்டிக்கொண்டோமே’ என்று ஒருபக்கம் பதற, அதை தூக்கி சாப்பிடும்படி அவனது பாதி உடலை தன்னோடு உரச அவன் அத்தனை நெருக்கத்தில் நிற்பது அவளுக்கு மூச்சு முட்டியது.

அவன் அதையெல்லாம் யோசிக்கக்கூட இல்லை. அவளை பிடித்துவிட்ட களிப்பில், “மாட்டுனியா?” என்றான் குஷியாய்.

அவள் அப்படியே பல்லி போல சுவரில் உரசி நிற்க, “நான் உனக்கு அந்த ஆட்டோக்கார தம்பியா? சொல்லு?” என்றவன், அவள் தோளில் இருந்த ஒரு கையை எடுத்து அவள் தாடையை அழுந்த பற்றி முகத்தை தூக்கி அவனுக்கு நேரே வைத்துக்கொண்டு வினவ, அவள் கண்மணிகள் வெளியே தெறித்து விழுந்துவிடும் என்றளவுக்கு விரிந்தது.

அவனுக்கும் அவளுக்கும் அதிகபட்சம் ஒரு விரல் மட்டுமே நுழையும் இடைவெளி! அவன் அதையெல்லாம் உணர்ந்தானா? அல்லது அவனுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லையா? என்று தெரியவில்லை. அவளுக்கு தான்  பெரும் இம்சையாய் இருந்தது.

“என்னை எவ்ளோ ஃபூலா நினைச்சுருந்தா ‘தேல்பத்ரிசிங்’ன்னு எழுதி குடுத்துருப்ப?” அவன் தீவிரமான விசாரணையில் இருந்தான்.

அவள் விரித்த கண் மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் பேச்சை நிறுத்தினான்.  அதன் பிறகே, தான் அவளிடம் நிற்கும் நிலையை உணர்ந்தான். வெளிநாட்டில் இருப்பதால் இதற்கெல்லாம் அவன் பழக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல…!

யாரிடமும் வரம்பு மீறி பழகியதில்லை. தன்னிடம் அப்படி நெருங்குபவர்களையும் அனுமதித்ததில்லை. அது தேவகியின் வளர்ப்பு!!!

அந்த நெருக்கம் உணர்ந்தப்பின்னும் கூட அவளிடம் இருந்து விலக சொல்லி அவன் மூளை அவனுக்கு உத்தரவிடவே இல்லை. அப்படியே தான் நின்றான். அவள் முகத்தை ஒரு துளி விடாமல் கண்களால் பருக ஆரம்பித்தான்.

அவன் அழகிய பெண்களை பார்த்ததே என்றில்லை. உண்மையில் அவன் காணாத அழகி ஒன்றும் இல்லை. எத்தனையோ விதமான அழகிகளை கண்டிருக்கிறான். ஆனால், யாரிடமும் தோன்றாத உணர்வு, ஒரு நெருக்கம், ஒரு உரிமை எல்லாம் மீறி, அவனுக்குள் நடக்கும் ரசாயன மாற்றங்கள், அவள் கண்களை பார்த்து தன்னை தானே ஆராய்ந்துக்கொண்டிருந்தான் ஜேகோப்.

அவள் உதடுகள் காய்ந்து போக ஆரம்பித்தது. ஆனாலும், அவன் அவள் தாடையை அழுந்த பற்றியிருந்த கரத்தை விலக்கவில்லை. மாறாக, அவளுக்கு உதவலாம் என்ற நல்ல எண்ணம் திடீரென தலையெடுக்க, அதை செயல்ப்படுத்தலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் அவன் போகும் முன்னே, அவனை மீறிய அவன் உதடுகள் வேகமாய் நெருங்கியது அவன் இணையை தேடி…!

அவன் தன்னிடம் நெருங்குவதை கண்ணுற்றதுமே, இயல்பாய் பெண்மை விழித்துக்கொள்ள, அவன் உதட்டருகே நெருங்கியபோது, சட்டென முகத்தை திருப்பிக்கொண்டாள் ரோஷிணி.

உதட்டுக்கு தாராளமாய் கிடைக்க வேண்டிய முத்தம், அவளது ஒரு கன்னத்திற்கு மட்டும் அதிர்ஷ்டவசமாய் கிடைத்தது.

