Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 7 2

“ஐயா எந்திச்ச உடனே வரோம்னு அண்ணன் கிட்ட சொல்லு ரங்கா”

“சரிங்கம்மா, நான் வரேன். மண்டபத்தை அலங்கரிக்கணும்”



Advertisement

“ரங்கா”

Advertisement

“அம்மா”

Advertisement

“நேத்து ஆதவன் அந்த பொண்ணோட வரும் போது அண்ணனும் அண்ணியும் ஏத்துகிட்டாங்களா?”

Advertisement

“அதை ஏன் கேக்குறீங்க? ஐயா கோபப் படுவார்னு நாங்க பயத்துல தான் வந்தோம். ஆனா ஐயா ஒண்ணுமே சொல்லலை. பொண்ணு வேற அவ்வளவு அழகு. வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டாங்க. சரி மா நான் வரேன்”, என்று சொல்லி விட்டு ரங்கன் கிளம்ப சரி என்னும் விதமாய் தலையசைத்தாள் வேணி.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம். இப்படி ஒரு நிகழ்வு அவள் கனவிலும் எண்ணாதது. என்னைக்கு இருந்தாலும் ஆதவன் தான் தன்னுடைய பெண்ணுக்கு கணவன் என்று அவள் இறுமாப்பில் இருக்க அவளது இறுமாப்பு எல்லாம் தவிடு பொடியானது.

வாக்கிங் போவதற்காக எழுந்து வந்த விஸ்வம், கையில் பால் செம்பை வைத்த படி அசையாமல் நின்ற மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார்.

“என்ன ஆச்சு வேணி, சிலை மாதிரி நிக்குற?”

“ஆன், எதிர் பாக்காதது எல்லாம் நடக்குது. அதான் மலைச்சு போய் இருக்கேன்”

“என்ன சொல்ற நீ? என்ன நடந்துச்சு?”

“நம்ம ஆதவன்….”

“ஆதவனுக்கு என்ன?”

“ஏதோ ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானாம்? இன்னைக்கு சாயங்காலம் வரவேற்பு வைக்கப் போறாங்களாம்”

“கனவு கண்டியா டி?”

“ப்ச், இப்ப தான் ரங்கன் வந்து சொல்லிட்டுப் போறான்”

“நிஜமாவா சொல்ற?”

“ஆமா, அண்ணனும் அண்ணியும் நம்மளை வரச் சொல்லிருக்காங்க”

“அப்புறம் என்ன? வா போகலாம்”

“என்னங்க, சாதாரணமா வா போகலாம்னு சொல்றீங்க? நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன்?”

“இது பெரிய விஷயம் தான். ஆனா உன்னோட அண்ணன், அண்ணி ஏத்துகிட்டப் பிறகு நாம பேச என்ன இருக்கு? ஆதவன் நம்ம வளத்த பையன். அவன் ஏதாவது தப்பு செஞ்சா நம்மளால தண்டிக்க முடியுமா? அவனும் நம்ம பையன் மாதிரி தான். நல்லா இருக்கட்டும். நம்மளோட உதவி தேவையா இருக்கப் போய் தான் வரச் சொல்லிருக்காங்க. வா போகலாம். நான் சக்தியை எழுப்புறேன்”

“வேண்டாம், அவன் நைட் லேட்டா தான் வந்தான். நம்ம ரெண்டு பேரும் முதல்ல போயிட்டு வருவோம்”, என்று வேணி சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள்.

அவர்களை வரவேற்ற ரத்தினம் “வாங்க மாப்பிள்ளை, வா மா”, என்று இருவரையும் வரவேற்று அமர வைத்தார். அங்கே மங்கையும் வந்து விட “ரங்கன் சொன்னனா வேணி? உன் மருமவன் திடீர்னு இப்படி ஒரு காரியம் செய்வான்னு நான் நினைக்கவே இல்லை”, என்றார் ரத்தினம்.

