Skip to content
Post Views: 3,022
அத்தியாயம் 4
உந்தன் கூந்தலின் வருடலில்
மயில் தோகையின் மென்மையை
உணர்ந்தேன் நான்!!!
Advertisement
ஆதவனின் அக்கறையான பேச்சும், “உன் அப்பாவை விட உன்னை அவங்க நல்லா வச்சிக்குவாங்க”, என்ற தோழியின் பேச்சும் சேர்ந்து சிந்துவுக்கு ஆதவன் மேல் இருந்த பயத்தை கொஞ்சம் அகற்றி இருந்தது.
Advertisement
அதன் பின் ஒவ்வொருவராக வந்து மணமக்களுக்கு பரிசு கொடுக்க ஆரம்பித்தார்கள். அங்கே சிந்துவின் சொந்தங்கள் மட்டும் தான் வந்திருந்தார்கள். அதனால் நியாயப் படி பார்த்தால் அவள் தான் உறவினர்களை ஆதவனுக்கு அறிமுகப் படுத்தி வைக்க வேண்டும். ஆனால் அவள் தான் பயத்தில் உறைந்திருந்தாளே. அதனால் அங்கே சூழ்நிலை அமைதியிலே கழிந்தது. வருவது போவது யார் என்று தெரியாமலே சிரித்து சமாளித்தான் ஆதவன்.
Advertisement
ரங்கன் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க அவனை மேடைக்கு அழைத்தான் ஆதவன். அவன் வர மறுக்க அதைக் கண்ட அசோக் ரங்கனை இழுத்து வந்து ஆதவன் அருகில் மாப்பிள்ளைத் தோழனாக நிற்க வைத்தான்.
Advertisement
ரங்கன் மேடைக்கு வந்ததும் “சிந்து”, என்று மென்மையாக அழைத்தான் ஆதவன். தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கூடவே இவன் இந்த அளவுக்கு மென்மையாக பேசுவானா என்று எண்ணமும் அவளுக்கு வந்தது. வீட்டுக்கு போன உடன் அவன் அவனுடைய அப்பாவிடம் பேசும் முறையைக் கண்டால் என்ன அவனைப் பற்றி நினைப்பாளோ?
அவள் அவனையே குழப்பமாக பார்க்க “இவன் ரங்கன். என்னோட தம்பி”, என்று அறிமுகப் படுத்தினான்.
“ஐயையோ அப்படி எல்லாம் இல்லை மா தங்கச்சி. நான் அவங்க வீட்டு வேலைக்காரன். கார் டிரைவர்”, என்று அவசரமாக சொன்னான் ரங்கன்.
அதைக் கேட்டு சிந்து அவனை குழப்பமாகப் பார்க்க அஞ்சலியோ அவனை வியப்பாக பார்த்தாள். அவள் பார்வை சுவாரசியமாக அவன் மீது பட அதைக் கண்ட ரங்கன் “இந்த பொண்ணு என்ன ஒரு மாதிரி பாக்குது?”, என்று எண்ணிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
எல்லாரும் தன்னைப் பற்றி உயர்வாக சொல்ல வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால் ஆதவன் அவனைப் பற்றி உயர்வாக சொல்லியிருக்க அதை மறுத்து உண்மையைச் சொன்ன ரங்கனை அவள் வியப்பாக பார்த்தாள்.
“நீ என்ன சொன்னாலும் நீ எனக்கு தம்பி தான் டா”, என்ற ஆதவன் அவனை இழுத்து அணைத்துக் கொண்டான். பின் சிந்து புறம் திரும்பி “இவன் நிஜமாவே எங்க வீட்ல ஒருத்தன் தான் சிந்து. எப்பவும் என்னோட தம்பி தான்”, என்றான்.
அவள் அவனை மீண்டும் குழப்பமாக பார்க்க “என்ன? ஏதாவது கேக்கணுமா?”, என்று கேட்டான் ஆதவன்.
“ஆம்”, என்று தலையசைத்தவள் “இவங்களை நான் எப்படிக் கூப்பிடணும்?”, என்று கேட்டாள்.
அவள் முதல் முறை பேசிய பேச்சில் அப்படியே அவளைப் பார்த்த படியே நின்றான் ஆதவன். அவள் குரல் அவன் காதில் இனிமையாக வந்து விழ அவளையே ரசித்துப் பார்த்த படி இருந்தான். அவன் பார்வையில் முகம் சிவந்து தலை குனிந்து கொண்டாள் சிந்து. அவளுக்கு உணர்வே வராது என்று எண்ணி கோகுல் அவளை வேண்டாம் என்று சொல்லி ஓடியிருக்க அவளது உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தான் ஆதவன்.
“அம்மா அங்க பாத்தீங்களா, நம்ம சிந்து ஆதவன் கிட்ட பேசிட்டு இருக்கா மா”, என்று வியந்த படி சொன்னான் அசோக்.
