Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 2 2

புலி வருது புலி வருது என்பது போல அவர்கள் பெண் பார்க்க வரும் நாளும் வந்தது. காலையில் இருந்தே அலப்பறையைக் கூட்டிக் கொண்டிருந்த வீட்டாள்களை பார்த்தே அதை தெரிந்து கொண்டாள் பூங்கொடி. அவள் முகத்தில் சிரிப்பென்பதே இல்லாமல் உர்ரென்று இருந்தது. அவளைக் கண்டு கொள்ள கூட ஆள் இல்லை.

பெண்கள் அனைவரும் வருபவர்களுக்கு முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்களை செய்ய ஆண்கள் அனைவரும் வீட்டை ஒதுங்க வைத்தார்கள்.



Advertisement

பூங்கொடியோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாலும் ஏனோ தானோவென்று அமர்ந்திருந்தாள். “ஏட்டி எதுக்கு இப்படி உக்காந்துருக்க? போய் குளிக்கலாம்ல?”, என்று சொன்னாள் மணியம்மை.

Advertisement

“கிழவி, கண்ணுல சிக்காம போயிரு. இருக்குற வெறில உன்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டேன்”, என்று கத்தினாள்.

Advertisement

“அடியாத்தி, இந்த சின்னக் கழுதைக்கு கோபத்தை பாரு? இப்ப கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்றவ தான் நாளைக்கு புருஷன் பின்னாடியே திரியுவாளுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார். தாயை முறைத்துப் பார்த்த படி அமர்ந்திருந்தவளுக்கு அடிவயிற்றில் பயம் கிளர்ந்தது.

Advertisement

சினிமாவில் பார்த்திருந்த ரவுடி போலீஸ் போல ஒரு உருவம் அவளுடைய மனதில் உலா வந்து அவளை மிரட்டி பயமுறுத்தியது. இந்த சின்னப் பிள்ளைகள் வேறு அத்தையிடம் போலீஸ்காரங்க அப்படி, இப்படி என்று சினிமாவில் பார்த்ததாக சொல்ல அவளுக்கு பீதி கிளம்பியது.

“கடவுளே பாத்தது தான் பாத்தாங்க, ஒரு பேங்க் ஆபிசரையோ, இல்லை டீச்சரையோ இஞ்சினீயரையோ பாத்தாங்களா? முக்காவாசி படத்துல போலீசை கெட்டவனா தான் காட்டுறாங்க. அப்படி இருக்க இவன் மட்டும் எப்படி நல்லவனா இருப்பான்? ஆளும் பாக்க டெரரா இருப்பானோ? அப்படி இருந்தா அவன் கிட்ட போய் எப்படி என்னை படிக்க வைங்கன்னு சொல்ல முடியும்?”, என்று மனதுக்குள் பயந்து கொண்டே இருந்தாள்.

அவர்கள் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு அவளை குளிக்கச் சொல்லி விரட்டினாள் மங்களம். அவள் குளித்து முடித்து வந்ததும் அவளுக்கு அலங்காரம் ஆரம்பித்தது. மூன்று அண்ணிகளும் சேர்ந்து அவளை பம்பரமாக சுழல விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அலங்காரம் முடிந்து அமர்ந்திருந்தவளைக் கண்டு பெண்களுக்கு பொறாமை வரவில்லை. தாயின் அன்போடு அவளை ரசிக்க தான் செய்தனர்.

“எங்க கண்ணே பட்டுரும் போல இருக்கு பூங்கொடி”, என்றாள் தாரணி.

“நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்ன?”, என்று மைதிலி சொன்னதும் தலையை ஆட்டி விட்டு அமர்ந்திருந்தாள்.

“நாம எல்லாம் இருக்கும் போது அவ சந்தோசத்துக்கு என்ன குறை வந்துறப் போகுது?”, என்று கேட்டாள் மங்களம்.

“இப்படியே இரு பூங்கொடி. எதுவும் பண்ணி அலங்காரத்தை கெடுத்துக்காத. அப்புறம் உன் அண்ணன்களுக்கு எங்களால பதில் சொல்ல முடியாது. வரவங்க முன்னாடி எங்களைக் கஷ்டப் படுத்திறாத”, என்றாள் மைதிலி.