“கேள்விப் பட்டேண்ணே. இதுல என்ன இருக்கு? நம்ம ஆதவனுக்கு அந்த பொண்ணுன்னு தான் கடவுள் எழுதி வச்சிருக்காரோ என்னவோ? ஆதவன் நம்ம வீட்டுப் பிள்ளை. அவனை விட்டுக் கொடுத்துற முடியுமா?”, என்று புன்னகை முகமாக கேட்டாள் வேணி.

“அடப்பாவி வீட்ல வச்சு முகத்தை தூக்கினா. இப்ப புன்னகை அரசி மாதிரி பேசுறாளே?”, என்று மனைவியைப் பற்றி எண்ணிக் கொண்டார் விஸ்வம்

“நானும் அப்படி தான் மா நினைச்சேன். சரி சாயங்காலம் வரவேற்பு வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இல்லைன்னா நம்ம ஊர்க்காரங்க புறணி பேச ஆரம்பிச்சிருவாங்க”, என்றார் ரத்தினம்.

“ஆமாண்ணே, நீங்க முடிவு செஞ்சது தான் சரி. ஆமா என் மக எங்க?”, என்று கேட்டாள் வேணி.

“வா வேணி கூட்டிட்டு போறேன், என் மருமக அவ்வளவு அழகு. இன்னைக்கு எல்லாரும் புகழ்ந்து தள்ளப் போறாங்க பாரு. நம்மளே பாத்துருந்தா கூட இவ்வளவு அழகு பொண்ணைப் பாத்துருக்க முடியாது”, என்று சொன்ன மங்கை வேணியை சிந்துவைப் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டா வெறுப்பாக அவளுடன் சென்றாள் வேணி.

காலையில் கண் விழித்த சிந்து முதலில் பார்த்தது ரங்கநாயகியைத் தான். பயந்து போய் அவரைப் பார்க்க “பயப்படாதே டா கண்ணு. இது உன் வீடு. சரி பாத்ரூம்ல போய் முகம் கழுவிட்டு வா. உள்ளார பல் பொடி, சோப், துண்டு எல்லாம் இருக்கு. இப்போதைக்கு இந்த நைட்டியை போட்டுட்டு வா. உன்னைப் பாக்க நம்ம சாதி சனம் எல்லாம் வந்துருக்கு”, என்றதும் அவசரமாக அந்த குளியல் அறைக்குள் சென்றாள்.

இவ்வளவு நாள் வெஸ்டெர்ன் பாத்ரூம் உபயோகப் படுத்தியதால் காலைக் கடன் முடிக்க அவளுக்கு சிரமமாக இருந்தது. ஒரு வழியாக அவசரமாக குளித்து முடித்து அந்த நைட்டியை எடுத்தாள். “வெறும் நைட்டி மட்டும் கொடுக்குறாங்க? கடவுளே உள்ளே என்னத்தை போட?”, என்று எண்ணி நைட்டியைப் போட்டு விட்டு துண்டை மூடிக் கொண்டு வெளியே வந்தாள்.

அங்கே பாட்டி இருக்க தயக்கமாக அவரை ஏறிட்டாள். “குளிச்சிட்டியா? சரி இதோ நீ போட துணியை உன் அத்தை எடுத்து வச்சிருக்கா. சேலை கட்டத் தெரியுமா?”

“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்”

“என்னை உரிமையா பாட்டின்னு சொல்லு கண்ணு. இல்லை உன் புருஷன் மாதிரி ஆச்சின்னு சொல்லு”

“சரி ஆச்சி”

“இப்ப எப்படி இருக்கு? சரி நீ துணி மாத்து. நான் வெளிய இருக்கேன்”, என்று அவளுக்கு தனிமை கொடுத்து விட்டுச் செல்ல நிம்மதியாக மூச்சு விட்டவள் அந்த அறைக் கதவை தாழிட்டு விட்டு அவளுக்கு கொடுத்திருந்த உடையைப் பார்த்தாள்.