அவள் தலையை திருப்பிக்கொண்டதும், தன் மயக்க நிலையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே வந்தான் ஜேகோப்.

கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றவளை பார்க்க சிரிப்பாய் வந்தது. சத்தமில்லாமல் அவளை விடுவித்துவிட்டு அவன் அங்கிருந்து போக, கண்களை திறந்தவள் விலகி செல்பவனை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

போனவன் நின்று, திரும்பி அவளை பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்தாள்.

உதட்டை குவித்து சட்டென ஒரு முத்ததை வைத்தவன், “ஐ மீன் இட்!” என்றதோடு வேகமாய் இறங்கி சென்றுவிட்டான்.

ரோஷிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது? என்ன செய்தான்? என்ன சொன்னான்? ஒன்றுமே உரைக்காமல் வெகு நேரம் அப்படியே சிலை போல தான் நின்றிருந்தாள் அவள்.

ஆனால், அவன் முத்தம் மட்டும் தித்திக்க தான் செய்தது.

கீழே மொபைலில் மூழ்கியிருந்த சங்கவி ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் அதை ஓரம்கட்டிவிட்டு நிமிர்ந்தபோது தான் அங்கே ரோஷிணி இல்லை என்பது தெரிய, அவளை தேடி சென்றாள். மாடியில் அவள் அறைக்கு வெளியே ஜேகோப் விட்டு சென்ற அதே இடத்தில் இன்னமுமே சிலையாகிப்போய் நின்றிருந்தவளை சங்கவி வந்து தான் உயிர் பெற செய்தது.

அப்போதும் கூட மந்தரித்துவிட கோழி போல இருந்தவளை ஆனமட்டும் அசைத்துப்பார்த்து விட்டாள் சங்கவி. அதற்கு எந்த பலனும் தான் இல்லாமல் போனது.

இரவு உணவின் போது மறந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். போட்டதை உண்டுவிட்டு அமைதியாய் தன் அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.

அவளுக்கு யோசிக்க வேண்டியிருந்தது.

அவன் சட்டென அப்படி நெருங்கியபோது தான் ஏன் அவனை தவிர்க்கவில்லை? தள்ளிவிடவில்லை? சத்தமிடவில்லை? மாறாக, அவன் செய்கையை அனுமதித்து, அதை ஏற்றுக்கொண்டு நின்றது  அவளுக்கே நம்ப இயலாத ஒன்றாக இருந்தது.

இரு நாட்களாக அவனை பிடித்து இருந்தது தான். அவனை சைட் அடிக்கிறாள் தான். ஆனால், அதற்காக அவன் தன்னிடம் எல்லை கடந்து வரும்போது அதற்கு எப்படி அனுமதிக்க முடியும்?

அப்படியென்றால், ‘இது காதலா?’

எனக்கு ‘காதல்’ என்றால், அவனுக்கு…? அவன் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லையே!? அவன் ஊரில் இந்த முத்தம் எல்லாம் சர்வசாதாரணம் தானே!? என்னையும் அவர்களுள் ஒன்றாக நினைத்துவிட்டானா?

அவனுக்கு மறுப்பு சொல்லாமல் தான் நின்றதை அவன் எப்படி நினைத்திருப்பான்? தவறாக நினைத்திருப்பானோ?

‘என்கிட்டே உன்னோட பர்ஸ்ட் ‘பேட்’ இம்ப்ரெஷனை சேஞ் பண்ணு!’  அவன் சொன்னது வேறு மனதில் உறுத்த ஆரம்பித்தது.

‘கண்டிப்பா என்னை பற்றி கேவலமாக தான் நினைத்துக்கொண்டிருப்பான்’ என்ற முடிவை அவள் மனம் ஒத்துக்கொண்ட பின், ஏனோ தன்னை மீறி அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிதற ஆரம்பித்தது.

இங்கே இவள் இப்படி அழுகையில் கரைய, எதிர் அறையில் இருந்தவனோ சுய அலசலில் ஈடுப்பட்டிருந்தான்.

‘ஜஸ்ட் எ வீக்… ஜஸ்ட் ஒன் வீக் தான் ஆச்சு அவளை நான் பார்த்து! அதுக்குள்ள எப்படி எனக்குள்ள இந்த மாதிரி ஃபீலிங்க்ஸ்?’

‘மாமா பொண்ணு தானேன்னு அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேனா?’

