Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 3 1

அத்தியாயம்

இடி மின்னல் எல்லாம்

தோற்றே போகும், உந்தன்

விழி வீச்சின் முன்!!!



Advertisement

அசோக் கூட சிந்துவின் திருமணத்தில் அம்மா அவசரப் படுகிறார்களோ என்று தான் எண்ணினான். ஆனால் அதை வெளியே சொல்ல வில்லை. அம்மாவின் பயம் சிந்துவின் வாழ்க்கையை எண்ணி என்று தெரியுமாதலால் அமைதியாக இருந்தான்.

Advertisement

ஆனால் ஏகாம்பரம் சொன்னதைக் கேட்ட அமுதவள்ளி “வாயை மூடுங்க. உங்களைப் பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு வருது. இத்தனை வருஷம் என் பொண்ணை நீங்க ஆட்டி வச்சது போதும். இனியாவது அவ அவளா இருக்கணும். அவ கல்யாண விசயத்துல நீங்க ஏதாவது பேசுனீங்க நான் தற்கொலை பண்ணிக்குவேன்”, என்றாள். அதைக் கேட்டு ஆடிப் போனார் ஏகாம்பரம்.

Advertisement

“அசோக், ஏதாவது நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லு டா. வேற ஜாதி சனமா இருந்தா கூட பரவால்ல. பையன் மட்டும் நல்லவனா இருந்தா போதும்”, என்று அமுதவள்ளி கேட்டதும் “அம்மா திடீர்னு இப்படி கேட்டா என்ன பண்ண? எனக்கு யாரைத் தெரியும்?”, என்று திணறினான்.

Advertisement

“நீயும் ஏன் டா இப்படி பண்ணுற? என்னோட பயம் உனக்கும் புரியலையா? உன் பிரண்ட்ஸ்ல யாராவது நல்லவங்க இருக்காங்களா? அவன் ஏழையா இருந்தாலும் பரவால்ல டா. நல்லவனா இருந்தா மட்டும் சொல்லு. உன் கூட படிச்சவங்க, உன் கூட வேலை பாக்குறவங்க? யாராவது இருந்தா சொல்லு”, என்று சொன்னதும் ஆதவன் நினைவுக்கு வந்தான்.

“ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பொண்ணு கூட சுத்திட்டு இருக்காங்க. இது வரைக்கும் லவ்ன்னு ஒண்ணைப் பண்ணாம ஆதவன் இருக்கான் மா. ஆனா அவன் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பான்?”

“அந்த தம்பி நல்லவனா?”, என்று அமுதவள்ளி கேட்க “இவன் பிரண்ட்ஸ் எப்படி நல்லவங்களா இருப்பாங்க? இவனை மாதிரி குடிக்காரனா தான் இருப்பாங்க”, என்று அந்த நேரத்திலும் மகனைக் கண்டித்தார் ஏகாம்பரம்.

“உங்களை வாயை மூடச் சொன்னேன்”, என்று அவரை மிரட்டி விட்டு “அசோக் நீ சொல்லு டா. அந்த பையன் நல்லவனா?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

“என்னை விட நல்லவன் மா. ஆனா அவனோட குடும்பத்தைப் பத்தி எல்லாம் நான் ரொம்ப கேட்டுக் கிட்டது இல்லை. அவனைப் பத்தி வேற எதுவும் தெரியாது”

“பிள்ளை நல்லவனா இருந்தா அவனை வளத்த குடும்பமும் நல்லவங்களா தான் டா இருப்பாங்க. அந்த தம்பியை இங்க கூப்பிடு. நான் பேசுறேன்”

“அம்மா…”, என்று அவன் தயங்க “சொல்றதை செய் டா”, என்று சொன்னாள் அமுதவள்ளி. அடுத்த நொடி ஆதவனை போனில் அழைத்து விட்டான்.