ஒரு பெரிய தாம்பூலத் தட்டில் உள்ளாடை முதல் கொண்டு அவளுக்கு தேவையான அனைத்தும் இருக்க, அதை எடுத்து அணிந்து கொண்டாள். தலை ஈரமாக இருக்க சிறிது முடியை மட்டும் எடுத்து கிளிப்பில் அடக்கி விட்டு மற்றதை விரித்து விட்டாள். பின் முகத்துக்கு சிறிது பவுடரை எடுத்து பூசிக் கொண்டவள் அவள் நேற்று அணிந்திருந்த நகைகளில் இருந்து ஒரு பெரிய செயினை மட்டும் எடுத்து அணிந்து கொண்டாள்.

பின் சிறிது நேரம் கண்ணாடியைப் பார்த்த படியே அமர்ந்து விட்டாள். அவளுடைய கழுத்தில் கிடந்த புது மஞ்சள் தாலி அவளுக்கு தனிப் பொலிவைக் கொடுத்தது. “நேத்துப் பாக்கும் போது கூட என் முகம் இவ்வளவு அழகா தெரியலையே. இன்னைக்கு மட்டும் எப்படி? இந்த ஒரு கயிறு இவ்வளவு அழகைத் தர முடியுமா?”, என்று வியந்து போனாள்.

கூடவே அதைக் கட்டியவனின் நினைப்பும் வந்தது. “யாரு டா நீ? இவ்வளவு நாள் எங்க இருந்த? திடீர்னு எப்படி என் வாழ்க்கையை திசை மாற்றின?”, என்று எண்ணிக் கொண்டாள்.

அப்போது அவளுடைய போனுக்கு மெஸ்ஸேஜ் வர அதை எடுத்துப் பார்த்தாள். அஞ்சலி தான் அனுப்பியிருந்தாள். “சிந்து பேபி, அங்க எல்லாம் ஓகே தானே? நீ நல்லா இருக்க தானே? உன் பக்கத்துல இருக்க முடியலைன்னு கஷ்டமா இருக்கு. ஆனா நான் உன் கூட இல்லைன்னாலும் நான் சொன்னதை மறந்துறாத. எப்பவும் தைரியமா இருக்கணும். உனக்கு நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சிருக்கார். ஆதவன் அண்ணனைப் பாக்கும் போது ரொம்ப நல்லவங்களா பிரண்ட்லியா தெரியுது. நம்ம அசோக் அண்ணா ஃபிரண்ட்னாலே நல்லவங்களா தான் இருப்பாங்கன்னு உனக்கு தெரியும் தானே? அதனால அவங்களைக் கண்டு பயப்படாதே. பிரீ டைம் பேசு டி. எனக்கு அப்ப தான் நிம்மதியா இருக்கும்”, என்று அனுப்பி இருந்தாள்.

அதைப் படித்துப் பார்த்த சிந்துவுக்கு தோழியின் கவலை புரிய “நான் ஓகே தான் டி. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அப்புறமா கால் பண்ணுறேன்”, என்று அனுப்பி விட்டு போனை வைக்கும் போது தான் போனில் இருந்த ஏ. டி. எம் கண்ணில் பட்டது.

தந்தையின் நினைவில் அதை கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது தான் அதில் இருந்த பேப்பர் கண்ணில் பட்டது. அதை விரித்துப் பார்த்தாள்.

கோகுல் எழுதிய கடிதத்தைப் படித்ததும் அவள் என்ன உணர்ந்தாள் என்று கூட புரிய வில்லை. அவன் தன்னை அவனுக்கு பொருத்தமில்லை என்று சொல்லி இருப்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

அதை அவசரமாக போட்டோ எடுத்து அஞ்சலிக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த பேப்பரை கிழித்து ஜன்னல் வழியாக தூரப் போட்டாள்.

தோழி அனுப்பியதை படித்த அஞ்சலி “அந்த காக்கா பயலுக்கு அவ்வளவு தான் டி லக். உன்னை இழந்ததுக்கு அவன் தான் வருத்தப் படணும். ஆனா நீ அவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்ட. அதனால ஹேப்பியா இரு”, என்று சிந்துவுக்கு அனுப்பி வைத்தாள்.  அஞ்சலி அனுப்பிய மெஸ்ஸேஜ் படித்து சிந்துவுக்கு சிரிப்பு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!