‘இல்லையே… அவளை என் மாமா பொண்ணுங்குற வியூ’ல நான் பார்த்ததே இல்லையே!’

‘ஒருவேளை  பொண்ணை கிட்ட பார்த்ததும் என் ஹார்மோன்ஸ் தப்பா பீகேவ் பண்ணிடுச்சா?’ இல்லை என்று தெரிந்தும் கூட இதை தன்னை தானே கேட்டுக்கொண்டான்.

“ஒன் வீக்’ல லவ் வருமா? ஹொவ் இஸ் இட்  பாசிபிள்?” வாய்விட்டே கேட்டான்.

“உண்மையிலேயே லவ் தானே? ஓ காட்! ஆம் ஐ இன் லவ்!?” அவனே ஆச்சர்யமாக சொல்லிக்கொண்டான்.

‘இன்கேஸ், இது லஸ்ட்’டா இருந்தா?’ இப்படி தோன்ற, ‘அப்படியே லஸ்ட்’டா இருந்தாலும், அவகிட்ட தடுமாறுன என் ஹார்மோன்ஸ் இதுவரை வேற யார்கிட்டயும் இப்படி டிஸ்டர்ப் ஆனதில்லையே…!’ என்று கண்டுக்கொண்டான்.

‘இது லஸ்ட் இல்ல… கண்டிப்பா லவ் தான்!’  தீர்மானமாய் அவனுக்கு தெளிவானதும் ஏதோ கை கால்கள் எல்லாம் காற்றில் மிதப்பதை போன்றதொரு உல்லாசம். எதிர் அறையில் இருப்பவளை இப்போதே அழைத்து  அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்பதை போன்ற ஒரு பரபரப்பு.

‘தான் காதலை சொன்னால் அவள் என்ன சொல்வாள்?’ என்று   நினைக்கையில் தன் கைகளுக்குள் விரிந்த விழிகளோடு அதிர்ந்து போய் சமைந்து நின்ற அவள் உருவம் ஓவியமாய் தோன்ற, தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு சிரிப்பை மறைத்தான்.

எல்லாம் புதிய அனுபவமாய் இருந்தது அவனுக்கு.

அந்நேரம் அவன் அலைபேசி ஒலிர, பேசும் எண்ணமே இல்லை என்றாலும், தனக்காக அங்கே நள்ளிரவு வரை விழித்திருந்து அழைக்கும் பெற்றோர்களை ஏமாற்ற விரும்பாமல் அழைப்பை ஏற்று சாதாரணமாக பேச முயன்றான்.

“இயா டேட்!” என்றவன் குரலை செருமினான்.

ரிச்சர்ட்டோ, “சோ, வாட்ஸ் அப் பப்பூ” என்றார் எப்போதும் போல.

“நத்திங் மச் டேட்…” என்றவனுக்கு அடுத்து தானாக பேச வரவில்லை.

“உன் வாய்ஸ் ஷிவரிங்’கா இருக்கு?” ரிச்சர்ட் கண்டுக்கொண்டு கேட்க, “ஒன்னும் இல்லையே” என்றான் வேகமாக.

அவரோ, சட்டென காணொளி அழைப்பை துவங்க, ‘ஓ…ஷிட்!’ என தலையில் அடித்துக்கொண்டவனுக்கு அதை ஏற்காமல் இருக்கவும் முடியாதே…! முயன்று தன்னை இயல்பாக்கிக்கொண்டு அழைப்பை ஏற்றான்.

எடுத்ததுமே, “டேட் ஐம் ஸ்லீப்பி” என்று வராத கொட்டாவியை வலுக்கட்டாயமாக விட, “பப்பூ, லுக் அட் மீ!” என்றார் ரிச்சர்ட்.

அவனுக்கு என்னவோ அவரை நேர்க்கொண்டு பார்த்து பேசவே வெட்கமாக இருக்க, தனிமைக்கு வெகுவாய் மனம்   ஏங்கியது.

மகனது வினோத நடவடிக்கை அவருக்கு சந்தேகத்தை விதைக்க, “ஒய்… வாட்ஸ் ஹேப்பெனிங் ஓவர் தேர்?” என்றார் ஆர்வமாய்.

அவனுக்கு அதற்குமேல் மழுப்ப மனமில்லை. தன் மனதை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்ற, “டேட்… லவ் அட் பர்ஸ்ட் சைட் பத்தி என்ன நினைக்குறீங்க?” என்றான்.