சிந்து எப்போது மேடைக்கு வருவாள் என்று அவளைப் பார்க்க ஆவலாக காத்திருந்தான் ஆதவன். அவள் சற்று நேரத்தில் மற்றொருவனுக்கு மனைவியாகப் போகிறாள் என்பதெல்லாம் அவனுக்கு நினைவிலே இல்லை. அவன் வந்த வேலை என்ன? ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன என்று அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்போது அவனது போன் அடித்தது. அது கூட அவனுடைய கவனத்தில் இல்லை. “அண்ணே, போன் அடிக்குதுண்ணே. அண்ணே”, என்று ரங்கன் அசைக்கவும் தான் போனை எடுத்துப் பார்த்தான்.

“சாரி டா, சத்தமே கேக்கலை”, என்ற படி அவன் போனை எடுத்துப் பார்க்க “நீ எந்த கனவுலகத்துல இருக்கியோ”, என்று சலிப்புடன் சொன்னான் ரங்கன்.

“போடா”, என்றவன் போனைப் பார்த்து “டேய் ரங்கா. அசோக் தான் டா கூப்பிடுறான். இங்க தானே இருந்தான்? அப்புறம் எதுக்கு போன் பண்ணுறான்?”, என்று சொல்லிக் கொண்டே தலையை திருப்பிப் பார்த்தான். அனைவரும் அவர்களுக்குள் கதை பேசிக் கொண்டிருக்க அசோக் அவன் கண்ணிலே பட வில்லை.

“இப்படி தேடுறதுக்கு நீ அவர் கிட்ட போன்லே எங்க இருக்கன்னு கேட்டுறலாம்”, என்று ரங்கன் சொன்னதும் அதை அட்டண்ட் செய்தவன் “டேய் மச்சான் எங்க இருந்து டா கூப்பிடுற?”, என்று கேட்டான்.

“டேய் மாப்பிள்ளை, நீ உடனே மணமகன் ரூமுக்கு வாடா”

“அங்க எதுக்கு டா?”, என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் ஆதவன். அந்த கருவாயனைக் காண அவனுக்கு விருப்பம் இல்லை. கிளியைப் பிடித்து பூனை கையில் கொடுக்கிறார்களே என்ற கடுப்பில் இருந்தான்.

“நீ வா டா சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

“என்ன ஆச்சுண்ணே?”, என்று கேட்டான் ரங்கன்.

“அசோக் மணமகன் ரூமுக்கு வான்னு கூப்பிடுறான் டா. அந்த மணமகனைப் பாத்துட்டாலும். சரி நீ இரு. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்”

“நானும் வெளிய கொஞ்ச நேரம் நின்னுட்டு வரேண்ணே”, என்று சொல்லி  ரங்கனும் எழுந்தான்.

“தம்மடிக்க தானே போற? உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்”, என்று மிரட்டி விட்டு அசோக்கைத் தேடிச் சென்றான் ஆதவன். அங்கே அசோக் அவனது தாய் தந்தையுடன் நிற்பதைக் கண்டு ஒரு நொடி தேங்கி பின் அவர்களை நெருங்கினான். அவர்கள் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்று அவனுக்கு தோன்றியது.

“என்ன ஆச்சு மச்சான்? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“இங்க பெரிய பிரச்சனை டா. இந்த மாப்பிள்ளை நாய் சொல்லாம கொள்ளாம ஓடிருச்சு”

“என்ன டா சொல்ற?”, என்று உண்மையிலே அதிர்ந்து போய் தான் கேட்டான்.

“ஆமா டா. திடீர்னு அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கலை. எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு கூட தெரியலை”, என்று அசோக் வருத்தத்துடன் சொல்ல “ரொம்ப நல்ல விசயம்னு நினைச்சிக்கோ அசோக். அந்த கருவாயன் எல்லாம் எல்லாம் ஒரு ஆளுன்னு. அவன் போனதுக்கா வருத்தப் படுற? கொஞ்சம் கூட உன் தங்கச்சிக்கு அவன் பொருத்தமே இல்லை டா. கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் அதை தான் பேசுறாங்க”, என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டான் ஆதவன்.