பூம்பூம்மாடு போல தலையாட்டினாள். “சமத்து”, என்று அவளைக் கொஞ்சி விட்டு அவளுடைய அலங்காரத்தை மீண்டும் சரி செய்து விட்டு பெண்கள் மூவரும் கீழே சென்றார்கள். மணியம்மை மகளைக் காண வந்தார். மகளின் அழகில் அவருக்கு கண்ணே பட்டு விடும் போல இருந்தது.

அவர் ஏதோ பேச வர “கிழவி ஓடிப் போயிரு. இல்லை மண்டையை உடைச்சிருவேன்”, என்று மிரட்டினாள்.

“நீ செஞ்சாலும் செய்வ டி ஆத்தா”, என்று புலம்பி விட்டு மணியம்மையும் கீழே வந்து விட்டார்.

ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர். கார் சத்தம் கேட்டதும் மாடியில் இருந்தே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் பூங்கொடி. இரண்டு ஆண்கள், ஒரு பெண் மூவரும் வீட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் தலை தான் தெரிந்தது. முகம் தெரிய வில்லை.

மாப்பிள்ளை வீட்டினரை ஆண்கள் நால்வரும் வரவேற்று அமர வைத்தார்கள். அப்போது பெண்களும் அங்கே செல்ல அறிமுக படலம் ஆரம்பித்தது.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து மாப்பிள்ளையான மணிமாறன், கதிரவன், தேவகி மூவரும் தான் வந்திருந்தார்கள். இரண்டு குடும்பமும் தூரத்து உறவு முறையில் சொந்தம் தான் என்பதால் அவர்களால் எளிதாக பேச முடிந்தது.

ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக போலீஸ் என்று சொல்லும் கம்பீரத்தில் அமர்ந்திருந்த மணிமாறனை அனைவருக்கும் பிடித்தது. அதுவும் அவன் முகம் கடுகடுவென்று இல்லாமல் புன்னகையுடன் இருக்கவும் இவன் தான் பூங்கொடிக்கு பொருத்தம் என்று முடிவு செய்தார்கள் அனைவரும்.

“பூவு, மாப்பிள்ளை சூப்பரா இருக்கார் டி. நீ அவர் கிட்ட பிரியாவே பேசலாம். நம்ம வாண்டுகள் எல்லாம் அவர் கிட்ட தான் பேசிட்டு இருக்கு. பயப்படுற மாதிரி எல்லாம் இல்லை. நல்ல கலர். எனக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு. மாமியார் கொடுமை வேறு கிடையாது. ஆனா மாப்பிள்ளையோட அத்தை அவங்க கூட தான் இருக்குறாங்க போல? ஆனா என்ன உனக்கு வரப் போற மாமனாரைப் பாத்தா தான் கொஞ்சம் பயமா இருக்கு. கொஞ்சம் டெரர் மாதிரி இருக்கார்”, என்று சொன்னாள் மைதிலி.

அங்கிருந்து அழைப்பு வந்ததும் ஒரு பக்கம் மைதிலியும் மறுபக்கம் தாரணியும் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றார்கள்.

அவர்கள் சொல் படி தலை குனிந்து அங்கே சென்ற பூங்கொடி தரையில் மண்டியிட்டு அனைவரையும் வணங்கினாள். அவளை தன்னருகே அமர வைத்துக் கொண்டாள் தேவகி. தேவகியை உடனே பூங்கொடிக்கு பிடித்து விட்டது. எளிமையான அலங்காரத்தில் கனிவுடன் இருந்தார் தேவகி.

பின் கதிரவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரிய மீசையுடன் அந்த வயதிலும் தொப்பை சிறிதும் இல்லாத கம்பீரத்துடன் இருந்தார். அவரைக் கண்டு பயமும் மரியாதையும் ஒருங்கே வந்தது. அவர் அருகே அமர்ந்திருந்த மணிமாறனைப் பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. அதனால் அவனை நிமிர்ந்தே பார்க்க வில்லை.

“அப்பாவே இப்படி இருக்கார். மகன் இன்னும் டெரரா இருப்பான் போல?”, என்று எண்ணிக் கொண்டு தேவகி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“மருமகளைப் பாரு டா”, என்று யாருக்கும் தெரியாமல் கதிரவன் மணிமாறனின் காதில் முணுமுணுக்க தன்னுடைய தயக்கம் உதறி அவளை நிமிர்ந்து பார்த்தான் மணிமாறன்.