“ஆமா டா, அதுவும் கொஞ்ச நேரத்துல எப்படி டா?”, என்று வியப்பாக கேட்டாள் அமுதவள்ளி. மகள் புது ஆட்களிடம் பேசவே மாட்டாள். அதனால் தான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
“ஆதவன் எப்பவும் அப்படி தான் மா. கலகலன்னு இருப்பான். சுத்தி இருக்குறவங்களையும் நல்லா பாத்துக்குவான். அவன் கிட்ட யார்னாலும் உடனே பேசிருவாங்க”
“இவர் மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு நாம நிஜமாவே அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும் டா”
“ஆமா ஆமா. நாம நன்றி சொல்லணும் தான். ஆனா அப்பா அவனை மதிக்கிறாரா? அங்க பாரு அப்பாவை. சோக சித்திரம் போல உக்காந்துருக்கார். சிந்து கல்யாணத்துல இப்படியா இருக்குறது? அழுது வடிஞ்சிட்டு இருக்கார்”, என்று சொல்லி தந்தையை முறைத்தான்.
“அவருக்கு வேற வேலையே இல்லை டா. அவர் இன்னைக்கு நேத்தா இப்படி இருக்கார்? அவர் என்னைக்கு கலகலன்னு சிரிச்சிருக்கார்? அவரை விடு. முதல்ல சிந்துக்கும் மாப்பிள்ளைக்கும் சுத்திப் போடணும். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அவ்வளவு பொருத்தமா இருக்காங்க”, என்று சொல்லி விட்டு சென்றாள் அமுதவள்ளி.
ஆதவன் சிந்துவையே ரசித்துக் கொண்டிருக்கவும் “அண்ணே நாங்களும் இங்க தான் இருக்கோம்”, என்றான் ரங்கன்.
“விடுடா”, என்று சொல்லி அசடு வழிந்த ஆதவன் சிந்து புறம் திரும்பி “உன்னை விட அவனுக்கு வயசு கூட தான், அதனால அண்ணான்னு கூப்பிடு”, என்றான். மீண்டும் அவள் தன்னை நிமிர்ந்து பார்ப்பாளா என்று அவன் பார்க்க அவளோ தலையை மட்டும் அசைத்தாள்.
“அண்ணே ரெண்டு பேரும் ஜம்முன்னு இருக்கீங்க”, என்று ரங்கன் வெளிப்படையாகவே புகழ அவனை அடக்கி அருகே நிறுத்திக் கொண்டான்.
அதன் பின் அசோக் மற்றும் ஆதவனின் நண்பர்கள் மேடையில் ஏற திடீர் மாப்பிள்ளையான ஆதவனை அனைவரும் ஓட்டித் தீர்த்தார்கள். இயல்பாக இருந்த ஆதவனை அஞ்சலிக்கும் அதிகம் பிடித்து விட்டது.
“அண்ணா சூப்பர் டி சிந்து. உனக்கு பெஸ்ட் லைப் கிடைச்சிருக்கு. இவங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாதாம். நான் நல்லா விசாரிச்சிட்டேன்”, என்று சிந்துவிடம் புகழ்ந்து தள்ள தள்ள சிந்துவுக்கே அவனை பிடித்து விடும் போல இருந்தது.
நண்பர்கள் மேடையில் இருப்பதைக் கண்டு அசோக்கும் அங்கே வர அங்கே சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. அனைவரும் குருப் போட்டோ எடுப்பதற்காக நின்றார்கள். சிந்துவின் அருகில் நெருங்கி நின்ற ஆதவன் இயல்பாக அவள் தோளில் கையைப் போட அவளுக்கு தான் படபடப்பாக இருந்தது.
அவள் பயத்தை உணர்ந்தவன் “கொஞ்ச நேரம் தான் சிந்து, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, என்று அவள் காதில் உதடு படும் படி சொல்ல முதல் முறை ஒரு ஆணின் தொடுகையில் தடுமாறி நின்றாள் சிந்து.
“திடீர்னு வந்த இடத்துல மாப்பிள்ளையா ஆகிட்ட. இங்க வச்சது அசோக்கோட டிரீட். நீ கல்யாண விருந்து எப்ப வைக்கப் போற? ஊர்ல ரிசப்ஷன் வைக்கும் போது எங்க எல்லாரையும் கூப்பிடணும்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்கள் அவனது நண்பர்கள்.
அவர்கள் சென்றதும் “என்ன டா இவங்க, இப்படிச் சொல்றாங்க? ஊருக்குப் போனா ரிசப்ஷன் எல்லாம் நடக்குமா என்ன? உங்க ஐயா என்ன பண்ணுவாரோன்னு நானே பீதியில இருக்கேன். இதுல எங்க பங்க்ஸன் வைக்கிறது?”, என்று ரங்கனின் காதைக் கடித்தான் ஆதவன்.
