Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 22 2

“துரை இங்க நிக்காம எங்க போனீங்க? எல்லாரும் போகட்டும் உன்னை கவனிச்சிக்கிறேன்”, என்று ஆதவன் மிரட்ட ரங்கன் முகத்தில் அழகான புன்னகை. இப்போது அவனது தனிமை உணர்வு அவனை விட்டு விடை பெற்றுச் சென்றிருந்தது.

ரங்கநாயகி கையில் குழந்தையைக் கொடுத்த ஆதவன் அவருடைய காதில் குழந்தையின் பேரைச் சொல்ல “இப்ப என்னோட கொள்ளுப் பேரனுக்கு பேர் வைக்கப் போறேன்”, என்று ஆரம்பித்த ரங்கநாயகி “சித்தார்த் சித்தார்த் சித்தார்த்”, என்று மூன்று முறை உச்சரித்து அவன் வாயில் சீனித் தண்ணீரை வைக்க அனைவருக்குமே அந்த பெயர் பிடித்தது.



Advertisement

மற்றவர்களும் குழந்தையின் பெயரை சொல்ல சிந்து முகத்தில் அன்று முழுவதும் புன்னகை உறைந்திருந்தது. குழந்தைக்கு செயின், மோதிரம், காப்பு, கொலுசு, கம்மல் என்று அனைவரும் போட்டார்கள். ஏகாம்பரமோ பேரனுக்கு என்று ஒரு தங்க செட்டையே கொண்டு வந்து கொடுத்தார். அதில் செயின், மோதிரம், கம்மல், பிரேஸ்லெட், கைக்கு காப்பு, இடுப்பில் போடும் கொடி என அனைத்தும் இருந்தது.  காலில் போடும் கொலுசு கூட அவர் தங்கத்தில் செய்யச் சொல்லி வாங்கி வந்திருந்தார்.

Advertisement

“நகைக்கடைக்காரர் பொண்ணைக் கட்டினேன்னு தான் பேர். உன் அப்பா என் இடுப்புக்கு ஒரு தங்க கொடி போடலாம்ல? இருந்தாலும் இந்த பம்பரத்துக்கு மருமகன்னா இளக்காரம் தான். பேரனுக்கு மட்டும் சீரைப் பாரு”, என்று சொல்லி மனைவியைச் சீண்டினான் ஆதவன்.

Advertisement

அவனை முறைத்த சிந்து “குட்டி இடுப்பு குட்டியா இருக்கு. ஆனா இங்க இப்படியா? உங்க இடுப்புக்கு கொடி எங்க பத்தும்? இரும்புல ஒட்டியாணம் தான் செய்யணும்”, என்று அவனை வாரினாள் அவன் மனைவி.

Advertisement

தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தில் குழந்தைக்கு என வாங்கி இருந்த பிரேஸ்லெட்டை ரங்கன் போட “எதுக்கு டா இதெல்லாம்?”, என்று நெகிழ்ந்து போனான் ஆதவன்.

அஞ்சலி மட்டும் ஒன்றுமே வாங்கி வைக்க வில்லை. அவள் கடைக்குச் சென்றால் அல்லவா வாங்க முடியும்? யாரும் அவளை அழைத்துச் செல்ல வில்லை. இப்போது அனைவரும் குழந்தைக்கு கிஃப்ட் கொடுக்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அப்போது யாரும் அறியாமல் அவள் கையில் ஒரு கவரைத் திணித்தான் ரங்கன். அவள் வியப்பாக அவனைப் பார்க்க கொடு என்னும் விதமாய் சைகை செய்தான்.

மலர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தவள் அந்த கவரை சிந்துவிடம் கொடுத்தாள். சிந்துவுக்கு சிறு கேள்வி வந்தாலும் அந்த இடத்தில் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவள் “தேங்க்ஸ் டி”, என்று சொல்லி தோழியைக் கட்டிக் கொண்டாள். சிந்துவுக்கு அது ரங்கன் கொடுத்தது என்று தெளிவாக புரிந்தது. ரங்கனின் மனதும் புரிந்தது.

பரிசுகள் கொடுக்கும் போதே குழந்தை உறக்கத்திற்குச் செல்ல சிந்து அவனைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றாள். ஆதவனுக்கு மகன் மற்றும் மனைவியை பின்பற்றிச் செல்ல தான் ஆசை. ஆனால் அவன் வீட்டு விழா என்பதால் பந்தியைக் கவனிக்கச் சென்றான்.

அனைவரும் உண்டு விட்டு கிளம்ப வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தார்கள். அதில் அஞ்சலி மற்றும் ரங்கனும் அடக்கம். அவர்களும் அந்த வீட்டு ஆட்கள் தானே?

அன்று இரவு தங்களின் அறைக்குள் வந்த ஆதவன் சிந்துவைக் காதலாக பார்த்தான். குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்த அவள் முகம் யோசனையில் இருந்தது.

அவள் அருகே அமர்ந்தவன் “என்ன ஆச்சு சிந்து?”, என்று கேட்டான்.

அஞ்சலி ரங்கன் பற்றிய அனைத்தையும் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவன் “நீ சித்துவை தூங்க வை. நான் ரங்கன் கிட்ட பேசிட்டு வரேன்”, என்றான்.

“பாத்து பேசுங்க, நமக்கு ரெண்டு பேருமே முக்கியம்”, என்று சொன்ன சிந்துவை பார்த்து சிரித்து விட்டுச் சென்றான்.

தனதறைக்குள் வந்த ஆதவனைக் கண்ட ரங்கன் “வாண்ணே”, என்றான்.