பிறை போல நெற்றி, அழகான கண்கள், அடர்த்தியான புருவம், இயற்கையிலே சிவந்த அதரங்கள், மென்மையான கன்னம். கூரான மூக்கு, பால் வண்ண மேனி, என அழகாக இருந்தவளை ரசனையாக பார்த்தான். அதுவும் சேலையில் அவ்வளவு அம்சமாக இருந்தாள்.

அவளுடைய நீண்ட கூந்தலைக் கண்டவனுக்கு “என்ன இவ்வளவு பெரிய ஜடையா இருக்கு? ஒரு வேளை ஓட்டுமுடியா இருக்குமோ?”, என்ற சந்தேகம் கூட வந்தது. அவன் கண்கள் அவளை ரசனையுடன் பார்க்கிறது என்று கூட தெரியாமல் படபடப்பாகவும் பயத்துடனும் அமர்ந்திருந்தாள் பூங்கொடி.

“பொண்ணு பிடிச்சிருக்கா மாறா? தனியா பேசணும்னா பேசப் போறியா?”, என்று கேட்டார் கதிரவன்.,

அப்போது அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தனியாக பேச சொன்னதும் அவள் கை கொஞ்சம் நடுங்கியது. “இப்ப அவன் கிட்ட நான் பயப்படாம பேசணும். முதல்ல என்ன பேசுறது? கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லுவோமா? இல்லை நான் படிக்கணும்னு சொல்லுவோமா?”, என்று அவசர அவசரமாக அவள் மனது பட்டியல் இட்டுக் கொண்டிருந்தது.

அவளுடைய கை ஆடியதைப் பார்த்த மணிமாறன் “என் கிட்ட தனியா பேச பயப்படுறா போல? கல்யாணத்துக்கு அப்புறம் பிரியா பேசிக்கலாம்”, என்று தவறாக எண்ணிக் கொண்டு “எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. தனியா என்ன பேச போறோம்? அதெல்லாம் கல்யாணம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க பெரியவங்க பேசினா சரி”, என்று கம்பீரத்துடன் உரைத்தான்.

அவன் பேசியதைக் கேட்டதும் “அடப்பாவி இப்படி சொதப்பிட்டானே?”, என்று எரிச்சல் வந்தது பூங்கொடிக்கு. ஆனால் அவன் அவளுக்காக தான் அப்படிச் சொன்னான் என்பதை அவளுக்கு யார் சொல்வது?

அடுத்த மாதத்தில் திருமணம் என்றும் திருமணத்துக்கு சற்று நேரத்துக்கு முன் நிச்சயதார்த்தம் செய்யலாம் என்றும் முடிவு எடுத்தார்கள்.

ஆனால் இப்போது இந்த பெண் எங்கள் வீட்டுப் பையனுக்கு தான் என்னும் வகையில் தேவகி பூங்கொடியின் தலையில் பூ வைத்து உறுதி படுத்திக் கொண்டாள்.

“மதிய சாப்பாடுக்கு நேரம் ஆயிருச்சு. சாப்பாடு தயார் செய்ய சொல்லட்டுமா? கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க கை நனைப்பீங்களானு தெரியலை. அதனால தான் கேட்டுட்டு செய்யலாம்னு…”, என்று தயங்கிய படி கதிரவனிடம் கேட்டார் கேசவன்.

“இதுல என்ன கேசவன் இருக்கு? எங்க சாப்பிட்டாலும் சாப்பாடு ஒண்ணு தான். இன்னைக்கு நாங்க சாப்பிட்டே போறோம். உங்களுக்கு கஷ்டம் இல்லைன்னா சாப்பாடு தயார் செய்ய சொல்லுங்க. நான் மூட நம்பிக்கையை எல்லாம் ரொம்ப நம்ப மாட்டேன். அதே நேரம் முன்னோர் வாக்கை மதிக்கவும் செய்வேன். கல்யாணம் வரைக்கும் நான்வெஜ் மட்டும் வேண்டாம்”, என்று கதிரவன் சொன்னதும் பெண்களைப் பார்த்தார் கேசவன். அவர்கள் அவசர அவசரமாக உணவு சமைக்கச் சென்றனர்.

“வரதா, மாப்பிள்ளைக்கு நம்ம தோப்பைச் சுத்திக் காட்டு”, என்று கேசவன் சொன்னதும் “வாங்க மாப்பிள்ளை”, என்று மணிமாறனை அழைத்தான் வரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!