“அதானே? விஷயம் கேள்வி பட்டு ஐயா என்ன செய்வாறோன்னு எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு. இதுல பெரிய அளவுல ரிசப்சனா? அதுவும் பார்ட்டி வேற? நடந்த மாதிரி தான்”, என்றான் ரங்கன்.
அதன் பின் ஒரு வழியாக உறவினர்கள் வருகை குறைந்ததும் மதிய உணவும் முடிந்தது. அஞ்சலியும் தோழியிடம் சொல்லி விட்டு அவளது பெற்றோர்களுடன் கிளம்பினாள்.
தோழியின் பிரிவில் சிந்து கண்கள் கலங்க “பைத்தியம், அண்ணா உன்னை நல்லா பாத்துக்குவாங்க டி. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நான் என்னைக்காவது கண்டிப்பா உன்னைப் பாக்க வரேன் சரியா?”, என்று தோழியிடம் சொன்னவள் ஆதவனிடமும் விடை பெற்றாள்.
கூடவே அவள் கண்கள் ஆதவனின் அருகில் நின்றிருந்த ரங்கன் மேலும் பதிந்து விலக அவனுக்கு தான் அவள் பார்வை திகைப்பாக இருந்தது.
அவள் அங்கிருந்து சென்றதும் “எண்ணே இந்த பொண்ணு பேர் என்ன?”, என்று கேட்டான்.
“அண்ணே, அவ பேர் அஞ்சலி”, என்று சிந்து சொல்ல ஆதவன் அவளை வியப்பாக பார்த்து விட்டு “எதுக்கு டா கேக்குற?”, என்று ரங்கனிடமும் குழப்பமாக கேட்டான். ஏனென்றால் ரங்கன் எப்போதும் பெண்களை எல்லாம் சைட் அடிக்க மாட்டான். அவன் பார்க்கும் பெண்கள் எல்லாம் சினிமா நடிகைகளாக தான் இருக்கும். அதனால் இப்போது அஞ்சலியைப் பற்றிக் கேட்டதும் அவனுக்கு வியப்பாக இருந்தது.
“சும்மா தான் கேட்டேன்”, என்று சொல்லி சமாளித்த ரங்கன் “சரிண்ணே, நீ தங்கச்சியோட அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு தங்கச்சியை கூட்டிக்கிட்டு வா. நான் காரைத் திருப்பி வைக்கிறேன். நாம ஊருக்கு இப்பவே போகணும்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான். ஆதவனும் அதன் பின் அஞ்சலியைப் பற்றி மறந்து விட்டான். தன்னருகே நின்றவளைத் திரும்பிப் பார்த்த் ஆதவனுக்கு அவள் சோர்வாக இருப்பது கண்ணில் பட்டது.
“அந்த சேர்ல போய் கொஞ்ச நேரம் உக்காரு சிந்து. நீ ரொம்ப டயர்டா தெரியுற”, என்று ஆதவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்து தலையசைத்தவள் வேகமாக அங்கே சென்று அமர்ந்து கொண்டாள். கால் வலி உயிர் போக நின்றவள் அவன் அப்படிச் சொல்லவும் சந்தோஷமாக அமர்ந்து கொண்டாள்.
ஆதவன் மட்டும் தனியே நிற்க அப்போது அங்கே அசோக் வந்தான். அவனிடம் “நான் ஊருக்கு போகணும் டா. இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. என் நிலைமை உனக்கு புரியுதா?”, என்று கேட்டான் ஆதவன்.
“ஆமா டா, உன் வீட்ல முதல்ல சமாதானம் பண்ணனும். எல்லாரும் போகலாம். நான் அம்மா அப்பாவைக் கிளம்பச் சொல்றேன். நாங்களும் வந்து பேசினா தான் எல்லாம் சரியா இருக்கும்”, என்றான் அசோக்.
“இல்லை டா அசோக், நான் முதல்ல நான் போறேன். அங்க போய் நிலைமையை சமாளிக்கணும். நாங்களே அன்டைம்ல தான் அங்க போவோம். அப்ப நீங்க வந்தா நல்லா இருக்காது”
“நீ மட்டும் முதல்ல போறியா? சரி டா. அப்படின்னா சிந்துவை நாங்க பின்னாடி அழைச்சிட்டு வரட்டுமா?”
“அவ என் கூட வந்தா தான் எனக்கு மரியாதை மச்சான். அதே மாதிரி என் கூட வரது தான் அவளுக்கும் மரியாதையா இருக்கும்”, என்று சொல்ல தன் தங்கைக்காக யோசிக்கும் அவனை பார்த்து அசோக்குக்கு நிம்மதியாக இருந்தது.
error: Content is protected !!