அவன் அப்படியே சொல்ல ஏகாம்பரம் அவனை தீப்பார்வை பார்த்தார். அவருக்கு அவனை சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது. ஆனால் அவன் கோகுலை திட்டியதற்கே அமுதவள்ளிக்கு அவனை அதிகம் பிடித்து விட்டது.

அதுவும் அழகும் கம்பீரமும் கோதுமை நிறமும் என இருந்தவனை கண்டதும் மகளுக்கு இவன் தான் பொருத்தம் என்று எண்ணிக் கொண்டு “மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்கார்ல?”, என்று ஏகாம்பரத்திடம் சொல்லி ஒரு முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டாள்.

அசோக் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறி நின்றான். அவனுக்கு தங்கைக்காக என்றாலும் நண்பனை சூழ்நிலைக் கைதியாக்க விருப்பமில்லை. ஆதவனுக்கும் திருமணத்தை பற்றி கனவு இருக்கலாம். அவனது வீட்டினர் வேறு பெண் கூட பார்த்திருக்கலாம் என்று எண்ணினான்.

ஆனால் அமுதவள்ளிக்கு எந்த தயக்கமும் இல்லை. “தம்பி என் பொண்ணு வாழ்க்கையைக் காப்பாத்துங்க”, என்று அவன் முன்பு கரம் கூப்பி விட்டாள்.

இது வரை அள்ளிக் கொடுத்த மனைவியின் கைகள் இன்று யாரோ ஒருவரிடம் கெஞ்சவும் “வள்ளி உனக்கு அறிவே இல்லையா? கண்டவன் கிட்ட எல்லாம் கெஞ்சிட்டு இருக்க?”, என்று கோபத்துடன் கேட்டார் ஏகாம்பரம்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாத ஆதவன் “என்ன ஆச்சு ஆண்ட்டி? நான் என்ன பண்ணனும்?”, என்று குழப்பமாக கேட்டான்.

“நீ எனக்கு நிஜமாவே மாப்பிள்ளை ஆகணும் டா. என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கோ”, என்று நேரடியாகவே சொல்லி இருந்தான் அசோக்.

அவன் சொன்னதைக் கேட்டு ஆதவன் அதிர்ந்து விழிக்க “உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியமா பிடிச்சிருக்கு? நம்ம லெவல் என்ன, தராதரம் என்ன? குலம் கோத்திரம் தெரியாத எவனோ ஒருத்தனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுப்பீங்களா? என் மகளை நான் எப்படி வளத்தேன் தெரியுமா?”, என்று கத்தினார் ஏகாம்பரம்.

ஏற்கனவே அசோக் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த ஆதவனை ஏகாம்பரம் பேச்சு நடப்புக்கு கொண்டு வந்தது. அந்த நேரம் ஒரு தந்தையாக அவர் பேச்சு அவனுக்கு சரியாக பட்டது.

அதனால் “டேய் அசோக், உங்க அப்பா சொல்றது சரி தான். கல்யாணம் எல்லாம் நினைச்ச உடனே பண்ண முடியாது டா. கொஞ்சம் பொறுமையா இரு. உன் தங்கச்சிக்கு கண்டிப்பா வேற மாப்பிள்ளை கிடைப்பான்”, என்றான். ஆனாலும் அவளை விட்டுக் கொடுக்க வேண்டுமா என்று உள்ளுக்குள் அவனுக்கு தோன்றியது.

“அப்படி சொல்லாதீங்க தம்பி. இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கலைன்னா வேற எப்பவுமே நடக்காது. அவளைக் கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்று கெஞ்சினாள் அமுதவள்ளி.

“ஒரு வேளை அந்த பொண்ணு ஜாதகத்துல அப்படி இருக்குதோ?”, என்று எண்ணிக் கொண்ட ஆதவன் “ஆண்ட்டி இருந்தாலும் கல்யாணம் எல்லாம்….”, என்று தயங்கினான். ஆனால் அவன் உள் மனமோ “அவளை விட்டுறாத டா. யாருக்கும் அவளை விட்டுக் கொடுத்துறாத. இது கடவுள் உனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு”, என்று எச்சரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!