“நான் என்ன நினைக்க இருக்கு?” அவர் புரியாமல் கேட்க, “ம்ச்! டேட்!!!” செல்லமாக அதட்டியவன்,

“டூ யூ பிலீவ் லவ் அட் பர்ஸ்ட் சைட்?” என்று தெளிவாக வினவ, அங்கே ஆர்ப்பாட்டமாய் சிரித்தார் ரிச்சர்ட்.

அவர் சத்தத்தில் தேவகி, “என்னாச்சு?” என்று வர, இங்கே ஜேகோப், “டேட்ட்ட்ட்…” என பல்லைக்கடித்தான்.

சிரித்து அடங்கியவர், “உன் அம்மாவை பார்த்த முதல் பார்வைலையே காதல் வந்து தான், அவளை தூக்கிட்டு வந்து இத்தனை வருஷமா கூடவே வச்சு லவ் பண்ணிட்டு இருக்கேன்! இது தெரிஞ்சுக்கூட நீ என்கிட்டே கேட்குற பாரு, ‘லவ் அட் பர்ஸ்ட் சைட்’ல நம்பிக்கை இருக்கான்னு!?” என்றவருக்கு சிரிப்பின் மிச்சம் இன்னும் இருந்தது.

அவர் பதிலில் அவன் முகம் ஒருமாதிரி பிரகாசிக்க, “எதுக்கு இப்போ கேட்குற பப்பூ?” என்றார் அவன் முகத்தை ஆராய்ந்தபடி.

“அது எப்டி டேட் பார்த்ததும் லவ் வரும்?” அவன் தெளிந்திருந்தாலும், இந்த ஒரு கேள்விக்கு இன்னும் தெளிவாய் விளக்கம் எதிர்ப்பார்த்தது அவன் மூளை.

“பார்த்ததும் வரது தானே ‘காதல்’? எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாம, நீ யார்? நான் யார்? எதுவும் தெரியாம பார்த்த நொடில ‘நீதான் என் வாழ்க்கை’ன்னு தோன வைக்குற அந்த உணர்வு தானே காதல்?”

“மாம்மியை நீங்க பார்த்தப்போ உங்களுக்கு அப்படி தான் இருந்துச்சா?”

“இல்ல” என்ற ரிச்சர்டை ஜேகோப் குழப்பமாக பார்க்க, “என்னோட இருபத்தியஞ்சு வருஷ வாழ்க்கைல ஏதோ ஒன்னு இல்லன்னு அதை நாடு நாடா தேடிட்டு சுத்திட்டு இருந்தேன். எப்போ உங்க அம்மாவை நான் கண்ணு முன்ன பார்த்தேனோ, அப்போ தெரிஞ்சுது, என் வாழ்க்கையோட ‘மிஸ்ஸிங் பீஸ்’ அவ தான்னு…! அவ இல்லாம இன்கம்ப்ளீட்’டா இருந்த என் லைஃப்’ப அவளை வச்சு தான் கம்ப்ளீட் பண்ணேன்!

அவ எனக்கு வேணுங்குற உணர்வு தான் என்னை எதை பத்தியும், யாரை பத்தியும் யோசிக்க விடாம அவளை கையோட தூக்கிட்டு போக வச்சுது!

‘அவ என் வாழ்க்கை’ இல்ல… ‘அவ மட்டும் தான் என் வாழ்க்கை’” மிகவும் ரசித்து சொன்ன ரிச்சர்டை சற்று பொறாமையாக தான் பார்த்தான் ஜேகோப்.

கணவனின் காலம் கடந்தும் கூட கரையாத காதலில் கண்கள் பனிக்க, அவர் கை சந்தில் தன் கைகளை கெட்டியாய் கோர்த்து தோளில் முகத்தை புதைத்துக்கொண்டார் தேவகி.

‘இது தானே! இந்த காதல் தானே அவரை கடல் கடந்து இவரோட இழுத்து வந்தது? இந்த காதல் தானே எத்தனை மனத்துயர் இருந்தாலும்  அவரை விட்டு விலகாமல் இழுத்துப்பிடிப்பது!!!

எத்தனை பேருக்கு கிட்டும் தன் மனைவியை பற்றி பெருமையாய், பூரிப்பாய், காதலாய் பேசும் கணவன்!?