“என்ன டா ஒரு மாதிரி இருக்குற?”, என்று கேட்ட படி அவனுடைய கட்டிலில் அவன் அருகே அமர்ந்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணே”

“சரி அதை விடு. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“என்னண்ணே?”

“நாளைக்கு நாம எல்லாரும் நம்ம பக்கத்து ஊருக்கு போகணும்”

“அங்க எதுக்குண்ணே?”

“உனக்கு பொண்ணு பாக்கத் தான்”

“அண்ணே”, என்று அதிர்ந்து போய் அழைத்தான்.

“என்ன டா?”

“எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்ணே”

“ஏன் டா?”

“என்னை இந்த வீட்ல இருந்து பிரிக்கப் பாக்குறியா?”

“நீ ஏன் அப்படி நினைக்கிற? உன் பொண்டாட்டியும் இங்க தானே இருக்கப் போறா?”

“அதெல்லாம் வேண்டாம்ணே”

“என்ன வேண்டாம்? நமக்கு தெரிஞ்சவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அடுத்த மாசம் அசோக்கும் கல்யாணம். நீ மட்டும் இப்படியே இருக்கப் போறியா? உன்னால வீட்ல எல்லாருக்கும் கஷ்டம்”

“கஷ்டமா இருந்தா நான் வேணா வீட்டை விட்டு போயிறேன்”

“அறைஞ்சேனா பாரு. ஏன் டா நான் உனக்கு பொண்ணு பாக்க கூடாதா? நாங்க தான் உன் மேல அன்பா இருக்கோமா? ஆனா நீ உன் மேல உரிமை எடுக்க கூட எங்களை விட மாட்டல்ல?”

“ஐயோ அப்படி எல்லாம் இல்லைண்ணே? நீங்க என்னைக் கொன்னா கூட சந்தோஷமா செத்துப் போவேன்”

“ஆனா கல்யாணம் பண்ண மாட்ட. அப்படித் தானே?”, என்று அவன் கேட்க ரங்கன் தலை குனிந்தான்.

“உன் மனசுல யாரும் இருக்காங்களா ரங்கா?”

“அப்படி எல்லாம் இல்லைண்ணே”

“அப்புறம் ஏன் டா? சரி நான் நேரடியாவே கேக்குறேன். உனக்கும் அஞ்சலிக்கும் இடைல என்ன இருக்கு?”

“ஐயோ, ஒண்ணுமே இல்லைண்ணே”, என்று பதறினான் ரங்கன்.

“பதறாத. அஞ்சலி உன்னை விரும்புறா. நீ அவளை விரும்புறியா இல்லையா?”

“இல்லை”, என்று பட்டென்று வந்தது அவன் பதில்.

“ஓஹோ, எங்க இப்ப சொல்லு பாப்போம்”, என்று சொன்னவன் அவனுடைய கையை எடுத்து தன் தலை மீது வைத்து சத்தியம் செய்யச் சொன்னான்.

“அண்ணே என்ன பண்ணுற?”, என்று அவசரமாக கையை உருவிக் கொண்டான் ரங்கன். ஆதவனுக்கு அவன் மனது புரிந்தது.

“நான் அஞ்சலி வீட்ல பேசுறேன் டா”, என்று ஆதவன் சொல்ல “வேண்டாம் அண்ணே, அவ நல்லா படிச்சிருக்கா. நான் அவளுக்கு பொருத்தமே இல்லை. வேற ஏதாவது படிச்சு நல்ல வேலைல இருக்குறவனை அவளுக்கு பாக்குறது தான் சரியா இருக்கும்”, என்றான் ரங்கன்.

“இதுக்கு தான் அப்பா உன்னை படிக்க அவ்வளவு கெஞ்சினார். படிப்பு இல்லைன்னா என்ன டா? நீ நல்ல உழைப்பாளி. அதுவும் அஞ்சலிக்கே உன்னைப் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன?”

“அவ நல்லா இருக்கணும் அண்ணே. நல்லா ஆளா வந்தா தான் அவ குடும்பத்தையும் அவனால பாத்துக்க முடியும். பாவம் அவங்களுக்கு சின்ன வீடு தான் இருக்கு. ரெண்டு தங்கச்சிங்க வேற? ஒரு நல்ல பையன் வந்தா அஞ்சலி குடும்பத்தை நல்லா பாத்துக்குவான் அண்ணே”

“ஏன் அதை நீயே செய்ய வேண்டியது தானே?”

“நானா? நான் எப்படி?”

“எப்படின்னு நான் சொல்றேன். உனக்கு அஞ்சலியை பிடிக்கும் தானே?”

“அஞ்சலி சினிமா ஹீரோயின் அஞ்சலி மாதிரியே இருகால்லண்ணே? அப்புறம் எப்படி பிடிக்காம போகும்?”, என்று ரங்கன் சொல்ல ஆதவன் வாய் விட்டே சிரித்தான்.

“இவ்வளவு ஆசையை வச்சிக்கிட்டு தான் அவளை விரட்டிக் கிட்டு இருக்கியா? சரி நீ தூங்கு, நான் எல்லாம் பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்த ஆதவன் தாய் தந்தையைப் பார்க்கச் சென்றான்.

அவர்களிடம் ரங்கன் மற்றும் அஞ்சலிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசியவன் ஒரு துணிக்கடையை ரங்கன் பெயரில் ஆரம்பித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னான்.

ரத்தினம் சரி என்று சொல்லவே எங்கே ஆரம்பிக்க என்று பேச்சு ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!