உண்மையில் தேவகியின் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் ‘ரிச்சர்ட்!’

தந்தையின் பேச்சை கேட்டவனுக்கு, பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வரும் என்கையில், ஒரு வாரத்தில் காதல் வருவதொன்றும் விநோதமாய் படவில்லை.

அன்னையும் மகனும் அவரவர் எண்ணத்தில் இருந்தாலும், காரியத்தில் கண்ணாய், “பப்பூ? ஆர் யூ இன் லவ்?” என பாய்ன்ட்டை பிடித்தார் ரிச்சர்ட்.

அவன் பதில் சொல்லாது சிரிக்க, தேவகிக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. ரிச்சர்ட் தோளில் இருந்து விருட்டென எழுந்தவர், ‘டேபை’ தன்புறம் திருப்பி, “லவ் பண்றியாடா பப்பூ?” என்றார் மிதமிஞ்சிய ஆச்சர்யத்தில்.

இதழ்கடையோரம் வெளிவந்து காட்டிக்கொடுக்கப்பார்த்த வெட்கத்தை முயன்று மறைத்தவன்,

“ஐ கெஸ், யூ ஓன் இன் ஆர் சேலேஞ்!” சொல்லிவிட்டு முகத்தின் உணர்வுகளை வெளிக்காட்ட வெட்கம் கொண்டு சிகையை அழுந்தக்கோதி முகத்தை திருப்பிக்கொண்டான்.

ஆனால், தேவகிக்கு அது என்ன ‘சேலஞ்’ என்றே மறந்துபோனது அந்த க்ஷணம்.

“என்னடா சவாலு?” அவர் கேட்க, சற்று கடுப்பானவன், “மாம்… நான் இங்க வரப்போ நீங்க ஒரு சேலஞ் வச்சீங்கள்ள? அதான்!” என்றுவிட்டு முறைக்க, அப்போது அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.

இந்நேரத்தில் யார் என்ற புருவ சுளிப்புடன் பார்த்தவன், “ஓகே மாம்! நாளைக்கு பேசுறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான் தேவகி மறுக்க மறுக்க…!

எழுந்து சென்று அறைக்கதவை திறக்க, அவன் விழிகள் விரியும்படி அவனெதிரே நின்றிருந்தாள் ரோஷிணி, தலையை குனிந்தபடி.

“ரோஸ்!” அவன் அழைக்கும்முன், “மாடிக்கு வாங்க… பேசணும்!” என்றவள் விறுவிறுவென சென்றுவிட்டாள்.

அவள் நடவடிக்கைகள் எதையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. காதல் என்று உறுதியானப்பின் அவளுடன் நிகழும் முதல் சந்திப்பு அவனை புதுவித பரவசத்துடன் ஆட்டுவிக்க, அதே குஷியோடு மாடிக்கு விரைந்து சென்றான்.

அவனுக்கு முதுகு காட்டி கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் ரோஷிணி.

“ஹே ரோஸ்!” அவன் ஆரம்பிக்க, “நான் பேசணும் ஜாக்!” என்றாள் அவள்.

முதல்முறையாய் அவன் பெயரை ஒழுங்காக உச்சரிக்கிறாள். அவனுக்கு கேட்கவே நன்றாக இருந்தது.

யார் பேசினால் என்ன? பேசப்போவது ஒரே விஷயத்தை தானே என்றெண்ணி, அவள் பேச்சை கேட்க வாட்டமாய் மாடி தட்டில் ஏறி அவள் முகம் பார்க்கும்படி அமர்ந்தவன், “சொல்லு” என்றான் அவளை உரிமையாய் பார்த்தபடி.

முதலில் பேச தயங்கிய ரோஷிணியோ, சில நிமிடங்கள் பேச வருவதும், பின் அமைதியாவதுமாய் இருக்க, “சொல்லு ரோஸ்! நான் தானே?” என்றான் அவன், அவள் எட்டிப்பிடிக்க முயன்றபடி.

வெடுக்கென கரத்தை பின்னே இழுத்துக்கொண்டவள், “இதுக்குனே நாக்கை தொங்கப்போட்டுட்டு அலைவீங்களா? ச்சை!” என்று அருவெறுப்பாய் முகம் சுளிக்க, ஜேகோபினுள் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்த உணர்வுகள் எங்கோ தொலைந்து போயின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!